நாஞ்சில் நாடனின் கலை

மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன்
 [24.1.2007ல் நாகர்கோயில் புனித சிலுவைக் கல்லூரியில் நடைபெற்ற நாஞ்சில்நாடன் கருத்தரங்கில் ஜெயமோகன் பேசியதில் சில பகுதி]
நாஞ்சில்நாடனின் படைப்புகளைப்பற்றி சிந்திக்கும்போது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. பொதுவாக இலக்கிய ஆக்கங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரித்துப்பார்க்கலாம் என்று. இது ஒரு உருவகம் மட்டுமே. புரிந்துகொள்ளும் முயற்சிக்காக நாம் செய்யும் எண்ணற்ற பகுப்புகளில் ஒன்று. இலக்கிய ஆக்கங்கள் இருவகை. மண்ணில் நின்று பேசுபவை. விண்ணில் நின்று பேசுபவை.
இறைவனை விண்ணில் தேடாமல் எளிய மக்கள் நடுவே மண்ணில் காணும் நோக்கு இது. இதுவே யதார்த்தவாதத்தின் தொடக்கம். உலகமெங்கும் எளிய மக்களின் கன்ணீரையும் கனவையும் சொல்ல வந்தது யதார்த்தவாதம். விண்ணை துதிப்பதற்குப் பதில் மண்ணை கொண்டாட வந்தது அது
தமிழில் யதார்த்தவாதம் புதுமைப்பித்தனில் தீவிரமாக பிறவி கொண்டது.  கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆ.மாதவன், நீலபத்மநாபன் என நீளும் அவ்வரிசையில் இணைபவர் நாஞ்சில்நாடன். இவ்வரிசையில் நால்வர் நம் மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
நாஞ்சில்நாடன் அவரது பெயர் சுட்டுவதுபோல நாஞ்சில் மண்ணின் படைப்பாளி. கலப்பையை பின் தொடரும் ஆசிரியன்.  மீண்டும் மீண்டுமவர் நம் மண்ணைப்பற்றி நம் மக்களைப்பற்றி எழுதுகிறார்.
அவரது ஒரு கதை. (யாம் உண்பேம்)அது மகாராஷ்டிர மாநிலத்தில் ஏதோ ஒரு வரண்ட கிராமத்தைக் காட்டுகிறது. அங்கே மண்ணில் உழுது உண்டு வாழும் விவசாயி ஒருவர். பிள்ளைகள் மூத்து பேரப்பிள்ளைகள் வளரும்பருவத்தில் முதுமை ஏறி அவர் திண்ணையில் அமர்ந்து ஹூக்கா பிடித்து ஓய்வெடுக்கவேண்டிய வயதில் பெரும் பஞ்சம் எழுகிறது. வயல்கள் காய்கின்றன. வயிறுகள் காய்கின்றன
சிலநாட்கள் சேமிப்பை உண்கிறார்கள். பின்னர் விதைத்தானியத்தை உண்கிறார்கள். பின்னர் செடிகொடிகளை கிழங்குகளை தேடிப்பறித்து உண்கிறார்கள். கடைசியாக கால்நடைகளை. ஒருபச்சைகூட எஞ்சாமலானபோது அவரவர் பாட்டுக்கு ஊரை விட்டே கிளம்புகிறார்கள். கிழவர் தனியாகிறார். அவரும் கிளம்புகிறார். ஒருவாய்உணவு தேடி
கதையின் இப்பக்கத்தில் ஒரு விற்பனைப் பிரதிநிதி பகலெங்கும் மகாராஷ்டிரச் சிறுநகரில் அலைகிறான். வேலைமுடிந்து ஒருபொட்டலம் சப்பாத்தியுடன் பாஸஞ்சர் ரயிலில் ஏறி அமர்கிறான். பசி குடலைப் பிய்க்கிறது. பெட்டியில் யாருமே இல்லை. அள்ளி அள்ளி தின்கிறான். கடைசிப்பாதியை பிய்க்கும்போது ஒருகை தடுக்கிறது. அந்த மகாராஷ்டிரக் கிழவர். அவன் அச்சப்பாத்தியை அளிக்கிறான்.
பலநாள் பசி. கிழவர் ஆவேசமாக தின்கிறார். பசி எரியும் வயிறும் உலர்ந்து சுருங்கிய கழுத்து சதையும் நெளிகின்றன. கண்கள் கலங்கி பிதுங்கி இருக்கின்றன. அடப்பாவி அரை நிமிடத்திற்கு முன்னால் வந்திருந்தாரென்றால்கூட ஒரு முழுச்சப்பாத்தியாவது கொடுத்திருக்கலாமே என்று எண்ணுகிறான் இவன்
சட்டென்று கிழவர் மராத்திய மொழியில் சொன்ன சொற்கள் அவன் சிந்தயை அறைகின்றன. எனக்குக் கொடு என்று அவர் கேட்கவில்லை. நான் சாப்பிடுகிறேனே என்றும் சொல்லவில்லை. ”நாம் சாப்பிடுவோம்” என்றார். அவனுக்கு உடம்பு அதிர்ந்தது. ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் சங்கக்கவிதை ஒன்றின் வரியை அவன் கேட்டான் ” யாம் உண்பேம்!” என.
(குறிப்பிடப்பட்டுள்ள கதையைப் படிக்க: யாம் உண்பேம்
உணவெல்லாம் பொதுவாக பகிர்தலே பண்பாக இருந்த ஒரு பொற்காலத்தின் நினைவை அந்தக் கணத்தில் அடைகிறான் அவன். மானுடமெங்கும் தழுவ விரிகிறது அவன் நெஞ்சம். அது  கதைகளின் சாரமாக பெரும்பாலான கதைகளில் எழுந்துவரும் அறமாக இருக்கிறது
இன்னொரு கதை. (வனம்)கோவையிலிருந்து அவன் கேரளா செல்ல பஸ் பிடிக்கிறான். மானந்தவாடிக்கு செல்லும் பஸ்ஸில் கூட்டம் தேனடையில் தேனீ போல அப்பியிருக்கிறது. ஆண்கள் பெண்கள் கூடைகள் சிப்பங்கள் பெட்டிகள் பைகள். எங்கும் கூச்சல் வியர்வை அழுக்கு வெப்பம். பஸ் மெல்ல நகர்கிறது. ஒரு அசையும் நரகம் போல.
கண்டக்டர் மேலும்மேலும் ஆட்களை ஏற்றுகிறான். டிரைவர் வசை பாடுகிரான். எப்படி வண்டியை ஓட்டுவது என எரிந்து விழுகிறான். வண்டியை முரட்டுத்தனமாக ஓட்டுகிறான். வாய் வசை துப்பியபடியே உள்ளது. அவன் தசைகள் முறுகியுள்ளன. வியர்வையை துடைத்துக் கொள்கிறான்
மலையை அடையும்போது குளிர்காற்றில் மெல்ல இறுக்கம் தளர்கிறது. ஒருவரோடொருவர் சாய்ந்து பயணிகள் தூங்க ஆரம்பிக்கிறார்கள். இருபுறமும் அடர்ந்த பெருங்கானகம்.
சட்டென்று பஸ் உலுக்கி நிற்கிறது. வழியில் சாலையின் குறுக்காக ஒரு பெரிய மலைப்பாம்பு. இரையெடுத்ததா இல்லை கர்ப்பிணியா தெரியவில்லை. ஒரு அவசரமும் இல்லை. மெல்ல மெல்ல நகர்கிறது.
டிரைவர் புன்னகையுடன் ஹாரனை அடித்தான். ”போ மோளே வேகம்” [சீக்கிரம் போ மகளே] என்று சொன்னான்.
(குறிப்பிடப்பட்டுள்ள கதையைப் படிக்க:  (வனம்)
கதைகளின் சாரமாகிய மானுடம் தழுவிய அந்தக் கனிவும் அறவுணர்வும் அனைத்து உயிர்களையும் அணைப்பதாக மண்ணை மூடிவிடுவதாக விரியும் காட்சியை நாம் காண்கிறோம். அதுவே அவரது படைப்பின் உச்சமாக அமைகிறது.
மண்ணில் நின்று மண்ணை நோக்கும் கலைஞன் அவர். விண்ணின் ஜீவநீர் கிடைப்பதாக இருந்தால்கூட அது மழையாகப் பொழியவேண்டாம் மண் பிளந்து ஊற்றாக வரட்டும் என்று கோரும் தரிசனம் அவருடையது.
இங்கே அவரை என் சக எழுத்தாளர் என்றார்கள். அப்படி எபப்டிச் சொல்வேன். கால் நூற்றாண்டுக்காலமாக நான் அவரது வாசகன். பதினைந்து வருடகாலமாக என் நண்பராகவும் நல்லாசிரியராகவும் வழிகாட்டியாகவும் இருந்துவருகிறார். அவருக்கு என் வணக்கம். நன்றி.
http://www.jeyamohan.in/?p=28

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in இலக்கியம், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s