ஏற்புரை…

நாஞ்சில் நாடன்
சராசரி மனிதனின் வாழ்க்கை மிகவும் சிக்கல் மிகுந்ததாக மாறிக்கொண்டு வருகிறது. ஒருபக்கம் ‘வெந்ததைத் தின்று விதி வந்தால்சாவது ‘ என்பது போன்ற மனிதனை மந்தப்படுத்தும் நம்பிக்கைகளில் இழப்பு என்பது நல்ல அடையாளம். என்றாலும் தனிமனித , குடும்ப , சமூக உறவுகள் நெருக்கடிக்கும் நிர்கதிக்கும் ஆளாகி வருகின்றன.
     எளிமையாக இருப்பதற்கே மிகவும் பணம் தேவையாக இருப்பது எவ்வளவு கேவலமானது? நொய்யரிசிக் கஞ்சிதேடி ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அலைவதைப் போல…
               எல்லோரும் எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டும் வழிப்பறி செய்து கொண்டும் இருக்கிறார்கள்.
               யாரிடம் இருந்து தப்பித்து யாரிடம் அடைக்கலம் புகுவது என்று  தெரியவில்லை.
               இந்த நெருக்கடிகளை எல்லாம் அறிவுஜீவிகள் உணர்ந்து கொண்டு விட்டார்கள். ஆனால் அவர்கள் அதிகாரங்களுக்கு  சேவகம் செய்கிறார்கள்.
               கலைஞன் , இலக்கியவாதி இந்தத்தவிப்பை தீவிரத்துடன் உணர்ந்து கொள்கிறான். ‘ இன்னதென அறிகிலார் இவர் பிழையை மன்னியும் ‘ என்று படைப்பாளியால் இருக்க முடியவில்லை.
              அவனது கொதிப்பை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பதிவு செய்ய முயற்சி செய்கிறது இன்றைய நவீன இலக்கியம்.
             அந்தத் தவிப்பை , கொதிப்பை , உணர முடியாதவர்களால் நவீன இலக்கியத்தை புரிந்து கொள்ள இயலாது.
             இருபத்தைந்து (38) ஆண்டு கால எழுத்துப் பயணத்தை நின்று நிதானித்து திரும்பிப் பார்க்க இன்றெனக்கு அவகாசம் இல்லை.
             என்றாலும் தோன்றுகிறது , முன் தினத்தைவிடவும் , நேற்றைவிடவும் , இன்று நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது என்று.
இது ஒரு சுய திருப்தியின் பாற்பட்டதல்ல.தொடர்ந்த தன்னிரா கரிப்பில் ஆயாசமும் , ஆயாசம் தொலைந்து நம்பிக்கையும் துளிர்க்கிறது.
              என்னுடைய விமர்சக நண்பர் சொல்லுவது போல ஒருமுறை தொட்ட உயரத்தை மறுபடி தொடமுயற்சிப்பதும் தொடுவதுமான போராட்டம் அல்ல இலக்கிய முயற்சிகள்.
                ஒருவகையான பந்தயமும் இதுவல்ல என்றாலும்சென்று கொண்டும் இருத்தல்,  தன்னையும் தாண்டுதல் , பரதனின் மெய்ப்பாட்டில் தன்னையே தான் தொழவும் செய்தல்.
                மற்ற மொழிகளில் எப்படியோ, தமிழில் படைப்பாளி ஒரு அபாயத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கும் உயிரினம்.போற்றப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டிய உயிரினம்.காரணம் ,நேர்மையான படைப்பாளி , மனித இனத்தைப் பற்றி உண்மையான கரிசனம் கொண்டவன்.
தான் அழிந்து போவதில்கூட அவனுக்கு அச்சம் இல்லை.
ஆனால் தன் குரல் நசுக்கப்படுவதைப் பற்றிய கவலை உண்டு.
             ஏனெனில் நசுக்கப்படும் குரல் சகலவிதமான அடக்குமுறை களுக்கும் படயெடுப்புக்கும் நச்சுப் பாசனங்களுக்கும் எதிரான குரல்.  
நீண்ட நெடும் பாலையின் ஊடே சென்றுகொண்டிருக்கும் போது, சற்று ஆதரவான குரல்கள் கேட்கின்றன. குளிர் தருக்கள் தென்படுகின்றன.
இரு கை கோரிக் குடிக்க நீரோடைகள் எதிர்ப்படுகின்றன.
            விருதுகள் , பாராட்டுகள் , பரிசுகள் எல்லாம் பாலையின் நடுவேயான சற்று இளைப்பாறல்கள். எனவே ‘அமுதன் அடிகள்வெள்ளி விழா அறக்கட்டளை இலக்கியப் பரிசு’க்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
அமுதன் அடிகள் பரிசு 1998
தட்டச்சு உதவி: பாலா, சிங்கப்பூர்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஏற்புரை…

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s