தன்ராம் சிங்

 நாஞ்சில் நாடன்
சிங் எனும் துணைப்பெயர்  கொண்டவரெல்லாம்  பஞ்சாபி என எண்ணிக்கொள்ள வேண்டாம். தன்ராம் சிங் பஞ்சாபி அல்ல. கேட்டால் அவன் தன்னை நேப்பாளி என்பான். அவர்களுக்கும் சிங் என்று துணைப்பெயர் உண்டு. ஆனால் உண்மையில் தன்ராம் சிங் திபேத்துக்காரன். நேப்பாளி என்று சொன்னால் வடநாட்டில் சமூக அங்கீகாரம் சற்று அதிகம் என்பதை உங்களுக்குத் தெரியச் சொல்கிறேன். நேப்பாளிகளுக்கு சற்று மேலான தோற்றப் பொலிவு உண்டு. தன்மையில் கூரான மறம் உண்டு. திபெத்துக்கரர்களுக்கும் வெள்ளை நிறம்தான், கண்கள் இடுக்கமானவைதான், முகத்திலும் உடலிலும் நிரப்பாக மயிர் வளர்வதில்லைதான். எனினும் நேப்பாளிகள் வேறு, திபேத்தியர்கள் வேறு.
கூர்க்கா வேலை செய்யும் யாரைக் கேட்டாலும் நேப்பாளி என்பார்கள். நேப்பாளிகளுக்கு அதில் சற்று மன வருத்தம்தான்.  ‘காஞ்சா’ என்று மாருதி கார் விளம்பரத்தில் வரும் சொல்லைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தன்ராம் சிங்கை துளைத்துக் கேட்டால், ‘திபேக்’ என்பான். அவனுக்கு ‘திபேத்’ என்று சொல்ல வராது. ஒரு வேலை அவனது பிராந்திய மொழிக் கொச்சையில் ‘திபேக்’ என்றால் ‘திபேத்’ தோ என்னவோ!
எனக்கு பம்பாயில்தான் கூர்க்காக்கள் முதலில் அறிமுகம். நாற்பது பேர் வேலை செய்த தொழிற்சாலையில் முதலில் மகேந்திர சிங் என்றொரு கூர்க்கா இருந்தான். அவன் அசல் நேப்பாளி. தொழிலாளர்கள் யாரும் அவனைச் சீண்ட முடியாது. தலையில் ஜெனரல் மானேக்ஷா  பாணித் தொப்பியும் காலில் சாக்சும் பூட்சும் காக்கி கால்சட்டையும் முழுக்கைச் சட்டையும் இடையில் பெல்ட்டும் செருகிய சற்றே வளைந்து கூரான ‘குக்ரி’யும் தோரணையுமாக இருப்பான். வேறு பெரிய கம்பனியொன்றில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துச் சென்றபின் மகேந்திர சிங் இடத்துக்கு வந்தவன் தான் தன்ராம் சிங். சீருடையும் தொப்பியும் இல்லாவிட்டால் அவனை பிறர் மதிக்க ஒரு காரணமும் இல்லை. அது என்னவோ தெரியவில்லை, மீசை வைத்த கூர்க்காவை இன்னும் நான் சந்திக்கவில்லை.
பொதுவாகக் கூர்க்காக்களுக்கு சுத்தமான இந்தி வராது. இந்திக்கும் பிரதேசச் சாயலுண்டு. தென்னிந்தியர் பேசும் இந்தி, வங்காளிகள் இந்தி, மராத்தி, குஜராத்திகள், பஞ்சாபிகள் இந்தி வேறு, பீகாரிகள், உத்தரப் பிரதேச மத்தியப் பிரதேசக்காரர்கள் இந்திகள் வெவ்வேறு. எனவே நேப்பாளிகள், திபேத்தியர்கள் இந்தியும் வெவ்வேறாகத்தனே இருக்கவியலும்?
என்றாலும் கூர்க்காக்களிடம் இந்தியின் சாயல் மிகக் குறைவாகவே இருக்கும். அதற்கு அஞ்சியோ என்னவோ குறைவான சொற்களிலேயே அளவளாவுவார்கள்.  எல்லோரும் ஐயா என்பதற்கு மாற்றான ‘ஸாகேப்’ என்பதை ‘ஸாப்’ என்பார்கள் எனில் கூர்க்காக்கள் ‘ஷாப்’ என்பார்கள். இந்த கதை அனுமதிக்கும் விஸ்தீரணத்தில் இன்னொரு உதாரணத்துக்கு இடமில்லை. மேலும் தகவலறிய விரும்புவோர் மலையாளத்தில் மோகன்லால் கூர்க்காவாக நடித்த சினிமாவைப் பார்க்கலாம்.
தன்ராம் சிங்கிடம் அவ்வளவு மிடுக்கு போதாது. அச்சுறுத்தும் உடல் மொழியோ, பார்வையோ கிடையாது. எனவே சில தொழிலாளர்கள் ‘ஸாலா’ முறை கொண்டாடினார்கள். எந்த நிர்வாகமும் நடைமுறைக் காரணங்களுக்காக அதை விரும்புவதில்லை. ஆனால் எத்தனை சொன்னாலும் தன்ராம் சிங்குக்கு வராது. கடுமையாகத் திட்டினாலும் இளித்துக்கொண்டு நிற்பான்.
அவனுக்கு ஊரில் ஒரு குடும்பம் இருந்தது. இருக்கத்தானே செய்யும்? பெண்ணும் இரண்டு பையன்களும்.இரண்டாண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஊருக்குப் போய் வரும் அபாக்யவான் அவன்.
பதினைந்து இருபது பேர் சேர்ந்துதான் பயணமாவார்கள். பம்பாயில் இருந்து வாரணாசி வரை ஒரு ரயில் வண்டி. இறங்கி வண்டி மாறி பாட்னா, பரூணி, மன்சி. மறுபடியும் வண்டி மாறி மீட்டர் கேஜில் சிலிகுரி. அங்கிருந்து மலைப்பாதையில் மங்கன் வழி சிக்கிம் எல்லை வரை கிழட்டு டப்பா பஸ். ஐம்பது கிலோமீட்டர் போக நான்கு மணி நேரமாகும். பிறகு மலைப்பாதையில் தலைச் சுமடாகவும் மட்டக் குதிரையிலும் பாரம் ஏற்றிக்கொண்டு எட்டு முதல் பத்து நாட்கள் வரை நடை. காலை எட்டு மணிக்கு மேல் பிற்பகல் நாலுமணிவரை  மலைப் பயணம். மலைக் கிராமம் ஒன்றில் கிடை. ஆண்டாண்டு நடந்து பழகிய மலைத்தடம், பனிப்பொழிவு, பாறைகள், கொடுங்குளிர்… நமக்கு பொள்ளாச்சியில் இருந்து உடுமலைப் பேட்டை போக அலுப்பாக இருக்கிறது.
இரயிலிலும் முன்பதிவெல்லாம் பழக்கமில்லை. ஜெனரல் கோச்சில் சேர்த்தாற்போல தடுப்புக்களில் இடம் பிடித்துக் கொள்வார்கள். பயணத்துக்கு சுட்டு எடுத்துப் போகும் ரொட்டி. அடுத்த  ரயிலுக்குக் காத்திருக்கும்போது தேவைக்கு மறுபடியும் ரொட்டி தட்டிக் கொள்வது. மலை ஏறும்போது இரவில் சுடும் ரொட்டிகள் பகலுக்கு.
வர்ண டிரங்குப் பெட்டிகளில் இரண்டு ஆண்டுகளாகச் சேகரித்த துணிமணிகள், வெள்ளி ஆபரணங்கள்… இந்திய நாணயம் அவர்கள் ஊரில் செல்லுபடி ஆகாது. என்றாலும் சின்னஞ்சிறு நகரங்களில் அதிகாரபூர்வமற்ற நாணயமாற்று செய்து கொள்வார்கள். பணம் அனுப்புவது, தபால்கள் அனுப்புவது எல்லாம் ஊருக்குப் போகும் குழுக்கள் மூலமாகத்தான்.
கூர்க்காக்கள் என்போர் வாட்ச்மேன் அல்லர். நாள் பூரா, வாரம் ஏழு நாள் டூட்டி. தங்குவதற்கு தொழிற்சாலை வளாகத்தின் பின்புற மூலையில் சிறியதோர் கூண்டு உண்டு. அவர்கள் அவ்வளவாகச் சிறு விடுப்புகள் எடுப்பதில்லை. நோய்ப்பட்டிருந்தாலும் எழுந்து உட்கார்ந்திருந்தால் போதுமானது. நிர்வாகம் காருண்ய அடிப்படையில் கூர்க்காவுக்கு மாத்திரம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை எல்லா விடுப்புகளையும் சேர்த்து மொத்தமாக வழங்கும். ஊருக்குப் போகும்போது தற்காலிக மாற்று ஏற்பாடு செய்துவிட்டுப் போவான். போகவர பாதி லீவு போய்விடும். ஈராண்டுக்கு ஒருமுறை ஒருமாதம் தாம்பத்யம். தன்ராம் சிங் விடுப்பில் போனதையே நாம் மறந்திருக்கும்போது ஒருநாள் காலையில் சிரித்தபடி சல்யூட் அடிப்பான்.
சேஞ்ச் ஆஃப் கார்டு எப்போது நடந்தது என்றே நமக்குத் தெரியாது.
அலுவலக நேரம் முடிந்து, அதிகாரிகளும் சிப்பந்திகளும் போனபிறகு அவனது இன்னொரு உலகு மெல்லக் கண் அவிழ்த்துப் பார்க்கும்.
தொழிற்சாலை மேலாளர் காலையில் அரை நாள் மட்டும் வந்துவிட்டு போவார். ஒரேயொரு ஷிப்ட்தான். மூன்று சூப்பர்வைசர்கள் இருந்தனர். மற்றபடி அலுவலகம், ஸ்டோர்ஸ் என்பன எனது கட்டுப்பாட்டில் இருந்தன. முதலாளிக்கு தமிழனைப் போல் மாய்ந்து மாய்ந்து வேலை செய்பவன் கிடைக்கமாட்டான் என்பதால் சற்று சுதந்திரமும் இருந்தது. ஒன்பதே கால் முதல் ஐந்தே முக்கால் வரை வேலை செய்து, இரண்டு மணி நேரம் லோகல் ரயிலிலும் நடந்தும் வீடு சேர்ந்து, கிடைத்ததைத் தின்று படுத்து, எழுந்து மறுநாள் காலையில் ஏழே காலுக்கு வண்டி பிடிக்கும் துருப்பிடிக்காத இயந்திரம்.
 தொழிலாளர்கள் ஐந்தரைக்கே கை கழுவி, உடைமாற்றி, பெல் அடிக்கக் காத்திருப்பார்கள். ஸ்டோர் சாவி, அலுவலகச் சாவி, மெயின் ஸ்டோர் சாவி எல்லாம் என் கைவசம். எனவே சாவதானமாகக் கடைசி ஆளாகக் கிளம்புவேன். சிலசமயம் எதற்கடா வீட்டுக்குப் போகிறோம் என்றிருக்கும். ரயிலில் சற்று தள்ளல் குறையட்டும் என்று சில நாட்களில் தாமதமாகக் கிளம்புவேன். சில சமயம் தொழிற்சாலையிலேயே தங்கி விடுவதும் உண்டு.
அலுவலக மேசை இழுப்பறை ஒன்றில் துவர்த்தும் சாரமும் போர்வையும் ஒளிவாக இருக்கும். காலையில் பல் தேய்த்துக் குளித்தால் போதும்.
வளைவினுள் நாலைந்து தொழிற்கூடங்கள். எல்லோருக்கும் பொதுவாக கண்ணூர் பக்கம் கக்காடு ஊரைச் சேர்ந்த தாவூத் மூசாவின் கேன்டீன். சாய் தவிர அவனது தயாரிப்புகள் டால்-பாவ், உசல்-பாவ், டால்-சாவல், உசல்-சாவல், ஆம்லேட், பட்டாட்டா வடா-பாவ், ரொட்டி-சப்ஜி. பாவ் என்றால் பன் போன்ற நாட்டு பிரட், சாவல் எனின் சோறு, டால் எனில் பருப்பு, சப்ஜி எனில் காய்கறிக் கூட்டு. மாதக் கணக்கு உண்டு எனக்கு. இரவுக்கு சொல்லிவத்தால் சப்ஜி செய்து ரொட்டி சுட்டுத் தருவான்.
“ஷாப், கர் நை ஜாத்தா?” என்பான் தன்ராம் சிங்.
மாலை அவனது வேலை ஆரம்பமாகி இருக்கும். துவைத்துக் குளித்துவிட்டு ரொட்டி போட ஆரம்பிப்பான். ஆறரை மணிக்கு மேல் அக்கம்பக்கம் வேலை பார்க்கும் அவனது கூட்டாளிகள் சிலர் எட்டிப் பார்ப்பார்கள். கசாமுசா என்று உரையாடல் கேட்கும். இரண்டு பேர் அவனுடனேயே தங்குபவர்கள்.
அலுமினிய டப்பாவில் எப்போதும் ரொட்டி மாவு இருக்கும். பச்சரிசி இருக்கும். மஜ்ஜித் பந்தரில் வாங்கிய பருப்பு, கொண்டைக் கடலை, உப்பு-புளி சமாச்சாரங்கள், கடுகு எண்ணெய் மண்ணெண்ணெய் பம்பு ஸ்டவ்.
இரவுக்கும் காலைக்குமாக வேளைக்கு தலைக்கு நான்கு ரொட்டி. கடைசியில் காதடைக்காமல் இருக்க கொஞ்சம் போலச் சோறு. வட்டமானதோர் அலுமினியப் பாத்திரத்தில் பருப்பு வேகப் போட்டு உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சை மிளகாய், அரிந்த வெங்காயம் போட்டு தாளித்தால் அது டால். அதைக் கூட்டு எனலாம், குழம்பு எனலாம். அருகிலேயே கர்னாக் பந்தர் பைகுலாவில் காய்கறிச் சந்தையும் இருந்தது. சாயங்காலம் போனால் சந்தை முகப்பில் கூறு வைத்திருப்பார்கள். வடிவற்ற பச்சைத் தோல் பாய்ந்த உருளைக் கிழங்கு, நைந்த தக்காளி, பெரிய வெங்காயம், கத்தரிக்காய், என மலிவாக. அவர்களுக்கு காலை, இரவு என இருவேளை உணவுதான். மதியம் எதுவும் உண்பதில்லை.
இருக்கை குஷனை தலைக்கு வைத்துக்கொண்டு, பென்னம்பெரிய மேலாளர் மேசை மீது நெட்ட நெடுக்க நீட்டிப் படுக்கலாம். விளக்கு இருந்தது, புத்தகம் இருந்தது, பேன் இருந்தது, வேண்டுமானால் ஏ.சி.யும் இருந்தது. வாழ்க்கை உண்மையில் சுவாரசியமாகத்தான் இருந்தது.
“தோ ரொட்டி காவ் ஷாப்” என்பான் தன்ராம் சிங் சில சமயம். சுடச்சுட இரண்டு தின்றிருக்கிறேன். பூண்டு சதைத்துப் போட்டுக் கடுகெண்ணெயில் தாளித்த டால் மணமாக இருக்கும். சிலசமயம் மூசாக்கடை சப்ஜியும் சப்பாத்தியும். இல்லையேல் டால்-சாவல்.
காடாத் துணியில் தைக்கப்பட்ட முழங்காலுக்கு வரும் லேங்கா, அரைக்கால் கை வைத்த பனியனும் அல்லாத சட்டையும் அல்லாததோர் உடுப்புடன் தன்ராம் சிங் வித்தியாசமாகத் தெரிவான். சாப்பிட்டபின் சற்று நேரம் கதை பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஞாயிறுகளில் ஆட்டுக்கறி சமைப்பார்கள். ஆட்டுக்கறி என்பது தலைக்கறி. அன்று இரண்டு ரூபாய்க்கு செம்மறி ஆட்டுத் தலையொன்று கிடைத்தது. தலை வாங்கக் காசில்லை என்றால் ஆட்டுக் காதுகள் வாங்கிக்கொண்டு வருவான் மலிவாக. தீயில் ரோமத்தைச் சுட்டுப் பொசுக்கி, கழுவி, துண்டுதுண்டாக நறுக்கிச் சமைப்பார்கள். காசிருந்தால் குடல். அது விருந்து.
எப்போதாவது தன்ராம் சிங்குக்கு கடிதம் வரும். முகவரி எனது கையெழுத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். புதிய கடித உறைகள் வாங்கி மொத்தமாக பம்பாய் முகவரி எழுதி வாங்கி, இரண்டு ஆண்டுகளுக்கு வரும் விதத்தில், ஊருக்குப் போகும்போது கொடுத்துவிட்டு வருவான். யாரிடம் கொடுத்து எந்த ஊரில், இந்திய எல்லைக்குள் கொண்டுபோய் போஸ்ட் செய்வார்கள் என்று தெரியாது. உள்ளே எழுதப்பட்டிருக்கும் கிறுக்கலான வரி வடிவங்கள் நேப்பாளியா, திபேத்திய மொழியா, சீன மொழியா வேறேதும் மழைப் பிராந்திய மொழியா என்பதும் தெரியாது.
பதினைந்து இருபது நாட்களுக்கு ஒன்று என வரும் கடிதங்களில் சில மிக வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். தந்தியும் தொலைபேசியும் உதவாத மலைப்பிரதேசங்கள்.  தாய் தகப்பன் இறந்து போனாலும் பெண்டுபிள்ளைகள் இறந்து போனாலும் உடன் பிறப்புகள் இறந்து போனாலும் தபால் உறைதான். பத்துப் பதினைந்து நாட்கள் சென்று கிடைக்கும் தபால் பார்த்து நேரில்  செல்ல வேண்டுமானால் மேலும் பத்துப் பன்னிரண்டு நாட்கள். என்றாலும் உயிரின் பிரிவல்லவா?
மாலையில் கூடும் கூட்டாளிகள் மூலம் செய்தி போகும் ஒவ்வொரு உறவுக்கார கூர்க்கவுக்கும். ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது மணிக்கு செளபாத்தி கடற்கரையில் கூடுவார்கள். மர நிழல் பார்த்து, வட்டமாய் உட்கார்ந்து, கண்கள் கலங்க நினைவுகளைக் கூறுவைத்து, சடங்குகள் செய்து, தீ வளர்த்து, அதில் தகவல் வந்த கடிதத்தை உறையுடன் சேர்த்து எரித்து, பின்பு நெருப்பை ஆற்றி, சாம்பலைக் கொண்டுபோய் அரபிக் கடலில் கரைத்து, மொட்டை அடித்து, சமுத்திரத்தில் குளித்து, அவரவர் நினைவு சுமந்து பிரிந்து போவார்கள்.
கடிதம் வந்த மறு ஞாயிறுக்குள் தன்ராம் சிங் மொட்டை போட்டிருந்தால் தெரிந்து கொள்ளலாம். எப்படியும் அவனுக்கு ஆண்டுக்கு மூன்று, நான்கு மொட்டைக்கு பிழை வராது.
சக தொழிலாளர்கள் எப்போதும் தன்ராம் சிங்கை கலாட்டா செய்வார்கள், மொட்டை போட்டிருந்தால். சாவு பரிகாசத்திற்குரியதா? எளியதோர் சிரிப்பில் அவன் துக்கம் கலந்திருக்கும், உறைந்தும் இருக்கும்.
ஒரு பீடி அல்லது சாசரில் ஊற்றிக்கொடுத்த பாதி சாய் பெரிய சந்தோசம் அவனுக்கு.
அதிகம் வேலை இருந்தாலோ, வேறு வேலைகள் இல்லாவிட்டாலோ, சில ஞாயிறுகளில் தொழிற்சாலைக்குப் போவேன். மசகான் டாக் சந்து ஒன்றில், விரலில் தொட்டுக் காட்டினால் தீப்பற்றிக் கொள்ளும் மொசம்பி அல்லது சந்த்ரி எனும் வாற்றுச் சாராயம்-Indian Made Indian Liquor – IMIL கிடைக்கும். துணைக்கு தன்ராம் சிங். தலைக்கொரு நவ்டங். தொட்டுக் கொள்ள அச்சார்.
சேர் எனும் அளவில் கால்பங்கு பாவ்செர். அதனினும் பாதி நவ்டங். சின்னப் போதைக்கு அது போதும். அருகிலேயே கோமந்தக் உணவுச் சாலை ஒன்றிருந்தது. புழுங்கலரிசிச் சோறும் பச்சைத் தேங்காய்ப் பால் ஊற்றிய சிங்கா என்ற குஞ்சு இறால் மீன் குழம்பும். தன்ராம் சிங் அதிகமாக இரண்டு பாவ் வாங்கிக் கொள்வான். அரிந்த வெங்காயமும் பச்சை மிளகாயும் எலுமிச்சைத் துண்டமும் இல்லாத உணவு மேசை இல்லை.
தன்ராம் சிங் மாத்திரமல்ல, எந்த கூர்க்கவையும் கடுகடுத்த முகத்துடன் நான் கண்டதில்லை. முகம் ஏறிட்டுப் பார்த்த உடன் மலரும் சிரிப்பு. ‘உன் ஆதரவில் என் வாழ்க்கை’ என்பதுபோல்.
தொழிற்சாலையில் இருந்து நடந்துபோகும் தூரத்தில் சினிமாத் தியேட்டர் ஒன்றிருந்தது. பெயர் மறந்துவிட்டது. இரண்டே ருபாய் டிக்கட். வகுப்பு பேதமில்லாமல் கிடைத்த இடத்தில் உட்காரலாம். காற்றாடி சுழலாது, மூட்டைப்பூச்சி இரத்தம் உறிஞ்சும், வெற்றிலைப் பாக்கு குழம்பு எங்கு வேண்டுமானாலும் உமிழப்பட்டிருக்கும், புழுங்கிய வாடை அடிக்கும். வழக்கமாகத் தொழிற்சாலையில் சனிக்கிழமைகளில் அரை நாள் வேலை. அங்குதான் நான் ‘ப்யாஸா’ பார்த்தேன். தன்ராம் சிங்குக்கு சத்ருக்கன் சின்ஹா படங்கள் பிடிக்கும். சினிமா பார்க்க சிலசமயம் வாரக் கடைசியில் இரண்டு ருபாய் கடன் கேட்பான். நானே இரு நூற்றுப் பத்து ருபாய் சம்பளக்காரன். வசதியான சூப்பர்வைசர் சிவராம் பட்டேக்கரிடம் பத்து ருபாய் கடன் வாங்குபவன்.
ஏழாம் தேதி சம்பளம் வாங்கிய கையோடு, சில்லறை மாற்றி வைத்துக்கொண்டு நிறையப் பேருக்கு தன்ராம் சிங் இரண்டிரண்டு ரூபாயாகக் கடன் தீர்த்துக்கொண்டிருப்பன். ஒருமுறை விடுமுறையில் ஊர் சென்று திரும்பியபோது, வளைந்து கூரான, கைப்பிடியில் கைத்திறன் கொண்ட ‘குக்ரி’ ஒன்று கொணர்ந்து தந்தான். சிலிகுரி சந்தையில் வாங்கியதாகச் சொன்னான். பிறகது திருட்டுப் போய்விட்டது.
அவனது ஊருக்குப் பக்கத்தில் பாயும் ஆறொன்று உண்டென்றும் அதன் பெயர் இன்னதென்றும் பலமுறை சொல்லி இருக்கிறான். எத்தனை யோசித்தும் எனக்கதன் பெயர் நினைவுக்கு வரவில்லை. ஆறும் குளங்களும் நெல் – கோதுமை வயல்களும் அவன் கனவுகளில் வந்து போகுமாக இருக்கும். பெடையின் நினைவில் இந்திரியம் சேறாகச் சிந்துமாக இருக்கும்.
பதினெட்டு ஆண்டுகள் முன்பு, எனது பம்பாய் வாழ்க்கையின் கடைசி ஆண்டில், கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்று திரும்பிய தன்ராம் சிங் கூடவே கூர்க்கா உடையணிந்த பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவனைக் கூட்டி வந்தான்.
பால் குடி மறந்தானோ, பள்ளிக்குப் போனானோ தெரியவில்லை. மகனாக இருக்கும் என்றெண்ணினேன். காக்கிச் சீருடையும் தொப்பியும் பூட்சும் பெல்ட்டும் கத்தியுமாக இருந்தான். திபேத்திய சிற்றரசொன்றுக்கு இளவரசனாக இருக்கும் எல்லா அங்க லட்சணங்களும் இருந்தன. முகம் வசீகரமாக இருந்தது.
“அமாரா ஜவாய் ஷாப்” என்றான் தன்ராம் சிங்.
மகளுக்கு எப்போது திருமணம் செய்தாய் என்றேன்.
அந்த விடுமுறையில் போயிருந்தபோது என்றான்.
அதே ஆண்டில் நான் கோவைக்குக் குடி பெயர்ந்தேன். அதன் பிறகு அலுவல் நிமித்தம் பம்பாய் சென்றாலும் எனக்கு அந்த தொழிற்சாலைக்குப் போக வாய்க்கவில்லை. தொழிற்சாலையும் மூடப்பட்டு அந்த இடம் கம்பனி குடோன் ஆயிற்று. என்றாலும் தன்ராம் சிங் தான் கூர்க்காவாக இருப்பான்.
இருப்பானோ இல்லை என்னைப் போல ஓய்வு பெற்று விட்டானோ? ஓய்வு பெற்றாலும் ஊருக்குத் திரும்ப இயலாது. என்னால் திரும்ப முடிந்ததா?
எங்கேனும் செம்பூர், கொவன்டி, மான்கூர்டு, சயான், மாதுங்கா, கோலிவாடா, வடாலா, சிவ்ரி தெருக்களில் இரவில் மூங்கில் கழி தட்டிக்கொண்டு நீண்ட விசில் ஊதிக்கொண்டு கண்விழித்து நடப்பானாக இருக்கும்! கூலியாக மாதம் ஐந்தோ பத்தோ வீட்டுக்கு என்று யாசித்துப் பெறுவானாக இருக்கும்.
எனக்கு இன்று தன்ராம்சிங்கைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது, பார்ப்பது சாத்தியமில்லை எனத் தெரிந்தும்.
உலகம் தாராளமயமாகி  விட்டது. தேசங்களின் எல்லைகள் இற்று வருகின்றன. பாரதத்தின் வளர்ச்சி வீதம் எட்டு சதமானம் என்கிறார்கள்.
ஒருவேளை, புலம் பெயர்ந்து, தன்ராம் சிங் தென்னாட்டுத் தெருக்களில் இரவுகளில் கோல் தட்டி, விசில் ஊதித் திரிந்து கொண்டிருக்ககூடும். மாதத்தின் முதல் வாரத்தில் உங்கள் வீட்டின் முன் வந்து சிரித்தபடி நின்றால் அருள்கூர்ந்து அவனுக்கு ஐந்து ருபாய் தாருங்கள் கனவான்களே!
 (ஆனந்த விகடன் – ஆகஸ்ட் 2007)

(நன்றி: தட்டச்சு உதவிய….பிரவீனுக்கு.)

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், விகடன் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to தன்ராம் சிங்

 1. Rajasekaran சொல்கிறார்:

  படித்த உடன் மனம் கனக்கிறது..

 2. அருண் ஹரிச்சந்திரன் சொல்கிறார்:

  சாமுராய் வீரனின் சொல்கேட்டு சுழலும் வாள் , அல்லது
  நையாண்டி மேளத்தின் துடியை ஒத்த தமிழ் ….

 3. nainar சொல்கிறார்:

  thanram singh is in our town eruvadi @ tirunelvelli

 4. ramesh சொல்கிறார்:

  vera enna solvathu ungal padaipukalil ithuvum oru muthu…

 5. சேக்காளி சொல்கிறார்:

  //முகம் ஏறிட்டுப் பார்த்த உடன் மலரும் சிரிப்பு. ‘உன் ஆதரவில் என் வாழ்க்கை’ என்பதுபோல்//
  இன்று முதல் நானும் அதுபோல் இருக்க வேண்டும் என்று எண்ணம் உதித்துள்ளது.

 6. Naga Sree சொல்கிறார்:

  அருமையான கதை! நன்றி!

 7. கூர்க்காக்களைப் பார்க்கும்போது தன்ராம்சிங் ஞாபகம் வந்துவிடுகிறது. கூர்க்காக்களின் வாழ்க்கையை வலியை பதிவு செய்த அற்புதமான கதை.
  பகிர்விற்கு நன்றி.

 8. Rajbabu சொல்கிறார்:

  Padithavudan nenjil baram…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s