வரிசை…

நாஞ்சில் நாடன்
சுமார் 38ஆண்டுகளுக்கு முன்பே, மும்பையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் ‘Best’ பேருந்து நிறுத்தங்களில் வரும் பேருந்துகளை எதிர்பார்த்து, நீண்ட வரிசையில் நிற்பார்கள். ஒருவரையருவர் இடித்துக்கொள்ளாமல், பிடரியில் மூச்சும் வெங்காய வாசனையும் விடாமல், முன் வயிற்றால் முதுகைத் தள்ளாமல், சிலர் சாவகாசமாக மாலை செய்தித்தாள் படிப்பர்.
மும்பை மாநகரில், பெரும்பாலும் இரண்டடுக்குப் பேருந்துகளாக வரும். கீழே ஒரு நடத்துநர், மேலே ஒரு நடத்துநர். சென்னையில், தேர்தலில் தோற்றவர் மாநில ஆளுநரான தோரணையில் நடத்துநர் தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டு, என்ன நெரிசல் இருந்தாலும் பயணிகள் முண்டியடித்து வந்து பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்பது போல, மும்பையின் கார்ப்பரேஷன் நடத்துநர் எதிர்பார்ப்பது இல்லை.
பயண நேரம் முழுக்க, பேருந்து நடைபாதையில் மேலும் கீழும் நடந்துகொண்டு
இருப்பார். அவரது கையில் டிக்கெட் பஞ்ச் செய்யும் உபகரணம் ஒன்று இருக்கும். ஸ்டேப்ளர் அளவில், அதை இடது கையின் பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் பிடித்து ‘டிக் டிக்’ என்று ஒலி எழுப்பிக்கொண்டு இருப்பார். குரல் எழுப்புவதுகூட அபூர்வம். அடுத்த நிறுத்தம் வரும்போது வாசலில் இருப்பார். பேருந்தினுள் நிற்கும் பயணிகளை மனதில்கொண்டு, ”ஃபக்த சார் ஜன் சடோ” என்பார். ஐந்தாவது ஆள் ஏற மாட்டான். புதியவரான வெளியில் நிற்கும் நமக்குத் தோன்றும்… ‘உள்ளேதான் நிறைய இடம் இருக்கிறதே, இன்னும் நான்கு பேர் ஏறினால் என்ன?’ என்று. ஆனால், நடத்துநர் கணக்கு அதல்ல. அடுத்த நிறுத்தத்தில், ”ஷ்ரிப் பாஞ்ச் ஜன் சடோ” என்பார். ஐந்து பேர் ஏறுவார்கள். மீதிப் பேர் அடுத்த பேருந்துக்குக் காத்திருப்பார்கள்.
கொச்சையாக நகைப்பு ஏற்படுத்த, சில நடத்துநர்கள் பேசுவது உண்டு… ”ஒளரத் கே பீச்சே காலி ஏக் ஆத்மி சடோ” என்று. அந்தப் பெண்ணைத் தொடர்ந்து ஒருவர் மட்டும் ஏறுங்கள் என்று கண்ணியமாகவும் பொருள்கொள்ளலாம்.
வரிசையில் நின்று பேருந்து வந்ததும், தள்ளல், மோதல், மிதித்தல், நெரித்தல் என எதுவும் கிடையாது. நோயாளி ஏறலாம்; வயோதிகர் ஏறலாம்; குழந்தைகள் ஏறலாம்; ஊனமுற்றோர் ஏறலாம்; கர்ப்பிணிகள் ஏறலாம் எந்தச் சிரமமும் இன்றி. கடைசி ஆள் ஏறியதும் இரு வாசல் கம்பிகளையும் பிடித்துக்கொண்டு நடத்துநர் சற்று நேரம் பாதுகாப்பாக நிற்கவும் செய்வார். எதன் காரணமாகவோ வரிசை குலைந்துபோனால், இரு கைகளாலும் பாதையை மறித்துக்கொண்டு ஒருவரையும் ஏறவிடாமல் நிற்பார், பேருந்து நகர்ந்துவிடும். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கிலச் செய்தித்தாளில் ஆர்.கே.லட்சுமண் கார்ட்டூன்களில் அவர்கள் சுவாரஸ்யமான பாத்திரங்கள்.
பேருந்துகளில் மட்டும் என்றில்லை… பால் பூத்களில், ரேஷன் கடைகளில், வங்கிகளில், பிரெட் தட்டுப்பாடான நாட்களில் பெட்டிக் கடைகளின் முன்பு, ஞாயிற்றுக்கிழமைகளில் கோழிக் கடை, மட்டன் கடை, மீன் கடைகளில், குறைந்த நபர்கள் மட்டுமே அமரக்கூடிய உணவுக் கூடங்களின் முன்பு என எங்கும் எப்போதும் வரிசை பொறுமையுடன் கிடக்கும். இதை நம்புவதற்கு உங்களுக்குச் சிரமாக இருக்கும். ஆனால், நமது சினிமாப் புரட்சி நாயகர் எவரும் காலால் உதைத்தால் பம்பரம் போலக் கிறங்கி 30 மீட்டர் தாண்டி, அடி வாங்கியவன் குப்புற வீழ்வதை நம்பச் சிரமம் இருக்காது.
மேலும், இந்த வரிசைகளில் கரை வேட்டிக்காரர், கப்படா மீசைக்காரர், துண்டு போட்டவர், சால்வை போர்த்தியவர், கட்சித் தலைவர் படம் போட்ட சின்ன பூரி சைஸில் ஆன டாலர் போட்டவர், தீப்பெட்டி அளவில் மோதிரம் போட்டவர் எவருக்கும் முன்னுரிமையோ, பூரண கும்ப வரவேற்போ கிடையாது. சயான் சர்க்கிள் பக்கமிருந்த பாலக்காடு மணி ஐயர் மெஸ்ஸில் சாப்பிட, சில ஆண்டுகள், தினந்தோறும் நான் வரிசையில் நின்றதுண்டு. ஒருவேளை ஃபால்க்லேண்ட் ரோடு, நவால்கர் லேன் பாலியல் தொழிலாளர் விடுதிகளில்கூட மாதத்தின் முதல் வாரத்தில் வரிசைகள் கிடந்திருக்கலாம்.
வரிசை என்பதோர் நகரத் தன்மை. எங்கு தேவை அதிகமாகவும் வழங்கல் குறைவாகவும் இருக்கிறதோ, எங்கு மக்கள் நேரம் எனும் செக்கில் ஆட்டப்பட்டு எண்ணெய் பிழியப்படுகிறார்களோ, எங்கு முதலில் வந்து நின்றவருக்கு முதலில் கிடைக்க வேண்டும் என்ற நியாய உணர்வு இருக்கிறதோ, எங்கு தன் காரியம் மட்டும் ஆனால் போதும் எனும் சுயநலம் இல்லாமல் இருக்கிறதோ, அங்கு வரிசை பேணப்படும்.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் பாலக்காடு போகும் பயணிகள் பொறுமையுடன் வரிசையில் நிற்பதையும், பக்கத்தில் பழநி போகும் பயணிகள், கிழட்டுத் தாயையே இழுத்துக் கீழே தள்ளிவிட்டுத் தானேற முயல்வதும் இயல்பான காட்சிகள். மேலும், நகரப் பேருந்துகளிலும் சிறு தூரப் பேருந்துகளிலும் துண்டு, கைப்பை, கூடை, கைக்குட்டை, தினசரி, வாழைப்பழச்சீப்பு, கைக்குழந்தை, கால் செருப்பு, குடை, கண்ணாடி என யாவும் இருக்கைப் பதிவுக்கான டோக்கன்கள்.
தண்ணீர் தட்டுப்பாடான நாட்களில் குழாய் மூட்டில், ஓட்டை உடைசல் பிளாஸ்டிக் குடங்கள் இரவு முழுக்க வரிசை காப்பதுவும், மண்ணெண்ணெய் ஊற்றப்படுகிறது எனத் தெரிந்தால், ஓட்டை கேன், உடைந்த பிளாஸ்டிக் மக், செங்கல் துண்டுகள் வரிசை காப்பதுவும் நமது நாட்டில்தான். நிர்ப்பந்தமாக வரிசை ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், விஞ்ஞானபூர்வமாக வரிசை முறிக்கும் தொழில்நுட்பமும் நமக்குத் தெரியும். ரயில் நிலையங்களில் நடைமேடைச் சீட்டு வாங்கும்போதுகூடத் தனது நேரம் காத்திருத்தலில் கழியக் கூடாது என்று எண்ணுகிறார்கள். மருத்துவரைக் காண அழும் கைக்குழந்தையுடன் இருபது பேர் காத்திருக்கும்போது, செவிலியிடம் கிசுகிசுத்து எப்படியும் சிறப்பு அனுமதியைச் சாதித்துக்கொள்கிறார்கள். செத்துப்போவதற்கான வரிசை ஒன்று நின்றிருந்தால், அதில் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் வாங்க முயற்சி செய்வார்கள் போலும்.
தமிழ்நாட்டு நகரவாசி… கற்றவர், பணிபுரிபவர், நாகரிகம் உடையவராகத் தங்களைக் கருதிக்கொள்பவர். ஆனால், இத்தகு சுயநலமிகளை இந்தியாவில் வேறெங்கும் காண இயலாது. 48 நாட்கள் விரதம் இருந்து, காலையிலும் மாலையிலும் நீராடி, மது, மாமிசம், மண வாழ்க்கை தவிர்த்து, சரண கோஷம் விளித்து, இருமுடி கட்டி, பம்பையில் நீராடி, சபரிமலை ஏறும் ஐயப்பன்மார், சந்நிதானம் நெருங்கியதும், வரிசை இருந்தும் முண்டியடித்து முன்னேறி, காவலர் சாமிகளிடம் பிரம்படி வாங்குவதைப் பல முறை கண்டதுண்டு. உற்று நோக்கினால், அவரிடம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடியின் முகச்சாயல் காணலாம்.
வெளியூரில் இருந்து அதிகாலையில் வரும் உறவினரை வரவேற்க ரயில் நிலையம் போய், பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருந்தேன். எனக்கு முன் இருவர் நின்றனர். பதற்றமாக இளைஞன் ஒருவன் நெருங்கினான்.
”சார், ஊர்ல இருந்து வர்றாங்க. ட்ரெய்ன் வந்தாச்சு, எனக்கும் சேர்த்து ஒரு பிளாட்ஃபார்ம் டிக்கெட்.”
மூன்று ரூபாய் வாங்கிக்கொண்டு, இரண்டு சீட்டு கேட்டேன். கம்ப்யூட்டர் இருவருக்குமாக ஒரு சீட்டு அடித்துத் தந்தது. என் கையில் இருந்து சீட்டைப் பிடுங்கிக்கொண்டு இளைஞன் ஓடிப் போனான். நான் மறுபடியும் வரிசையில் நின்று எனக்கு இன்னுமோர் சீட்டு வாங்கினேன்.
உலகம் விசித்திரமானது மட்டுமல்ல, தந்திரமானதும்கூட.
கேரளத்திலும் பள்ளி மாணவருக்குப் பேருந்துகளில் இலவச பஸ் பாஸ் உண்டு. அவர்களது இலவச பஸ் பாஸ் அட்டைகளில் முதலமைச்சர்களின் படம் அச்சடிக்கப்படுவது இல்லை. நம் நாட்டில் இலவச பஸ் பாஸில் என்ன, வெகு விரைவில் பேருந்து பயணச்சீட்டுகளிலும் சினிமாக் கட்டணச் சீட்டுகளிலும் மெலிந்த நிறம் மங்கிய மலிவுத் தாள்களில் முதலமைச்சர்கள் சிரிப்பார்கள்.
சொல்ல வந்தது, கேரளத்தில் பள்ளி மணி அடித்ததும் பேருந்து நிறுத்தங்களில் சீருடை மாணவ, மாணவியர் வரிசையில் நிற்பார்கள். கடைசியில் ஆசிரியர் அல்லது ஆசிரியை ஒருவரும் நிற்பார். ஒரே பஸ்ஸில் அனைவரையும் அடைக்காமல், வரும் பேருந்துகளில் பத்துப் பத்துப் பேராக ஏற்றி, இறுதியில் ஆசிரியரும் ஏறிச் செல்வார். ஒன்றாம் வகுப்பில் வாசிக்கும் சிறுமிகூட பத்திரமாக வீடு போய்ச் சேர இயலும். ஒழுங்காக நின்றால், எவருக்கும் நேரம் வீணாகாது, சக்தி வீணாகாது, விநியோகம் ஆகும் பொருளும் வீணாகாது. தண்ணீர் லாரி வந்தால், தண்ணீர் பிடிக்கும் காட்சியைக் கண்முன் கொணரலாம்.
‘தான் தின்னிகள்’ என்றொரு பிரயோகம் உண்டு. இங்கே, எல்லாம் தனதே, யானே முதல், பிறன் எப்படியும் நாசமாகிப் போகட்டும் எனும் மனோபாவம்.
புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடல் ஒன்று…
‘இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும்
இனிது எனத் தமியர் உண்டலும் இலரே’
என்றொரு வரி. அதன் எளிதான பொருள்… ‘இந்திரனுடைய அமுதம் கிடைப்பது என்றாலும் நன்று என நினைத்து தனியே உண்ண மாட்டார்கள். அவர்களால்தான் உலகம் சிறப்பாக இயங்குகிறது’ என்பது.
ஆனால், நம்மில் அடித்துப் பிடித்து, வரிசை குலைத்து, பெற்றுச் செல்கிறவன்… திறமைசாலி. பொறுமை காத்து நிற்பவன்… ‘சோப்ளாங்கி’.
ஒரே சமூகத்தில் பிறந்திருந்தாலும் நற்பேற்றால், தாத்தன், பாட்டி- பள்ளி ஆசிரியர்; அப்பன், ஆயா- அரசு ஊழியர் என்றால், அவர்தம் மக்கள் உடல் பலம், மன பலம், பண பலம்கொண்டு கற்பக விருட்சத்துக் கனி பறித்து உண்கிறார்கள். அதே சமூகத்தில், தாத்தன், பாட்டி – காடு வெட்டி; அப்பன், ஆயா – கல்லுடைப்போர் என்றால், அவர்தம் நோஞ்சான் பிள்ளைகள், பட்டினிப் பார்ப்பு, அரசுப் பள்ளிகளில் அரைகுறை படித்து பம்மிப் பம்மி வரிசையில் நின்று பசியாறாது மடங்கிச் செல்கிறார்கள். மறுநாள், மறுநாள், அதற்கும் மறுநாள் என ஆற்றாது அழுகிறது புண் வயிறு.
தலைமுறை தலைமுறையாக இதுவே நமது சமூக நீதியின் வரிசை. குளத்தடி மடை வயலுக்கு எப்போதும் பாயும் தண்ணீர், கடைக்காணிக்குச் சேர்வதே இல்லை. சமூக நீதியின் காவலர் எனத் தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட மகுடம் தரித்து நடப்பவர் கண்களில் இது படுவதும் இல்லை, பட்டாலும் பாதிப்பதில்லை. கோஷங்கள் கேட்டு வயிறு நிறையுமா?
பஞ்சாலை வைத்திருப்பவனும் பஞ்சாலைக் கூலியும்; மாளிகை எழுப்புபவனும் மாளிகை எழுப்ப செங்கல் வார்ப்பவனும்; ஐம்பது ஏக்கர் பெரு விவசாயியும் அரை ஏக்கர் பாட்டம் பயிர் செய்கின்றவனும்; மருத்துவமனைக்காரரும் அங்கு பண்டுவம் பார்க்க வருபவனும்; பத்து லட்சம் காரில் வருபவனும் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டுபவனும்; நகரத்து மேயரும் நகர சுத்தித் தொழிலாளியுமாக ஒரே சமூக வரிசையில் நிற்கிறார்கள். முதல் கூட்டம் கனி கொய்து களிகொள்கிறது. மறு கூட்டம் காதடைக்கும் பசியோடு கால் சோர்ந்து திரும்பிப் போகிறது.
வரிசை வரிசை என்று வாய்ச்சொல் அருளலன்றி, வரிசை இருந்த நிலை, கிளியே, எம் மக்கள் ஏதறிவார்?

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வரிசை…

 1. rathnavel natarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  இங்கு வரிசையில் நின்றால் கேவலமாகப் பார்க்கிறார்கள்.
  நன்றி ஐயா.

 2. EssexSiva சொல்கிறார்:

  கோவை பேருந்து நிலையத்திலும் சரி, சென்னை சென்ட்ரல் நிலைய சரவணபவனிலும் சரி, வரிசையில் நிற்பவர் நின்று கொண்டே இருக்கவேண்டியது தான், ஏமாளி பட்டத்துடன்…

  Essex சிவா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s