சாக்கடையாகும் நதிகள்

 நாஞ்சில் நாடன்
150 ஆண்டுகளுக்கு முன்பு கூவம் அழகானதோர் நதி என்பதும், அதிகாலையில் கல்விச் செம்மல் பச்சையப்ப முதலியார் அந்த நதியில் நீராடி, கந்தகோட்டத்தில் தொழுது வீட்டுக்குப் போனார் என்றும் பதிவு உள்ளது எனச் சொன்னால் உங்களால் நம்பக்கூடுமா?
கோவையில் நொய்யல் ஆற்றங்கரை நாகரிகம் எனச் சாற்றிக்கொண்டு பழைமையான ஊர்கள் பல இருந்திருக்கின்றன. பேரூர், வெள்ளலூர் என்பன சான்றுகள் இன்றும். இன்று நொய்யல், ஆறு அல்ல. இருமருங்கிலும் புதரும் முட்செடிகளும் அடைந்து குப்பைக்கூளங்கள், கழிவுகள் மண்டி, நடுவே சாக்கடையாகச் சற்றே தண்ணீர் ஓடுகிறது. கோவையில் சமீபகாலத்தில் தோன்றித் தழைக்கும் ‘சிறு துளி’ எனும் அமைப்பு, நொய்யலை கோவையின் தாய் எனக் கருதி, அதை மீட்டெடுக்கும் முயற்சியில் அரும்பாடுபடுகிறது. அவர்கள் திக்குக்கு முதல் வணக்கம்!
1968ல் பி.எஸ்சி., கணிதம் படித்து, எஸ்.எஸ்.எல்.சி., தரத்தில் அரசு உதவியாளர் வேலைக்கு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதிய நடைமுறைச் சாமர்த்தியமில்லாத முட்டாள் நான். அன்று தெரியாமற்போனது அரசு வேலைக்குப் படிப்பும் அறிவும் முக்கியத் தகுதிகள் அல்ல என்பது. அப்போது என்னுடன் பதினொன்று வரை படித்துவிட்டு, மோட்டார் கம்பெனி ஒன்றில் உதவியாளனாக என் நண்பன் பாளையங்கோட்டைப் பணிமனையில் தங்கி இருந்தான். அவனுடன் எனக்குச் சில நாட்கள் வாசம். குளிப்பதற்கு முருகன் குறிச்சி கால்வாய்க்கு கூட்டிக்கொண்டு போனான். தாமிரபரணியின் கிளை அது. திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம் சாலையில் பாளையங்கோட்டை நுழைவு எல்லையில் இடது பக்கம் தூத்துக்குடி, திருச்செந்தூர் திரும்பும் முனையில் அவ்வோடையை இன்றும் நீங்கள் நேர்காணலாம். அன்று அந்த ஓடைத் தண்ணீரை, தண்ணீருக்கு நிறம் இல்லை, மணம் இல்லை, குணம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டுச் சொல்லலாம். என்னவெல்லாம் உவமை சொன்னோம் அன்று ஆற்று நீருக்கு. பளிங்கு, பாதரசம், கண்ணாடி, பன்னீர், இளநீர், பதநீர், மணி நீர் என்றெல்லாம். இன்று நினைத்துப் பார்த்தால் தோலெல்லாம் உரிய அரிப்பெடுக்கிறது. திருநெல்வேலிக்காரருக்கும் திருநெல்வேலி தாண்டும் கன்னியாகுமரிக்காரருக்கும் தெரியும், அந்த ஓடை இன்று சாக்கடை என்று. இதுபோல் எத்தனையோ!
இதை நாம் திருத்தி எடுக்க முடியாதா? நமக்கு மனதில்லையா? மார்க்கமில்லையா? அண்ணாச்சி நெல்லை கண்ணன் பல முறை சொன்னது நினைவில் உண்டு. தாமிரபரணியின் கிளை ஒன்று அருள்மிகு காந்திமதி அம்மன் சந்நிதி முன்னால் ஓடியது என்றும் வண்ணநிலவன் எழுதிய கம்பா நதி அதிலிருந்து திருமஞ்சன நீர் கோரிக்கொண்டார்கள் என்றும். இன்று அம்மனுக்குத் துணிவு இருக்கிறதா, நகரைச் சுற்றி ஓடும் கிளைகளிலிருந்து நீரெடுத்து நீராட?
பத்த கோடிப் பேரினத்துக்குத் தெரியவில்லையா, சமூக தர்மகர்த்தாக்களுக்குத் தெரியாதா, இந்து அறநிலையத் துறை அதிகாரங்களுக்குத் தெரியாதா, அரசுக்கே அறிதுயிலா, ஆழ்ந்த துயிலா? அல்லது எல்லாம் தெரிந்தும் அலட்சியமா? அல்லது எந்தக் காலத்திலும் வாய் திறந்து ஒரு சொல் பேசி இராத அம்மனுக்கு, சாக்கடையே அதிகமான உபசரிப்புதான் என்பதா?
கன்னியாகுமரிக்கு சூரிய உதயம் காணச் செல்லும், இந்தியா பூராவிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் முகம்சுளித்து நாசி பொத்துகிறார்கள். அதிகாலையில் வரிசையாக அமர்ந்து கடலலைகளை ரசித்தபடியும் பீடி புகைத்தபடியும் மலம் கழிப்பவர் பந்தி பந்தியாகக் குந்தி இருப்பது கண்டு. பாசிக் கடை, ஊசிக் கடை, சங்குக் கடை, பொம்மைக் கடை, தொப்பிக் கடை, வளையல் கடை, பழக் கடை, சர்பத் கடை, தின்பண்டம் விற்றுத் தீராத நோய் வழங்கித் திரிபவர் கடை என ஏகப்பட்டவை கடற்கரையோரம். கடையினுள்ளே சமைத்து, உண்டு, உறங்கி வாழும் ஐந்நூற்றுக்கும் குறைவில்லாத உரிமையாளர், சேவகர், சிப்பந்தி காலைக்கடன் முடிக்க அலையடிக்கும் கடற்கரை.
உலகின் எவ்வுயிரும் சூரியனை வணங்குகிறது. சூரிய உதயத்தில் நூற்றுக்கணக்கானோர் கடற்கரையில் மலங்கழிப்பதைச் சூரிய நமஸ்காரத்தின் ஒரு பகுதிதான் என்றும் ‘ஞாயிறு போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்!’ என்ற கொண்டாட்டத்தின் கூறுதான் என்றும் கொள்ளலாமா? கன்னியாகுமரிக்கு மற்றுமோர் இழிவும் உண்டு. கார்த்திகை, மார்கழி மாதங்களில் விரதம் இருந்து, இருமுடி கட்டி, கறுப்போ, நீலமோ உடுத்தி, தாடி வளர்த்து, சரண கோஷம் விளித்து சபரிமலைக்குப் போகும் அல்லது போய்த் திரும்பும் தமிழ்நாட்டு, கன்னடத்து, ஆந்திரத்து ஐயப்பன்மார் தினந்தோறும் மன்னிக்கவும் திரும்பவும் சொல்கிறேன், தினந்தோறும் 60 நாட்களுக்கும் தொடர்ச்சியாக சிற்றுந்துகளிலும் பேருந்துகளிலும் மகிழ்வுந்துகளிலும் அடைந்துகொண்டு கன்னியாகுமரி வருவார்கள். அதிகாலையில் வந்து சேர்வோர், நடுப்பகலில் வருவோர், முன்னிரவில் வருவோர் யாவர்க்கும் திறந்தவெளிக் கழிப்பறை, இயற்கை அற்புதமாய் அமைந்திருக்கும் கடற்கரை. நாட்டில் இளக்காரமான வழக்கொன்று உண்டு, ஐயப்பன்மார் கழிப்பதை, பூச்சாமி என்று. உள்ளூர்வாசிகள் எக்காரணம் கொண்டும் கடற்கரைக்குப் போவதில்லை. தை மாதத்துப் பெருமழை அடித்து அனைத்தையும் கழுவிக் கடலில் சேர்ப்பது வரைக்கும்.
அந்தப் பருவ காலங்களில் காலடி வைக்கக் கூசும் மற்றோர் இடம் குற்றாலம். சமீபத்தில் ராமேஸ்வரம் வந்து திரும்பிய மார்வாரி ஒருவரைச் சந்தித்தேன். கொல்கத்தாக்காரர். இந்துக்களின் புண்ணிய தீர்த்தங்களான துவாரகை, காசி, பூரி, ராமேஸ்வரம் ஆடுவோர், தெற்கே வந்தால் 50 அடி தூரத்தில் சாக்கடை பாய்வதைப் பார்த்துக் குமட்டாமல் நீராட இயலாது என. மேலும், தமிழர்களின் சுத்தம் பற்றி அவர் சொன்ன இன்னொரு வார்த்தை அச்சிடத் தரமன்று. எனக்கு எங்குகொண்டு முகத்தைப் புதைத்துக்கொள்வது என்று தெரியவில்லை.
கன்னியாகுமரி என்றில்லை. திருச்செந்தூர், பூம்புகார் எங்கும் இதே நிலைதான். சபரிமலை சீஸனில் மலையாளி எவரும் பம்பா நதியில் நீராடுவதில்லை. படித்துறையில் கால்வைத்தால் மலம் பொங்கிவரும் அச்சத்தில்.
‘தூற முட்டும்போது உட்கார இடம் தேடுபவன்’ எனும் பொருளில் மலையாளத்தில் ஒரு பழஞ்சொல் உண்டு. அது மனிதப் பண்பென்று கொண்டாலும் சுற்றுலாப் பயணிகளும் மக்கள் கூட்டமும் புழங்கும் இடத்தில் வாகாகவும் சுத்தமாகவும் போதுமான அளவிலும் கழிப்பிடங்கள் கட்டிப் பராமரிக்க நமக்குத் துப்பில்லையா? நமது பேருந்து நிலையங்களில் சிறுநீர் கழிக்க ஒரு கிலோ அரிசி தர வேண்டியதுள்ளது.
நீங்கள் கேட்பதும் எனது காதுகளில் ஒலிக்கிறது! அரசாங்கம் என்ன தூற முட்டிய ஒவ்வொரு மனிதனின் பின்னாலும் பிரம்பெடுத்தோ அல்லது வாளியும் துடைப்பமுமாகவோ நடக்க முடியுமா என்று!
எனது மறுவினா, இது ஏன் கேரளத்துக் கடற்கரைகளில் நடப்பதில்லை என! திருவனந்தபுரத்துச் சங்குமுகம், கோவளம், குருவாயூரை அடுத்துள்ள சாவக்காடு, கொல்லம், வடகரை, மய்யழி, தலச்சேரி, கோழிக்கோடு, கண்ணனூர் கடற்கரைக்குப் போகும் மக்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்குத் தூற முட்டுவதில்லையா?
மலையாள சினிமா காட்சி ஒன்று… மரத்து மூட்டில் மறைந்து நின்று ஒருவன் ஒன்றுக்குப் போவான். அவன் திரும்பி வந்து தமிழில் டயலாக் பேசுவான். மறைமுகமாக அவர்கள் சொல்ல வருவதென்ன? ஏகவெளியில், மரத்து மூட்டில், மக்கள் நடமாடும்போது மூத்திரம் பெய்பவன் தமிழனாகவே இருப்பான் என்பதல்லவா?
நாம் சாயாக் கடை நாயரைப் பரிகசித்துக்கொண்டு இருக்கிறோம்.
சில ஆண்டுகள் முன்பு, மலையாள சேனல் ஒன்றில் நகைச்சுவைத் தொடர் ஒன்று. மலையாளத்தில் ‘சூல்’ எனில் விளக்குமாறு என்று பொருள். வரிசையாகப் பாடிக்கொண்டு வந்தார்கள், யார் யாரை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும் என்று. அதில் ஒரு வரி, ‘விர்த்தி கெட்ட தமிழனுக்கு சூல்’ என்பது. ‘விர்த்தி’ எனில் சுத்தம் என்று பொருள்.
எங்கு போயும் எத்தொழில் செய்தும் பிழைப்பது பாவமல்ல, குற்றமல்ல, அவமானமல்ல, இழிவும் அல்ல. ஆனால், நமக்கு சாயா கடை நாயர் கேலிப்பொருள், புரோகிதம் செய்து வயிற்றுத் தீ குளிர்விப்பான் கேலிப்பொருள், ‘நம்பள்கி, நிம்பள்கி’ என்று வடநாட்டு சேட்டு கேலிப்பொருள்.
கேரளத்தில் இன்றும் சாலையோரம் குழி தோண்டுகிறவர், கட்டுமானத் தொழிலாளர், குப்பை பொறுக்குகிறவர் ஆணும் பெண்ணுமாகத் தமிழர். ஒரு நாள் பயணத்தில் தாராளமாக இதை நீங்கள் கண்டுகொள்ள முடியும். பிச்சை எடுப்போரும் திருடுபவரும் தமிழரே என்றும் அவப் பெயர் உண்டு.
பரத்சந்திரன் I.P.S என்று சுரேஷ் கோபி நடித்த படம் ஒன்று. அதில் ஒரு கீழ்மட்ட போலீஸ் அதிகாரி உயர் அதிகாரியிடம், கொலைபட்ட பிணத்தை முதலில் யார் பார்த்தது எனும் கேள்விக்கு வரும் பதில் ‘வேஸ்ட் பெறக்கான் வந்த தமிழன்மாராணு ஆத்யம் கண்டது’ என்பது.
கவனியுங்கள், குப்பை பொறுக்க வந்தவன் முதலில் கண்டான் என்று அல்ல. குப்பை பொறுக்க வந்த தமிழன் என்று.
மும்பையில் சாராயம் வாற்றுபவன், வாற்றிய சாராயத்தை நகரெங்கும் விநியோகம் செய்பவன், பிச்சை எடுக்கிறவன், தொழுநோயாளிகள் இவர்களில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் உண்டு என்று சொன்னால் எங்காவது நமக்கு ஏதாவது இடிக்கிறதா?
புலியை முறத்தால் அடித்து
விரட்டியதும், தேர்க்காலில் சொந்த
மகனை முற்றிக்கொன்றதுவும்,
புறமுதுகில் வேல்வாங்கிய மகனுக்குப்
பாலூட்டிய முலைகளை அறுத்து
எறிந்ததுவும், உதித்து எழுந்து உயர்ந்து
வரும் சூரியனை நில்லென்று சொல்லி
நிறுத்தியதுவும், பெய் என்றால்
பத்தினிக்கு மழை பெய்ததுவும், கல்
தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளுடன் முன் தோன்றி வந்ததுவும்,
கனகவிசயர் தலையில் கல்லேற்றிக்
கண்ணகிக்குச் சிலை வடித்ததுவும்,
கடைசியில் பக்கத்து நாட்டில் குப்பை
பொறுக்கத்தானா?
தமிழ் மானம், தமிழ் வீரம், தமிழ் விருந்து உபசாரம், தமிழ்ப் பண்பு, தமிழ்த் தாலி அறுப்பு என்பதெல்லாம் மேடை தோறும் கவிதையிலும், சினிமாவிலும், அரசியல் அறைகூவல்களிலும் அடைந்துகிடக்கும் வெற்று ஒலிக் குப்பைகளா?
விதியே தமிழ்ச் சாதியை என் செயப் படைத்தாய்?
 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சாக்கடையாகும் நதிகள்

  1. ramji_yahoo சொல்கிறார்:

    மணல் கடை காசிலும்
    மணல் வண்டி காசிலும் தான்
    கட்சிக் கொடிகள் பறக்கின்றன
    ஒன்றிய செயற்குழு கூட்டங்கள் நடக்கின்றன
    என்பவை நாஞ்சில் அண்ணாச்சி அறியாததா என்ன

    இலக்கிய வட்ட கூட்டம் ஏற்பாடு செய்து நாஞ்சில் நாட்டு நண்பர் திரு வைகுண்டராஜன்
    அவர்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளச் சொல்லி விவாதித்து மகிழலாமே

  2. தமிழ்வையை என்று பரிபாடல் பாராட்டிய வைகை இன்று சாக்கடையாய் ஓடுகிறது. ஆறுகள் சாக்கடையாகவே ஓடினால் நாளை நாம் குடிக்கும் நீர் மூத்திரம் மாதிரித்தான் இருக்கும். ஆறுகளை காக்க அரசும் மக்களும் முன்வர வேண்டும். கரையோரங்களில் மரங்கள் நட வேண்டும். நாஞ்சிலின் கோபம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s