நினைவுகளின் சுவட்டில்

நாஞ்சில் நாடன்
அகல்’ பதிப்பக நண்பர் பஷீருக்கு என் நினைவுக் குறிப்பு நூலொன்று எழுதித் தரவேண்டும் என ஐந்தாண்டுகளாக ஆசையுண்டு. ‘பேய்க்கரும்பு.’ கையில் பிடித்துத் திரியும் பட்டினத்துப் பிள்ளை போன்று, எனது மரியாதைக்குரிய படைப்பாளி, ‘பாதசாரி’ எப்போதுமதை வழி மொழிபவர். பார்க்கும் இடத்திலெல்லாம் ‘மீனுக்குள் கடல்’ எனும் அவரது நூலுக்குள் இருக்கும் ‘காசி’ போலொரு கதை எழுதி வழங்குங்கள் தமிழின் புதிய வாசகருக்கு என்று கேட்டால், “உங்க நாவலை எப்ப முடிக்கப் போறீங்க,” என்று எதிர்மரியாதை செய்வார். எனக்கு இரண்டு பழமொழிகள் நினைவுக்கு வருகின்றன. ‘குடுக்காத இடையன் சின்ன ஆட்டைக் காட்டினாற்போல’ என்பதும், ‘மரப்பசுவின் மடியதனில் பாலுண்ணலாமோ?’ என்பதும்.
சென்னை, மதுரை, ஈரோடு புத்தகக் கண்காட்சிகளுக்கு ஆண்டுதோறும் போவது என்பது தீர்த்த யாத்திரை போல ஆகிவிட்டது எனக்கு. அதிலும் குறிப்பாக சென்னைக்கு, சபரிமலை போகிற ஐயப்பன்மார் சொல்வார், தமக்கு இது பதினான்காவது மலை, இருபத்தேழாவது மலை என, அதுபோல சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் போவது பத்துப் பன்னிரண்டு முறைக்கு மேலிருக்கும். புதிய புத்தகங்கள், நண்பர் சந்திப்பு தாண்டியும் அரங்கினுள் நிற்பதே இரண்டு லார்ஜ் பகார்டி வைட் ரம் பருகியது போல. படைப்பாளிகள் எவரோடும் எனக்குப் பகையொன்றுமில்லை. ஆண்டு முழுக்க, ஒரு சொல் பரிமாற்றம் கூட இல்லாதிருந்தும் நேரில் புன்முறுவல் பூப்பதில் சுகம் உண்டு. புத்தகப் பெருங்காட்டினுள் தனித்து விடப்பட்டதாக நான் உணர்ந்ததே இல்லை. சில ஆண்டுகள் முன்னால், ஜெயமோகனுடன் தோளுரசி அரங்கைச் சுற்றி வந்தபோது அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. “இதுக்குள்ள நிக்கிற போது நாமும் ஏதோ செய்திருக்கோம்னு கர்வமா இருக்குல்லா!”. உண்மையில் கர்வமாகத்தான் இருந்தது. சமீப காலமாகப் பதிப்பகங்கள் படைப்பாளிகளுக்குப் பேனர்கள் வைக்க ஆரம்பித்த பிறகு கர்வம் சற்று கூடித்தான் போயிற்று.
தகப்பன்சாமிகள் ஊரைக் கொள்ளை அடித்துச் சேகரித்துப் புதைத்து வைத்த புன்செல்வம் துய்த்தல் அன்றிப் பாற்பசுவுக்கு ஒருவாய் புல்லாவது அளித்துத் தேச சேவை செய்யாதவர், தந்தையின் பன்னாட்டு நிறுவனத்துக்கு மகன் நேரடி வாரிசாக வருவதைப் போல, அரசியலுக்கு வந்து மாதப் பிறந்த நாளுக்கும், கைவீசிக் கால்வீசி நடந்து வருவதைப் போன்று ஆளுயர பேனர்கள் சொந்தப் பணம் செலவிட்டு வைத்து அதிகாரத்தில் பாகம் கேட்கும் அஸ்திவாரக் கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, ஆண்டுக்கு ஒரு முறை, எழுத்தாளக் கண்காட்சி நடைபாதையில் தன்முகம் பார்க்க கர்வமாக இருக்காதா?
போன ஆண்டில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘தமிழினி’ அரங்கில் இருந்தபோது சுடச்சுட இரண்டு நூல்கள் தந்தார் தமிழினி வசந்தகுமார். ஒன்று, முன்சொன்ன ‘பாதசாரி’யின் மூன்றாவது புத்தகம், ‘அன்பின் வழியது உயிர் நிழல்.’ ’தமிழினி’யில் தொடர்ந்து அவர் எழுதி வரும் கட்டுரைகளின் தொகுப்பு. இரண்டு, வெங்கட் சாமிநாதன் இணைய தளங்களில் எழுதிய தன் வரலாற்றுக் கட்டுரைகள் அடங்கிய ‘நினைவுகளின் சுவட்டில்.’ அதுவேபோல் கலாப்ரியா இணைய தளங்களில் எழுதிய ‘தன்வரலாற்று’க் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பும் ஒன்றுண்டு, ‘நினைவுகளின் தாழ்வாரங்களில்’ என்று. சந்தியா பதிப்பகம் என்று நினைவு.
‘அகல்’ தனித்து அளித்திருக்கும் ’நினைவுகளின் சுவட்டில்’ டெமி அளவில் 336 பக்கங்கள். விலை ரூ. 170/-. வெளியீடு: அகல், 342, டி.டி.கே சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014.
நல்ல தாளில், நன்கு தயாரிக்கப்பட்ட, நேர்த்தியான அட்டைப்படத்துடனான புத்தகம். அட்டையில் வெ.சா. என நண்பராலும் பகைவராலும் செல்லமாய் அல்லது வன்மமாய் அழைக்கப்பட்ட, முதிர்ந்த, தளர்ந்த, கைத்தடியூன்றிய, காலர் வைத்த முரட்டுக் கதர் ஜிப்பா போட்ட வெங்கட் சாமிநாதன். இப்போது அவருக்கு அகவை 75க்கும் மேல். சமீபத்தில் மனைவியையும் இழந்தார். சற்று முன்பின்னாக அவரது வயதுடைய வாழும் இலக்கிய வல்லாள கண்டர்கள் ஆ.மாதவன், நீல.பத்மநாபன், அசோகமித்திரன், சா.கந்தசாமி, ஜெயகாந்தன், ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொ, கி.ரா எனச் சிலர்.
வெ.சாவின் தளர்வு என்பது தயவு தாட்சண்யம் அற்ற, பட்டுக் கத்தரித்தாற் போன்ற, பக்கக் கன்று வாழையை வெட்டினாற் போன்ற கறாரான திறனாய்வுப் போக்கின் தளர்வு எனக் கருதுகிறேன். அளவற்ற பகையைக் கடுமையான திறனாய்வுக் கூற்றுகளால் பெற்றவர். அவர் வகையிலான Die Hard Species இனம் முற்றிலும் அழிந்து போய்விட்டது தற்போது.
இளைய எழுத்தாளரிடம் பேசும்போது சொல்கிறார்கள், இன்று ஒரு மதிப்புரை அல்லது விமர்சனக் கட்டுரை எழுதி வாங்குவது என்பது சிறுதெய்வ வழிபாடு போல என்று. மாசி, பங்குனி மாதத்து வெள்ளி- செவ்வாய்களில் படுக்கை வைத்துக் கொடுத்தல்போல. சாராயம், சுருட்டு, அவித்த தாரா முட்டை, சுட்ட அயிரைக் கருவாடு, கருப்பட்டி- எள்ளுப் பிண்ணாக்கு படைத்து, பொங்கலிட்டு கருஞ்சேவல் அறுத்தால் கழுமாடன், புலைமாடன், சுடலைமாடன் கண்பார்ப்பார். அல்லது எழுத்தாளரின் பெரியப்பாவின் சொந்தக்காரன் மகன் குறைந்தது சட்டமன்ற உறுப்பினராகவாவது இருக்க வேண்டும். இலக்கியப் பத்திரிகைகளில் ஒன்றுவிடாமல் மாறி மாறி மதிப்புரை, ஆய்வுரை, திறனாய்வு, நலம் பாராட்டல் எல்லாம் நடக்கும். நேர்காணல்கள் ‘மண்டகப்படி’ போல நடத்துவார்கள். முழுநாள் அகில இந்திய ஆய்வரங்குகள் நடக்கும். தேசீயக் கருத்தரங்குகளுக்கு, சர்வ தேசீயக் கருத்தரங்குகளுக்கு அழைக்கப்படுவார்கள். கவர் ஸ்டோரி எழுதுவார்கள் முழுமுகம் கண்ட அட்டைப்படத்துடன். ஜே.பி.சாணக்யாவுக்கும், பா.திருசெந்தாழைக்கும், அழகிய பெரியவனுக்கும், கால பைரவனுக்கும், எஸ்.செந்தில்குமாருக்கும், கண்மணி குணசேகரனுக்கும், சு.வேணுகோபாலுக்கும், என்.டி.ராஜ்குமாருக்கும் இது சாத்தியமா?
க.நா.சுவின், வெ.சாவின் தன்னலமற்ற இலக்கியத் திறனாய்வுப் பணியை, இன்றைய இலக்கிய சூழல் உணர்கிறதா என்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளன் தொடர்ச்சியாக ஒரு இதழில் எழுதி, அந்த இதழ் பதிப்பகம் வைத்திருந்து, அந்தப் பதிப்பகம் அந்த எழுத்தாளனின் புத்தகத்தை வெளியிடவும் செய்தால் மட்டுமே அந்தப் புத்தகத்து மதிப்புரை வெளியிடும் வாய்ப்பு உண்டு.
நாளிதழ்கள் மதிப்புரைகள் வெளியிடுவதுண்டு. ‘’தி ஹிண்டு’ கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தீவிர இலக்கியப் படைப்பாளியின் எத்தனை புத்தகத்துக்கு மதிப்புரை வெளியிட்டுள்ளது? ஆனால் பாலகுமாரன், வாசந்தி, சிவசங்கரி, இந்துமதியின் எந்தப் புத்தகத்துக்கு விமர்சனம் எழுதாமல் இருந்திருக்கிறது? மற்றவரை விடுங்கள், 1975 முதல் எழுதுபவன் நான். கிட்டத்தட்ட புத்தகங்கள் இருபதுக்கும் மேல் வந்துள்ளன. பதினைந்தாவது புத்தகம் வரை மதிப்புரைக்கு என இரு படிகள் அனுப்பியது உண்டு. அவை எங்கு சென்று சங்கமிக்குமோ அறியேன். ஆனால் சல்மா நாவல், ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’க்கு நாவல் வருமுன் ஒரு முன்னோட்டம், வந்தவுடன் ஒரு மதிப்புரை, வந்தபின் கட்டுரை அல்லது நேர்காணல், வரப்போகுது, வந்துவிட்டது, வென்று விட்டது என. நமக்கொன்றும் இதில் வருத்தமில்லை. இது இன்றைய இலக்கியச் சூழல் என்று உணர்த்துவதற்கும், க.நா.சு, வெ.சா போன்றவர்கள் எந்த Give and take-ம் இல்லாமல் செயல்பட்டவர்கள் என்ற தகவல் தருவதற்கும்.
பரந்த வாசிப்பும், நம்பும் தீவிரமான இலக்கியக் கொள்கைக்கான அர்ப்பணிப்பும், அஞ்சாமையும், கூர்ந்த அவதானிப்பும், நேர்மையான அபிப்பிராயங்களும் வெ.சாவின் பலங்கள் என்பதை அவர் எழுதிய ஒரு நூலையேனும் வாசித்திருப்பவர் உணர இயலும். வெ.சாவுக்கு இந்த பலம் வந்த ஊற்றுக்கண், நாற்றங்கால், உரக்குண்டு எதுவென இந்த நூலை வாசிப்பவர் உணர இயலும். இலக்கிய விமர்சனமாக 12, நாடகம் சார்ந்த 3, ஓவியம் சிற்பம் பற்றி 3, சினிமா சார்ந்து 3, இன்ன பிற 3, என 24 நூல்கள். மொழி பெயர்ப்புகள் 3, தொகை நூல்கள் 4 என்பன தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு அவர் கொடை. முதன் முதலில் நாடகம் குறித்த சொல்லகராதி தொகுத்த நாகர்கோவில் வடிவீஸ்வரத்து ‘ஆண்டி ஐயர்’ பற்றி நீங்கள் கேட்டதுண்டா? அச்சாக்கம் செய்வதற்காக அரசுத்துறையிடம் ஒப்பித்தது கரையான் அரித்து நாசமானது தெரியுமா? முனைவர், கள ஆய்வாளர் அ.கா.பெருமாளுடன் அலைந்து திரிந்து தென்மாவட்டங்களின், ‘தோல்பாவைக் கூத்து,’ பற்றி முதன் முதலில் தீவிர இலக்கியவாதிகளுக்கு என கட்டுரை எழுதியது தெரியுமா? எல்லாம் வெ.சா, ‘யாத்ரா’ மூலம் செய்த காரியங்கள்.
என் நினைவு சரியாக இருக்குமானால், எனது முதல் கட்டுரையை நான் 1982-ல் எழுதினேன். அது ஒரு மதிப்புரையாக இருந்தது. அதுவும் வெ.சா கேட்டதற்குப் பணிந்து- ஆ.மாதவனின் நாவல், ‘கிருஷ்ணப் பருந்து’ பற்றியது. மதிப்புரை அல்லது கட்டுரை எழுத எனக்கு வரும் என்றே தெரியாது அப்போது. எனது எந்தக் கட்டுரைத் தொகுப்பிலும் இன்றுவரை சேர்க்கப்படவும் இல்லை. ஆ.மாதவன் அற்புதமான சிறுகதையாசிரியர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்த நாவல் எனக்குப் பிடித்திருந்தது. எழுதி அனுப்பினேன். அந்த மதிப்புரை வெளியான, ‘யாத்ரா’ இதழ் 34-36 இல் பார்த்த பிறகுதான் எனக்குப் புரிந்தது, ‘கிருஷ்ணப் பருந்து’ பற்றி நீல.பத்மநாபன் காழ்ப்புடன் எழுதிய மதிப்புரைக்கு மாற்றாக வெ.சா என்னைப் பயன்படுத்திக் கொண்டார் என்பது.
நடுநிலையுள்ள வாசகர்கள், ‘கிருஷ்ணப் பருந்து’ வாசிக்கலாம் முதலில். பின்பு ‘யாத்ரா’ இதழ்த் தொகுப்பில் இரண்டாம் பாகம், 2005-ல் புதுமைப் பித்தன் பதிப்பகம் வெளியிட்டது- ‘சாலைக் கடைக்கு மேலே பறக்கும் சாகசப் பருந்து’ எனும் கட்டுரையையும் வாசிக்கலாம். அடுத்த என் மதிப்புரையையும் வாசிக்கலாம். எதற்குக் குறிப்பிடுகிறேன் எனில், அத்தரத்து வஞ்சம் கொண்ட மதிப்பீடு அல்ல வெ.சா உடையது என்பதைக் குறிக்க.
காட்டம் இருக்கும், குத்தல் இருக்கும், ஏளனம் இருக்கும் ஆனால் நேர்மையற்ற மதிப்பீடு இருக்காது. இதன் காரணம் பற்றியே அவர் மீது, அவரைப் பிடிக்காதவர் உரைத்த வெஞ்சினம் சாதாரணமானவை அல்ல. அராஜகவாதி, பிற்போக்குவாதி, C.I.A ஏஜெண்ட், பார்ப்பான்…. பிறந்த சாதி எங்கனம் வசைச் சொல் ஆக இயலும் என என்னைக் கேட்காதீர்கள். நகராட்சி, மாநில, தேசீய விருது எதுவும் அவரைத் தீண்டியதில்லை. மூலம் கிழியக் கிழிய முக்கி முக்கி சொற்பொழிவாற்றும் முற்போக்குகளுக்கு அதுபற்றி எல்லாம் அக்கறை இல்லை. எனதாச்சாரியம் இன்றுவரை எவரும், முற்போக்கு இலக்கியத் திறனாய்வாளர் எவரையும் கே.ஜி.பி ஏஜெண்ட் எனத் திட்டியதில்லை. இன்னொரு ஆச்சரியம், வேறெந்த மொழியிலும் இலக்கியவாதி பிறந்த சாதி அவன் படைப்பின் தகுதியைத் தீர்மானிப்பதில்லை என்பது.
நூலின் பின்னட்டையில் வெ.சாவின் வாக்கு மூலம்: ‘எழுத்துலகிலும், வெளியிலும் சில உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது சில குறைகளையும் பலவீனங்களையும் மீறி அவர்கள் உன்னதமான மனிதர்கள்தான். சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன். எழுத்துலகிலும் வெளியிலும் அவர்களது சில பலங்களையும் மீறி அவர்கள் இழிந்த மனிதர்கள்தான்.’ வெ.சாவின் திறனாய்வுப் போக்கின் அடிப்படை இது – Calling a spade, a spade. தமிழிலக்கிய உலகின் சிலர் படைப்புகளையுப் பேசும்போது அவர் முகம் பிரகாசமாவதையும் சில பிரமுகர்களின் பெயரை உச்சரிக்கும்போது கறுத்து முறுகுவதையும் கவனித்திருக்கிறேன்.
அன்றும் இன்றும் சினிமா, இசை, ஓவியம், சிற்பம், நாடகம், இலக்கியம் என கலை சார்ந்த பல்துறைகளிலும் உலகத் தரத்தில் சிந்திக்கக் கூடிய, எழுதக் கூடிய, திறனாயக் கூடிய மற்றொரு ஆளுமையைத் தமிழ்க் கலையுலகம் சந்திக்கவில்லை என்று எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. தீவிரமான கேள்வியொன்று எனக்கு எப்போதும் இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் இருந்தே தொந்தரவு செய்ததுண்டு. அதை நான் நகுலனிடம், க.நா.சுவிடம், சுந்தர ராமசாமியிடம், வெ.சாவிடம் பலமுறை பல்வேறு கோணங்களில் இருந்து விவாதித்திருக்கிறேன். விவாதித்தேன் என்று சொல்வதில் என் அகந்தை தொனிக்கிறது. அவர்களிடம் விவாதிக்கும் தகுதி எனக்கு இருந்ததாக என்றும் உணர்ந்ததில்லை. வேண்டுமானால் ஐயம் தெளிந்திருக்கிறேன் எனலாம்.
என் ஐயத்தைச் சுண்டக் காய்ச்சி வடிகட்டினால் மீந்து இருக்கும் கேள்வி இதுதான்- படைப்பை மட்டும் பார்ப்பதா? படைப்பையும் படைப்பாளியின் அக, புற உலகச் செயல்பாடுகளையும் சேர்த்துப் பார்ப்பதா? வாசகனுக்கு, படைப்பாளியைப் பற்றிய எந்த அறிவும் தகவலும் இல்லாத போது, அவன் படைப்பாளியையும் சேர்த்து மதிப்பிடுவது எங்ஙனம் சாத்தியம்? திரும்பத் திரும்ப வெ.சா எனக்கு சொன்னது, இன்றும் சொல்லிக் கொண்டிருப்பது, படைப்பாளியின் நேர்மை எழுத்தில் தொனிக்கும். அவனது வாழ்க்கை வரலாறு அறிந்திருக்கவில்லை எனினும் பத்துப் பக்கங்கள் வாசித்தால் போதும் – அது நேர்மையான எழுத்தா, போலியும் பாசாங்கும் நிறைந்ததா என அறியலாம் என்பார். சமகால எழுத்துக்கள் பற்றிச் சில எடுத்துக்காட்டுக்கள் சொல்வார். அதை விளம்ப ஈண்டு நான் தயாரில்லை.
Impersonal ஆக ஒன்றே ஒன்று சொல்கிறேன். முப்பது ஆண்டுகளாக ஒரு படைப்பாளி புகைப்பவர், புலால் உண்பவர், மது அருந்துகிறவர், திருப்பதி மலைக்கு தவறாமல் யாத்திரை போகிறவர் என்று வைத்துக் கொள்வோம். அவரது எழுத்தின் ஒரு வரி கூட அதைப்பற்றிப் பேசவில்லை, வாசகன் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதிலொரு திட்டமிடல் இருக்கிறது என எடுத்துக் கொள்வது தவறா? எனில் அது நேர்மையான எழுத்தா?
இன்றும் எனக்கு அஃதோர் கேள்விதான். மாற்றுக் கேள்வியும் ஒன்றுண்டு. கலைஞன் எனப் பார்த்தால் சிற்பி, ஓவியர், இசைவாணர், நாட்டியக்காரர் யாவரும் கலைஞர்தான். அவர்கள் சொந்த வாழ்க்கையின் நேர்மையற்ற தன்மை அல்லது ஒழுக்கம் சார்ந்த சில பற்றி அவர்தம் கலை மூலம் எங்ஙனம் தெரிந்து கொள்ள இயலும்?
ஆனால் நேர்மையற்ற மனதை, செயல்பாட்டை, கலை வெளிப்பாடு காட்டிக் கொடுக்கும் என்பது வெ.சாவின் சித்தாந்தம். இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.
மாற்றுக் கருத்தைப் புரிந்து கொள்வதில் அவருக்குச் சிக்கல் கிடையாது. அமைதியாக இருப்பார். அவரது ஜனநாயகத் தன்மைக்கு அடையாளம் அது. உலகில் மொத்தமும் ஒரே மதம் இல்லை, ஒரே தத்துவம் இல்லை, ஒரே மொழி இல்லை, ஒரே இசை இல்லை, ஒரே உணவு இல்லை. தான் நம்பித் தொடரும் ஒன்று மட்டுமே சரியானது என்பது என்ன ஜனநாயகம்? அது எங்ஙனம் நேரானதாகும்? எதற்குப் பின் அத்வைதம், துவைதம், விசிஸ்டாத்வைதம்?
வெ.சாவின் பிரச்னை, கலைஞன் தன் அனுபவத்துக்கு உண்மையாக இருத்தல், நேர்மையாக இருத்தல் பற்றியது. இந்த உத்தமப் பொதுக்காரணி நமக்கும் அவருக்கும் இருந்தால் அவருடன் சகபயணியாக எவரும் இருக்கலாம். ஆனால் மாற்றுக் கருத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் அமெரிக்க உளவாளி என்பது எதிர் விமர்சனம். நகரப் பேருந்தில் பயணம் செய்கிற, ஓய்வூதியம் வாங்க கைத்தடி பற்றி மேடுபள்ளங்களும் சாக்கடையும் குப்பை கூளங்களும் நிறைந்த மடிப்பாக்கத்துத் தெருக்களில் நடந்து போகிற, காசு கொடுத்துப் புத்தகம் வாங்குகிற, சேர்ந்து அமர்ந்து குடித்தாலும் பாதிச் செலவைப் பகிர்ந்து கொள்கிற ஒருவரை Fascist, Racist, Agent என்று சொல்பவரை அளக்க நம்மிடம் கருவிகள் இல்லையா என்ன? ஆனால் வெ.சா எஞ்ஞான்றும் below the belt குத்துகிறவர் அல்ல. தில்லியில் தான் பார்த்த வேலையைப் பழிவாங்கப் பயன்படுத்தியவர் அல்ல, பயன்படுத்தி இருக்க முடியும் என்றாலும். அவரது இலக்கிய அபிப்பிராயத்துக்காக வழக்க்த் தொடர முயற்சி செய்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும் வருத்தப்பட்டிருக்கிறார் என்னிடம் நேரில், ஆனால் கலங்கியவர் அல்ல.
இத்தனை விரிவாக எழுதுவதற்குக் காரணம், நேர்மையான திறனாய்வாளன் உருவாகி வருவதற்கான காரணங்கள் ‘நினைவுகளின் சுவட்டில்’ நூலினுள் காணக் கிடைக்கின்றன என்பதால்தான். திலீப்குமார் தொகுக்கின்ற வெ.சாவின் 75ஆவது அகவைச் சிறப்பு நூலில் ஏற்கனவே கட்டுரையொன்று நான் எழுதி விட்டதால், பல செய்திகளை இதில் தவிர்த்து மேற்செல்கிறேன்.
கும்பகோணம் அருகில் வலங்கைமான் எனும் ஊரை அடுத்த உடையாளூர் எனும் குக்கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாத காரணத்தால், முன்று வயதில்- 1938 எனக் கொள்ளலாம்-தனது தாய்மாமாவால் நிலக்கோட்டை அழைத்துச் செல்லப்பட்டவரின் 21 வயது வரையிலான -1959 எனக் கொள்ளலாம்- பதினெட்டு ஆண்டு கால அனுபவப் பதிவுகள் இந்த நூல். அடுக்குகள் குலைந்து, அதனால் உண்மை குலையாமல் எழுதப்பட்ட இணையதளக் கட்டுரைகள்.
முதல் வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்பு வரை நிலக்கோட்டை. அன்று Pre-KG, LKG,UKG எனும் மேற்படிப்புகள் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. பிறகு ஒன்பதாவது படிக்க மதுரை, 1946-ல். பதின்மூன்று ஆண்டுகள் தாய்மாமாவின் பராமரிப்பு. பின்பு ஸ்கூல் ஃபைனல் வரை கும்பகோணம் பாணாதுரை ஹைஸ்கூல். மதுரையில் பாரதி கற்பித்த சேதுபதி ஸ்கூல். வெங்கட் சாமிநாதனின் குடும்பம், பனையோலைச் சுவடிகளில் செல்லரித்துக் கொண்டிருந்த பழந்தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள் எனத் தேடிக் கண்டு பிடித்து, பதிப்பித்து, உரையும் எழுதிய, மகாமகோபாத்யாய உ.வெ.சுவாமிநாத ஐயர் பிறந்த உத்தமதானபுரத்தில், உ.வெ.சா பிறந்த வீட்டில் கொஞ்ச நாட்கள் வாழ்ந்திருக்கிறது. அந்த வீடு விலைக்கு வந்தபோது வாங்கக் காசில்லாமல் வெளியேறியும் இருக்கிறது.
ஆரம்பப் பாடசாலைக்குப் போகவேண்டுமானால், உடையாளூரில் இருந்து மூன்று மைல் தூரம் வலங்கைமான் போக வேண்டும். வலங்கைமானில் தான் Right Honourable வி.எஸ். சீனிவாச சாஸ்திரிகள் பிறந்திருக்கிறார். அந்தக் காலத்து ஸ்பெஷல் தவில் வலங்கைமான் ஷண்முக சுந்தரம் பிறந்த ஊரும் அதுவே. அன்று நிலக்கோட்டைக்கு மின்சாரம் வந்திருக்கவில்லை. மாமா, பள்ளி ஆசிரியர், மாதச் சம்பளம் இருபத்தைந்து ரூபாய் நாலணா. வீட்டு வாடகை ஆறு ரூபாய். பாட்டி, மாமா, மாமாவின் தம்பி, மாமாவின் மனைவி, அவரது குழந்தைகள், மூன்று வயது சாமிநாதன். எத்தனைச் செல்வச் செழிப்புடன் இருந்திருக்கும் பாருங்கள்!
ஒரு நாவல் வாசிப்பது போலிருக்கிறது, வெ.சாவின் நினைவுகளின் சுவடுகளை வாசிக்கும்போது.
“ஒரு சமயம் மாமாவுக்கு என் அப்பாவிடம் இருந்து ஐந்து ரூபாய் மணியார்டர் வந்தது. எதுக்கு இது வந்தது? இதற்கு என்ன அர்த்தம்? என்று மாமா அடிக்கடி தன்னையும் கேட்டுக் கொண்டார். பாட்டியையும் கேட்டுக் கொண்டிருப்பார்.” என்று பேசும் வெ.சா. தன் மாமாவைப் பற்றி மேலும் சொல்கிறார். ”ஆனாலும் அவர் என் அப்பாவுக்கு, என்னால் முடியவில்லை, பையனை அனுப்புகிறேன்,” என்று ஒரு கார்டு போட்டவரில்லை. என்னைப் பார்த்து அலுத்துக் கொண்டவர் இல்லை. யாரும் எந்த சமயத்திலும் அந்த வீட்டில் நான் ஒரு உபரி ஜீவன் என்று நினைத்ததில்லை. உணர்ந்ததில்லை முதலில்,” என்று கண்கள் கசியக் கசிய எழுதுகிறார்.
இந்தச் சமயத்தில்தான் நிலக்கோட்டையின் டெண்ட் கொட்டகைக்கு வரும் சினிமா அனைத்தும் பார்க்கிறார். திருமண வீடுகளில், கோயில்களில் இசைக் கச்சேரிகள் கேட்கிறார். பாடபுத்தகங்களுக்கு வெளியேயும் வாசிக்கிறார். அரசியல் கூட்டங்கள் கேட்கிறார்.
சா.கந்தசாமியின் நாவல் ஒன்றின் தலைப்பு, ‘அவன் ஆனது.’ ஆங்கிலத்தில் ‘This is how He became himself’ என்று சொல்லலாமா? ‘நினைவுகளின் சுவட்டில்’ வாசித்துச் செல்லும்போது, ஒரு சாதாரண வறுமைச் சூழலில் அல்லற்படும் ஒருவனைக் காலம் எங்ஙனம் உருமாற்றுகிறது என்பது புலனாகும். மதுரையில் சேதுபதி ஹைஸ்கூலில் வெ.சா ஒன்பதாவது வாசித்தபோது தங்கல் மாமாவின் மாமனார் வீட்டில். சாப்பாடு இரண்டு வேளை மெஸ் ஒன்றில். மெஸ் முதலாளி சொல்கிறார், ‘படிக்கிற பையன், மத்தியானம் பட்டினி கிடக்க வேண்டாம், வந்து மோர்சாதம் சாப்பிட்டுப் போகட்டும். அதற்குத் தனியாகக் காசு தர வேண்டாம்,” என்று.
அந்த மெஸ்ஸில் சனிக்கிழமை இரவு வெங்காய சாம்பாரும், உருளைக்கிழங்கு கறியும். வெ.சாவின் சம வயதினள், மாமியின் தங்கை சொல்கிறாள், “ஏண்டா, வெங்காய சாம்பார் பண்ற அன்னிக்கு சாப்பாட்டை இங்கே வாங்கிண்டு வந்துடேண்டா! எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.” இதுதான் வாழ்க்கை வெ.சாவுக்குக் கற்றுத் தந்த எளிமை, கனிவு, அந்நியோன்யம்.
மதுரையில் ஒன்பதாவது படிக்கும்போதே கோயில் சிலைகளின் அலங்காரங்கள், சினிமா பேனர் வரையும் ஓவியக் கூடங்கள், பாட்டுக் கச்சேரிகள் என்று அலைகிறார். ‘ஜுக்னு’ பார்க்கிறார்,  பாகிஸ்தானிய நடிகை – பாடகி நூர்ஜஹான் பற்றித் தெரிந்து கொள்கிறார். கே.டி.கே தங்கமணி, மோகன் குமாரமங்கலம், பி.ராமமுர்த்தி, சசிவர்ணத் தேவர், அருணா ஆசஃப் அலி, மதுரை ஏ. வைத்தியநாதையயர் என்று அரசியல் கூட்டங்கள் கேட்கிறார். 1948 ஜூலை முதல் 1949 ஆகஸ்டு வரை உடையாளூருக்கு இடம் பெயர்கிறார் வெ.சா. பள்ளி இறுதி வகுப்புகளுக்காக. உடையாளூரில் இருந்து கும்பகோணம் பள்ளிக்கு நடந்து போகும் இன்னல்களைத் திரும்பத் திரும்ப நாலைந்து இடங்களில் பேசுகிறார். உடையாளூரில் இருந்து கும்பகோணத்துக்கு 5-1/2 மைல்கள். அதாவது 9 கிலோ மீட்டர். நேர்வழி, தார்ச்சாலை, பேருந்துப் பயணம் அல்ல. வயல் வரப்புகள் வழியாகக் கடந்து, வழியில் குறுக்கிடும் மூன்று ஆறுகள்- குடமுருட்டி, முடிகொண்டான், அரசிலாறு. இடுப்பு வரை நனைந்தும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினால் பரிசில்களிலும். மாலை, திரும்புகையில் மறுபடியும் இந்தப் பயணம். காலை எப்போது புறப்பட வேண்டும், மாலை எப்போது திரும்பி வர இயலும்?
அப்போது உடையாளூரில் ஆரம்பப் பள்ளி வந்து விட்டது. ஐந்தாவது வரை படிக்கலாம். தாய்மாமா சாமிநாதனைக் கொண்டு உடையாளூரில் விட்டு விட்டு, அவர் தம்பியை நிலக் கோட்டைக்கு இட்டுச் செல்கிறார். பிறகு அவர் தம்பி.
தினமும் காலையும் மாலையும் உடையாளூருக்கும் கும்பகோணத்துக்கும் நடப்பதன் துன்பம் உணர்ந்து, கும்பகோணத்தில் ஒரு பாட்டி வீட்டில் தங்கிச் சாப்பிட்டுப் பள்ளி போக ஏற்பாடாகிறது. காலையில் ஒரு காப்பி, இரண்டு வேளை சாப்பாட்டுக்கு 15 ரூபாய், சனி ஞாயிறு விடுமுறைக்கு ஊருக்குப் போய் விடுவதால் 4 ரூபாய் கழிவு. கும்பகோணம் பள்ளியில் படித்தாலும் ஊர் சுற்றல் சர்வகலாசாலையாக இருந்திருக்கிறது வெ.சாவுக்கு. தி.ஜானகிராமன், ‘மோகமுள்’ நடத்திய கும்பகோணத்துத் தெருக்கள், எம்.வி.வெங்கட்ராமன் ‘தேனி’ இலக்கிய இதழ் நடத்திய தெரு, உ.வெ.சா வாசித்த நூலகங்கள், பணி புரிந்த இடம், மறுபடியும் அரசியல் கூட்டங்கள், சினிமாக்கள், கச்சேரிகள்.
வெங்கட்சாமிநாதன் படிப்பில் முதல் தரத்து மாணவனாக என்றுமே இருந்ததில்லை. தட்டி முட்டித் தேறுகிறவர். ஆனால் பாடசாலைக்கு வெளியே அவர் வாசிப்பு, 16-வது பிராயத்தில் அவரைத் தயாரித்திருக்கிறது. அவரே கூறுகிறார், ‘இந்தப் பத்திரிகைகளில் திராவிட நாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். தவிர அண்ணாதுரையின் பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தது… எனக்கு இவற்றில் எல்லாம் ஒரு மயக்கம் இருந்தது. முக்கியமாக அண்ணாதுரையின் பேச்சிலும் எழுத்திலும். கழகப் பேச்சாளர்களிடையே அவரிடம்தான் நாவன்மை மட்டுமல்ல, எந்தக் கருத்தையும் கேட்கத் தூண்டும் வகையில் அழகாகவும் கடூரம் இன்றியும் சொல்லும் திறனும் இருந்திருக்கிறது. ஒரு பரந்த பார்வை அவரைத் தவிர கழகத்தவர் வேறு எவரிடமும் காணப்பட்டதில்லை!‘
இதைச் சொல்கிற கையோடு, காமராஜ், பக்தவத்சலம் என்று வெறும் பெயரோடு உலவியவர்கள் திராவிட இயக்கத்தில் யாருமே இல்லை என்றும் சொல்கிறார். தென்னாட்டு லெனின், தமிழ் நாட்டு ரூசோ, இந்நாட்டு இங்கர்சால், சிந்தனைச் சிற்பி, நடமாடும் பல்கலைக் கழகம், பகுத்தறிவுப் பகலவன் போன்ற பிரச்சார உத்திகள் வேறெந்தக் கட்சியின் மூளையிலும் தோன்றவில்லை என்கிறார். மூன்று வயது முதல் ஹிராகுட் வேலைக்குப் பள்ளி இறுதிப் படிப்பை முடித்து விட்டுப் போய்ச் சேரும் வரையிலான இளம் பிராயத்து அனுபவங்கள் இந்த நூல். அப்போதே அவர் எழுத ஆரம்பித்து விடவில்லை. A critic was only in the making. ’யாத்ரா’ தொடங்குவது மிகமிகப் பிந்தி. பின்னர் பாரபட்சமற்ற, இருவசமும் கூர்மையும் முன்வசம் காந்தமும் கொண்டதொரு திறனாய்வாளனின் இளம்பருவ அனுபவங்கள். அதைத் தாண்டி வேறென்ன என்று கேட்கலாம். இந்தச் சுவடுகள் ஒரு காலகட்டத்தை, உறவுகளின் ஈரத்தை, நெருக்கத்தை, மனித மதிப்பீடுகள் சாய்ந்து போகாமல் இருந்ததை, எளிய மனிதர்களின் அரிய பண்புகளை பின்னோக்கிச் சென்று நமக்கு உணர்த்துகின்றன. கிட்டத்தட்ட எனது இளம்பருவத்தை, சில வேறுபாடுகளுடன், திரும்பிப் பார்ப்பது போலிருந்தது. அது வறுமையிலும் அன்பு, பாசம், சிநேகம் எல்லாம் மனிதர்களைக் கைவிட்டு விடாத பருவம். வெ.சாவின் திறனாய்வுப் பாணிக்கு ஒரேயொரு எடுத்துக் காட்டு தந்து, கட்டுரையை நிறைவு செய்யலாம். மதுரையில் வைகை ஆற்றுக்குப் போகும் வழியில் இருந்த சின்ன தோசைக்கடை பற்றிப் பேசுகிறார்.
’அங்கு தினம் காலையில் ஏழு மணியில் இருந்து ஒன்பது ஒன்பதரை மணி வரையில் அந்தக் கடையில் தோசை கிடைக்கும். நெய்தோசை, மணக்க மணக்க இருக்கும். தோசையைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்காது. பிறகு கடை மூடிவிடும். பின் மறுநாள் காலையில் தான் திறக்கும். அந்தக் கடைக்காரர் எப்படி தனக்கு ஆகிவந்த அந்த வட்டாரத்தில், வெற்றிகரமாக வியாபாரம் செய்ய உதவும் அந்தத் தோசையைத் தவிர வேறு எதையும் தப்பித் தவறிக்கூட சிந்திக்காதவரோ, அந்த மாதிரியே நம்மூர் எழுத்தாளரும் ஒருவர் இருக்கிறார். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 60 வருஷ காலமாக ஒரே மாதிரியான நடை, கதை சொல்லும் முறை, ஒரே மாதிரியான மத்திய தர மக்களின் அன்றாட இன்னல்கள், ஏமாற்றங்கள், சின்னச் சின்ன சந்தோஷங்கள், இதைத் தாண்டி மனிதர் வேறு எங்கும் கால் வைத்து விட மாட்டார். இருவரும் ஒரே தரத்தை, ஒரே உத்திரவாதமான மார்க்கெட்டைக் கொண்டவர்கள். எதுவும் ஏமாற்றமும் இல்லை, ஆச்சரியங்களும் இல்லை.’
இந்தத் திறனாய்வுக் கூற்று எனக்கு உடன்பாடா என்று கேட்காதீர்கள். ஆனால் எனக்கு ஒன்று புரிகிறது. வெங்கட் சாமிநாதன் எனும் திறனாய்வு மேதையின் கனவு, எதிர்பார்ப்பு, ஆதங்கம். அது அவருக்குப் பகைகளைத் தேடித் தந்திருக்கக் கூடும். ‘காய்த்த மரம் கல்லெறி படும்.’
நன்றி:http://solvanam.com/?p=11783

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நினைவுகளின் சுவட்டில்

  1. rathnavel natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு ஐயா.
    புத்தக மதிப்புரையில் இவ்வளவு அரசியலா? ஆச்சரியமாக இருக்கிறது.
    நான் தினமலரும், இந்து பத்திரிக்கையும் வாங்குகிறேன். அதில் உள்ள புத்தக மதிப்புரையைப் பார்த்து, எனது பொருளாதார வசதிகள் இருக்குமானால் வாங்கிக்கொண்டு இருக்கிறேன். இதற்கும் தேடிப் படிக்க வேண்டும் போலும்.
    நன்றி ஐயா.

  2. வெட்கட்சாமிநாதனின் ‘நினைவுகளின் சுவட்டில்’ புத்தகம் உடனே வாங்க வேண்டும் போலிருக்கிறது. அவரது இளமைக்காலத்தில் மதுரை பற்றிய பதிவுகள் வழியாக அன்றையமதுரைக்காட்சிகளை அறிந்து கொள்ளலாமே என்ற அவா தான். மேலும், நாஞ்சில் நாடனின் புத்தகங்கள் குறித்து இந்து பத்திரிக்கையில் வராதது நல்லது தான். ஏனென்றால், ‘இந்து’ தமிழர்களுக்கான பத்திரிக்கை அல்ல என்பது என் எண்ணம். வெங்கட்சாமிநாதனை குறித்த அருமையான பகிர்வு. நன்றி

சித்திரவீதிக்காரன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s