சீதக் குளிர் ஆடி….

நாஞ்சில் நாடன்
இயற்கையில், இரவு எமக்கு ஒரு விதமாகவும் உமக்கு ஒருவித மாகவும் ஓரவஞ்சனையுடன் அமைக்கப்பட்டதில்லை. இயற்கை என்பது இந்திய தேசிய அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவது போல ஜனநாயக, சமத்துவ, சமதர்ம, மக்களாட்சித் தத்துவம்தான். ஆனால் என் செய்ய? அரசியல் அமைப்புச் சட்டம் என்பது வேறு, தெரு நடைமுறை என்பது வேறு.
ஆனால், இரவின் தன்மையை நாம் உணர்வது வேறு வேறு தன்மைகளுடன். சிலருக்கு சீக்கிரமே பொழுது புலர்ந்துவிட்டதாயும் சிலருக்கு நெடுநேரமாய் பொழுது புலராமல் நீண்டு கிடப்பதாயும் தோன்றும். கூடி முயங்கிக் கிடக்கும் காதலரை வல்லந்தமாய்ப் பிரிப்பதற்கென்றே கொடிய கூரிய வாள்போல் வைகறை வந்தது என்றொரு பெண் வருத்தப்படுகிறாள். விடிந்தால் காதலன் எழுந்து, பிரிந்து போய்விடுவான் என்பதால் விடியல் மீதே கோபம் வருகிறது.
தலைவனைப் பிரிந்து வாழும் வேறொரு பெண்ணுக்கு இன்னும் வைகறை வராமல் இரவு நீண்டு போகிறதே என்று பெரும் கவலையாக இருக்கிறது. முடிவற்ற இரவை முடிவுறச் செய்யும் பகலவன் வராமற் போனதில் கோபம். சூரியனை ராகு, கேது எனும் பெரும் பாம்புகள் மறைத்துவிட்டனவா? சூரியன் பவனிவரும் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் அச்சு முறிந்து விட்டதா? புரவிகள் கயிறு உருவிப் போய்விட்டனவா? இரவிதான் செத்துவிட்டானா? வழி மாறிச் சென்றானா? எனக்கு இரவு எவ்விதம் விடியப் போகிறது எனத் தவிக்கிறாள்!
இன்னொரு பெண், முழுக்க உறங்காமல் கண்விழித்து இரவுக்குத் துணை இருக்கிறாள். இரவு தனியாகக் கிடந்து தவிக்கிறதே என. நிலைபெற்ற எல்லா உயிரையும் காத்து, உறக்கம் கொள்ளச் செய்த இரவுக்கு நான் அல்லாது வேறு யார் துணை என்பது அவள் அக்கறை. அதாவது தானும் இரவும் மட்டுமே தனியாகத் துணையற்று இருக்கிறோம் என்பது பொருள். இரவு காமத்தின் ஆட்சி எனச் சொல்வன தமிழ்ப்பாடல்கள். அவர்கள் கண்விழித்திருக்கும் காரணங்கள் பிரிவு ஆற்றாமை, தாபம், காதல், தனிமை, விரகம்…
நானும் விழித்திருக்கிறேன். பேருந்துப் பயணங்களில் உறங்குவதே இல்லை. சொகுசுப் பேருந்து எனில் உறங்கலாம்தான். எனது வாழ்க்கைத்தரமோ, காசு மிச்சமாகும் என்று ஏறி இறங்கி சாதாரணப் பேருந்துகளில் பயணப்படுவதை ஆதரிப்பது. நாகர்கோயில் போவ தானால், கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் என இறங்கி ஏறிப்போவது என் பயணம். பயணியைத் தூங்கவிடக் கூடாது எனும் முன் முடிவுடன் பாம்பு கடித்தவனை தூங்கவிடாமல் விழித்திருக்கும்படி வைத்திருப்பார்களே அதுபோல சினிமா காட்டு வார்கள். அல்லது அதிகாலை மூன்று மணிக்கும் குறியெழுப்பிக் காமம் கசியச் செய்யும் திரை இசை கீதங்கள் போடுவார்கள். அல்லது பஸ் ஏறுமுன் மட்டமான மதுபானம் கால் குப்பியும் முட்டை பரோட்டா வயிறு முட்டவும் சேவை சாதித்து விட்டு வந்தவர் பக்கத்து இருக்கை சகபயணியாக வந்து வாய்ப்பார். அவரது ஏப்பமும், அபானவாயுவும் எப்படி நம்மைத் தூங்கவிடும்? மேலும் நம் தோளில் தலை சாய்த்து அவர் தூங்க முயல்வார்.
பம்பாயில் வாழ்ந்தபோது, ஊரில் இருந்து பம்பாய் வரும் நண்பர், உறவினர், தம்பியர் சகாயத்துக்காக, நள்ளிரவு இரண்டரை மணிக்கு கல்யாண் அல்லது தாதர் வரும் இரயில் வண்டிக்காக, கண்விழித்துக் காத்துக் கிடப்பது, கொசுக்கடியில்.
அன்றெல்லாம் குவைத், துபாய், பஹ்ரெய்ன், அபுதாபி, மஸ்கட், சவூதி அரேபியா போய்த் திரும்பும் நண்பர்கள் நிறைய இருந்தனர். சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து நேரடி விமானப்பயணத்துக்கு வசதியும் இருக்கவில்லை. ஊரில் இருந்து தந்தி வரும். சாந்தா குரூஸ் விமான தளத்தில் வரவேற்று சென்னைக்கோ, திருவனந்தைக்கோ மறுவிமானத்தில் ஏற்றி அனுப்ப. பெரும்பாலும் பம்பாயில் தரையிறங்கும் விமானங்கள் இரவு ஒரு மணிக்கு வரும். பயணி வெளியே வர மேலும் இரண்டு மணிநேரம். அவரது சுங்கச் செலாவணிக்காக நம் கையில் ரொக்கம் தயாராக வைத்திருக்க வேண்டும். இராமுழுக்க கண்விழித்து வரவேற்று மறுவிமானம் ஏற்றி அனுப்பிய வகைக்கு செவன் ஓ கிளாக் பிளேடு ஐந்து கொண்ட பாக்கெட் ஒன்று, கேமி சோப் ஒன்று, ரேனால்ட் பேனா ஒன்று கிடைக்கும். மூன்றிற்கும் இன்றைய அடக்கவில்லை முப்பத்தி நான்கு ரூபாய். நமக்கு ஓரிரவு உறங்கா நயனம்.
சிறுவயதில், எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள சுற்றூர்களில் நடக்கும் அம்மன்கோயில், மாடன் கோயில் கொடை பார்க்கப் போய், கோமரத்தாடிகளின் ஆராசனை, வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், கரகாட்டம் யாவும் அன்றைக்கான ஓய்வு அடைந்து, கூடவந்த சேக்காளிகளைத் தேடி அலைபாய்ந்து, உள்ளூர்க்காரர்கூடத் தலைசாய்க்க வீடடங்கச் சென்ற பிறகு, தனியாக நடந்து ஊருக்குப் போக பயந்து, கொடை நடக்கும் கோயில் நடையிலேயே ஓரமாய் சாய்ந்து உட்கார்ந்து விடியக் காத்திருந்து…
எத்தனையோ சந்தர்ப்பங்கள், எத்தனையோ நெடுக நீண்ட இரவுகள்… பொதுவாக நோயாளிகளின் இரவு நீண்டது என்பார்கள். பல்வலிக்காரர், ஆஸ்த்துமாக்காரர் இரவுகள் நெடியவை.
வறுமையும் தனிமையும் காதலும் காமமும் நோய்தாம் போலும். பசியோடிருப்பவன், வலியோடிருப்பவன் இரவு – கொடிது, கொடிது; நெடிது நெடிது. இந்தியாவில் 28 கோடிப்பேர் இரவில் பசியோடு உறங்கப் போகிறார்கள் என்றது ஒரு புள்ளி விவரம். அறுபதாண்டு கால மக்களாட்சியின் மாபெரும் வெற்றி எனவும் ஆளுயர பேனர்களில் இந்தியா நடந்து வருவதாகக் கொண்டாடலாம்.
பசியுடனும் வலியுடனும் அரற்றிக் கிடந்த இரவுகள் நினைவில் உண்டு. அவற்றை ஈண்டு சொல்ல விழையமாட்டேன். ஒரேயொரு முறை குளிருடன் போராடிய இரவு ஒன்றுண்டு என்னிடம். குளிர் என்றால் உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம் குளிர் என்று எண்ணிவிடாதீர்கள். மத்தியப்பிரதேசத்தின் மலைமீதிருந்த குளிர் வாசஸ்தலத்தின் குளிர்.
கால் நூற்றாண்டு இருக்கும். பம்பாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் யாத்திரை செய்யும் விற்பனை அதிகாரியாக இருந்தேன். மராத்திய மாநிலம், மத்தியப்பிரதேசம், கோவா என் கிளையின் தட்டகம் – அதிகார வரம்பு.
திருட்டு ஒரு தொழில், அரசியல் ஒரு தொழில் என்பது போல பிரயாணம் எனது தொழில். இலக்கியப் பிரயாணம் பற்றுக்கணக்கு எனில், தொழில் பிரயாணம் வரவுக் கணக்கு. நடந்து தேயும் சகடக்கால் எனக்கு.
இலக்கியம் தவிர்த்து சில பொதுப்பணிகள் உண்டு. அவற்றுள் ஒன்று, ஊரில் இருக்கும் பெண்ணுக்கு, பம்பாயில் வேலை பார்க்கும் பையன் கூடிவருமானால், அவனைப் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வது. பம்பாயில் வேலை பார்த்த எனக்கு, அந்த ஒரு காரணத்தாலேயே பெண் தர மறுத்தவர் உண்டு. எனவே, விசாரிக்கச் சொல்லி வரும் பையன்களுக்கு நூற்றுக்குப் பத்து மதிப்பெண்கள் சலுகையாக முதலிலேயே அளித்து விடுவேன். வேலையின் உறுதி, வைத்துக் காப்பாற்றும் பொறுப்பு உணர்வு, ஏற்கனவே மனைவி மக்களுடன் வாழ்கிறவன் அல்ல எனும் புள்ளிகளுக்கு முன்னுரிமை தருவது. புகை பிடித்தல், அவ்வப்போது பீர் குடித்தல், தோன்றும் போது அசைவம் உண்ணுதல் என்பன என் மதிப்பீட்டில் பொருட் படுத்தத் தகுந்தவை அல்ல. அதற்கும் காரணம் உண்டு. அசைவம் உண்டதாலும் அவ்வப்போது மிலிட்டரி ரம் மோந்தியதாலும் தட்டிப்போன பெண்தரங்கள் உண்டு எனக்கு.
இது என்ன நேர்மை என வினவ உமக்கு உரிமை உண்டு. இதுவே என் நேர்மை எனப் பகர எனக்கும் அதிகாரம் உண்டு.
இதில் சிரமமான வேலை என்னவெனில், பம்பாய்க்கு வெளியே, 300 கி.மீ. தூரத்தில் வாழும் பையனைப் பற்றி விசாரித்துத் தகவல் சொல்லெனக் கடிதங்கள் வருவதுண்டு. ஒரு வகையில் யாத்திரைப் பணியை அதற்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். எனது நற்சாட்சிப் பத்திரத்தினால் வாழ்க்கைப்பட்டு வந்த தங்கை ஒருத்திக்கு இன்னும் என்மீது ஆதங்கம் உண்டு, கணவன் அசைவம் உண்பதிலும் அவ்வப்போது குடிப்பதிலும். ஆனால், அவன் பம்பாயில் மூன்று படுக்கை அறைக் குடியிருப்பில் வாழ்கிறான், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் துணைப் பொது மேலாளன்.
ஆற்றில் குளத்தில் கிணற்றில் தள்ளிவிடுவதற்குப் பதிலாக, முப்பத்தொரு ஆண்டுகள் முன்பு எனக்கும் திருவனந்தபுரத்துத் தியாகி ஒருத்தர் பெண் கொடுத்தார். அந்த உறவினால், உறவுப் பெண் ஒருத்திக்கு பேசப்படும் மாப்பிள்ளைப் பையன் பற்றிய நற்சான்று கோரி எனக்கு கடிதம் ஒன்று எழுதினார். 1985 என்று ஞாபகம் அன்று தொலைபேசிக்கே துந்தணத்தாம் பாடணும், அலைபேசிக்கு அடிப்படையே இல்லை. என்றும் நிரந்தரம் அஞ்சலட்டை அல்லது உள்நாட்டுத் தபால் உறைதான்.
அந்த மலை வாசஸ்தலத்தின் பெயர் எங்கோ ஞாபக அடுக்கில் சிக்கிக் கிடக்கிறது. இதை நகலெடுத்து முடிக்குமுன் நினைவில் வந்தால் சொல்லிவிடுகிறேன். பம்பாயில் இருந்து கிழக்கே வரும் ரயில் பாதை புசாவல் சந்திப்பில் இரண்டாய்ப் பிரியும். ஒன்று நாக்பூர் நோக்கி, மற்றொன்று இட்டார்ஸி நோக்கி மேலேறும். இட்டார்ஸி தாண்டி, இரண்டு மணிநேரம் ஜபல்பூர் நோக்கிப் பயணமாகி ரயில் நிலையத்தில் இறங்கினேன். மேலும் ஒன்றரை மணி நேரம் பேருந்தில் மாலைப் பயணம்.
அதற்கு முகாம் அமைந்திருந்த தரைப்படை பெட்டாலியன் ஒன்றில் பையன் ஹவில்தாராக இருந்தான். போய்ச் சேர்ந்தபோது பிற்பகல் மூன்றுமணி இருக்கும். பட்படி (ஆட்டோ) பிடித்து பேரக்ஸ் அடைந்தேன். கடுமையான கெடுபிடி, விசாரணை, வருகைப் பதிவு முடிந்தபின் பார்க்கப் போன பையன் வந்தான். இரண்டு, மூன்று இடங்கள் சுற்றிக் காட்டினான். அணைக்கட்டு ஒன்று பார்த்த ஞாபகம். மறுபடி பேரக்சுக்குப் போனோம். மெஸ்ஸுக்கு அழைத்துப் போனான். பெரிய கண்ணாடித் தம்ளர் வழிய வழிய டிரிப்பிள் எக்ஸ் ஹெர்குலிஸ் ரம், மூன்று லார்ஜுக்குக் குறைவில்லை. இலேசாகப் பரவ ஆரம்பித்த குளிருக்கு வெப்பம் பகர்ந்தது.
முழு உளுந்து வேகவைத்து, கடுகு எண்ணெயில் பூண்டு தட்டிப்போட்டுத் தாளித்த டாலும் முரட்டு ரொட்டிகளும் இரவு உணவு. குளிரின் ஆட்சி தொடங்கி விட்டது, உட்புகுந்து உராய முனைந்தது. கனத்த கருஞ்சிவப்பு ரம்முக்கும் இறங்க ஆரம்பித்த குளிருக்கும் சின்ன யுத்தம் போல.
என் கையில் ஒரு ப்ரீஃப்கேஸ் மட்டும். ஒரு நாளுக்குத் தேவையான மாற்றுடை, லுங்கி, துவர்த்து, டாய்லெட் சமாச்சாரங்கள்.
இராத் தங்கிவிட்டுக் காலையில் போகச் சொன்னான் மாப்பிள்ளைப் பையன். என்றாலும் மதிப்பெண்கள் வழங்க வேண்டிய பரிசோதனை ரம்மும் டால் ரொட்டியும் சாப்பிட்டதே மரபு அன்று. தங்குவது சட்ட விரோதம். மேலும், பட்டினி கிடந்தாலும் கீழ்ப்படியாத கிராமத்துத் திமிர்.
‘‘பஸ்சை நம்ப முடியாது அண்ணாச்சி… கவுத்திருவானுக… கடைசி வண்டி போயிட்டா, காலைல ஆறு மணிக்குத்தான் பாத்துக்கிடுங்க…’’
‘‘இல்லைப்பா… கடைசி பஸ்சுக்கு இன்னும் நேரம் இருக்கே! காலைல ஒரு மில் விசிட் இருக்கு… ராத்திரியோட ராத்திரியா இட்டார்ஸி போயிருவேன்…’’
விதியே என வழியனுப்பி வைத்தான். ‘விதி வலியது. பிடர் பிடித்து உந்த நின்றது.’
பேருந்து நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. கடைசிப் பேருந்துக்காக ஏழெட்டு பேர் நின்றிருந்தனர். மப்ளர், குல்லா, ஸ்வெட்டர், ஷால் சகிதம். சுற்றியிருந்த கடைகள் சாத்தப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரேயொரு சாய்வாலா மட்டும் நாற்சக்கர தட்டுக் கடையில் குளிர் காய்ந்திருந்தான். வந்து திரும்பும் கடைசி பஸ் வரும் நேரம் கடந்து கொண்டிருந்தது.
‘‘மாதர் சோத்… கபி பி தேக்கோ, ஐஸாயீ ஹோத்தா ஹை’’ என்று அரசுப் பேருந்தைத் திட்டியவாறு சிலர் தத்தம் வீடுகளுக்கு மடங்க ஆரம்பித்தனர். நம்பிக்கைவாதிகள் ஓரிருவர் நின்றிருந்தனர். சிற்றிடி குமுறுவது போல் மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று வந்து நின்றது. தாமதமாகிப்போன அவசரத்தில் பத்துப் பதினைந்து பேர் இறங்கி, சோம்பல் முறித்து, எதிர் குளிரில் சோம்பல் நடை நடந்தனர்.
சாவகாசமாகப் பேருந்து ஏறப்போனேன், எனது பாசிட்டிவ் திங்கிங் பற்றி மனதுக்குள் மெச்சிக்கொண்டது, அவசரமாகக் கண்டக்டர் கத்தினான். ‘‘ருக்கோ பாய்… காடி நை ஜாத்தா… கராப் ஹோ கயா!’’
பாவி கெடுத்தான், பஸ்சும் கெடுத்தது. இனி எப்போது சரி செய்து இந்த இரவில் மீளப் போகிறான்? வண்டியை டிரைவர் ஒதுக்கி விடுவதைப் பார்த்தால் இரவு கிளப்பும் யோசனை இல்லை போலும்.
வெறுப்பாக இருந்தது. பேசாமல் பேரக்சுக்குத் திரும்பிவிடலாம் என்று தோன்றியது. மணி பத்தரை ஆகிவிட்டது. குளிருக்கு அடக்கமாகப் போர்த்துக்கொண்டு உறங்கி இருப்பான். மேலும் சென்டரி, கேட் செக்யூரிட்டி உள்ளே அனுமதிக்க வேண்டும் இந்த நேரத்தில். தயக்கமாக இருந்தது.
இன்னும் ஒரு மணிநேரம் தானே! உட்கார்ந்திருக்கலாம், பேருந்தினுள் வேண்டுமானாலும் படுத்துக் கிடக்கலாம், இரவில் சிறுநீர் கழிக்கத் தட்டில்லை. மற்ற காலைக் கடன்களுக்குத் தோதில்லை என்பது கலக்கமாக இருந்தது.
பேருந்து நிலையக் காவல்காரர், உள்ளூர் ரோந்துப் போலீஸ்காரர், பக்கத்து அரசு அலுவலகக் கட்டிட இரவுக்காவல் சௌகிதார் எனச் சிலர் தீவளர்த்துக் குளிர்காய முனைந்தனர்.
பெட்டியினுள் விலை உயர்ந்தது எதுவும் இல்லை. கைவசம் முன்னூறு ரூபாய் பணம், இருபதாண்டுப் பழைய கைக்கடிகாரம், அன்று கிரெடிட் கார்டும் புழக்கத்தில் வந்திருக்கவில்லை. திட்டமிட்டு வந்து எவன் திருடப் போகிறான் இந்தக் குளிரில்? சற்று நேரம் தீக்காய்ந்தேன். பெட்டியைத் திறந்து துவர்த்தை எடுத்துக் காதடைத்துத் தலைப்பாகைக் கட்டிக்கொண்டேன்.
குளிர் அடிக்க ஆரம்பித்தது. குளிர் எனில் பம்பாயின் மார்கழி மாதத்து குறைந்த எல்லைக் குளிர் அல்ல. அதற்குப் பலபடிகள் கீழே. தீக்கங்கின் முன் சற்று முதுகையும் வாட்டலாம் போலிருந்தது. மணி பதினொன்றரை ஆகி இருந்தது. வெயிலின் உச்சம் பகல் பன்னிரண்டு முதல் மூன்று மணிவரை என்பார்கள். எனில், குளிரின் உச்சமும் இரவில் அதுவாகத்தானே இருக்கவியலும்?
சாய்வாலா கடைகட்டி விட்டான். கிடைக்குமோ கிடைக்காதோ என்று எவர் வந்து இனி வியாபாரம் செய்யப்போகிறார்கள்? டிரைவர் கண்டக்டர் இருவரும் பஸ்சினுள் உறங்கத் தோது செய்ய ஆரம்பித்தனர். சன்னல்கள் மூடி, கம்பளி உதறி, மப்ளர் தலைக்குச் சுற்றி, ஸ்வெட்டருக்கு மேலே உரோமப் போர்வை போர்த்து…
எனக்கும் சற்றுக் கிடக்கலாம் என்று தோன்றிற்று.
பேருந்தினுள் ஏறிப் போனேன். தலை தூக்கிப் பார்த்த டிரைவர் ஒன்றும் சொல்லவில்லை. இன்ஜினுக்கு அருகே சற்றுக் கதகதப்பாக இருந்தது. குறுக்குச் சீட்டில் படுத்தேன். தலைக்கு உயரமாகக் கைப்பெட்டி. லுங்கியை எடுத்துப் போர்த்திக்கொண்டேன். ஆரம்பத்தில் கிடைத்த வெதுவெதுப்பு உணர்ச்சி மாறி மறுபடியும் குளிர ஆரம்பித்தது. துவைத்துத் தேய்த்து மடித்து வைத்திருந்த சட்டையை எடுத்து, சட்டை மேல் சட்டையாகப் போட்டுக் கொண்டேன். மலை வாசஸ்தலம் எனத் தெரிந்திருந்தால் வெப்ப ஆடைகள் எடுத்து வந்திருக்கலாம்.
உறக்கம் வரவில்லை. கொசு ரீங்கரித்தது. வண்டினம் முரலும் சோலை, ஆனால் முகத்தில் மோதி விழுந்தன. முகத்தை மூடிக் கொண்டு உறங்கிப் பழகவில்லை. கன்னங்கள் குளிர்ந்து காந்த ஆரம்பித்தன. உதடுகளிலும் எரிச்சல் தெரிந்தது. மூக்கு முழைகள் காந்தின. சூடு பறக்கக் கைகளைத் தேய்த்து கன்னங்களில் வைத்துக் கொண்டேன்.
சற்று கணப்பருகே சென்று குளிர்காயலாம் என்று தோன்றியது. பெட்டியை இருக்கையிலேயே விட்டுவிட்டு, தீக்கங்கு அருகில் போனேன். நாலைந்து பேர் இருந்தார்கள். சற்று அனங்கி, ஒதுங்கி இடம் விட்டார்கள். சிவப்பு ஒரு அழகு, சூடு ஒரு ருசி என்பாள் அம்மா. அந்த ருசியின் உச்சம் தெரிந்தது அன்று.
குத்தவைத்து உட்கார்ந்து, ஏதோ துக்கம் காக்கும் சடங்கு போல் மௌனமாய் இருந்தனர். நாய் ஒன்று சற்றுத் தள்ளிப் படுத்து உடல் உதறி ஒடுங்கியது. பெட்டியினுள் இருக்கும் பேண்டையும், பேண்டின் மேல் அணிந்து கொள்ளலாமா என்று தோன்றியது.
ஒரு கம்பளி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இராப் பட்டினிக்காரன் ஓணம் சத்யை கனவு கண்டாற் போல. போர்த்தி உட்கார்ந்திருந்தவர் கம்பளிகளில் பொத்தல்கள் தெரிந்தன. தெரியத் தானே செய்யும். சட்டமன்ற உறுப்பினன் எவனும் பேருந்து நிலையத்தில் கொடுங்குளிரில், நள்ளிரவில் தீ வளர்த்துக் குளிர் காய்வானா என்ன?
எல்லாம் இழந்து, தோற்று, காயம் பட்டு, கையில் வாள் மட்டும் தாங்கி, போர்க்களத்தில் கால் பரத்தி நின்ற மன்னன் ஒரு குதிரை வேண்டும் என்று கேட்டது போல…
பேரக்சில் தங்கி இருந்திருக்கலாம். மலையாளத்தில் சொல்வார்கள் -தாரித்திரியம் கொண்டு கிடக்கானும் பாடில்லா, தானமானம் கொண்டு நடக்கானும் பாடில்லா என்று.
அடர் கருஞ்சிவப்பு ரம் உடலில் வெளிறிக் கொண்டிருந்தது, மூச்சுக் காற்றில் இன்னும் லேசான வாசனை இருந்தாலும். அறுபத் தெட்டாவது முறையாக மணி பார்த்தேன். ஒன்றே முக்கால். இன்னும் மூன்று மணிநேரம். குறி தேடிக் கண்டுபிடித்துப் பெய்த மூத்திரத்தில் ஆவி பொங்கியது. பெருச்சாளிகள் ஒன்றன்பின் ஒன்றாக குப்பை மேட்டுக்கு இரை தேடிப்போயின. காற்று இல்லை, மரங்களில் சலனமும் இல்லை. மௌனமொழியில் குளிர் வெஞ்சினம் உரைத்தவாறிருந்தது.
எதற்கு இந்த பொதுச்சேவை? எரிச்சல் வந்தது. என்றாலும், ஆயிரம் காலத்துப் பயிர். இந்தத் திருமணம் சொர்க்கத்தில் தீர்மானிக்கப் படுவதற்குப் பதிலாக, குளிர் மிகுந்த இரவின் கணப்பருகே தீர்மானிக்கப்படும். எழுந்து, கை சுழற்றி, காற்றில் கால் உதைத்து, காலாற நடந்தேன். பழைய என்.சி.சி. பயிற்சியின் அஞ்சலோட்டம் சற்று நேரம். வேக ரத்தப் பாய்ச்சலில் கொஞ்சம் உடல் வெப்பம் சித்தித்தது.
வெயிலும் மழையும் குளிரும் பசியும் நோயும் எளிய மனிதர்களை இரக்கமற்றுத் தாக்குகின்றன. கங்கைக் கிளறி, புதிய விறகுச் சுள்ளிகள் போட்டதில் கணப்பு சட சடத்துப் பொரிந்து தீச்சுவாலை எழுந்து பாம்பென ஆடிற்று. மிக அருகே நீட்டினால் முழங்கை உரோமம் பொசுங்கிப் போகும்.
ஒரு பன்னும் டீயும் இந்திரன் அமிழ்தம் போல் அமையக் கூடும். பெருமான் கை மைதுனம் செய்கிறபோது அர்ச்சகன் வடிவான பெண் குறிக்கு வரம் கேட்டானாம்!
எங்கிருந்தோ கிழட்டுக் குதிரையொன்று நொண்டி நொண்டி நடந்து வந்தது. தீக் கணப்புக்கு சற்று அருகில் வந்து நின்றது.
‘‘ஆவ்… அர்ஜுன், உன்னைத்தான் தேடினேன்’’ என்றான் போலீஸ் ஹவில்தார்.
இலேசாய் மழை தூற ஆரம்பித்தது.
‘‘சல்… பெஹன் சோத்’’ எனத் திட்டிவிட்டு, பேருந்து நிலையத்தில் ஒதுங்கத் தலைப்பட்டனர்.
நான் ஓடிப் பேருந்துக்குள் நுழைந்து, தலை உதறி, இருக்கையில் அமர்ந்தேன். கால் நீட்டிச் சாய்த்தேன். விடியல் என்பது வேளை வந்தால் தானே!
தட்டச்சு உதவி: தி.சுபாசிணி

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள், பம்பாய் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சீதக் குளிர் ஆடி….

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    நேரில் பேசுவது போல் இருக்கிறது.
    நன்றி ஐயா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s