நானும் விகடனும்!

இந்த வாரம் : நாஞ்சில் நாடன்
 
 
வாயு வேகம் மனோ வேகமாக நினைவு பின்னோக்கிப் பாய்கிறது. ‘எடுத்தது கண்டார்… இற்றது கேட்டார்’ எனச் சொல்லும் கம்பனின் விரைவு. தோளில் கிடந்த உத்தரீயம் காற்றில் பறந்து கீழே விழுந்ததை எடுக்க இறங்கியபோது நள மகாராஜனின் புரவி நூறு காதம் கடந்து போய்விட்டதுபோல் மனதின் வேகம்.
நைந்து பின் பக்கம் கிழிந்து, தொடைப்பக்கம் நாராய்த் தொங்கிய நிக்கர், மேலே துண்டோ உடுப்போ இன்றி ‘தமிழர் நூல் நிலையம்’ நோக்கித் தினமும் நடந்த எனக்கு அப்போது 10 வயது இருக்கும். அன்று புதிதாய் வந்திருக்கும் ஆனந்த விகடனைக் காத்திருந்து, முன்பதிவு செய்து, வாசிக்க வேண்டும். சென்னையில் இருந்து திருநெல்வேலி வரை ரயிலில் வந்து, அங்கிருந்து அவுட் ஏஜென்சி பஸ் கூரையில் பயணம் செய்து, நாகர்கோவில் வந்திறங்கி, ஒன்றே முக்கால் மணி நேரத்துக்கு ஒரு ட்ரிப் என வரும் தேரூர் – தாழக்குடி எனும் 33-ம் நம்பர் பஸ்ஸில் தாழக்குடி வந்து, மறுநாள் மதியம் வீரநாராயணமங்கலத்துக்கு விகடன் வரும்போது, சென்னையில் அடுத்த இதழ் வெளிவந்திருக்கும்.
எனினும் 120 வீடுகளே இருந்த அந்த சின்னஞ் சிறு நாஞ்சில் நாட்டுக் கிராமத்துக்கும் விகடன் வந்தது. வாசிக்க ஒரு கூட்டம் 80 வயதுப் பாட்டா முதல் 10 வயதுப் பேராண்டி வரைக்கும் காத்தும் கிடந்தது. நூலகம் தவிர, வேறு எவர் வீட்டுக்கும் அன்று விகடன் வரவில்லை. புது விகடன் வந்ததும் பழசு வாசிப்பில் ஈடுபாடு வைத்த அக்கா, மதனி, பெரியம்மை, சித்தி, அத்தை வீடுகளுக்கு வரிசையாய் வாசிக்கப் போனது. அன்று பெண்கள் நூலகத்துக்கு வந்தது இல்லை. இன்றோ நாடாளுமன்றப் பெண்கள் பிரதி நிதித்துவ சதமானத்துக்கும் குறைவாகவே இருக்கிறது அவர்கள் வருகை.
எனது சொந்த ரசனையின் அடிப்படையில் விகடனில் வாசிப்பின் முன்னுரிமை கார்ட்டூன்கள், விகடத் துணுக்குகள், தொடர் கதை, சிறுகதைகள் என்று. விகடனின் விகடம் என்பது தோற்றத்தை, பொருளாதார நிலையை, குறிப்பிட்ட இனத்தை, சாதியைக் கேலி செய்வது அல்ல. திருப்பித் தாக்க இயலாத அவர் பலவீனத்தை விகடன் முதல் எடுத்துக்கொண்டது இல்லை. ‘செம்பொருள் அங்கதம்’ எனும் இலக்கணத்துக்கு விகடன் எடுத்துக்காட்டு. இன்று போல் அன்று பருவ இதழ்களின் பக்கங்களை சினிமா சொறி, சிரங்கு, படைபோல் பீடித்து இருக்கவும் இல்லை. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோவோர் காசு பெறாத ஜனரஞ்சக வாதப் பிரதிவாதம் விகடனின் பக்கங்களைப் பரபரப்பாக நாலைந்து வாரம் அடைத்துக்கொண்டு இருந்தது. விவாதத்தை முடித்துவைக்க, கொத்தமங்கலம் சுப்பு எழுதிய பாடலின் சில வரிகள் இன்றும் நினைவில் உண்டு. இப்போதும் விகடனின் ஏதோ ஒன்று சொந்த ஒவ்வாமை காரணமாக ரசபேதம் உணர்த்தும்போது நினைவு வரும் அவ் வரிகள்.
அஞ்சாறு வாரத்தைப் போக்கவே – யாரோ
ஐயம்பேட்டை வேலை செய்கிறார்
நெஞ்சாரப் போற்றிடும் ஆவிக்கு – இது
நேரல்ல வேறென்ன சொல்வது
இதில் ஆவி எனும் சொல்லுக்கு அரும்பத உரை, ஆனந்த விகடன்.
ஈது யாம் விகடனுக்கு அறிமுகமான வரலாறு. அறிமுகமாகி, அரை நூற்றாண்டாக நான் விகடன் வாசகன்.
தமிழின் முன்னோடி நவீன கவிஞர், எழுத் தாளர்களின் எழுத்தாளர், நனவோடை உத்திக் கதை சொல்லலின் தலைமகன் என்று அறியப்பட்ட அமரர் நகுலனுடன் 20 ஆண்டுகளுக்கும் முன்னர் ஒருநாள் உரையாடிக்கொண்டு இருந் தேன். இடம், திருவனந்தபுரம் கௌடியார் கொட்டாரம் பக்கம் கால்ஃப் லிங்க் சாலையில் இருந்த அவர் வீடு. அவரது இடது கைப் பெரு விரல் புண்ணாகி இருந்தது. அதுபற்றி விசாரித் தேன். பெருவிரல் நகத்தைச் சற்று நேரம் தீவிரமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
‘இருட்டிப் போச்சுன்னா நகத்திலே விகடன் தாத்தா உக்காந்து பேச ஆரம்பிச்சுடறார்… கொஞ்ச நாளா நடந்துண்டு இருக்கு… சொப்பனமோன்னு ஒரு சம்சயம்… கையில சிகரெட் இருந்தது… சிகரெட் முனையால சுட்டுப் பாத்தேன். அடுத்த நாள் பொக்களம், பெரிசா… ஹாஹ்ஹா…’
‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ எனும் எனது முதல் கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ‘நகுலன் என்றொரு மானுடன்’ எனும் கட்டுரையில் காணலாம், மேற்சொன்ன தகவலை.
அன்றிருந்தே எனக்குள் கிளைத்த கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. நகுலன் பெருவிரல் நகத்தில் ஏன் விகடன் தாத்தா உட்கார்ந்து சிரிக்க வேண்டும்? அவர் விகடனில் எழுதியவர் இல்லை. இன்றிருந்தால் 80 வயதாகி இருக்கும் அவருக்கு. அவருடைய தாயார் விகடன் வாசகி.
அன்றெல்லாம் நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கு மூர்க்கமான முன் முடிவு ஒன்று இருந்தது. வணிகப் பத்திரிகைகளில் எழுதுவது இல்லை என. எழுதியவரை எல்லாம் குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பு என்றனர். கால மாற்றத்தால், எழுதக் கூடாது என ஆசீர்வதித்தவர் எல்லாம், தலையில் முக்காடு போட்டுக் கள்ளுக்கடைக்குள் நுழையும் கிராமத்துப் பெருசுகளைப்போல, இடம் தேடி அலைய ஆரம்பித்தனர். என் போன்றோரும் முடிவுகளை மாற்றிக் கொண்டோம்.
கதை எனதாகவும் எழுதுவது நானாகவும் இருக்கும்போது எங்கு எழுதினால் என்ன? மேலும், மூவாயிர வாசகப் பரப்பைத் தாண்டி, பத்து இலக்க வாசகரைப் படைப்பு சென்று அடையுமானால் அதில் எனக்குஎன்ன எதிர்ப்பு? மன நிலைகளில் மாறுபாடு கள் வந்தன. மரியாதையாகவே நடத்தப் படுவோம் என்ற நம்பிக்கை வந்தது.
ஒருவேளை நகுலனைப் பார்த்து விகடன் தாத்தா சிரித்த காரணம் அதுவாக இருக்கலாம்.
என் கதை, 2001-ல் முதன்முறையாக விகடனில் வெளியானது, நான் எழுத ஆரம்பித்து கால் நூற்றாண்டுக் காலம் சென்ற பிறகு. விகடனிலும் விகடன் தீபாவளி மலரிலுமாகப் பன்னிரண்டு கதைகள் எழுதி இருக்கிறேன்.
தாலிச்சரண் , பாம்பு, காடு, கொங்கு தேர் வாழ்க்கை, பரிசில் வாழ்க்கை, தன்ராம் சிங், சங்கிலிப் பூதத்தான் , பின்பனிக் காலம்,பேச்சியம்மை, நீலவேணி டீச்சர், கான் சாகிப்ஆத்மா என.
எனது கதைகளில் மிகவும் பிடித்த, சிறந்த கதைகள் என நண்பர்களும் வாசகர்களும் திறனாய்வாளர்களும் கருதுகிற சில விகடனில் வெளியானவை. தாலிச்சரண் , பாம்பு, சங்கிலிப் பூதத்தான் , தன்ராம் சிங், பேச்சியம்மைஆத்மா என்பவை அவை.
படம் : தி.விஜய்
முழு கட்டுரையையும் படிக்க>>>>http://new.vikatan.com/article.php?aid=6842&sid=192&mid=1
8-06-2011 என் விகடனில் வெளியான நாஞ்சில் நாடனின் என் ஊர் முழுக் கட்டுரையையும் படிக்க>>>நீ யாமுல ஆடி பூவெடுக்க!

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், விகடன் கதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s