ஈழத் தமிழன்

நாஞ்சில் நாடன்
ங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!’ என்றான் பாரதிதாசன்.
 ‘சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும்; என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்!’ என்றான் வேறொரு கவிஞன்.
காரணம் என்னவெனில், தமிழ் தொன்மையான மொழி, ஈடு இணை-அற்ற இலக்கியங்களைக்கொண்ட மொழி. எல்லாவற்றுக்கும் ஆதாரமான அது நமது தாய்மொழி. ஆனால், தாய்மொழியாம் தமிழ் பேசுபவன் பாடு, இன்று ‘தாளம் படுமோ, தறி படுமோ’ என்றிருக்கிறது.
நமது தாய்மொழி பேசும் ஈழத்துத் தமிழர் இன்று அனுபவிக்கும், மனித இனம் இதுவரை காணாத வன்கொடுமைகள், நினைத்துப் பார்க்கவே அச்சம் ஏற்படுத்துவது. நமது தாய்மொழிக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் செய்த தொண்டுக்கும் ஊழியத்துக்கும் சற்றும் குறைவில்லாதது ஈழத்தில் வாழ்ந்த, வாழும் தமிழர் அளித்த, அளிக்கும் கொடை. பழந்தமிழ் நூல்களுக்கான உரைகளில் பல ஈழத்துத் தமிழ்ப் புலவர்கள் எழுதியது. அவர்களில் நிகண்டு\அகராதி தொகுத்தவர் பலருண்டு. விவிலியத்தை முதலில் தமிழில் பெயர்த்தவர் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது நாவல், ஈழத்திலிருந்து வந்தது. சித்தி லெவ்வை மரைக்காயர் எழுதிய ‘அசன்பே சரித்திரம்’! நவீன தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்களில் முக்கியமான கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் ஈழத்துத் தமிழர்கள். நவீனத் தமிழ் படைப்பாளிகளில் மு.தளையசிங்கம், எஸ்.பொ, அ.முத்துலிங்கம், யேசுராசா, வ.ஐ.செ.செயபாலன், சேரன், வில்வரத்தினம், ஷோபா சக்தி, அகிலன் என நீண்டதோர் வரிசை உண்டு.
நமது நாட்டு எல்லையில் இருந்து கூப்பிடு தூரத்தில் வாழ்பவர், 40 ஆண்டு காலமாக அடைந்துவரும் இன்னல்கள் சொல்லத் தரமன்று. லட்சக்கணக்கான அரிய பழந்தமிழ் நூல்களைக்கொண்ட யாழ்ப்பாணத் தமிழ் நூலகம் எரித்துப் பொசுக்கப்பட்டது. லட்சக்கணக்கான பேர் சுட்டுக் கொல்-லப்பட்டாயிற்று. தமிழனுக்குக் கல்வி, வாக்குரிமை, வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசு வேலைகளில், காவல் துறையில், ராணுவத்தில் தமிழனுக்கு உரிய பங்கு இல்லை அல்லது பங்கே கிடையாது. சொந்த நாட்டில் ஈழத் தமிழன் மூன்றாந்தரக் குடிமகன் அல்லது குடிமகனே அல்ல. ‘இது சிங்கள நாடு, இந்த நாட்டின் மொழி சிங்களம், இனம் சிங்களம், மதம் பௌத்தம், தமிழனுக்கு இங்கு இடம் இல்லை’ என்கிறார்கள், சிங்களத் தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக!
நடைமுறை எவ்வாறாயினும், நமது இந்திய நாட்டில் 35 வயதுக்கு மேற்பட்ட எவரும் குடியரசுத் தலைவர் ஆகலாம். இனம், மதம், மொழி, பிரதேசம் தடையாக இருக்காது. ஆனால், இலங்கையில் தமிழன் குடியரசுத் தலைவராக இருக்க சட்டரீதியாகத் தகுதி அற்றவன்.
40 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். கற்பழிப்பு நிகழாத, கொலை நடக்-காத, அகதிகளாகப் புலம் பெயராத, கை, கால் இழக்காத தமிழ்க் குடும்பங்கள் இல்லை அங்கு. சொந்த மகனைப் பிரிந்து 20 ஆண்டுகளாகியும் மறுபடி காணாத தாயர் அங்கு அதிகம். அவர்கள் செய்த ஒரே பாவம், தமிழனாகப் பிறந்தது மட்டுமே.
சமீபத்தில் உக்கிரப்பட்டுள்ள போரினால், 2 லட்சம் அப்பாவித் தமிழர்கள் இடம் பெயர்ந்-துள்ளனர் என்கிறார்கள். அவர்கள் காட்டுக்குள் திரியும்போது பாம்பு கடித்து இறந்தவர் பலர் என்கிறார்கள். குடிக்கத் தண்ணீர் கிடைப்பதே பெரும்பாடு என்றும், ஒருவேளை உணவு அரிதென்றும், காயம்பட்டவர் குருதி பெருக்கிச் சாவது தவிர, வேறு மார்க்கம் இல்லை என்றும், நோய்க்கு வைத்தியம் இல்லை என்றும், மாற்றுடை இல்லாதவர் பலர் என்றும், ஒரு தீப்பெட்டி 20 ரூபாய் என்றும் செய்திகள் கூறுகின்றன. தினம் 6 மணி நேரம் மின்சார வெட்டுக்கு நாம் இந்தப் பாடுபடுகிறோம். ஆனால், 10 ஆண்டுகளாக மின்சாரமே இல்லாமல் வாழ்கிறான் ஈழத் தமிழன்.
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கங்கள் அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளன. சமீப காலமாக நடக்கும் போரில் மாண்ட அப்பாவிகள் பற்றிய சரியான தகவல்கள் வெளியிடப்படுவது இல்லை. இந்திய அரசாங்கம் இன்னும் பழைய படுகொலைக்குத் துக்கம் காத்து கனத்த மௌனத்தில் இருக்கிறது. 60 ஆண்டுகள் முன்பு நடந்த இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போதுகூட, ஒரு தனித்த மொழி பேசும் இனத்தவர் மீது இத்தகு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது இல்லை.
ஆனாலும், இந்திய நாட்டுக்கு இதுபற்றி என்ன அக்கறை, கவலை, துன்பம்? நமக்குக் கோஷம் எழுப்பி னால் மட்டும் போதும். வேண்டுமானால், ‘தமிழைப்பழித் தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ என்று இலங்கைத் தமிழனை வைத்துப் படம் எடுத்து ஏகத்துக்குத் துட்டு சம்பாதிக்கலாம்.
லட்சக்கணக்கில் தமிழ் பேசும் மக்கள் கொல்லப்பட்டுக்-கொண்டு இருக்கிறார்கள். அவர் விம்மி அழும் ஓசை, மரண ஓலம், பசியின் கூப்பாடு, நோயின் துன்ப அரற்றல் நமது காதில் வந்து மோதி விழுகிறது. இங்கோ, தேசத் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள், மதத் தலைவர்கள், அரசியல் கட்சி முதலாளிகள் அனைவரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு என்ன, 60 ஆண்டுகளாகவே சொல்லிக்கொண்டு இருக்கி-றார்கள். சொல்லிக்கொண்டும் இருப்பார்கள்.
ஒரு குறுங்கணக்கு எடுத்துப் பார்த்தால் கட்சி வாரியாகவும் சாதிவாரியாகவும் 50 அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் உண்டு. ஈழத்து தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்த அவர்கள் ஒற்றைக் குரலில் பேசக் காணோம். அதைவிட முக்கியமாக அவர்களுக்கு நாலைந்து மாதங்களில் வரப் போகும் தேர்தல் மீதுதான் கண்ணும் கருத்தும் அதிகமாக இருக்கிறது.
பழ.நெடுமாறனும் தா.பாண்டியனும் கேட்கிற கேள்விகளுக்குப் பொறுப்பாக எந்த அதிகாரமும் பதில் சொல்லக் காணோம். யாரைவிட யார் அதிகத் தமிழ்ப் பற்று உடையவர் என்று நிறுவி, சாதனைப் பட்டியல் இடுவதில் தெரிகிற ஆர்வம், துன்பத்தில் மாளும் தமிழ-னுக்குச் சிறு துரும்பு எடுத்துப் போடுவதில் எவருக்கும் இல்லை.
மொத்த தமிழ்ச் சமூகமும் காது கொடுக்கிற, அணி திரளுகிற, கட்டுப்படுகிற விதத்தில் இங்கு நமக்கொரு தலைவனும் இல்லை என்பது பெரியதோர் சோகம். யாவர் மீதும் நம்பிக்கை அற்றுக் கிடக்கிறது இளைய தலைமுறை. அது இன்னொரு சோகம்.
பாரதப் பிரதமராக இருந்தவரைப் படுகொலை செய்தனர் எனும் கோபம் இன்னும் நம்மில் பலருக்கும் உண்டு. அதற்கான வேரையும் விழுதையும் இந்த சந்தர்ப்பத்தில் விவாதித்துக்கொண்டு இருப்பது தகாது. 17 ஆண்டுகள் கடந்துபோயின. அதற்கு மாற்றாக, பிணையாக, பழியாக, எத்தனை லட்சம் அப்பாவித் தமிழர்கள் சாக வேண்டும்?
தமிழன் பிரச்னைக்குத் தூது நடப்பவன் தமிழன் இல்லை. தமிழன் பிரச்னையைக் கையாளும் அதிகாரி தமிழன் இல்லை. மறைமுகமான இந்த மெத்தனங்களின் உள்நோக்கம் என்ன என்று நமக்குக் கேள்வியும் இல்லை. நமது சகோதரத் தமிழனைக் கொன்று குவிக்கும் ராணுவத்துக்கு நாம் இங்கு பயிற்சி தருகிறோம். நமது ராணுவ நிபுணர்கள் இலங்கை சென்று பயிற்சி தருகி றார்கள். நாம் ஏற்கெனவே அனுப்பிய உணவும் மருந்தும் மறைமுகமாக தமிழனைக் கொன்று குவிப்பவன் கைக்குப் போய்ச் சேர்ந்தது. கண்காணிக்க இன்று சர்வ-தேசத் தொண்டு நிறுவனங்களும் களத்தில் இல்லை.
தேசப்பிதா காந்தி அடிகளைக் கொன்றவன் சார்ந்-திருந்த இயக்கத்து அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த நாட்டைப் பின்பு ஆண்டது உண்டு. பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைச் சுட்டுக்கொன்ற பாதுகாப்பு வீரர் களின் இனத்தவர் ஆளவும் எந்தத் தடையும் இல்லை. ஏனெனில், தனி மனிதர்கள் செய்யும் பழி-பாவங்களுக்கு அவர் சார்ந்திருந்த இனத்தவரை எல்லாம் பழி வாங்கு வது மனிதத் தன்மை அல்ல, தர்மமும் அல்ல. ஆனால், இலங்கையின் மொத்தத் தமிழினத்தின் மீதும் பழி வாங்கும், அழித்தொழிக்கும் ஆவேசம் நமது ஆழ்மனதில் ஒளிந்திருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பிறகு எதற் காக நமது அதிகாரங்கள் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது?
பீகாரி மாணவனை மராத்திய வெறியர்கள் அடித்துக் கொல்கிறார்கள், ஒரு மாநிலமே திரண்டு எழுந்து நிற்கி றது நியாயம் கேட்டு. ஒரு மலையாளியை, கன்னடரை, தெலுங்கரைத் தொட்டுப்பார்த்தால் மறுநாள் என்ன விளைவு என்பது தெரியும். ஆனால், நமது தமிழ்ச் சகோதரர்களை, நம்மைப் போல் தமிழ்ப் பால் பருகிய வனைத் துன்புறுத்துகிறார்கள், சுட்டுக் கொல்கிறார்கள், உண்ண நீரும் உணவும் இல்லை, நோய்க்கு மருந்து இல்லை, உடுக்க உடை இல்லை, அது பற்றிய இந்தியத் தமிழரில் பெரும்பான்மையினருக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு சின்னஞ்சிறு தேசம், பக்கத்து வல்லரசு போன்ற தேசத்தின் குடிமக்களான மீனவரைத் தொடர்ந்து சுட்டுக் கொன்றுகொண்டு இருக்கிறது, நமக்கு கேட்க நாதி இல்லை. தொலைக்காட்சிப் பெட்டிகள் தொடர்ந்து சினிமா, சினிமாப் பாடல், சினிமா நகைச்சுவை, சினிமா நடிகர் – நடிகை பேட்டி, சினிமாக்காரி செய்த இனிப்பு என்று நமக்குக் காட்டிக்கொண்டே இருக்கின்றன. இலங்கையாவது தமிழனாவது… ஒன்றாவது என்பது மனோபாவமாக இருக்கிறது.
ஈழத் தமிழனுக்கு நம்மால் என்னதான் செய்ய முடியும் என்று கேட்கிறார்கள். வேண்டுமானால் அவர் துன்பத்துக்கு இரங்கி, முகத்தில் சற்றும் வாட்டமின்றி அறிக்கை வெளியிடலாம், கவிதை எழுதலாம், கையெழுத்துப் போராட்டம் நடத்தலாம், தந்தி அடிக்கலாம், எஸ்.எம்.எஸ். அனுப்பலாம், மனிதச் சங்கிலி நடத்தலாம், அடையாள 6 மணி நேர உண்ணாநோன்பு இருக்கலாம், சட்டையில் கறுப்புத் துணி குத்திக்கொள்ளலாம், ஊர்வலம் போகலாம், கோஷம் போடலாம்… மறுநாள் கோலாகலமாக Happy Diwali சொல்லிக் கொண்டாடவும் செய்யலாம்.
வேற்று மாநிலத்தவர் நம்மை வேடிக்கை பார்க் கிறார்கள். சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்றபோது தடுத்துப் போரிட்ட சடாயு என்ற பறவைக்கரசுவை வாளால் துணித்து வீழ்த்துகிறான் ராவணன். சடாயு இறந்தபோது ராமன் பாடிய இரங்கற் பா ஒன்றுண்டு கம்பனிடம்.
‘என்தாரம் பற்றுண்ண என்தாயைச் சான்றோயைக்
கொன்றானும் தின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய்
வன்தாள் சிலை ஏந்தி வாரிக்கடல் சுமந்து
நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல் நின்றேனே’
‘எனது தாரம் கவர்ந்து, என் தாய் போன்ற சான் றோனாகிய சடாயுவைக் கொன்றவனும் நின்றான். கொலைப்பட்டு நீ கிடந்தாய். வலிய பெரிய வில் ஏந்தி, கடல் போல் அம்புகள் சுமந்து நானும் நின்றேன், நெடுமரம் போல் நின்றேன்’ என்பது பொருள்.
ஆம், ஈழத் தமிழன் மீது உண்மையான அக்கறைகொண்டவர் கையாலாகாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.
ஆனால், தமிழ் எங்கள் மூச்சு! தமிழ் எங்களுக்குத் தங்கக் காசு! வாழ்க தமிழ்!
நன்றி: ஆனந்த விகடன் 12-11-08

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள். Bookmark the permalink.

2 Responses to ஈழத் தமிழன்

  1. mathisutha சொல்கிறார்:

    ////இந்திய நாட்டுக்கு இதுபற்றி என்ன அக்கறை, கவலை, துன்பம்? நமக்குக் கோஷம் எழுப்பி னால் மட்டும் போதும். வேண்டுமானால், ‘தமிழைப்பழித் தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ என்று இலங்கைத் தமிழனை வைத்துப் படம் எடுத்து ஏகத்துக்குத் துட்டு சம்பாதிக்கலாம்./////

    மிகவும் சிந்திக்க வைத்த பதிவு ஐயா…. எங்கள் உணர்வை நேரில் பார்த்தது போல அப்படியே எழுத்தில் வடித்துள்ளீர்கள்… இப்போ எங்களுக்கு ஒன்றுமே தேவையில்லை நிம்மதியான வாழ்வு மட்டும் போதும்.. இனி போர் ஈழத்தில் வேண்டாம்…

    நேரமிருந்தால் என் தளம் வாருங்கள்..

    அன்புச் சகோதரன்…
    ம.தி.சுதா
    என் மலர் விழியை கண்டிங்களா ?

  2. ராஜநடராஜன் சொல்கிறார்:

    எழுத்து நடை இருக்கும் வலியை இன்னும் அதிகப் படுத்துகின்றது.ஒவ்வொன்றையும் கடந்து மட்டுமே போவது வருத்தத்தையும் அளிக்கிறது.

    இதய சுத்தியோடு உடல் கருகிச் சாகின்றவனும் இங்கே லூசுப்பயலாகிப் போகின்றான்.கண்ணகிக்கு சிலை எடுப்பவன் கண்ணகியே தமிழ்மண்ணுக்கு வந்தால் பாதம் படக்கூட இடமில்லை என்கிறான்.அன்று முதலே தமிழகம் சாபப் பட்ட மண்ணாகிப் போனது.இருக்கும் மனப்புகைச்சலை அவிழ்த்தால் அது அரசியல் சகதியில் கொண்டு போய் விட்டு விடுகிறது.

    கட்சிக்கு ஒரு தலைவன்.தனியாக கத்தி ஈனஸ்வரம் செய்பவர்கள் ஒட்டுமொத்த குரலில் ஒரு நாள் கூட கோரஸ் பாட மட்டும் மறுப்பது தமிழகத்தில் புரியாத புதிர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s