செந்தமிழ்க் காப்பியங்கள்

  
நாஞ்சில் நாடன்
எல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சங்க இலக்கியங்கள் என்பன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என. ஐம்பெருங்காப்பியங்களின் பெயர் தெரியும். ஐம்பெருங்காப்பியங்கள் என்று பெரும் குரல் எடுத்து நாம் கூவுவது பஞ்ச காவ்யங்கள் எனும் வடமொழி மரபில் இருந்து எடுத்தாண்டது. இங்கு நாம் அறிய வேண்டியது, பஞ்ச காவ்யங்கள் வேறு என்பதும் பஞ்ச கவ்யங்கள் வேறு என்பதும். பஞ்ச கவ்யம் என்பது பசுவில் இருந்து உண்டாகும் பால், தயிர், நெய், மூத்திரம், சாணம் எனும் ஐந்து பொருட்களை மந்திர பூர்வமாகச் சேர்ப்பது.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெருங்காப்பியங்கள். இவற்றுள் பின்னிரு நூல்களும் முற்றும் கிடைத்திலது.
சிலப்பதிகாரம் பற்றி ஓரளவுக்கு நமக்கு அறிமுகம் உண்டு. சில பாடல்வரிகளை அறிந்திருப்போம். வழக்குரை காதையில் 
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள்!
என்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வரிகளைக் கேட்டிருப்போம். 
தெய்வம் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்உரை அஞ்சுமின், புறம்சொல் போற்றுமின்,
ஊன்உண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்.
தானம் செய்மின், தவம்பல தாங்குமின்.
’ 
என்று அறிவுறுத்தும் நூல் சிலப்பதிகாரம். 
முதிரா முலை முகத்து எழுந்த தீயின்
மதுரை மூதூர் மாநகர் சுட்டதும்
’ 
என்று கண்ணகியின் கதை பாடுவது. 
ஆய்ச்சியர் குரவையில் 
அறுபொருள் இவன் என்றே அமரர்கணம் தொழுது ஏத்த
உறுபசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே
உண்டவாய் களவினால் உறிவெண்ணெய் உண்டவாய்
வண்துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
’ 
என்றும் 
வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண்ஆக்கிக்
கடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையர் கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
’ 
என்றும்
மூவுலகம் ஈர்அடியான் முறை நிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே
?’
என்றும் பாடுவது ஆழ்வாராதிகள் அல்லர், இளங்கோஅடிகள் எனும் சமண முனிவன்.
ஆனால் மேற்கொண்ட பாடல்களின் மொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்களின் மொழிபோல் இருப்பது எனக்கு வியப்பளிக்கிறது. இளங்கோவடிகளின் சொல்லாட்சிகளை ஆழ்வார் சிலர் ஆண்ட காரணமாக இருக்கலாம். 
அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் எனத் தொடங்கி சுஜாதாவின் எளிய அறிமுகம் வரை வந்து சேர்ந்தது சிலப்பதிகாரம். சிலம்புச் செல்வர் என அறியப்பட்ட ம.பொ.சிவஞான கிராமணியாரால் சிலப்பதிகாரம் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. சிலப்பதிகாரத்துக்கு ம.பொ.சி. அற்புதமான விளக்கத் தெளிவுரை ஒன்று எழுதியுள்ளார். 2008-ல் முதற்பதிப்பு வெளிவந்தது. தமிழ்நாடு முழுக்க, சிலம்பைப் பரவலாக்கிய பெருமை ம.பொ.சி.க்கு உண்டு. 1942-ல் ஆகஸ்ட் போரில் ஈடுபட்டுச் சிறையில் கிடந்த போது சிலம்பைப் பயிலத் தொடங்கியதாக ம.பொ.சி. எழுதுகிறார் முன்னுரையில். ஆசிரியரின் உதவியின்றி, திரும்பத் திரும்பப் பயின்றிருக்கிறார். ம.பொ.சி.யின் சிலப்பதிகாரச் சொற்பொழிவு கேளாதார் செவியென்ன செவியே என்ற கேட்டவர் துணிந்து சொல்ல இயலும். ஐம்பெருங்காப்பியங்களில் மற்ற நான்கும் பௌத்த, சமணக் காப்பியங்களாக இருக்கும்போது, சிலம்பு ஒன்றே சமயங்கடந்த காப்பியமாகும். 
மேலும் தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். தமிழின் ஒரிஜினல் காப்பியம். ஒரிஜினல் என்று அழுத்திச் சொல்வதன் காரணம், மற்றெல்லாம் வடமொழியில் இருந்து பெயர்க்கப்பட்டவை, தழுவப்பட்டவை அல்லது மூலமாகக் கொண்டவை, பிற காப்பியங்கள்.
மேலும் படிக்க…»

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to செந்தமிழ்க் காப்பியங்கள்

  1. தி. பரமேசுவரி சொல்கிறார்:

    நாஞ்சில் நாடனுடைய இந்த முயற்சி மிக முக்கியமானது. இதைச் செய்ய வேண்டிய கடப்பாடுடையவர்கள் அமைதியாக இருக்கையில், இது மிகவும் போற்றப்பட வேண்டிய முயற்சியும் கூட. கட்டுரையில் நாஞ்சிலின் பகடியும் வருத்தாத நக்கலும் நகுதற்பொருட்டே. இடையிடையில் அவர் தரும் தகவல்கள் மிக சுவாரஸ்யமானவை. இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்த அறிமுகம் இளைய தலைமுறையினரில் ஒரு பகுதியினரையாவது காப்பியங்களுக்குள் புகச் செய்யும். நாஞ்சிலுக்கும் பின்னாலிருந்து சாத்தியமாக்கும் சுல்தானுக்கும் நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக