தமிழ் இணைய வலைப் பக்கங்களை சிறப்பான முறையில் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் அதில் முதன்மை இடத்தை சிறப்பாக வகித்து வரும் தமிழ்மணம்.நெட், தமிழ்மணத்தின் ”இந்த வார நட்சத்திரம்” பகுதிக்கு எனது வலைப்பக்கத்தை தேர்ந்தெடுத்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி.
அன்புடனும், நன்றியுடனும் : எஸ் ஐ சுல்தான்

என்றாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்
நாஞ்சில் நாடன்
இந்தியாவின் தென்கோடி மாவட்டத்தில் ஆறும் நெல் வயல்களும் தென்னந்தோப்பும் வாழைத் தோட்டங்களும் சூழ்ந்த சிற்றூரின் வளமான நாடன் மொழியில் திளைத்துக்கொண்டிருந்த என்னை மாயக் கரங்கள் பிடுங்கிக் கான்கிரீட் கானகத்தில் எறிந்து ஒரு மாதம் கூட ஆகி இராது. என் தனிமையை, தவிப்பை, ஏக்கத்தைக் கொன்று புதைக்கும் இடம் தெரியவில்லை. வசமான செருகல். பிடுங்கி மறுபடியும் வீசும் மாயக்கரங்கள் காணக் கிடைக்கவில்லை.
நாற்பதின்மர் வேலை செய்த சிறு தொழிற்கூடம். ஒரிய இசுலாமியர், மார்வாடி, கோவாக்காரன், இசுரேலிய வழி யூதர், கன்னடக்காரன் என வகைக்கு ஒருவர், உ.பி. பையா இருவர், முப்பத்திரண்டு வீர மராத்தியர், நான். ஒருவரிடமும் தமிழில் பேச முடியாது. தங்கிய இடம், மும்பையின் தென்கோடியான கொலாபா தாண்டி, ஆஃப்கான் சர்ச் தாண்டி, டி.ஐ.எஃப்.ஆர். அருகில் கடலோசை கேட்கும் கடற்படையினர் குடியிருப்பு. என்னை உடன் தங்க அனுமதித்த சேகனூர் மார்க்கபந்து இலட்சுமண முதலியாருடன் மட்டும் தமிழில் பேசலாம்.
தமிழில் படிக்க, தமிழில் பேச என்று தேடித் போனேன் மும்பைத் தமிழ்ச் சங்கம். உறுப்பினராகச் சேர்ந்து கொள்வதற்கும் சாதி அடையாளங்கள் வேண்டி இருந்தது. கவிஞர் கலைக்கூத்தன் என்னைச் சண்டைபோட்டு உறுப்பினராக்கினார்.
நிறையப் படிக்க ஆரம்பித்தேன். கண்டது கற்றேன். நாளும் முந்நூறு நானூறு பக்கங்கள். எல்லாக் கூட்டங்களிலும் தமிழ் கேட்கப் போய் அமர்ந்து கொண்டேன். பாராட்டு, வரவேற்பு, இரங்கல், வழியனுப்பு விழாக்கள் தம்பியரில் விஞ்சியவர், கற்பில் சிறந்தவர், வீரத்தில் மிஞ்சியவர் எனப் பட்டிமன்றங்கள். திருமுருகாற்றுப்படை சீவக சிந்தாமணி, வழக்குரை காதை, வாலி வதைப் படலம், பாவைப் பாடல்கள் கருத்தரங்குகள். சித்திரப் பெண்ணே வா, தண்ணீர்விட்டோ வளர்த்தோம் கவியரங்குகள். குழம்பு வைக்கலாம், கூட்டு செய்யலாம், ரசம் வைக்கலாம், பச்சடி செய்யலாம் எனத் தக்காளி போலப் பாரதி. ‘கொலை வாளினை எடடா’ என அவ்வப்போது முழங்கும் தாராவித் தமிழர். அள்ளியள்ளிக் குடித்துக் கொண்டிருந்தேன் – சீரணமானாலும் சரி, பேதியானாலும் சரி என்று.
பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் இருந்து ‘ஏடு’ என்றொரு மாத இதழ் வந்துகொண்டிருந்தது. பொறுப்பாசிரியர் கவிஞர் கலைக்கூத்தன். டெம்மி அளவில் மொத்தம் 24 பக்கங்கள். முதல் எட்டுப் பக்கங்கள் சங்க மணியரங்கு. மிச்சம் கவிதை, கட்டுரை, கதை. சங்கச் சொற்பொழிவுகளைக் குறிப்பெடுத்து எழுதினேன். தமிழின் மிகையான உயர்வு நவிற்சிச் சொற்களை அப்போதுதான் கற்றுக்கொண்டேன். எட்டுப் பேர் இருந்த கூட்டம் – அவை நிரம்பிவழிந்தது. தயங்கிய கரவொலி – கரகோஷம் விண்ணைப் பிளந்தது. கம்பனில் 20 பாடல்களை மட்டும் மனப்பாடம் செய்து காலம் நகர்த்தியவர் – எழுத்தெண்ணிப் படித்தவர், ஆழங்கால் பட்டவர், முத்துக் குளித்தவர்.
தமிழகத்தின் அறிஞர் பெருமக்களிடம் கட்டுரை கேட்டோம். ‘ஏடு’ எவ்வளவு கனம் தாங்கும் எனத் தெரியாமல் மூச்சிரைக்க 32 பக்கங்கள் ஓடி, ‘சங்கப் பாடல்களில் செம்பொற்காசுகள் ‘ என்று கட்டுரை வரும். பொறுப்பாசிரியர் அதை நான்கு பக்கத்துக்குச் சுருக்கச் சொல்வார். அவர் ஊரில் இல்லாதபோது வேறொருவர் ஆசிரியர். உண்டபின் கொள்ளும் ஓய்வில் யாரோ எழுதிய சிறுகதையில், ‘பன் பாவ்போன்ற கன்னங்கள்’ எனும் பிரயோகத்தை அடித்துவிட்டு, ‘மாம்பழக் கதுப்புக் கன்னங்கள்’ என்று எழுதச் சொன்னார். கொட்டையை என்ன செய்வதென்று கேட்க முடியவில்லை.
எலி பெரிதாகிப் பெரிதாகிப் பெருச்சாளியானது. ஊர் நினைவுகளில் அலைக்கழிந்து கொண்டிருந்த மனது. விக்டோரியா டெர்மினசில் சென்னைக்குப் போகும் மெயிலையும் ஜனதா எக்ஸ்பிரஸையும் கொதியுடன் பார்த்து நின்ற நாட்கள். அப்போது மும்பையிலிருந்து திருவனந்தபுரம் வழியாகவோ, மதுரை வழியாகவோ கன்னியாகுமரிக்கு ரயில்கள் விடப்பட்டிருக்கவில்லை.
நினைவுச் சந்தையின் உதிரிக்காய்களை இலவசமாகப் பொறுக்கும் சிறுவன் போலச் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். என் தனிமைக்கும் ஏக்கத்துக்கும் வடிகாலாய். கர்ப்பச் சுமை, கர்ப்பம் கலைந்த சோகம் அல்லது சுகம், பிரசவ வேதனை எனும் எதுவும் எனக்குப் புலப்படவில்லை. என்றும் இன்றும்.
என் முதல் சிறுகதை ‘விரதம்’. ஜூலை 1975 ‘தீப’த்தில் வெளியிட்டார் நா.பா. ‘இலக்கியச் சிந்தனை’ அதை அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாய்த் தெரிவு செய்தது. கல்யாண்ஜி என்னை ஊக்குவித்துக் கடிதம் எழுதினர். தமிழ்ச் சங்கப் பிரமுகர் அதை மலம் துடைக்க ஆகும் என்றார். என்றாலும் 24 ஆண்டுகளாய் (இன்று 2011ல் 36 ஆண்டுகள்)எழுதிக்கொண்டிருக்கிறேன்.
-தினமணி கதிர் ஆகஸ்டு 1999
நன்றி: தட்டச்சு உதவிக்கு: பிரவீன்
பகிர்ந்துகொள்ள,அச்செடுக்க
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
About S i Sulthan
Phone: 9443182309
Nellai Eruvadi
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். உங்களால் தமிழ்மணத்துக்கும் எங்களுக்கும் தான் மதிப்பு.
திருமதி. எம்.ஏ.சுசீலாவால் உங்கள் எழுத்தை அறிமுகம் செய்து கொண்டேன். இன்னும் பிரமிப்பு அடங்கவில்லை.
அந்த தமிழ்ச்சங்க பிரமுகர் என்னவானார் ?
ஐயா வணக்கம் தங்களைப் பற்றி கேள்வி பட்டிருக்கின்றேன். தங்களின் தொடர்பு எண் வேண்டும்.கலைக்கூத்தனைப் பற்றிய உண்மையான செய்திகளை எழுதியுள்ளீர்கள்.நன்றி
தமிழ்மணம் நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துக்கள்.
நாஞ்சிலார் எழுத்துக்கள் பல இளைஞர்களுக்கு தமிழ் வாசிப்பு, தமிழ் எழுத்து மீது ஆர்வம் கொண்டு வந்து உள்ளது என்று சொன்னால் மிகை அல்ல.
அது மட்டும் அல்ல நம் முன்னோர் வாழ்ந்த மண்ணும், நமக்கு ஊதியம் அளிக்கும் வாழும் மண்ணும் இரண்டு கண்கள் என்னும் உணர்வை நமக்கு அவரது கதைகள்/எழுத்துக்கள் ஏற்படுத்தியது
மண்மணம் கமழும் எழுத்துப் பணிகள் தொடர்ந்து வாழ்க..
வெ சா விவாதம் புத்தகத்தில் நாஞ்சிலார் விரதம் பற்றி அண்ணாச்சி வே னா குறித்து எழுதி உள்ளார்
துயரத்தையும் எள்ளல் கலந்து எழுதும் உங்கள் எழுத்துக்கள் மிகப் பிடித்தவை. “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை“ பிடித்த தொகுப்பு.