பரிசில் வாழ்க்கை

நாஞ்சில் நாடன்
ஊருக்கு மேல் கையில் நீர் வளம் ததும்பிய தலங்களில் இருந்தன சாத்தாங்கோயில்கள். ஆற்றங்கரை குளத்தங்கரை போக சில சமயம் தோப்புகள்,திரடுகள்,விளைகள் நடுவிலும், அபூர்வமாக வயற்காடுகளின் திட்டுக்களிலும் சாத்தா நிலை கொண்டிருப்பார். சாத்தாங்கோயில் என்பதுதான் வழக்கு.மற்றபடி கிறிஸ்துவின்,என்று நீ அன்று நான் உன் எதிரி அல்லவோ எனும் நிரந்தரமான எதிரியான சாத்தானின் கோயில் எனப் பொருள் கொளல் ஆகா!  சாஸ்தா என்பதன் தமிழாக்கம் சாத்தா. அல்லது மறுதலை நேராம். சாஸ்தா என்ன மொழி என்றெனக்குத் தெரியாது. வேட்டி வேஷ்டியானது போன்றும் துட்டி துஷ்டியானது போன்றும் கோட்டி கோஷ்டியானது போன்றும்  இங்கிருந்து சென்று அங்கிருந்து திரும்பியதாகவும் இருக்கலாம்!அப்பம் தின்னவோ அலால் குழி எண்ணவோ!      
தமிழகத்தின் தென்மாவட்டமான கன்னியாகுமரியிலும் மற்றும் கேரளத்தின் திருவிதாங்கூர் பகுதிகளிலும் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில்களும் சாத்தாங்கோயில்களும் வழியிலுள்ள எரிமேலி, பத்தணம்திட்டை பக்கத்தில் பேராறு ஒன்றின் மேட்டிலுள்ள பந்தளம்.குளத்துப்புழை,  செங்கோட்டை தாண்டி சிற்றாறுகளின் கரையிலுள்ள ஆரியங்காவு,அச்சன்கோயில் ஆகியவை ஐயப்ப சாஸ்தா கோயில்களில் பிரபலமானவை.
ஈண்டு சொல்ல வருவது நூறு வீடுகளுக்குள் இருக்கும் சிற்றூர்களில் அடங்கி ஒதுங்கி வாழும் சின்ன சாத்தாங்கோயில்கள் பற்றி.அவருள்ளும் சற்றுப் பெரிய ஊர்களில் பதி கொண்ட எங்கோடிகண்டன்,எருக்கலை உடையார்,மணிகண்டன்,சேரவாதில்,நீர்நிறைகாவு கொண்டன், தென்கரை மகராசன்,பரக்கோடியன் கண்டன் என்பன பெயர் கொண்ட சாத்தாக்கள். ஊரை விட்டு ஒதுங்கி எக்கேடும் கெட்டுப் போங்கள் எனக்கென்ன எனும் பாவத்தில்,காட்டின் விளிம்பில் கால் கொண்டிருக்கும்,யோக முத்திரையுடன் ஆன சின்ன கற்சிலைகள். அல்லது வடிவ ஒழுங்கற்ற சிவலிங்கம் போன்ற அமைப்பில் சமைந்த உருளைக் கற்கள். ஆயிரக்கணக்கில் சமணர்களைக் கழுவேற்றித் தழைத்த சைவத்துக்கு அஞ்சி ஒடுங்கி,அடைக்கலம் தேடி,சிற்றூர்களில் ஒதுங்கிய சமணரின்,வழிபாட்டுத் தலங்கள் அவை என்பாரும்,சமண முனிகளின் சமாதிகள் மேல் எழும்பிய நடுகற்களின் வடிவம் என்பாரும் உளர். இலர் எனில் இலர். எவ்வாறாயினும் சமணத்தைக் கழுவேற்றியதன் பிராயச்சித்தமாக இன்று சைவத்தைச் சைவமே கழுவிலேற்றிக் கொண்டிருக்கிறது. சிவம் எனில் ஆக்கல்,சிவம் எனில் அளித்தல்,சிவம் எனில் காத்தல்,சிவம் எனில் அழித்தல். தன்னை ஆக்கல், தன்னை அளித்தல்,தன்னைக் காத்தல், தன்னையே அழித்தல். வலுவும் வழிபாட்டுத் தீவிரமும்  இழந்து போன சாத்தாக்களுக்கு பூநூல் அணிந்த வேளார் அல்லது குலாலர் அல்லது குயவர் அல்லது கொசவர் என்பவர் பூசை செய்தனர்.சில இடங்களில் நம்பியார் பூசை செய்தனர். நம்பியார் என்றதும் சினிமா வில்லன் நடிகர் என்றுதான் நமது புத்தி போகும்.அது எம் பிழை அன்று. நம்பியார் எனப்படும் பட்டர் எனப்படுபவர் ஆதி சைவர்களின் மரூவு என்பாரும் பார்ப்பனர்களின் உட்பிரிவு என்பாரும் உளர். நம்பியார்களை பார்ப்பனர்கள் தங்கள் வகுப்புகளோடு சேர்த்துக் கொள்வதாகவும் தெரியவில்லை. வடமார்,வாத்திமார்,பிரகச்சரணம், சோழியர்களில் சேர்த்தி இல்லை.கொள்வினை- கொடுப்பினை இருக்கட்டும், தொட்டுச் சாப்பிடுவார்களா என்று கூட தெரியாது. சவண்டிகளுக்கு மேலா கீழா என்றும் தெரியாது. ஆனால் இறை  வழிபாட்டுச் சேவையில் இருந்தனர்
.
சாஸ்தா சைவம், அன்னதானப் பிரியன். அவருக்குப் பிடித்தமானது சர்க்கரை, பச்சரிசி, பொடித்த ஏலம் சுக்கு, திருவிய கருக்குத் தேங்காய் போட்டு வைத்த அரிசிப் பாயசம். கோளடித்தால் அரவணை. எனவே பாலாம்பாளுக்கு மூன்று வேளையும் பாயசம்தான் என்பது எனது கணக்காக இருந்தது.
 பூசைக்கு ஆள் கிடைப்பதும் பெரும்பாடுதான் என்று பேசிக் கொண்டார்கள். ஒன்று கடவுள் கைங்கர்யம் தீராத் தரித்திரம் என்பது. இரண்டு கொத்தவேலைக்குக் கையாளாகப் போனால் ரூபாயில் கூலியும் மத்தியானம் கஞ்சியும் உண்டென்பது. எந்தப் பூசாரியும் மாடி வீட்டில் வசித்து வில்வண்டியில் பயணம் போய், அருத்தடித்து வைத்துக்கொண்டு சாப்பிடுவதாக எடுத்துக்காட்டுக்கள் இல்லை.  பூசாரிகளின் பெண்டுகளைப் பார்த்தால் சொல்லிவிடலாம் எத்தனை காய்ந்து போன வயிற்றுப்பாடு என்பது.
 பூசை செய்யும் நம்பியார்கள் ஒற்றைத் திமில் ஒட்டகம் போல. குயவர்களிலும் எல்லோரும் கோயில் பூசைக்கு வருவதில்லை. நம்பியார்கள் கிடைக்காதபோது சைவப்பிள்ளைமார் பூசை செய்தார்கள்.  தொண்டைக் குழியில், திருமாங்கல்யம் போல அதை விட இறுக்கமாகத் தொங்கும் ஒற்றை உருத்திராக்கம் ஓர் அடையாளம்.  பூசை செய்யும் பிள்ளைமாருக்கு குருக்கள் என்று பெயர். குருக்கள் மடம் என்றே ஓர் ஊர் இருக்கிறது. வேளாளரின் உபகிளைகள் தாம் பூக்கட்டிப் பண்டாரம், சங்கூதிப் பண்டாரம், குருக்கள், தீட்சிதர், சைவமுதலி, ஓதுவார், ஆதி சைவர் என்றொரு ஆய்வு சொல்கிறது. அது கிடக்க!
 ஊருக்கு வடமேற்கே, வயற் காட்டின் நடுவே திரடொன்று இருந்தது. தோப்பு என்று சொல்லி விட முடியாது. திட்டு, கரடு எனக் குறிக்கலாம். ஆங்கோர் சாத்தாங்கோவில். ஆவணங்களில் அவருக்கொரு பெயர் இருக்கும். அல்லது இருக்கலாம். மேற்படி சாத்தா வடித்தெடுத்த வரி சிலை அல்ல. வடிவம் சிவலிங்கம் போல. ஆனால் ஆவுடை இல்லாமல் அகன்ற தூர் பாகத்துடன் இரண்டடி உயரத்தில் இருந்தார். கூரையும் இல்லை, சுற்றுக் கட்டு மதிலும் கிடையாது.  நான்கடிக்கு ஆறடி வரிக்கல் பாவிய தளத்தில் பூமி மட்டத்தில் இருந்து மூன்றடி உயரத்தில் இருந்தார். திரடு ஒரு நந்தவனம் போன்றும் இருந்தது. ஒரு கோட்டை விதைப்பாடு பரப்பளவு இருக்கும். நந்தவனம் என்றால் பெரும்பாலும் அரளி. அரளியில் செவ்வரளி, வெள்ளரளி, கழுநீர் அரளி, அவ்வந்த நிறங்களில் அடுக்கரளிகள், தங்கரளி. சில மூடுகள் நந்தியாவட்டை, வாடாமல்லி, பிச்சி. நாலைந்து வாழை மூடுகள், கூழைப்பலா, ஆள் ஏற முடியாத உயரத்தில் எட்டுப் பத்து தென்னை மரங்கள். மாமரம் ஒன்று. பச்சையாகத் தின்ன பச்சரிசி போல் இருக்கும் காய்கள். முகப்பில் ஓடைபோல் குழி கொண்டவை. எனவே ஓடைக் காய்ச்சி என்றும் பெயருண்டு. பழுத்தால் குழம்புக்கு ஆகும். திரட்டின் தென்கிழக்கு ஓரத்தில் சின்ன வாவி. அதை நீராவி என்றும் சொல்வார்கள்.
 நந்தவனமும் நீராவியும் சாத்தாவும் வேங்கைக்காடு மூத்த பிள்ளையின் குடும்ப வகை. மூன்று தலைமுறைச் சொத்து. சாத்தாவின் தினப்படி பூசைக்கு என இரண்டு கோட்டை விதைப்பாடு அகப்பத்தில் விட்டிருந்தனர் மூதாதையர்.  பாலாம்பாளின் அப்பா சிவராம நம்பியாருக்கு தினம் ஒருவேளை பூசைக்கென மூன்று கோயில்களில் முறை. அதில் சாயரட்சை பதிவு சாத்தாங்கோவில்.
 மாதம் ஏழு மரக்கால் நெல் சம்பளம். விளக்கெரிக்க நல்லெண்ணெய், நைவேத்தியம் போங்க பச்சரிசி, விசேட நாட்களில் பூசைக்காக-தேங்காய், பூ, பாளையங்கோட்டன் பழம், வெற்றிலை, பாக்கு, சூடம், சாம்பிராணி, சந்தனம், விபூதி, விறகு ஆகியவற்றுக்காக கணக்குப் பார்த்து இன்னொரு ஏழு மரக்கால் நெல். மற்றெதெல்லாம் எப்பாடு பட்டாலும் அப்பாடு சாத்தா பாடு, நம்பியார் பாடு.
 தோராயமான கணக்குப்படி, மூன்று கோயில்களுக்குமாக, செலவு அடக்கம் மாதம் இரண்டு கோட்டை நெல் கிடைக்கும் நம்பியாருக்கு, அன்று – உழ, வரப்பு வெட்ட, வெள்ளம் தண்ணீர் பார்க்க என பதிவு வேலைக்காரர்களுக்கு மாதம் ஒரு கோட்டை நெல்லும் மத்தியானக் கஞ்சியும் என்பது வழமை. அதில் பதிவு வேலை பண்ணைக்காரனுக்கு திருப்பிச் செய்யும் செலவுகள் இல்லை, நம்பியார் போல பூசைக்கான கூலி நெல்லை, பொலியளவு  மரக்காலுக்கு அளப்பார்களா கொத்து அளவு மரக்காலுக்கு அளப்பார்களா என்றும் தெரியாது. கடவுளுக்கு வஞ்சனை செய்வார்களா எனும் நம்பிக்கை உண்டு நம்பியாருக்கு. போலியில் அளந்த நெல்லானால், காயப்போட்டு குத்தினால் கோட்டைக்கு பத்தரை மரக்கால் பச்சரிசி இருக்கும், குருணையும் சேர்த்து. சண்டு புடைத்த நெல்லானால், எட்டு மரக்கால் அரிசி. இதில் மூன்று கோயில் பூசைச் செலவுகள், சாப்பாடு, துணிமணி, பிள்ளைகளின் படிப்பு, வைத்தியம், நல்லது கெட்டது, நாள் கிழமை – நாளும் கிழமையும் நலிந்தவர்க்கு ஏது என்றாலும் – கைத்தாங்கலாக நடந்து கொண்டிருந்தது குடித்தனம்.
 பெருவெள்ளமாகப் பக்தர் வந்து கூடுவதற்கு நமது சத்தங்கோயில் என்ன திருப்பதியா, குருவாயூரா, கொல்லூரா, மேல்மருவத்தூரா, சபரிமலையா, திருவரங்கமா? தட்டு என்பதோ அதில் காலணா அரையணா தட்சணை என்பதோ சாத்தியம் இல்லை. என்றாலும் எப்போதாவது வந்து நின்று கை நீட்டும் பக்தனுக்கு நெற்றியிலும் மார்பிலும் தொள்பட்டைகளிலும் பூச தாராளமாகத் திருநீறு தர வேண்டும். எவராவது பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் திருநீற்று முட்டம் நீற்றினால் கோயிலுக்கு என்றும் ஏழெட்டு தருவார்கள். சந்தனம் என்பது பச்சரிசி மாவும் மஞ்சளும் பன்னீரும் சேர்த்துக் குழைத்ததோர் சாந்தம். காய வைத்து வில்லைகளாக உருட்டி பல சரக்குக் கடைகளில் விற்பார்கள்.
 வயற்காட்டில் வேலை இருந்தால், பண்ணையார் வந்து கும்பிட்டு விபூதி எடுத்துப் பூசிவிட்டுப் போவார். மற்றபடி சத்தாவுக்கு கொடை, சிறப்பு, ஊட்டு, நம்பிரான் விளையாட்டு, வேட்டை ஏதும் கிடையாது.
 சாத்திரப்படி மூன்று கோயில்களுக்குமான பூசைக்கு முன்னாள் நம்பியார் குளிக்க வேண்டும். அருகில் இருக்கும் ஆற்றிலோ, தெப்பக் குளத்திலோ, நீராவியிலோ, ஊருணியிலோ குளித்து ஈர சோமனுடன் சாமியைக் குளிப்பாட்டி, எவராவது நேர்ச்சைக்கு எண்ணெய் கொடுத்தால் பாதியை அபிசேகத்துக்கும்  கொஞ்சம் கல்விளக்குக்கும் மீதியை வீட்டில் தாளிதத்துக்கும் எடுத்துக்கொண்டு, அடுப்பு மூட்டி, சின்ன வெண்கல உருளியில் உழக்குப் பச்சரிசி பொங்கி, நைவேத்தியம் காட்டி, சூடம் கொளுத்தினால் தீர்ந்தது. மூன்று வேளை குளித்து தடுமன் பிடித்துத் தும்மிய பின்தான் நம்பியார் பட்டர் போடி போடப் பழகினார் போலும்.
 கோயிலின் இடமோ வலமோ நிற்கும் செடிகளில் எது பூத்திருந்தாலும் அதுதான் சாமிக்கும். எருக்கலையும் ஆகும் சாத்தாவுக்கு. சிவபெருமானே வெள்ளெருக்கம் சடை முடியான் தானே!
  ‘யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
   யாவர்க்குமாம் பசுவுக்கோர் வாயுறை
   யாவர்க்குமாம் உண்ணும் போதோர் கைப்பிடி
   யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே!’
 என்பது தானே திருமந்திரம்.
 பூசை நேரங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், அவர் பூசை செய்யும் மூன்று கிராமங்களிலும் குழந்தை பிறந்தால், பெண்பிள்ளை சமைந்தால், எவரும் உயிர் நீத்தால் நடக்கும் சடங்குகளில் புண்ணிய நீர் தெளிக்கக் கூப்பிடுவார்கள். தர்ப்பை, ஓமக் குச்சிகளுடன் போக வேண்டும். நாலணா தட்சணையும் பக்கா பச்சரிசி, தேங்காய், உருண்டை சர்க்கரை, கால்பக்கா பருப்பு, சீப்பு வாழைப்பழம், ஆழாக்கு நெய், உழக்கு நல்லெண்ணெய், வாழைத்தண்டு சேம்பந்தண்டு, நாலு கத்திரிக்காய், இரண்டு வாழைக்காய், சின்னப் பூசணி, இளவன், வெள்ளரி, புடலை, சேனை என அரைக் குட்டிச்சாக்கு தேறும். காரியங்கள் முடிந்து குட்டிச் சாக்கை தலையில் சுமந்து, சடங்கு நடந்த வேட்டைத் திரும்பி பார்க்காமல், எவரும் எதிர்ப்பு வராமல், படி இறங்கிப் போக வேண்டும்.
 பின்னாலிருந்து வீட்டு மூதாட்டியின் குரல் கேட்கும். “திரும்பிப் பாக்காமப் போவும் ஓய்”  என்று இளக்காரத்துடன்.
 பாதையில் கண்ணில் படுபவர் கேட்பார்கள் சற்றும் குறையாத கேலியுடன். “ஓய் நம்பியாரே! நல்ல கோளுதான் இண்ணைக்கு! அம்புடையும் அவிச்சுச் திம்பேரா, விலைக்குக் குடுப்பேரா ஓய்?” என்பார்கள்.
 பூசாரி வாழ்க்கைக்கு ஆடையிலும் கோடையிலும் சினங்கொள்ளக் கூடாது. ரௌத்திரமும் பழக இயலாது. சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி. எதற்கும் திளைத்துச் சிரிக்க வேண்டும். தொழில் தர்மம். ஊசியால் குத்தினாலும், கோடாரியால் வெட்டினாலும், வேட்டாங் கல்லால் எறிந்தாலும், ‘கல்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் எனும் வில்லால் ஒருவன் அடிக்க’ என்று என்.சி. வசந்த கோகிலம் பாடிய நிந்தாஸ் துதியைப் போல. மறு கன்னத்தையும் குதூகலத்துடன் காட்ட வேண்டும்.
 வாழை நல்லப்பம் குலைத்தால், தெங்கு முதல் குலை நெற்று  விழுந்தால், பசு முதலில் கறந்தால், காய்கறியின் முதல் பறி, உளுந்து, பயிறு முதல் நேற்றெடுப்பு என்று சாமிக்கு ஒரு சின்னப் பங்கு வரும், பிறந்த நாட்களுக்கு எவரேனும் அரிசிப் பாயசமோ அரவணையோ வைக்கச் சொல்வார்கள். பெண்ணழைத்து, மாப்பிள்ளை அழைத்துப் போனால், தேங்காய் பழம் சாமிக்கு, வெடல் தேங்காய் சிறுவர்க்கு.
 தோப்பில் தேங்காய், வாழைக்குலை வெட்டிக் கொண்டிருந்தால், வெண்டை, கத்திரி, கீரைத்தண்டு, முருங்கைக்காய் பறித்துக் கொண்டிருந்தால் சற்று நின்று நிதானித்துப் பேச்சுக் கொடுப்பார் நம்பியார். தொண்ணாந்து நிற்பதுதான் பாவனை, ஆனால் தொண்ணாந்து நிற்பதாகத் தோன்றாமல். தோட்டுடன் ஒரு தேங்காயோ, கை நிறைய காய்கறிகளோ, நாலு முருங்கைக் காயோ, பிடி கீரைத் தண்டோ கிடைக்கும்.
 வயலறுத்து சூடடித்து, பொலியளக்கும் களங்களுக்கு நம்பியார் போவதில்லை. அது யாசகம். இறைப்பணி செய்பவன் யாசகம் செய்யலாகாது. பூசை தவிர, மழை வருமா – வராதா என குறி சொல்வது, அக்னி நட்சத்திரம் எப்போது, மாசி மகம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், ஆடிப் பூரம், ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், திருக்கார்த்திகை, தை அமாவாசை, தைப் பூசம் என்றெல்லாம் பஞ்சாங்கம் பார்த்து நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  மேலும் அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி, கரி நாள், முகூர்த்தநாள், கிருத்திகை, சஷ்டி, ராகுகாலம், எமகண்டம், மேற்கில் கிழக்கில் வடக்கில் தெற்கில் சூலம் எல்லாம் மனப்பாடமாக இருக்க வேண்டும்.
 இடது கையில் உயர்த்திப் பிடித்த சின்ன வெண்கல உருளி, அதில் நீட்டிக்கொண்டிருக்கும்  அகப்பைத் தண்டு, மூடிய வாழை இலைத்துண்டுமாக, வலது கையில் வேட்டி நுனியைத் தூக்கிப் பிடித்தபடி நம்பியார் மூன்று காலங்களிலும் அஞ்சலோட்டத்தில் இருப்பார். பார்த்தால் வாழ்க்கையை சதா ஓடித் தொலைத்துக் கொண்டிருப்பதாகவும் ஏதோ நேர்ச்சை போலவும் தோன்றும்.
 நைவேத்திய சாதம், உழக்கரிசி பொங்கியது, ஒரு வயிற்றுக்குப் போதாது. சிலசமயம் காலை வேலையில் மிகவும் பசியாக இருக்கும் போலும். தேங்காய்ச் சில்லும் சர்க்கரைத் துண்டும் காலணாவுக்கு கடையில் வாங்கி, கடித்துக்கொண்டு, சுடு சோற்றை வழித்து வாயில் போட்டுக் கொள்வார். வீட்டில் போய் அதற்கும் உத்தரம் சொல்ல வேண்டியது இருக்கும்.
 சில சமயம் வெறும் கையை வீசிக்கொண்டு வந்து இரண்டு பேயன் பழமோ பாளையங்கோட்டன் பழமோ கடையில் வாங்கி சாமிக்கு நைவேத்தியம் செய்வார்.
 வயற்காட்டு நந்தவனத்து சாத்தாவுக்கு சாயரட்சை பூசை. வறுமை வாய் விட்டுச் சிரிக்கும் ஆனி ஆடிச் சாரல் மாதங்கள். வீட்டில் அரிசிப் பானையில் சாத்திரத்துக்குக் கிடந்த கைப்பிடி அரிசியையும் கஞ்சி வைத்துக் குடித்தாயிற்று. யாரிடமும் முன்னறுப்பு கடன் கேட்கலாம் என்றால் அறுவங்கொறுவா அறுக்க இன்னும் பத்து நாட்கள் ஆகும்.
 சகல சீவராசிகளுக்கும் கல்லினுள் இருக்கும் தேரைக்கும் படியளப்பவனுக்கு நம்பியார் படியளக்க வேண்டும். பூசைக்கு நெல்தரும் வீடுகளில் போய் கடன் கேட்டால் ஏச்சு மட்டும் கிடைக்கும். “தந்ததை வித்துத் திண்ணுட்டீரோ?” என்பார்கள்.
 தீராத் தரித்திரமும் தாங்கொணா இறையருளும்!
 நாளைப் பாடு இருக்கட்டும், இன்று சாத்தாவுக்கு என்ன பதில்?
 பூசையை முடித்து, மணியடித்து சூடம் காட்டும்போது, பண்ணையார் படியேறி வந்தார். பவ்யமாக தீபம் காட்டி, விபூதி கொடுத்தார் நம்பியார். திருநீற்றை கொஞ்சம் நாக்கில் போட்டு, கொஞ்சம் நெற்றியிலும் தொண்டைக் குழியிலும் வைத்து சிரசிலும் போட்டுக் கொண்டார்.
 “நம்பியாரே… பிரசாதமா நைவேத்தியச் சாதம் கொஞ்சம் தாரும் ஓய்!” என்றார் பண்ணையார்.
 நம்பியாருக்கு அன்னமய கோசமும் பிராணமய கோசமும் பதறிச் சிதறியது போலிருந்தது. இடுப்புச் சோமனை யாரோ உருவிவிட்டது போல… கௌபீனம் கூட இல்லாமல் நின்றுகொண்டிருப்பதைப் போல…
 “பிள்ளைவாள்… வெறும் பச்சரிசிச் சாதம்… வெல்லம், தேங்கா முறி கூட இல்ல…”
 “ஒரு நுள்ளுப் போல தாரும் வே… சாத்தா பிரசாதம்லா…”
“வேண்டாம் பிள்ளைவாள்…”
“நீறு தாறேரா, நான் எடுத்துக்கிடவா?”
 வாழை இலைத்துண்டு கொண்டு மூடியிருந்த வெண்கலச் சிற்றுருளியை கையில் தூக்கி, இலையை நீக்கிக் காட்டினார்.
 பால் வடிந்தபடி சின்ன மாம்பிஞ்சு ஒன்று கிடந்தது உருளியின் நடுவில், பாதரச மணிபோல் உருண்டபடி. நந்தவனத்து மாவில் பறித்தது.
 நம்பியார் வியர்த்து மறுபடியும் குளித்தார்.
 “என்னவே? வெளையாட்டுக் காட்டுகேரா? கடவுளை ஏமாத்தலாமா ஓய்? நல்லாருக்கா ஓய்? நீங்களே இப்படிச் செய்தா கடவுளுக்குப் பொறுக்குமா ஓய்?
 தடாலென நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார் நம்பியார். குரல் கம்மி விம்மி உடைந்து கசிந்து ஒழுகியது.
 “தப்புத்தாம்யா… தாரித்திரியம்யா… இனி இப்படி நடக்காதுய்யா…”
 நம்பியாருக்கு எழுந்திருக்க மனதில்லை. அந்த நந்தவனத்தில்தான் அவர் தலைப்பிள்ளை, பன்னிரண்டு வயதில் சாமிக்கு பிச்சிபூப் பறிக்கையில், வல்லரவம் தீண்டி இறந்து போனான் எட்டு ஆண்டுகள் முன்பு. இன்றிருந்தால் அவன் பங்குக்கு மூன்று கோயில்கள் பூசை வைப்பான். வயிற்றின் சுமைக்கு மாற்றுத் தோள் ஒன்று வாய்த்திருக்கும்.
 விழுந்து கிடந்த மண்ணிலிருந்து அவன் திரேகத்தின் மணம் வீசுவதாகவும் தோன்றியது அவருக்கு. எழுந்து கொள்ள மனமின்றிக் கிடந்தார் நெடுநேரம்.
 ஆனந்த விகடன் – தீபாவளி மலர் – 2006 
தட்டச்சு உதவி நன்றி
-பிரவீன், பாலா சிங்கப்பூர்
..

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to பரிசில் வாழ்க்கை

 1. rathnavel natarajan சொல்கிறார்:

  நல்ல பதிவு.
  நிறைய விபரங்கள் கற்றுக் கொண்டேன்.
  நன்றி ஐயா.

 2. சிறப்பான பகிர்வுக்கு நன்றி ஐயா…

 3. கோவை பாலா சொல்கிறார்:

  சமையலையும் பக்தியையும் இவ்வளவு அழகாகப் பரிமாறுவதற்கு தங்களால் மட்டுமே முடியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s