நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை- முன்முகம்

முன்முகம்
இது சமூகவியல் ஆய்வாளன் ஒருவனின் அடங்கல்கள் அல்ல. ஒரு படைப்பிலக்கியவாதியின் பதிவுகள் மட்டுமே. இந்தக் கட்டுரையை எழுதிவரும்போது ஆய்வுக்குண்டான நிறையப் பகுதிகள் உட்பொதிந்து இருப்பது எனக்குப் புலப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் விரிவான ஆய்வு எனது இயங்குதளம் அல்ல என்பதால், சில கோடுகளையே காட்ட முடிந்திருக்கிறது. ஒரு கள ஆய்வு செய்வதற்குரிய வாழ்க்கை அமைப்பையும் நான் மேற்கொண்டிருக்கவில்லை. உண்மையில் வாசிக்க விரும்பிய, முனைந்திருந்தால் வாசித்திருக்கக் கூடிய சில புத்தகங்களைக் கூட வாசிக்க இயலவில்லை என்பது எனது வருத்தம். என்செய ? தாய்ப்பாலின் விலை மாதம் சில ஆயிரங்கள் !
          எனவே எனது பதிவுகளில் உண்மைகள் சற்றுத் துல்லியக் குறைவு கொண்டவையாக இருக்கலாம்; இருக்கும். இதில் தென்படக்கூடிய குறைபாடுகள் நீங்கிய, கள ஆய்வுகளும் விவரணைகளும் கொண்ட, முழுமையான ஆய்வு எதிர்காலத்தில் நடைபெறுவதற்கு இந்தக் கட்டுரையும் பார்வை நூலாக அமையலாம். 
          பனை உயரம் மண்ணுக்குக் கீழே இருந்து முளைத்த நான், பிறப்பால் நாஞ்சில் நாட்டு வெள்ளாளன். வெள்ளாளன் எனும் சொல் எந்தக் காலத்திலும் எனக்கோர் கவசமோ குண்டலங்களோ அல்ல. மாறாக வாகாக அடிவாங்கும் ஒரு மர்ம ஸ்தானம். ஆனாலும் அதிகமாக அறிந்த, பெரும்பாலும் எனது படைப்புகளில் கையாண்ட சமூகம் இது.  
          எனவே நாஞ்சில் நாட்டு வெள்ளாளருக்கு எதிரான படைப்புக்களைச் செய்பவன் என்றும் அவர்தம் காலாவதியான பெருமைகளைத் தாங்கிப் பிடிப்பவன் என்றும் இரண்டு முரண்பட்ட குற்றச்சாட்டுகள் என்மீது உண்டு. சற்றுத் தீவிரமான கண்ணோட்டத்தில் வெள்ளாளத் துரோகி என்றும் வெள்ளாளச் சாதி வெறியன் என்றும் கூட முகம் கூடியதுண்டு. ஆனால் மேற்சொன்ன இரண்டும் இல்லை நான். யாருடைய சாயத்தையும் பூசி, அடைப்பத்தையும் தாங்கி நடப்பவனும் இல்லை. பெர்ட்டோல்ட் பிரெக்ட் சொல்வதைப்போல் ‘நீங்கள் தேடுவது யாராக இருந்தாலும் அது நானில்லை.’ ஒரு படைப்பிலக்கியவாதி நிரூபணங்களுக்கு நேரம் செலவிட இயலாதவன். மேலும் காய்த்த மறம் கல்லெறிபடும்.
          சம்பந்தமில்லாத மூன்றாவது ஆளாக விலகி நின்று இந்தக் கட்டுரையை எழுத முற்பட்டிருக்கிறேன். எனது மனச்சாய்வு இதில் ஏதும் புலப்பட்டால், அது மொத்தமாய் மனிதனின் உழற்சிகளில் நான் கொள்ளும் மனச்சாய்வுதானே தவிர, சாதி சார்ந்தது அல்ல. 
          இதை நான் எழுதி முடித்தபிறகே, பல பகுதிகளில் இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் பயணம் செய்திருக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. நிறைவு எப்போதும் பங்கப்பட்டதாக இருக்கும் உணர்வே எனது எல்லாப் படைப்புகளிலும் எனக்கு ஏற்படுவது. 
          மாறுபட்ட செய்திகள் வேறுவேறு தலைப்புக்களின் கீழ் வந்து சிக்கிக்கொண்டிருப்பதும் எனக்குப் புலனாகிறது. அதுவும் எனது தொழில் நுட்பத்தின் குறைபாடுதான். 
          எது எப்படியானாலும் பந்தயத்தில் வெல்வதல்ல எனது நோக்கம். எனக்குப் புலப்பட்டதை, சரியென நான் நம்புவதைப் பதிவு செய்வது. இவை யாவும் அத்தகைய பதிவுகள் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். 
-நாஞ்சில் நாடன்.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை- முன்முகம்

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    நல்ல பதிவு.

  2. Naga Rajan சொல்கிறார்:

    Thank you very much for registering the one community’s culture without one-sidedness.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s