கட்டுரைகள்

 
 
 
‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ 
முன்னுரை
நாஞ்சில் நாடன்
அறுபதுகளின் தொடக்கத்தில், வாசிக்க ஆரம்பித்திருந்த காலத்தில் பெரும்பாலும் கட்டுரைகள் என்பன கம்பன், சிலம்பு, திருக்குறள் பற்றியோ, அறநூல்கள் அல்லது சமயச் சார்புகள் சார்ந்தோ இருந்தன. சுதந்திரமானதோர் வாசிப்புக்கான நேரத்தில் கட்டுரைகள் கிடைத்ததில்லை. நூலகங்களில் கட்டுரைப் பிரிவில் ஆங்கிலம் அளவுக்கு தமிழில் அதிகம் புத்தகங்கள் இருந்ததில்லை.
          ஆனால் சமீப காலத்தில் தமிழில் மிகத்தரமான சமூக, பொருளியல், அரசியல், இலக்கியத் திறனாய்வு, அறிவியல் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இது ஓர் உற்சாகமான நிலை. இன்று மொழி பெயர்ப்புகளும் கட்டுரைகளும் படைப்பிலக்கிய வெளியீடுகளுக்கு சற்றும் பின்தங்கியதாக இல்லை.
          கட்டுரை எழுதுவதற்கு ஆழ்ந்த வாசிப்பு, ஆய்வு மனப்பாங்கு, நுண்ணறிவு, நியாய புத்தி எல்லாம் வேண்டும். எனவே கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு எப்போதும் தயக்கம் இருந்தது. அரசியல் சமூக நிகழ்வுகளை கவனிப்பதுண்டு என்றாலும் மனதில் படுவதைக் கட்டுரையாக எழுதத் துணிவு வந்ததில்லை.
          கவிதை, சிறுகதை, நாவலில் பேசப்படும் தகவல்கள் கூட, தகவல்கள் எனும் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். வைகாதி மாதம் புளி பூத்திருந்தது என்றோ மாசி மாதம் புன்னை காய்த்திருக்கும் என்றோ எழுதினால் அந்தப் பருவத்தில் அது நடைமுறையாக இருக்க வேண்டும். இயற்கை என்றும் பிழைப்பதில்லை அல்லவா?
          புனைவிலேயே தகவல் பிழை இருக்கலாகாது எனும்போது கட்டுரையில் இருக்கலாமா? கருத்துச் சாய்வை, பக்கப் பார்வையைக் கூட அனுமதிக்கலாம். தவறான தகவல்களை அனுமதிக்கலாமா?
          புனைவு என்றால் ஆய்வு செய்தும் எழுதலாம், அனுபவம் சார்ந்தும் எழுதலாம். அது படைப்பவன் வசதி. ஆனால் கட்டுரைகளின் வாணம் தோண்டும்போது உண்மையும் ஆய்வும் தட்டுப்பட வேண்டும்.
          எழுதத் தொடங்கிய பல ஆண்டுகள் வரை கட்டுரை எழுதுவதில் என் கவனம் சென்றதில்லை. பிறகு பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் சில என் எழுத்துக்கள் சார்ந்து கட்டுரை கோரியபோது, அத்தனை கடினமான வேலையாக அது இருக்க வாய்ப்பில்லை என்பதால், சிலகட்டுரைகள் எழுதினேன். தொடர்ந்து எனது இலக்கியப் பார்வைகள் சார்ந்து, மேலோட்டமான வாசகப் பார்வையுடன், தீவிரமான திறனாய்வுப் பார்வை அற்று சில கட்டுரைகள் பின்பு இலக்கிய சம்பந்தம் இல்லாத, சமூகத் தனியனாக நின்று சில கட்டுரைகள்.
          இதில் மூன்றாவது வகைக் கட்டுரைகள் எழுதும்போது மட்டுமே சிறுகதை எழுதுவது போன்ற கிளர்ச்சி ஏற்பட்டதை உணர்ந்தேன். எதிர் காலத்தில் அந்த வகையிலான கட்டுரைகளை எழுதலாம் என்று தோன்றுகிறது.
          ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ என தலைப்பும் கொடுத்தும் இவற்றை வாசித்து ஒழுங்கமைத்தவர் நண்பவர் கோபாலகிருஷ்ணன். இரண்டாம் பதிப்பை வெளியிடும் தமிழினிக்கு நன்றி.
அன்பின்
நாஞ்சில் நாடன்
கோவை   16-12-2008                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
தட்டச்சு உதவி:  பிரவீன்
எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s