உயிர் எழுத்து நாஞ்சில் நாடன் உரை

2010 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அமுதனடிகள் விருது பெற்ற நாடக காவலர் முத்துவேலழகன் ஆகியோருக்கு பாராட்டு விழா உயிர் எழுத்து சார்பில் 13-03-2011 அன்று திருச்சிராப்பள்ளி கலையரங்க கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது, அதில் நாஞ்சில் நாடன் பேசிய உரை,
 ‘என் பயண வரைபடத்தில் திருச்சி இருந்ததே இல்லை. 35 ஆண்டுகள் நூல் மில்கள் இருந்த எல்லா நகரங்களிலும் அலைந்தவன் நான். திருச்சியைச் சுற்றி நூல் மில்கள் இல்லை. அதனால் நான் இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை. மூன்று முறைதான் திருச்சியை தாண்டி இருக்கிறேன். எல்லா இடங்களுக்கும் சுற்றி அலைந்துவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து ஆறேழு வருடங்கள் கழித்து இங்கு வந்தபோது மோதி.ராஜகோபால், பத்மராமன், எம்.எஸ்.நாடார் ஆகியோரை சந்திக்க இழந்தவன் என்று அறிந்திருக்கிறேன். அப்படி திருச்சி வந்த ஒரு நாளில் மோதி.ராஜகோபால், நாடகம் பார்க்கப் போகலாம் என்று அழைத்துச் சென்றார். அன்று நான் பார்த்த நாடகம் ‘பதினெட்டாம் போர்’ அரவாணை பற்றிய நாடகம். நாஞ்சில் நாட்டில் நான் வாழும் கோவையில் அரவாணுக்கு ஒரு சிறிய கோயில் உண்டு. அங்கு அரவாண் கதை நாடகமாக நடிக்கப்படும். அந்தக் களப்பலி காட்சியைக் காணும்போது மனது இறுக்கமாக இருக்கும். 18ஆம் போரில் அன்று நான் பார்த்த ஒப்பாரியை இன்றும் மறக்கமுடியவில்லை. பெருங்குரலெடுத்து பாடுகின்ற ஒப்பாரி. மரபின் வலிமை இது. மகாபாரதத்தில் ஒரு சின்ன பாத்திரம் அரவாண். அதை எடுத்து நாடகமாய் செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜெயகாந்தன் சொல்லுவார் மகாபாரத, இராமாயண இதிகாசங்களை அறியாதவன் இந்தியனே இல்லை என்று. இதில் எனக்கு உடன்பாடு உண்டு. மரபுகளில் எடுத்தாழ் நிறைய விஷயங்கள் உண்டு. நவீன இளைஞனுக்கு நாடகம் மூலம் சொல்ல நிறைய இருக்கிறது. எழுத்தைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. எனக்கு இந்தப் பாராட்டு எல்லாம் அலுத்துப் போய்விட்டது. இன்றைக்கு இவ்வளவு பேரை இங்கு பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. திருச்சியில் இதுவரை மூன்று முறைதான் பேசியுள்ளேன். ஒருமுறை ரோட்டரி கிளப்பில் ஈழப் பிரச்சினை பற்று 20 நிமிடங்களில் பேசச் சொன்னார்கள். 20 நிமிடங்களில் எல்லாம் பேசமுடியாது, மூடிய அறையில்தான் பேசுவேன், பத்திரிகையாளர்கள் இருக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டேன். அன்று சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினேன். ஏனென்றால், நம்மை கைது செய்தால் யாரும் கேட்கமாட்டார்கள். எழுத்தாளனின் நிலைமை இங்கு அப்படிதான் இருக்கிறது. இந்த நேரத்தில் அமுதன் அடிகள் விருது பற்றிச் சொல்ல வேண்டும். இவ்விருது தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் யாரும் பொருட்படுத்தாத தகுதியான கலைஞர்களுக்குத் தரப்படுகிறது. 1998இல் அந்த விருது பெற்ற நான் சொன்னேன் இந்தப் பணத்தை வைத்துதான் என் பெண்ணுக்கு பீஸ் கட்ட போகிறேன் என்று. 
நான் பம்பாயில் இருந்த சமயம், பம்பாய் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் நாடகம் போடுவார்கள். ஒருமுறை ந.முத்துசாமியின் நாற்காலிக்காரன் நாடகம் போட்டார்கள். அப்போது பம்பாயில் நாடகத்திற்கும் தணிக்கை உண்டு. ஐ.வி.இராமானுஜசாரியார்தான் தணிக்கை அதிகாரி. நாற்காலிக்காரன் நாடகம் போடும் முதல் நாள் வரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. அதன்பிறகு ஒரு நண்பர் மூலமாக இராமானுஜசாரியை சந்தித்தபோது ‘நாடகத்தில் ஒரு டயலாக் இருக்கு. அதனால என்னால் அனுமதி தரமுடியாது’ என்றார் அவர். நாடகத்தின் இறுதியில் அந்த உரையாடல் இப்படி வரும், “தோத்தான் தோத்தான் தோல்புடுங்கி, தொன்னூறு மாட்டுக்கு மயிர்புடுங்கி”.  இராமானுஜசாரியார் அந்த வசனத்தை தோத்தான் தோத்தான் தோத்தான் தோத்தான் அப்படி  என்று முடிக்கச் சொன்னார். உடன் வந்த நண்பரோ ‘சரி’ என்று சொல்லி அனுமதிச் சான்று வாங்கி வெளியே வந்த பிறகு நான் நாடகத்தை எப்படி இருக்கிறதோ அப்படியே நடத்துவோம். இவர் வந்து பார்க்கவா போகிறார் என்று கூறினார். அதேபோல் ஞானராஜசேகரனின் ஒரு நாடகம் பம்பாயில் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தில் முப்பது முரசு மட்டுமே பின்னணி இசையாக இருந்தது. அப்போது நாடகம் பார்க்க வந்தவர்களில் 20 பெண்களுக்கு சாமி வந்துவிட்டது. நிகழ்த்துக் கலையின் வெற்றி இதுவே. 
இந்த மக்களுக்கும் மொழிக்கும் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. முதலில் இலவசங்களை பற்றிச் சொல்ல வேண்டும். யாருடைய பணத்தில் யார் யாருக்கு இலவசம் தருவது. என்னுடைய பணத்தையே எடுத்து எனக்கே இலவசமாக வழங்கப்படுகிறது. என் கட்டுரை ஒன்றில் சொல்லியிருந்தேன், தேசியக் கொடியை பறக்க விட்டு உள்ளே அமர்ந்து செல்லும் தகுதி உள்ள எந்தத் தலைவன் இங்கு இருக்கிறான். இந்தச் சமூகத்தில் நிறைய குப்பை சேர்ந்து கிடக்கிறது. என்னுடைய எல்லா வழிகளும் அடைக்கப்பட்டிருக்கிறது. நான் என்ன செய்யப் போகிறேன். ஏதாவது செய்தேயாகவேண்டும். இலவசங்களைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. இதைப் பேசுவதுதான் சமகால இலக்கியம். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசாங்கங்களிடம் பேச முடியாதபோது பிறந்ததுதான் பின்நவீனத்துவம், மேஜிக்கல் ரியலிசம் எல்லாம். இதைப் போல மறைமுகமாக சொல்ல வேண்டிய நிலை தமிழ்நாட்டில் இல்லை என்றாலும் இந்த விஷயங்களை சொல்லுவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கே நான் ஒரு சாகித்ய அகடாமி விருது வாங்க வேண்டியிருக்கிறது. சென்னையில் ஒருமுறை எனக்குப் பாராட்டு விழா நடந்தது. அப்போது அங்கு சொன்னேன், முப்பத்தைந்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். எதிர்க் கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கும் பொது என்னை யாரும் அழைக்கவில்லை இந்தச் சாலையை கடந்து வருவதற்கு முப்பத்தைந்து ஆண்டுகள் நான் பாடுபடவேண்டியுள்ளது.
படைப்பாளியை கண்டு கொள்ளுங்கள். அற்புதமான படைப்பாளிகளை அவன் வாழும் போதே கண்டு கொள்ளுங்கள். பொதுவாக நான் கல்லூரிகளில் பேசவே விரும்புகிறேன். வேடிக்கையாகச் சொல்லுவார்கள். ஒரு புத்தகம் பரிசாகக் கொடுத்தால் நாஞ்சில் நாடன் எங்கு வேண்டுமானாலும் பேசுவான் என்று. பெரியவர்களிடம் பேசி என்னால் எதுவும் செய்யமுடியாது. இளைஞர்கள் மூலமாகத்தான் எதையாவது செய்ய வேண்டியுள்ளது. அதற்காக அவர்களிடம் பேச வேண்டியுள்ளது. இந்தச் சமூகத்தைப்பற்றி நிறைய சிந்திக்கவும் இந்த அவலங்களை களையவும் அவர்களையே நம்ப வேண்டியுள்ளது. இன்றைய இந்திய இளைஞன், காசு ஒரு பொருட்டு இல்லை என்ற நிலைக்கு வந்து கொண்டிருக்கிறான். இங்கு காசு பெரிதில்லை. ஆனால், என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி நம் முன் உள்ளது. இந்தக் கேள்வியை எழுத்தாளனும் கேட்க வேண்டியுள்ளது. பழைய கோட்பாடுகள் அத்தனையும் இன்று பொய்யாகிக் கொண்டிருக்கின்றன. வையாபுரிப் பிள்ளையின் கோட்பாடுகள் இன்று தவிடுபொடியாக்கப்படுகின்றன. நமது இலக்கியம் என்பது பெரிய புதையல். இந்தப் புதையலுக்குள்ளே என்னென்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. இப்படியான பெரிய சுரங்கத்தின் மீது நின்றுகொண்டு நாம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். நம் மொழியை படிக்க மாட்டோம், நம் இலக்கியத்தை வாசிக்க மாட்டோம் ஆனால், ஐரோப்பிய இலக்கியத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். நம் இலக்கியங்களைப் படித்து அதில் உள்ள நல்லவைகளை கண்டுகொள்வோம். அ.முத்துலிங்கம் தன் கட்டுரையில் இப்படிச் சொன்னார்: மொழியின் அழிவு ஒரு பண்பாட்டின் அழிவு என்றார்’ 
இந்தப் பாராட்டு விழாவில் அமுதன் அடிகள், கவிஞர் தேவேந்திரபூபதி, கௌரா.ராஜசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாட்டின் முக்கியமான படைப்பாளுமைகளும் நாடக ஆர்வலர்களும் விழாவில் கலந்து கொண்டனர்
நன்றி: உயிர் எழுத்து, ஏப்ரல் 2011
(தட்டச்சு உதவிக்கு பிரவீனுக்கு நன்றி)
மேலும்: வனவாசத்தால் பெற்ற பரிசு – உயிர் எழுத்து

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in இலக்கியம், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to உயிர் எழுத்து நாஞ்சில் நாடன் உரை

  1. ramji_yahoo சொல்கிறார்:

    நல்ல கருத்து தான் நாஞ்சிலார் சொல்லி இருப்பது.
    சம காலத்திலேயே படைப்பாளிகளைப் போற்றுவோம்.

    வேங்கட சாமிநாதன் அவர்களின் புத்தக விழா அன்று நாஞ்சில் நாடனைப் பாராட்டவும் அவரிடம் சில சந்தேகங்களும் கேட்க வேண்டும் என்று நானும் எனது நண்பர்களும் எண்ணி இருந்தோம். ஆனால் அவர் விழா தொடங்கும் சரியான நேரத்திற்கு வந்ததால் பேச வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது

  2. மதுரை சரவணன் சொல்கிறார்:

    // நம் மொழியை படிக்க மாட்டோம், நம் இலக்கியத்தை வாசிக்க மாட்டோம் ஆனால், ஐரோப்பிய இலக்கியத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். நம் இலக்கியங்களைப் படித்து அதில் உள்ள நல்லவைகளை கண்டுகொள்வோம்.//

    உண்மையான கூற்று… பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

  3. துளசி கோபால் சொல்கிறார்:

    அட! நீங்களா!!!

    நட்சத்திரத்துக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    சூரியனுக்கே டார்ச் அடிச்சுப் பார்த்தமாதிரி இருக்கு:)))))

  4. vidyashankar சொல்கிறார்:

    thought provoking speech

  5. பொதுவாக நான் கல்லூரிகளில் பேசவே விரும்புகிறேன்-நாஞ்சில்நாடன். இந்த வாய்ப்பை கல்லூரிகள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். அப்பொழுது தான் ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாகும். நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s