கொட்டிக் கிழங்கோ கிழங்கு!

நாஞ்சில் நாடன்
வண்ணதாசனா அல்லது வண்ணநிலவனா என்பது ஞாபகம் இல்லை. ஒரு சிறுகதையில், நகரத்துக் கடை வேலைக்குப் போகும் பெண், காலையில் எட்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிறவள், இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்ததும் டிபன் பாக்ஸ் கொண்ட தோள் பையை வீசிவிட்டு அவசர அவசரமாக வீட்டின் பின்பக்கம் மூத்திரப்புரைக்கு ஓடுவதை எழுதி இருப்பார்.
அவள் நீரழிவு நோயாளியோ, இரத்த அழுத்தத்துக்கு மருந்து சாப்பிடுவளோ, கர்ப்பிணியோ அல்ல.  குளிர்கால அல்லது மழைக்கால நாட்களும் அல்ல. அன்று மாத்திரம் விசேடமாய் ஏதோ முட்டிக்கொண்டு வந்தது என்பதும் அல்ல. அது தினசரி நடவடிக்கை. காரணம் யோசித்தால், அவள் வேலை செய்யும் கடையில் – துணிக்கடையோ, புத்தகக் கடையோ, மருந்துக்கடையோ, மகளிர்க்கான அலங்காரப் பொருட்கள் விற்கும் கடையோ, எஸ்.டி.டி. பூத்தோ, எதுவானால் என்ன? இடையில் ஒருமுறையேனும் மூத்திரம் பெய்ய வசதியில்லை. பக்கத்தில் தெரிந்தவர், உறவினர் வீடுகள் இல்லை. பொதுக் கழிப்பிடங்கள், கட்டணக் கழிப்பிடங்கள் சுற்று வட்டாரத்தில் இல்லை. சந்துமுனைகளிலோ, நிறுத்தப்பட்டிருக்கும் லாரியின் பக்கவாடுகளிலோ, பூட்டப்பட்டுக் கிடக்கும் வீட்டின், கடையின் வெளிச்சுவர் ஓரங்களில் மனித-வாகன இயக்கத்தைப் பொருட்படுத்தாத உரத்துடன் நின்று பெய்துவிட்டு வரும் ஆண் வர்க்கமும் அல்ல.
என் செய்வாள் பெண்?
கிராமங்களிலானால் – நாற்று நடும், களை பறிக்கும் பெண்கள் காலைச் சற்று அகற்றி வைத்துக்கொண்டு, சேலையை முழங்கால் உயரத்துக்கு ஏற்றிக்கொண்டு, சும்மா நிற்பது போன்ற பாவனையில் மூத்திரம் பெய்து முடித்து விடுவதை யாரும் இளக்காரமாக எண்ணுவதில்லை. ஆனால் நகரத்தில் கண்கள் வேறல்லவா?
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, மாலை மூன்று மணிக்கு, நாகர்கோயிலில் இருந்து சென்னைக்குப் போகும் அரசு விரைவுப் பேருந்தில் அமர்ந்திருந்தேன். வழியனுப்ப என் சித்தப்பா நின்றார். பின்சீட்டில் தாயும் மகளுமாய் இருவர். அவர்களை வழியனுப்ப வந்தவர் என் சித்தப்பாவுக்குத் தெரிந்தவர். அவர்களின் பாதுகாப்பு எனது தார்மீகப் பொறுப்பாயிற்று. நானோ முதன்முறையாகச் சென்னைக்குப் போகிறவன் – உவப்பும் மிரட்சியுமாக. வழியில் இரண்டு இடங்களில் உணவுக்கு. இயற்கை உபாதைகளுக்கு நிறுத்தினார்கள். வசதி பார்த்து இரண்டு முறையும் அந்தப் பெண்களிடம் கேட்டேன் “செலவாதிக்குப் போகணும்னா போயிட்டு வாருங்கோ” என்று. வெட்கப் புன்னகையும் வேண்டாம் எனும் தலையசைப்பும். அன்றெல்லாம் நாகர்கோயில் சென்னை பயண நேரம் 18 மணிக்கூர், பேருந்து நேரத்தோடு போய்ச் சேர்ந்தால். இடையில் இரவு உணவு கொண்டனர். காப்பிச் செம்பிலிருந்து தண்ணீர் குடித்தனர். ஆனால் பேருந்தைவிட்டுக் கீழே இறங்கவில்லை.
நிறையப் பெண்கள் எந்த வேளையானாலும் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டால் மீண்டும் வீடு வந்து சேரும்வரை மூத்திரம் பெய்வதில்லை. அது ஒரு பயிற்சியாகக்கூட  இருக்கலாம். இந்தியச் சூழலுக்கு உகந்ததாயும் இருக்கலாம். அது பற்றிய பரபரப்பும் இல்லமால் இருக்கலாம். துர்நாற்றமற்ற கழிப்பிடங்கள் இன்மையினால் இருக்கலாம்.
பள்ளிக்கும் போகும், கல்லூரிகளுக்குப் போகும் சிறுமிகள், பெண்கள் பலருக்கும் அதுதான் வழக்கம். அதாவது எட்டுமணி நேரம் சமாளித்து விடலாம்தான் என்றாலும் அவ்விதாம் அடக்கி வைத்துக் கொள்வதினால் உடல்நலக் கேடு எதுவும் வருமாவென சிறுநீரக மருத்துவர்கள்தான் சொல்லவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு – கோவை வந்து சில வாரங்கள் தங்கிய அம்மாவை – அரசு விரைவுப் பேருந்தில் ஊருக்கு திரும்ப அழைத்துப் போனேன். இரவு எட்டரை மணிக்கு ஏறினால் காலை ஆறரை மணிக்கு இறங்கலாம். அப்போது அம்மாவுக்கு எழுபது வயதிருக்கும். நீரழிவு உண்டு, இரத்த அழுத்தம் உண்டு, இதய நோய் உண்டு, மூட்டு வலிகள் உண்டு.
பேருந்து ஓடியது, ஓடியது, ஓடிக்கொண்டே இருந்தது. வண்டி முழக்க நாகர்கோயில் பயணிகள். எல்லாம் புறவழிச்சாலை இயக்கம் இடையில் ஓரிடத்தில் – ஓட்டன்சத்திரமோ செம்பட்டியோ – நிறுத்தினார்கள். ஆண்கள்கூட மறைவிடங்களுக்கு அல்லாடினார்கள். பெண்கள் என்ன செய்வார்கள்? பின்பு விருதுநகரும் தாண்டியபிறகு, நடத்துனரிடம் வழக்காடி, அளரவமற்ற இடத்தில் ஒதுக்கி, இருட்டில் நிறையப் பேர் இறங்கிப் போய்விட்டு வந்தனர். சேலை கட்டும் பெண்ணுக்கான நெருக்கடி இதுவானால் சுரிதார் அணியும் இளம்பெண்கள் என்ன செய்வார்கள்?
இலகுவாகச் சொல்லிவிடலாம் – இரயிலில் போவதற்கென்ன என்று. அன்று கோவை – நாகர்கோயிலுக்கு பகல் நேரப் பயணிகள் வண்டி கூட இல்லை. இன்றும் இரவு வண்டிகள் இல்லை. வேண்டுமானால் திருவனந்தபுரம் வழியாகச் சுற்றிக்கொண்டு போகலாம். இன்னும் பல ஊர்களுக்கு இரவில் பயணம் செய்யும் தோதில் இரயில் வண்டிகள் கிடையாது. சிலசமயம் வண்டி இருந்தாலும் அவசரப் பயணங்களுக்கு இடம் கிடைப்பதில்லை. சரி! கோவையிலிருந்து விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரிக்கு எந்த ரயிலில் போக இயலும்?
கோடிக்கணக்கில் வியாபாரமாகும் துணியகங்களில், உணவுக்கூடங்களில், கழிப்பறை என்று ஒன்று தொழிற்சாலை ஆய்வாளரின் திருப்திக்காக வைத்திருப்பார்கள். எட்டிப் பார்த்தால் உண்ட உணவும் குடலும்கூட வெளிச்சாடி விடும். வெளி அலங்காரங்களோவெனில்  பப்பள பள பள. பொறுப்பில்லையா… அலட்சியமா… இளக்காரமா?
சமீப காலமாய் அரசு விரைவுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து சொகுசுப் பேருந்துகளின் ஓட்டம் கை கணக்கில்லாமல் அதிகரித்து வருகிறது. மக்களுக்குத் தேவையும் இருக்கிறது. பேருந்தின் வெளிப்புறம் பார்த்தால் நாக்கினால் நக்கிச் சுத்தம் செய்ததைப் போன்றதோர் பளபளப்பு, வண்ணங்கள், அலங்கார விளக்குகள், நேர்த்தியான வடிவங்கள். பேருந்தினுள் உட்கார்ந்திருக்கிறோமா பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தினுள் உட்கார்ந்திருக்கிறோமா எனும் விதத்தில் அமைப்புகள். உடல் சாய்த்துக்கொள்ள, தலை சாய்த்துக் கொள்ள, கால் நீட்டிக்கொள்ள என அவரவர் தேவைக்கு மாற்றி அமைத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கைகள். இருக்கைகளின் மீது உறைகள், திரைச்சீலைகள், தலைக்குமேல் தனித்தனி இரவு விளக்குகள், கையகல மின் காற்றாடிகள், பயணப்பெட்டிகள் வைக்க விமானம் போல வசதிகள், தண்ணீர் போத்தல்கள் கைப்பைகள் வைக்க வலைப் பின்னல்கள், குளிர்பதன வண்டிகளானால் காற்றோட்டம்  சீரமைத்துக் கொள்ள வசதி, குறுக்குவாட்டு வரிசையில் மூன்றே இருக்கைகள், மெத்தென்று, தண்ணென்று….
ஆனால் இந்தப் பேருந்துகள் புறப்படும் இடத்திலும் போய்ச் சேரும் இடத்திலும் இடையில் நிறுத்தும் இடங்களிலும் எங்கும் மூத்திரம் பெய்ய வசதி கிடையாது.
இரவு ஒன்பது மணிப் பேருந்தானால் எட்டரைக்கே வரச் சொல்வார்கள்.  சற்றுத்தூரத்தில் இருப்பவர்கள் ஏழரைக்கே வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும். ஆனால் ஒன்பதரை ஆனாலும் பேருந்து கிளம்பாது. கேரட் மூடை, கறிவேப்பிலைக் கட்டுகள், இலைக்கட்டு, கிரைண்டர்கள், பம்பு செட்டுகள் என எல்லாம் ஏற்றிக்கட்டி, தார்பாலின் போட்டு வரிந்து… பேருந்தா பாரவண்டிய எனத்தோன்றும். அஃதென்னவோ  போகட்டும்! ஆனால் பயணிகளின் வசதிகள் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
சமீபத்தில் அலுவலக வேலையாய் பாண்டிச்சேரி போயிருந்தேன். இரவு ஒன்பது மணிப்பேருந்தைக் காலையில் எட்டரை மணிக்குக் கொண்டு சேர்த்தார்கள். குழந்தைகள் எல்லாம் அழத் துவங்கின. பசியோ, மூத்திர நெருக்கடியோ!
தாமதங்களுக்குக் காரணம் சொல்லலாம். விபத்து நேரலாம், போக்குவரத்து நெரிசல் இருக்கலாம், சக்கரம் காற்றிறங்கிப் போகலாம். தவிர்க்க முடியாதவைதான். நியாயமான் ஏழு மணிப் நேரப் பயணத்துக்கு முன்னூற்று எழுபத்தைந்து கிலோமீட்டர் தூரத்துக்கு ஒற்றை இருக்கைக்கு ரூ. 240/- வாங்குகிறார்கள். அதைகூட நாம் கேள்வி கேட்க இயலாது. அரசுப் பேருந்துக் கட்டண உயர்வென்றால் தீவட்டி ஊர்வலம் நடத்தலாம். ஆனால் வீட்டிலிருந்து புறப்பட்டு சேரும் இடத்தில் வீட்டுக்கோ விடுதிக்கோ போய்ச் சேரும்வரை முதியவர், பெண்கள், குழந்தைகள் என்ன செய்வார்கள்? என்ன கொடுமை இது? மூத்திரத்துக்கே இந்தக் கதி என்றால் திடிரென்று வயிற்றுக் கோளாறு ஏற்படுகிறவர்கள், அதிகம் தின்று செரிமானம் ஆகாதவர்கள், வயிற்றுக் கடுப்பு நோயுள்ளவர்கள், குறிப்பிட்ட நேரங்களில் கழித்துப் பழகியவர்கள் என்ன செய்வார்கள்?
நாம் ஏற்கனவே சொன்னபடி, மேலே மினுக்கடி, உள்ளே புழுக்கடி…
நெருக்கடியான சூழலில் பேருந்திலேயே மூத்திரம் போன மாதவப் படையாச்சி பற்றி தங்கர் பச்சான் ‘ஒன்பது ருபாய் நோட்டு’ நாவலில் எழுதி இருந்தார். ஒருவேளை அதுகூட ஒரு போராட்ட வழிதான் என்று தோன்றுகிறது.
(சாம்பல்.. ஜனவரி,பிப்ரவரி 2004)
(நன்றி: தட்டச்சு உதவிய….பிரவீனுக்கு.)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to கொட்டிக் கிழங்கோ கிழங்கு!

 1. ramji_yahoo சொல்கிறார்:

  ட்ராவல்ஸ் நிறுவனங்களிடமும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் இதை எடுத்துச் சொல்லுவோம்.
  வரும் காலங்களிலாவது, கழிப்பிட வசதி உள்ள நிறுத்தங்களில் பேருந்தை உணவு இடைவேளைக்கு நிறுத்துவர்.

 2. பாலா,சிங்கப்பூர் சொல்கிறார்:

  சாட்டையடி போன்ற கருத்துக்கள்.யார் காதிலாவது விழுமா? வல்லரசு கனவிலிருந்து விழித்து முதலில் சுத்தமான கழிவறை கட்ட முடியுமா என யோசிக்கட்டும் நமது அரசு.

 3. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் முறையான கழிப்பிட வசதிகள் செய்ய வேண்டும். அதை முறையாக பராமரிக்க மக்களுக்கு அறிவுறுத்தவும் வேண்டும். ஒண்ணுக்கு போவதற்கே ரெண்டு ரூபாய் வாங்கும் கொள்ளையையும் தடுத்து நிறுத்த வேண்டும். முதலில் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட நிறைவேற்றாத அரசை கண்டித்து நியாயமான முறையில் போராட கற்றுத்தரவேண்டும். இன்னும் எவ்வளவோ வேண்டும்கள்! நல்ல பகிர்வு. அரசு மற்றும் மக்களாகிய நாமும் கவனிக்க வேண்டிய பதிவு இது. நன்றி

 4. karunanithy சொல்கிறார்:

  dear sir , koddi kilangu entruthaan paarthen . paravaayillai.? inthiyaavai thirutha innum 50 varudam thevai.

 5. Amarabharathi சொல்கிறார்:

  Toilets are more important than free T.V. Instead of giving these freebies to people, Government can build toilets and let general public use that freely.

 6. sanmugakumar சொல்கிறார்:

  தங்கள் பதிவை இணைக்க தமிழ் திரட்டிகளில் முதன்மையான திரட்டியில் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்
  http://tamilthirati.corank.com

 7. Naga Sree சொல்கிறார்:

  அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இலவச உணவு கிடைக்கும் இடத்தில் தான் பஸ்ஸை நிறுத்துகிறார்கள்.அவர்கள் பயணிகள் பற்றி நினைக்கவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s