பெயரணிதல்…..2

நாஞ்சில் நாடன்
முன் பகுதி: பெயரணிதல்
என்னூடைய போதாத காலம் பாருங்கள்-நான் மதிக்கும் பேராசிரியர், நான் ஈடுபட்டு வாசித்த ஆய்வு நூல்களை எழுதியவரின் எதிர்வினை,அப்படியே,சொற்பிசகாமல்: ‘முனியம்மா’ என்பது ஒரு தலித் பெண் எழுத்தாளரின் புனைபெயர். தேவையின்றி மேற்கோள் குறியிட்டு அப்பெயரைக் குறிப்பிடும் நாஞ்சில் நாடனின் நோக்கம்தான் என்ன?
ஆய்வுகளின் போக்கு இதுவானால் உண்மைகளை நாம் எங்கு
சென்று தேடுவது.எப்போது கண்டடைவது?அல்லது கண்டடைந்த
உண்மைகளை எப்படி ஒளித்து வைப்பது? எனக்கொரு கம்பன் வரி
நினைவுக்கு வருகிறது.
‘அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கோர்
குரங்கினத்து வேந்தைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ?                                                            இரக்கம் எங்கு உகுத்தாய்?  என்மேல் எப்பிழை கண்டாய் அப்பா!’
எல்லாம்- புனை பெயர் படுத்தும் பாடு.
முனியம்மா,கருப்பாயி,வேலாயி,வள்ளி வேலைக்காரிகள் எனில்,
அலுவலகங்களில் மேனேஜர் அழைத்தவுடன் மடிமீது ஏறி
அமர்ந்தவர்களை ஸ்டெல்லா,மேரி,நான்சி என்றது தமிழ் சினிமாவும்
அவர்களுக்குத் தரகு நடத்தும் வணிக இதழ்களும். அவர்கள் குட்டைப்
பாவாடையும் கையில்லாத மேற்சட்டையும் உதட்டுச் சாயமும்
பெயருடன் சேர்ந்து அணிந்தனர். அந்தப் பெயர்களை புனைபெயராகக்
கொண்டவர் இருந்தால் என்னை மன்னித்தருள்க. பேராசிரியர்கள்,
ஆய்வடங்கல் அறிஞர்கள் பிழை பொறுக்க. பங்கஜம்,கமலம்,வனஜா,
விசாலம்,மீனாட்சி என்று எவரும் ஸ்டெனோவாக, வரவேற்பாளராக
இருக்கவில்லை. எனவே பெயர்களும் புனிதச் சுமைதாங்கிகள் ஆயின.
திராவிட இயக்கம் தீவிரப்பட்டபோது பெயர் மாற்றங்கள்,
மொழி மாற்றங்கள் நடந்தன. பெரிய கருப்பன், மாடசாமி, வெங்கிடாசலம்,
நாராயணசாமி,முத்துப் பாண்டியன்,மூக்கையா எல்லோரும்
அழகர்களாகவும், செழியர்களாகவும் ஆயினர். என்றாலும் இன்னும்
ராமசாமி இனம் அழிந்துவிடவில்லை. எனக்கும் கூட எங்களூர்-சுமார்
நூற்றிருபது வீடுகளும் ஏழு சாதிகளும் கொண்ட வீரநாராயணமங்கலத்தில்
(கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன் மூன்று கிளைக்கழகங்களில்
ஒன்று அது.1949ம் ஆண்டு தி.மு.க நாட்குறிப்புப் புத்தகத்தின் படி)-
கிளைக்கழகத்தில் ஒரு மாற்றுப் பெயர் இருந்தது. திராவிடமணி என.
அந்தப்பெயரில்தான் 1962 பொதுத் தேர்தலில்,நான் ஒன்பதாவது
படிக்கும்போது,பொருளாதாரமேதையும் திருமந்திரத்தை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்தவருமான டாக்டர். ப. நடராஜன் அவர்களுக்கு
எதிராகவும் தி.மு.க சார்பாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்தேன்.
எங்களூரில்தான் அதற்குச் சில ஆண்டுகள் முன்பு நாஞ்சில் மனோகரன்
ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்ற முற்பட  பேராசிரியர் அன்பழகன்
குறுக்கிட்டு தமிழுக்கு மாறச் சொன்னார். இன்று எல்லாம் இன்ப மயம்.
பெற்ற பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கிறபோது கணவன்
மனைவிக்குள் பலநாள் பந்துவீச்சுகள் நடக்கின்றன. நட்சத்திரப்
போக்குப்படி,ப,பா,பி,பீ,பு,பெ,பூ,பே,பை,பொ,போ,பெள என்று
தொடங்கும் பெயர்களைச் சூட்டச் சொல்கிறார்கள் சோதிடர்கள்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் அகர வரிசைப்படி ஐந்நூறு பக்கங்களில்
பெயர் புத்தகங்கள் கிடைக்கின்றன. பஸ்காரம் இல்லாத பாம்படம்
அணிந்த பாட்டிகளும் காதில் சிவப்புக் கடுக்கன் போட்ட பாட்டாக்களும்
ஒதுங்கிக்கொண்டார்கள். இல்லாவிட்டாலும் ஆபத்துக்காத்தான்
என்றும் பொய்சொல்லா மெய்யன் என்றும் இன்று பெயர் வைக்க முடியுமா?
குலச்சங்கிலிகள் எதுவும் இற்று நொறுங்கிவிடவில்லை. ராகுல்,
ப்ரியங்கா,வினோத்,ப்ரீத்தி,ஸ்ருதி… மலையாளிகளுக்கு இரண்டு உயிர்மெய்
சேர்ந்து உச்சரிக்கும் விதத்தில் இருந்தால் போதுமானது, ஷாஹி,
வினி,மகி,ஷைனி,பீனு,பிஜு,மினி,சுமி,சுஜி…
பெற்றோர் வைக்கும் பெயர்கள் அவர்களது ஆசைக்கு,விருப்பத்துக்கு,
நாகரீக மோகத்துக்கு,அரசியல் மத இன ஈடுபாடுகளுக்கு. சிலர்
வகுப்பில் முதல் வரிசையில் உக்காரலாம் என ‘அ’ வில்
தொடங்குகிறார்கள். பெயர்கள் தீர்ந்து போனால் அட்டை,அட்டு,
அலங்கு,அணங்கு,அடியாள்,அலப்பன் என யோசித்துக்கொண்டே
போகலாம். சிலர் மதம்,இனம்,மொழி,தேசம்,பால் மறந்து சர்வ
தேசீயப் பெயர்களாக அணிகிறார்கள்.
அணிதல் என்று சொல்வதைவிட அணிவித்தல் என்று எனச் சொல்வதும்
தகும். சில சமயம் எனக்குத் தோன்றும் தமக்குப் பதினெட்டு திகையும்
போது இப்பெயர் சுமக்கும் வாலிபர்,வனிதையர் என்னவெல்லாம்
மனக்கிளர்ச்சிக்கு ஆளாவார்கள்?
எனக்கு சிறுவயதாக இருக்கும்போது, அரசியல் இயக்கம் ஒன்றில்
பெரும் பற்றுக்கொண்ட ,விலைவாசிக்கும் இந்தி எதிர்ப்புக்கும் சிறை
சென்று மீண்ட,வயலையும் தோப்பையும் விற்றுக் கட்சிக்குச் செலவு
செய்த ஒருவர்,தமது மகளுக்கு மிகுந்த விருப்முடன் வெறியுடன் இயக்கத்
தலைவர்களின் பெயர்களைச் சூட்டினார். அன்று குடும்பக்கட்டுப்பாடும்
நடப்பில் இல்லை. சஞ்சய் காந்திக்கும் முந்திய காலம். இன்று அந்தத்
தலைவர்கள் ஊழலுக்கு,ஒழுக்கக்கேட்டிற்கு,மக்கள் துரோகத்துக்கு
முன்மாதிரிகள். பெயர்சூட்டியவரோ எனில் செத்துச் சாம்பலும்
ஆயினர். பெயர் சுமந்து திரியும் மக்கள் இன்று என்ன நினைப்பார்கள்?
எதன் அடையாளமாகத் தன்னைக் கருதுவார்கள்? பெயர் என்பது குற்றமா?
தண்டனையா?
பெற்றோரின் குணம்,கொள்கை,விருப்புக்களே பிள்ளைகளின்
பெயர் என்றால்,பிள்ளை வளர்ந்து ஆளாகி அந்தக் குணத்துக்கும்
கொள்கைக்கும் குன்றாகி நிற்பானா?
செய்யும் தொழில் சார்ந்து பெயர்கள் நின்றதுண்டு. அயல்நாடுகளிலும்
வடமாநிலங்களிலும் மருந்து செய்பவன் விற்பவன் தாருவாலா,
உலோகம் செய்பவன் விற்பவன் லோகண்ட் வாலா, குப்பிகள்
செய்பவன் பாட்லி வாலா,பாட்லி பாய். காபூலில் இருந்து வந்தவன்
காபூலி வாலா, தாராப்பூர்க்காரன் தாராப்பூர் வாலா, எருமை
மேய்ப்பவன் பைஸ் வாலா, புற்கட்டு விற்பவன் காஸ் வாலா, சொல்லிக்கொண்டே
போகலாம். கார்பெண்டர் என்றும் உட்கட்டர் என்றும் குக் என்றும்
பிஷ்ஷர்மேன் என்றும் அயல்நாட்டில் பெயர்கள் உண்டு. மலையாளத்தில்
கன்னடத்தில் மனைப் பெயர் ஊர்ப் பெயர் சேர்வதுண்டு. சில எழுத்தாளர்கள்
கலைஞர்கள் பெயர்கள்-புனத்தில் குஞ்ஞப்துல்லா,ஆற்றூர் ரவிவர்மா,
கிரீஷ் காஸரவள்ளி,அடூர் கோபாலகிருஷ்ணன்,கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்,
நெய்யாற்றின்கர வாசுதேவன்,சிபி மலயில்,உள்ளூர் பரமேஸ்வர ஐயர்,வைக்கம்
முகம்மது பஷீர்,பல்லாவூர் அப்புமாரர்,மட்டனூர் சங்கரன் குட்டி,பல்லாவூர் குஞ்சுக்குட்டி
மாரர்…தமிழர்களிடமும் உண்டு-திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை,
காருகுறிச்சி அருணாசலம்,மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி,
மகாராஜபுரம் சந்தானம்,திருப்பாம்புரம் சண்முகசுந்தரம்,சிதம்பரம்
ஜெயராமன்,அரியக்குடி,செம்மாங்குடி,செம்பை,உமையாள்புரம்,
குன்னக்குடி,வலயப்பட்டி,வலங்கைமான் – பிறந்த ஊருக்கும் இல்லத்துக்கும்
பெருமை சேர்க்கும் பெயர்களாக.
பஞ்சாபில் சிங் என்பது பொதுப்பெயராகக் குறிக்கப் பெற்றாலும்
தலைப்பாகையின் நிறங்கள் சாதியைக் காட்டுவன என்று சொல்வார்கள்.
பெற்றோர் சூட்டிய பெயர்களைத் தவிர்த்து,அரசியல்வாதிகளைப்
போல,சினிமா நடிகர் நடிகைகளைப் போல, எழுத்தாளர்கள் தமக்குத்தாமே
பெயர்கள் சூடிக் கொள்வதுண்டு. புதுமைப்பித்தன்,மெளனி,
கோணங்கி,ஞானி,யுவன்,மனுஷ்யபுத்திரன்,அசோகமித்திரன்,ஆதவன்,
கலாப்ரியா,கந்தர்வன்,அம்பை,நகுலன்,சாரு நிவேதிதா…
முட்டாள்தனமாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு நானே
பெயரொன்று புனைந்து கொண்டேன். கவிமணி புனைந்து கைவிட்ட
பெயர்,அந்தப் பெயருடன் பாதிவழி வந்தபின் எனக்குத் திரும்பிப் போக
வழி தெரியவில்லை.  சூத்ரதாரி இயற்பெயரான கோபாலகிருஷ்ணனுக்குத் திரும்பிவிட்டார். கோணங்கி இளங்கோவுக்கும் நகுலன் துரைசாமிக்கும் புலியரசு ஜெகந்நாதனுக்கும் ஞானக்கூத்தன் ரங்கநாதனுக்கும்
திரும்பிப்போகமுடியுமா இனிமேல்?  நாஞ்சில் நாடன் சுப்பிரமணிய பிள்ளையாகி அம்மா கருப்பைக்குள் மீண்டும் நுழைந்து மறுபடியும் புல்லாகிப் பூண்டாகிப் பல்விருகமாகி…
1975-களில் என் புனைபெயருக்கு திராவிடத் தன்மை இருந்ததால் தவறான புரிதலில் நான்பட்ட துண்பங்கள் அதிகம். ‘தலைகீழ் விகிதங்கள்’ வெளிவந்தபிறகு 1978 வாக்கில் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரிகு கலந்துரையாடலுக்கு சென்றபோது, எதிர்பார்த்து தமிழ்த்துறைக்கு வெளியே நின்றிருந்தவர்கள் நகுலன், ஆ.மாதவன், காசியப்பன்(காஸ்யபன் அல்ல),நீல.பர்மநாபன்,ஐயப்ப பணிக்கர்,ஹெப்சிபா ஜேசுதாசன், தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ஜேசுதாசன் மற்றும் தமிழ்த்துறையினரும் மாணவர்களும். என்னை யாருக்கும் நேரில் தெரியாது.கரைவேட்டி உடுத்த ,ஜிப்பா போட்ட,துண்டு தோளில் புரண்ட முதியவர் ஒருவரை எதிர்பார்த்தனரோ என்னவோ?முப்பதாவது வயதில் பம்பாயில் இருந்து நேரே வந்தவன் நான்.  பெயருக்கு தொடர்பில்லாத உருவம் சிறியதோர் கசப்பை ஏற்படுத்தியது.
பல சந்தர்ப்பங்களில் என்னை’நாஞ்சில் நாடான்’ என விளித்திருக்கிறார்கள். எழுதி இருக்கிறார்கள். அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். நாஞ்சில் நாட்டைச் சார்ந்தவன்,நாஞ்சில் நாட்டுக்குத் தலைவன் என்றெல்லாம் பொருள்படும் புனைபெயர்
எனும் செம்மாப்பு ,சாதிப்பெயராக புரிந்து கொள்ளப்பட்டு எனது கர்வம் பங்கப்பட்டதுண்டு. உண்மையிலேயே அவ்வாறு இருந்திருந்தால் நானொரு போற்றுதலுக்கும் பாதுகாப்புக்கும் ஆளாகியிருப்பேன்.
அன்று அணிவித்த பெயர்களைச் சுமக்கும் வசதிக் குறைவு இன்று இளம் தலைமுறையினருக்கு உண்டு. தஞ்சையில் ஒரு மருத்துவரின் பெயர்ப்பலகை பார்த்தேன். இன்பவல்லி என்று. உடனே எனக்குள் மடை திறந்துகொண்டது. ஆனந்தவல்லி, கமலவல்லி, பஞ்கஜவல்லி,பரிமளவல்லி, சிநேகவல்லி,செண்பகவல்லி, செளந்தர்யவல்லி, சரசவல்லி,சந்தணவல்லி, சண்முகவல்லி, நாகவல்லி,கனகவல்லி,பிரேமவல்லி,பத்மவல்லி, கோமளவல்லி,அமுதவல்லி,சுந்தரவல்லி….யப்பா…
சிலசமயம் கடவுளார்களுக்கும் பெயர் சூட்டிவிடுகிறார்கள். கடவுளார்கள் மீது விருப்பு வெறுப்புச் சாயங்கள் ஏறுகின்றன. அன்றைய திருவெண்பரிசாரம் தான் இன்றைய திருப்பதிசாரம். பெருமாளுக்கு ‘திருவாழி’என்று பெயர்.  ‘வருவார் செல்வார் வண்பரிசாரத் திருந்தவென் திருவாழி மார்வற் கென்திறம் சொல்லார்’ என்பது நம்மாழ்வார். அதை ஸ்ரீநிவாஸன் என்று மாற்றப் பிரயத்தனப் பட்டவர் உண்டு.  இரண்டும் ஒன்றுதான்,எனினும் இரண்டும் ஒன்றில்லை.
சிறுவயது ஞாபகம் – சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோயில் பிரகாரத்தில் அமைந்த சந்நிதி ஒன்றுக்கு ‘ அறம் வளர்த்த நாயகி ” என்று பெயர். இன்றது ‘ தர்மவர்த்தினி’ , அங்கயற்கண்ணி ‘மீனாக்ஷி’ யானதைப் போல. காமாக்ஷிகளும் விசாலாக்ஷிகளும் நீலயதாக்ஷிகளும் கூட அவ்விதம் மாறியவர்களாக இருக்கலாம்.
திருக்கோவிலூர் பக்கத்தில் இருக்கும் அரகண்ட நல்லூர் ரமணர் தங்கி இருந்த இடம். அங்குள்ள சிவனை நால்வரும் பாடிய பெயர். ஒப்பிலாமணியீசன். ஆனால் அவர் இப்போது தரித்து நிற்கும் நாமம் ‘அதுல்ய நாதேஸ்வர்’. நாளை எம்தமிழர் அதை அப்துல் நாதன் என்றும் மருவி அழைப்பர்.அங்கிருக்கும் அம்மை அழகிய பொன்னம்மையோ எனில் செளந்தர்ய கனகாம்பாள். கடவுளர்களே பெயர் மாற்றிச் சுமந்து கொண்டு கால்மாற்றி ஆடுகிறார்கள். இல்லை, ஆட்டுவிக்கப்படுகிறார்கள்.
அம்மா எனும் சொல்லுக்கு எந்த அளவுக்கும் பாசம் குறையாத
சொல் அம்மை. நாம் அம்மை என்றால் மலையாளம் என்றெண்ணிக்கொள்கிறார்கள். மலையாள விளி, ‘அம்மே’ மராத்தியானால் ‘ அம்பே ‘, ‘ஆயி ‘ , ‘மாயி’ , தெலுங்கு,கன்னடம், துளு பற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள்.
திருவாசகம், ‘ அம்மையே அப்பா ஒப்பிலாமணியே ‘ என்கிறது.. ‘ அம்மை நீ அப்பன் நீ ‘ என்கிறார் அப்பர். காரைக்காலம்மையாரை பெரிய புராணம் ‘அம்மை காண்’ என்கிறது.
அம்மையும் அம்மனும் வெகுகாலம் முன்பே அம்பாள் ஆகிவிட்டனர். அப்பன் மாத்திரம் அப்பாள் ஆகவில்லை.
அண்ணாமலையை அருணாசலம் என்றும் ‘ உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவர் ‘ என்று பேசுகிறார் ஞான சம்பந்தன். அபிதகுஜாம்பாள் என்றாலும் உண்ணப்படாத முலையுடையாள் என்பதுதான்.அதனால்தான் ல.ச.ரா ‘ அபிதா ‘என்று நாவல் எழுதினார்.
நல்லவேளையாகத் ‘ தாயார் ‘கள் பெயர்மாற்றம் கொள்ளவில்லை. முத்தாரம்மன்.முப்பிடாதி அம்மன்,சந்தண மாரியம்மன் முதலானோர் சமீப காலத்தில் முத்தாரம்பாள்,முப்புடாதி அம்பாள், சந்தண மாரியம்பாள் என மருவிக் கொண்டிருக்கின்றனர்.
‘ அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள் ‘ என்பது பராசக்தி வசனம். அம்பாளுக்குப் பேசுவதற்குப் புழங்கு மொழி இல்லை. அம்மைக்கும் அம்மனுக்கும் தமிழ் இருக்கிறது. ஆனால் அந்தத் தமிழை வாங்கிக் கொள்ள நம்மிடம் பாத்திரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
மலைச்சிகரங்களில் முதலில் கால் பதித்தவர்கள், கடல் முனைகளை முதலில் கண்டடைந்தவர்கள், நட்சத்திரக் கூட்டங்களை ஊன்றிக் கவனித்து அடையாளப்படுத்தியவர்,நோய்க்கிருமிகளை சோறு தண்ணி இல்லாத ஆய்வுகளினால் தனிமைப்படுத்திக்காட்டியவர்,உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்து கண்டுபிடித்தவர், இயந்திரங்களை,உபகரணங்களை,கருவிகளைக் கண்டு பிடித்தவர், விஞ்ஞானிகள்,சாதனையாளர்கள் மீதான மதிப்பும் நன்றியும் கொண்டு அவரவர் சாதனைக்கு அவரவர் பெயர்களை அணிவித்தனர்.
மேட்டூர் அணைகட்டியவர் நினைவாக ஸ்டான்லி அணை என்றும், பொண்டாட்டி பிள்ளைகளின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று தாமிரபரணிக்குக் குறுக்கே திருநெல்வேலி தாசில்தார் பாலம் கட்ட உதவியதால் சுலோசன முதலியார் பாலம் என்றும் இன்றும் அழைப்பது வரலாற்றுப் பதிவுகள்.
எந்தத் தியாகமும் ஆய்வும் திட்டமும் முயற்சியும் செய்யாமல்
ஆட்சியில் இருக்கும் காரணத்தால் , பலத்தால் ஊர்தோறும் பேருந்து நிலையங்களுக்கு தத்தம் கட்சித் தலைவர்களின் பெயரணிவிப்பது ஊரான் வீட்டு நெய்யும் தன் பொண்டாட்டி கையும் போல்தான்.
விமான தளங்கள்,ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள்,துறைமுகங்கள் யாவும் அரசியல் தலைவர்களின் பெயரணியத் துவங்கிவிட்டன. இனி மாநிலங்கள் ,மாவட்டங்கள் என நகர்ந்து கொண்டு போகலாம். பிறகு அதில் போட்டிகள் வெட்டுக் குத்துகள் நடக்கும்.நடந்தது. பிறகு நல்லிணக்கக் கூட்டங்கள். எல்லாவற்றுற்கும் மேலாக நதிகள்,ஏரிகள்,ஆறுகள்,குளங்கள்,ஓடைகள்,மலைகள்,குன்றுகள்,பொத்தைகள் ஏன் விடுபட்டுப்போயின என்று தெரியவில்லை.
அதற்கும் மேலே கடல்களும் சமுத்திரங்களும்.
ஹாமில்டன் வாராவதி என்பது அம்பட்டன் வாராவதி ஆகி,ஆங்கிலத்தில் பேசுவதுதான் மரியாதை எனும் மனப்போக்கு உள்ளவர் நாம் என்பதால் அது மொழி பெயர்ப்பாகி பார்பர்ஸ் பிரிட்ஜ் என்றாகி, பார்பர் பாலம் என்று பேருந்து நிறுத்தப் பெயராகியது.
ஆனால் செக் குடியரசின் தலைநகரான ப்ராக் நகருக்குப் போன நண்பர் ஒருவர் கண்டு சொன்ன செய்தி – அங்கு வரவேற்புச் சட்டம் எழுதி வைத்திருக்கிறார்களாம், ஃப்ரான்ஸ் காஃப்காவும் மொசார்ட்டும் பிறந்த மண்ணுக்கு வாருங்கள் என்று. என்னவென்று எழுதிவைப்பார்கள் நமது ஆட்சியாளர்கள் – சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான தளங்களில்?  யோசித்துப் பார்த்து அதிர்ச்சிகளுக்கு ஆளாகாதீர்கள்.
எப்போதும் பலவானும் புத்திசாலியும் தந்திரசாலியும் எழுதுவது தானே வரலாறு!  உண்மைக்கும் வரலாற்றுக்குமான உறவுச் சங்கிலியின் கனம் பற்றி ஏற்கனவே நமக்குக் கவைலைகள் உண்டுதானே.!
 (நன்றி தட்டச்சு உதவி: பாலா, சிங்கப்பூர்)
**

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to பெயரணிதல்…..2

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு ஐயா.
    உங்கள் எழுத்துக்களை படிக்கும் போது நிறைய கற்றுக் கொள்கிறேன்.
    நன்றி ஐயா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s