அறம் பாடுதல்

 பல்சான்றீரே! பல்சான்றீரே!
பாடையின் வரவு பார்த்திருக்கின்ற
பல்சான்றீரே! பல்சான்றீரே!
 
நாய் நன்று, நரி மிக நன்று.
ஓநாய் என்பதோ உயர்ந்த ஒன்று.
எனும்படியான இனம்மொன்று ஈண்டு.
கோல் கொண்டு எம்மை ஆற்றுப் படுத்தும்.
 
பொய்யர், சூதர், கொலஞர்,குற்றம்
யாவையும் கலையாய்ப் பயின்றவர்,
கொடிய கயவர், என்றுள யாவரின்
தீயசாறு திறமாய் பிழிந்து.
வடிந்துக் காய்ச்சி, வாற்றிக் குறுக்கித்,
தாது எனப் பருகிய பாதக இனம் அது.
 
செறுவார் செறுக்கு அறுக்கும் வாளெனச்
செய்க பொருள் என்று ஐயன் சொன்னான்
ஐயன் வாக்கு அருள்வாக்கு ஆமென
சேயின் சேயின் சேயின் சேய்க்கும்
செல்வம் சேர்க்கும் தீந்தமிழ் இனமது
 
அவர்தான் எமது சோதி, ஆத்தாளின்
அண்டமெலாம் பூத்தாளின் வடிவம்,
தொல் இன மேய்ப்பர், இறைவர்,
என்றெலாம் போற்றித் திரியும்
பல்சான்றீரே!
 
தம்குறி நீட்டித் தாய்வாய் சொருகும்
தகையவர் தொழுது,
தரைதொடப் பணிந்து,
நெற்றி நிலம்பட
நீளமாய் கிடந்து,
உலா, அந்தாதி, தூது, பள்ளு, பரணி
கலம்பகம், பிள்ளைத்தமிழ், பாவை,எனத்
தாயினும் சாலப் பரிந்து
தண்தமிழ் கொண்டு தாழ்ந்தோரைப் பாடும்
பல்சான்றீரே! பல்சான்றீரே!
 
உயர்வகை மதுவும் கடமான் கறியும்
கெண்டகி சிக்கனும் ப்ளாக் பாரெஸ்ட்டும்
கீழ்திசை நாட்டின் உழிச்சலும் பிழிச்சலும்
இணங்கி ஏற்று, இன்பம் துய்த்து,
நேற்றும் இன்றுமாய் வளர்ந்த உமதுடல் தன்னைப்
பட்டினத்துப் பிள்ளை பாடியது போல.
”எரி எனக்கென்னும் புழுவோ
எனக்கென்னும் இந்த மண்ணும்
சரி எனக்கென்னும் பருந்தோ
எனக்கென்னும் தான்புசிக்க
நரி எனக்கென்னும் நாய்
எனக்கென்னும்!”
 
நெடிது நாள் உழைத்தும், வளர்த்தும் சேர்த்தும்,
செம்மாந்து நிர்ப்பதாய்த் தோன்றும் உம்புகழ்,
எதிர்காலத்து இளம் தலைமுறைக்கு.
கொசுக்கள் ஆயும் சாக்கடையாக,
குவிந்து நாறும் குப்பை மேடாக,
வெட்டிக் கழைந்த மயிரதுபோல.
வீதிதோறும் வெறிதே அலையும்.
எழுதிக் குவித்த எல்லாம் ஒருநாள்
மலம் துடைத் தெரியும் காகிதம் ஆகும்
வெட்டியும் பிடுங்கியும் எரித்தும் ஒழிக்கும்
முட்கள் பூத்த நச்சுக் காய்த்த
களைச் செடி ஆகும்
 
தமிழ்
என்பது உயிரும் வளர்க்கும்
ஓங்கியும் எரிக்கும்!
 
இச்சகம் பேசி, இளித்துக் காட்டிச்
சேர்த்தது எதுவும் சேகரம் அல்ல
 
நாவும் குழறி, செவியும் மயங்கி
குடலும் சுருங்கி நடையும் தளர்ந்து
கண் பஞ்சடைந்து காலன் வந்தெய்தும்
நாள் வந்தாச்சு!
 
கரும்பெனக் கையில் பற்றிய பாம்பு
கொடும் விடம் தன்னைக் குருதியில் ஏற்றிக்
கொன்றே நீங்கும்!
 
உடலும் உயிரும் புகழ் எனச்
சேர்த்துக் கொண்டன யாவும்
காற்றில் கரைந்து காணாப் போகும்.
ஆயும் காலம் ஆய்ந்தது போதும்
மேயும் காலம் மேய்ந்ததும் போதும்
தேயும் காலம் தீர்ந்தும் போகும்
திறமாய்ச் சிலவே செய்துதான் பாரும்
 
பல்சான்றீரே! பல்சான்றீரே!
பாடையின் வரவு பார்த்திருக்கின்ற
பல்சான்றீரே! பல்சான்றீரே!

***********

நாஞ்சில் நாடனின் “பச்சை நாயகி” கவிதை தொகுப்பிலிருந்து
மேலும் கவிதைகள்:
மாற்றிச் சூடு,
மக்களாட்சி வதைப்படலம் 
பெருந்திணை
எது கவிதை?
திகைப்பாய் இருக்கிறது
எவர் எழுதக் காத்திருக்கிறீர்?

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அறம் பாடுதல்

 1. முத்து சொல்கிறார்:

  உள்குத்து-ன்னு கேள்விப்பட்டிருக்கோம். இது என்ன உள்/வெளி/மேல்/கீழ்/பக்கவாட்டு என எல்ல்ல்லா பக்கமுமால்ல இருக்கு ???

 2. முத்து சொல்கிறார்:

  “தம்குறி நீட்டித் தாய்வாய் சொருகும்”

  யப்பா ….

 3. ஞானசேகர் சொல்கிறார்:

  மேயும் காலம் மேய்ந்தது… போதும்
  சிலவே செய்துதான் பாரும்……

  என்பதை உரைக்க…
  எத்தனை எத்தனை…
  சாடல்…
  இறுதி ச் சாறை… சுவைக்கக் கொடுக்க…
  எத்தனை எத்தனை…
  பிழிச்சல்…
  கவிசான்றோரே… கவிசான்றோரே…

  சிலதை செய்ய..
  செப்பிய முடிவு…

  சிலதும் பலதும்…
  அறியாதொழிந்து…
  செக்கு மாடாய்…
  சுற்றும் உலகம்…

  செய்வதறியா…
  ஆட்டுமந்தைகள்…
  புரிதல் இல்லா..
  போதையில் மக்கள்…

  அறிவை இழந்து
  அலைய வைக்கும்
  அரசியல் சூழல்…

  இருளை எதிர்க்கும்…
  வெளிச்ச கவிதை..
  ஒன்றேனும் உள்ளதா..?

  உம்மிடம் பிறந்த..
  ஒன்றேபோதும்..
  மூடம் முறிக்க…
  அறிவை திறக்க..
  நெருப்புக்கவிதை..
  நேர்பட அனுப்புக ..

  கவி சான்றோரே !கவிசான்றோரே !

  ஞானா….

  *இது எல்லா கவிசான்றோருக்கும்

 4. சிவகுமாரன் சொல்கிறார்:

  நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
  நயம்புரி வாள்எங்கள் தாய் – அவர்
  அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
  ஆனந்தக் கூத்தி டுவாள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s