உழவாரப் படையாளி

நாஞ்சில் நாடன்
‘தமிழ் கங்கை’ பதிப்பக உரிமையாளர் திரு.மங்.சோணா. செங்கல்ராயரின் மணி விழாவை முன்னிட்டு, அவரது நாற்பதாண்டு கால அயராத தமிழ் தொண்டையும் இலக்கிய சேவையையும் பாராட்டி, அனைத்திந்தியத் தமிழ் பதிப்பாளர் ஒன்றியம் அவருக்குப் ‘புத்தகக் கர்ணன்’  பட்டம் ஈந்து, பொன்னாடை போர்த்தி, தாமிரப் பட்டயமும் வழங்கியதை முன்னிட்டு, வாரம் பதிமூன்று லட்சம் பிரதிகள் தமிழர்களால் தின்னப்படும் வார இதழுக்காக அவரைப் பேட்டி காணப் புறப்பட்டோம்.
செட்டித் தோட்டத்தில் சிறு குஞ்சைக் கேட்டால் கூடச் செங்கல்ராயரின் வீட்டை அடையாளம் சொல்வார்கள். பங்களாவை அடைந்து, ‘நாய்கள் – கவனம்’ பலகை இல்லாததில் திருப்தியுற்று, கேட்டைத் திறந்து உள்ளே சென்றபோது, மஞ்சணத்தி மரக்கன்று ஒன்றுக்குக் களை பிடுங்கிக் கொண்டிருந்த பெரியவர் தலை நிமிர்ந்தார். முன்பின் அறிமுகம் இல்லாத எவரும் அவரைத் தோட்டக்காரன் என்று அனுமானிக்கவும் கூடும். அரையில் மடித்துக் கட்டிய வேட்டி, தலையில் வட்டக் கட்டுத்துண்டு, கையில் மண் கொத்தி, தமிழ் மக்களுக்குப் புத்தகங்கள் வடிவில் அறிவு சொரியும் கர்ணன் ஒரு எளிய செடிக்கும் கருணை பாலிப்பவராக இருந்தார். 
மாலை சாய்ந்துகொண்டிருந்த நேரமாதலால், புல் வெளியில் கிடந்த பிரம்புச் செயர்களில் உட்கார்ந்து கொண்டோம்.
பேட்டி ஆரம்பமாகியது.
கேள்வி: நீங்கள் ஏன் நாய் வளர்ப்பதில்லை?
பதில்: காவலுக்குத்தானே நாய் வளர்ப்பது? என்னிடம் திருடிப் போக என்னய்யா இருக்கிறது? புத்தகங்கள்தானே! அறிவைத் திருட முடியுமா என்ன? (சிரிப்பு)
கேள்வி: உங்களுக்குத் தமிழ்த் தொண்டாற்ற வேண்டும் என்ற ஆசை எப்போது ஏற்பட்டது?
பதில்: என் தந்தையார் மங். செங்.சோணாசலராயர்தாம் காரணம். நன்றாக படிக்காமல் நான் ஒன்பதாம் வகுப்பில் மூன்றாம் முறையும் தோற்றத்தில், அவர் கனவுகள் சிதறிப் போயின. அன்று தமிழ் மீது கொண்ட தணியாத ஆர்வம் காரணமாக, அவர் எனக்குத் தந்த பிரம்படிகள் நாவற் பழ நிறத்தில் கன்னியது.
கேள்வி: உடனே சென்னை வந்து விட்டீர்களா?
பதில்: ஆமாம், கள்ள ரயிலேறி வந்து அம்பாள் கபேயில் சில நாட்கள் வட்டை, கப்பு கழுவினேன். பல்லாவரம் பக்கம் ஒரு சினிமா கொட்டகையில் சோடா, கலர், முறுக்கு விற்றேன். பிறகு அங்காளப்பன் நாயக்கன் தெருவில் ஒரு பிரஸ்ஸில் எடுபிடியாகச் சேர்ந்தேன்.
கேள்வி: அதுதான் உங்கள் இலக்கியத் தாகத்துக்குக் களமாக அமைந்ததா?
பதில்: ஆமா! சாதாரணமா மார்னிங் ஷோ சினிமாப் போஸ்டர், பூப்புனித நீராட்டு அழைப்பு, பில் புத்தகம்  என்று தான் அங்கே அடிப்பார்கள். அதனுடன் கவிஞர் பல்லாடன் ஆசிரியராக இருந்த ‘பாச்சோலை’ ன்னு ஒரு மாத இதழும் அச்சாகும்.
கேள்வி: அதிலேதான் முதல்லே எழுதினீர்களா?
பதில்: அதெப்படி? ‘பாச்சோலை’ மொத்தம் பதினாறு பக்கம், ஒரு பாரம். அதிலே பாதி பல்லாடன் எழுதினர். மீதியிலே அவரே புனைபெயர்லே ஒரு தொடர் காப்பியம் எழுதினார். இரண்டு கவிதைகள் எழுதி நீட்டினேன். அவர் ஒண்ணும் கண்டுக்கிடல்லே (சிரிப்பு). பிறகு சில கதைகள் எழுதி கிழிச்சி போட்டேன்.
கேள்வி: அதோடு எழுத்தை விட்டுவிட்டீர்களா?
பதில்: தொடங்கும் முன்பே எப்படி விட முடியும்? அப்பெல்லாம் ரயில்வே ஸ்டேஷன்லே, பஸ் ஸ்டான்ட்லே அரையணா நாவல்கள் விற்பான் கூவிக் கூவி. சினிமாப் பட்டுப் பொஸ்தகத்தை விடக் கொஞ்சம் பெரிசா இருக்கும். அதைப் போல ‘மாயாண்டி தோண்டிய மரணக் கிணறு’ அப்படீன்னு ஒரு நாவல் எழுதினேன்.
கேள்வி: அதுதான் உங்களுக்கு எழுத்தாளர் என்கிற ஸ்தானம் தேடித் தந்ததா?
பதில்: ஆமாம். பிரஸ் முதலாளிக்கு நான்தான் ஐடியா கொடுத்தேன். பயந்துகிட்டேதான் சம்மதிச்சார். அன்னைக்கு முந்திக்கருக்கல்லே பொறந்துதான் ‘கதாமோகினி’ பதிப்பகம். ‘மல்லிகா புதைத்த மணாளன்’, ‘மரக்கோயில் மர்மங்கள்’ன்னு சில மர்ம நாவல்கள் எழுதினேன். பிறகு ‘காஞ்சனாவின் காம லீலைகள்’, ‘நள்ளிரவும் நான்கு காதலர்களும்’, ‘கிழவி மேல் காதல் கொண்டவன்’ எனச் சமூக சீர்திருத்த நாவல்கள் சிலது.
கேள்வி: எப்போது பதிப்பகம் ஆரம்பித்தீர்கள்?
பதில்: என்னுடைய தமிழார்வம் எழுதியதில் மட்டும் அடங்கவில்லை. வசதியில்லாத எழுத்தாளர்களுக்கு ஏணியாகவும் இருக்கணும்னு தோன்றியது. இந்த முதலாளி அதுக்கெல்லாம் தோதுப்படமாட்டார். எனவே பிரிஞ்சு வந்து ‘தமிழ் கங்கை’ பதிப்பகம் ஆரம்பிச்சேன்.
கேள்வி: முதல்லே என்ன போட்டீங்க?
பதில்: நாற்பது ரூபாய் முதல் போட்டேன் (சிரிப்பு). மங்காத்தான் குடி அம்மன் ரொம்ப விசேடம். பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு முறைதான்  திருவிழா வரும். அந்த வருஷம் வந்தது. ‘மங்காத்தான் குடியாள் மகிமை’ என்று ஒரு புஸ்தகம் எழுதி ரெண்டாயிரம் காப்பி போட்டேன். மூணே நாள்லே தீந்து போச்சு. அதில் வந்த பணத்தை வைத்துக்கொண்டு பாவேந்தர் பல்லாடனின், ‘உறக்கத்தில் உலவிய கவிதைகள்’ ஒண்ணு; பிறகு ‘கன்னி கழியாத கற்பு’, ‘ரயிலை விற்ற ராமாச்சாரி’ என்று ரெண்டு. பிஸினெஸ் நல்லாப் பிடிச்சிக்கிட்டது.
கேள்வி: அத்துடன் எழுதுவதை விட்டுவிட்டீர்களா?
பதில்: நாம் மற்ற எழுத்தாளர்களை முன்னுக்குக் கொண்டு வரணும்னு தோன்றியது. நிறைய கையெழுத்துப் பிரதிகளை படித்து தீர்மானிக்க வேண்டியிருந்தது. திருமணம் வேறு ஆகிவிட்டது. எழுத நேரமே வைக்கவில்லை. அதனால என்னங்க? ‘தமிழ் கங்கை’ எத்தனை எழுத்தாளர்களை உருவாக்கி விட்டிருக்கு!
கேள்வி: ராயல்டி எல்லாம் எத்தனை சதமானம் தருவீங்க?
பதில்:  இந்த சதமானம் பிரிக்கிறதிலே பெரிய சிக்கலுங்க. ஒரு பொஸ்தகம் விக்க நாலு வருசம், ஆறு வருசம் கூட ஆகும். அதுக்காக எழுத்தாளர்கள் காத்துக்கிட்டு இருக்க முடியுமா? அவுங்க கணக்கு கேட்டு லெட்டர் எழுதணும், நாம்ப பதில் எழுதணும். பெரிய தொந்தரவு. எனவே புஸ்தகத்துக்கு அம்பது நூறுன்னு இருக்க நிரக்கு போலே அவுட்ரைட்டா கொடுத்திட்டா அவுங்களுக்கும் சந்தோசம், நமக்கும் சள்ளையில்லை. அதிலே பாருங்க, ‘புத்திசாலி’ன்னு ஒரு மர்மக்கதை எழுத்தாளர். வாரா வாரா ஒண்ணு கொண்டுவருவார். சில சமயம் மர்மக் கதை, சில சமயம் பாட்டாளி வர்க்கக் கதை, சில சமயம் சரித்திர நாவல், சில சமயம் தெரிந்து கொள்ளுங்கள் வரிசையில் காரல் மார்க்ஸ், கரிபால்டி. வேற வேற பேர்லே வெளியிடுவோம். வாரம் சுளையா ஐம்பது ரூபா கொடுப்பேன். யாரு செய்வா இந்தக் காலத்திலே ?
கேள்வி: பக்தி இலக்கியம் எல்லாம் பின்னால்தான் வெளியிட்டீர்கள் இல்லையா?
பதில்: அப்போ அதெல்லாம் விற்கும்னு யாருக்கும் தெரியாதுங்க. ஸத்குரு  மௌனகுருநாத ஸ்வாமிகள் காலடியிலே ஒரு ஒத்தை ரூபா வச்சு நமஸ்காரம் பண்ணிட்டு ‘வேத விருந்து’ தூக்கீட்டு வந்தேன். உங்களுக்குத் தான் தெரியுமே – ஆறு பாகமாய்ப் போட்டேன். இப்போ பத்தொன்பதாவது எடிஷன் ஓடிக்கிட்டிருக்கு.
கேள்வி: ஸ்வாமிகள் அப்புறம் பணம் பற்றி ஒண்ணுமே கேக்கலியா?
பதில்: அவாள்லாம் மகான்கள்.
நீள் சதுர வர்ணத் தட்டு ஒன்றில் உயரமான கண்ணாடித் தம்ளர்களில் ஆரஞ்சு ஜூஸ் வந்தது. புழுதி பறக்க வந்த காரில் இருந்து இறங்கிய பெண்ணொருத்தி சாவியைச் சுழற்றிக்கொண்டு பிடரிமயிர் பறக்க உள்ளே போனாள். ஜூஸைக் குடித்துவிட்டுப் பேட்டியைத் தொடர்ந்தோம்.
கேள்வி: உபயோகமான புத்தகங்கள் வெளியிட்டு அவை பள்ளிகள் கல்லூரிகளுக்குப் பாடமானதினாலும் நீங்க நிறையத் தொண்டு செய்திருக்கிறீர்கள் இல்லையா?
பதில்: தொண்டுதான். ஆனால் நீங்க நினைக்கிறமாதிரி புத்தகங்களைத் தரமறிந்து தானே பாடமாக்கி விடுவதில்லை. அதுக்கு நிறைய செப்படி வித்தை எல்லாம் செய்யணும்.
கேள்வி: சாதரணமாக ஒரு எடிஷன்லே எவ்வளவு காப்பி போடுவீர்கள்?
பதில்: ஆயிரமும் போடுவாங்க, ஐந்நூறும் போடுவாங்க. போகும்னு தெரிஞ்சா எழுதினவனுக்கு ஆயிரத்துக்கு கணக்கு காட்டிவிட்டு ஐயாயிரமும் போடுவாங்க. நாம்ப அவுட்ரைட்டா வாங்கறதினாலே எத்தனை போட்டாலும் கேள்வி கிடையாது.
கேள்வி: நீங்க போடும் புத்தககங்களில் விற்காமல் தங்கிப் போவதுண்டா?
பதில்:  சிலது அப்படியும் ஆகும். ஆனால் ஒரு வசதி. லைப்ரரிக்கு கவர்மென்ட் ஆர்டர் மொத்தமா அறுநூறு காப்பி போயிரும். அதிலேயே முதலும் லாபமும் வந்துவிடும். சில சமயம் தெரியாமல் ரெண்டாயிரம் போட்டு அறுநூறு காப்பிதான் போச்சுன்னு வைங்க, நாலஞ்சு வருசம் கழிச்சு அட்டையைப் பிரிச்சு வேற தலைப்பு பிரின்ட் போட்டு ஒட்டி புதுசா இன்னும் ஒரு அறுநூறு காப்பி போயிரும்… இதையெல்லாம் தயவு செய்து போட்ராதீங்க… நாம் பாட்டுக்கு என்னவாம் உளறிக் கிட்டிருக்கேன்…பொறவு பொல்லாப்பு…
கேள்வி: உங்கள் வெளியீடுகள் பலவற்றுக்கு அவார்டு கிடைத்திருக்கிறதல்லவா?
பதில்: அதெல்லாம் ஒன்னும் பெரிசில்லீங்க. அகாடமி அவார்டுன்னா அஞ்சாயிரம். அது வாங்கறதுக்கு ரெண்டாயிரம் செலவாயிரும். மீதியைப் பாதிப்பாதி எடுத்துக்குவோம். இதிலே வழக்கு ஒன்னும் கிடையாது.
கேள்வி: உங்கள் வெளியீடுகள் தவிர வேறு புத்தககங்கள் விற்பதுண்டா?
பதில்: வியாபாரத்திலே அப்படியெல்லாம் பார்க்க முடியுமா? ஐம்பது பெர்சன்ட் கழிவு தந்தா யார் வெளியீடுன்னாலும் விற்போம்.
கேள்வி: ஒரு நூலை வெளியிட முடிவு செய்யுமுன் படித்துப் பார்ப்பீர்களா?
பதில்: நீங்க ஒண்ணு, அதுக்கெல்லாம் இப்பம் யாருக்கு நேரம் இருக்கு. சில ஆதர்ஸ் பேருக்கே புஸ்தகம் போகும். சில மூதேவிங்க பேருக்கு என்ன எழுதினாலும் போகாது.
கேள்வி: தேடிப்போய் வாங்குவதுண்டா?
பதில்: நிறைய நேராகவே வந்திரும். ‘பங்கஜா’ புத்தகம் போடணும்னா தேடித்தான் போகணும். ‘விஷ்ணு சுந்தரி’ புத்தகம் போடணும்னா காரெடுத்துக்கிட்டு நூறு மைல் போய் வெள்ளித் தாம்பாளத்திலே வெத்திலை, பாக்கு, பழம், பணம், பட்டுப் புடவை எல்லாம் வச்சு நீட்டணும். சிலர் பணத்தை எண்ணிப் பார்த்து விட்டுத்தான் உள்ளே போய் ஸ்கிரிப்டை எடுத்து வருவாங்க. பெரிய வம்பு புடிச்ச யாவாரம்ங்க.
கேள்வி: இந்தத் துறையிலே, எதிர்பாராமல் உங்களுக்கு நிறைய லாபம் தேடித்தந்த புத்தகம் ஏதும் உண்டா?
பதில்: நம்ப டாக்டர் க.கூ. ‘திருக்குறள் தீர்க்க உரை’ன்னு முப்பது வருஷம் முந்தி ஒரு மேட்டர் கொண்டாந்தார். இதெல்லாம் போகுமான்னு ஒரு சம்சயம் எனக்கு ஆரம்பத்திலே. சரி, விக்காமப் போனாக் கூட டாக்டர் க.கூ. தமிழ்ப் பேராசிரியர், நாளைக்கு தமிழ்த் துறைத் தலைவர் ஆகலாம். செனட் மெம்பர் ஆகலாம். வைஸ் சான்சலர் ஆகக் கூட வாய்ப்பு உண்டு. ஆளுங்கட்சியிலே அவுரு ஜாதிக்கு நிறைய செல்வாக்கு இருந்தது. சரி, ஒரு நூறு ரூபாய் கொடுத்து போனாப் போட்டும்னு வாங்கிப் போட்டேன். சொன்னா நம்ப மாட்டீங்க… இது வரை இருவத்தாறு லெட்சம் காப்பி வித்திருக்கு…
கேள்வி: பேராசிரியருக்கு பிறகு ஏதும் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையா?
பதில்: இதிலேதாங்க நமக்கும் மற்ற பப்ளிஷருக்கும் உள்ள வித்தியாசம். வேற எவனும்னா போடாப் போம்பான். நான் அப்படி இல்லீங்க… அன்னேலேருந்து என்ன புஸ்தகம் நம்ம வெளியீடா வந்தாலும் அவருக்கு ஒரு காப்பி அனுப்பீருவேன்… இதெல்லாம் மறைமுகமா விளம்பரம் இல்லாம நாம்ப செய்யும் சேவைங்க…
கேள்வி: கடைசியிலே ஒரு கேள்வி, உங்கள் பெயர் நிலைத்து நிற்கிற அளவிலே பெரிசா ஏதும் செய்கிற எண்ணம் உண்டா?
பதில்: இப்பக்கூட என்னங்க? எத்தினியோ புத்தகங்கள் நம்ம காலத்துக்குப் பிறகும் பெயரைச் சொல்லும். நாம் போட்ட எத்தனையோ புத்தகங்கள் சாகித்ய அகடெமி ப்ரைஸ் வாங்கீருக்கு. நம்ப புஸ்தகத்துக்கு ஞானபீடப் பரிசு கிடைச்சிருக்கு. ஆனா ஒண்ணு… நான் சாகறதுக்கு முந்தி நம்ப வெளியீடு ஒண்ணு நோபல் பரிசு வாங்கீரணும். அதுக்கும் வேலை நடந்துகிட்டுதான் இருக்கு. அதாங்க எனக்கு கொஞ்ச நாளா ஆசை.
தனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தன் வெளியீட்டுக்குக் கிடைக்க வேண்டும் என்ற பரந்த எண்ணம் உடைய இவர் உண்மையிலேயே ‘புத்தகக் கர்ணன்’ தான் என்று நினைத்தவாறே புறப்பட்டோம். கேட்டுக்கு வெளியே நடந்து திரும்பி பார்த்த பொது, பெரியவர் மண் கொத்தியுடன் மஞ்சணத்திக் கன்றை நோக்கி நடந்துகொண்டிருந்தது தெரிந்தது. ‘உழவாரப் படையாளி’ நினைவும் கூடவே வந்தது.
 
(கோரேகோவ் தமிழ்ச் சங்க இலக்கிய விழா மலர், 19850)
நன்றி: தட்டச்சு உதவி: பிரவீன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to உழவாரப் படையாளி

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    புத்தக வெளியீட்டில் இவ்வளவு விஷயங்களா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s