நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
அன்று அமாவாசை. சின்னதம்பியா பிள்ளையின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. எனவே பழைய கஞ்சியைக் குடிப்பதற்குப் பதில், தன் பெண் வீட்டிற்குப் போய் அமாவாசைச் சாப்பாடு சாப்பிடலாம் என்று கிளம்பினார். முதலில் பெரிய பெண் வீட்டிற்குப் போனபோது அப்பா சாப்பிட்டு வந்துவிட்டார் என்கிற தோரணையில் பேசினாள். இளைய பெண்வீட்டில் சாப்பிடலாம் என்றால், ‘‘அக்கா வீட்டிற்குப் போனேன் என்று இளைய மகளிடம் கூறும்போது, “உங்கிட்ட எத்தனை நாளப்பா சொல்றது, வந்தா நேரே இங்கே வான்னு. நீ பாட்டுக்கு அக்கா வீட்டிலே சாப்பிட்டு, அப்புறமா இங்கே வாறே’’
“அது சரியில்லேமா…. அம்மாச்சியாட்டா…. இன்னிக்கு….”
“அம்மாச்சியானா என்னா? நானுந்தான் குளிச்சு முழுகிட்டு உல வைச்சேன். உன் விரதத்திற்கு என் வீட்டில் சாப்பிட்டா என்ன பங்கம் வந்திடுமாம்! இனி இப்படி வா சொல்லு கேன்…”
அன்பில் விளைந்த கோபம், அவரை எட்டியது. அடுக்களையில் காய்ந்த தேங்காய் எண்ணெய் பப்படத்தைப் போட்டதில் உண்டான சொர்…… என்ற ஒலி.
கிழவருக்குத் தோன்றியது. இன்னும் சாப்பிடலைன்னு இவளிடம் சொன்னால் என்ன? என்ன இருந்தாலும் மகள்தானே! பெற்ற மகளிடமுமோ கௌரவம் பார்ப்பது?
செருப்பால அடி, மருமகன் வேற இருக்கான். அப்படியென்ன பசி? மரியாதை கெட்ட பசி? அப்படி வயத்தை நிறைச்சிக்காட்டித்தான் என்ன?
மனம், வாதமும் எதிர்வாதமும் செய்தது. கிழவருக்கு அப்போதுதான் படீரென்று புத்தியில் உரைத்தது. ‘சே! எல்லாம் இந்தத் திருநீறால் வந்த வினை!’
ஆமாம், ஐம்பதாண்டு பழக்கம். குளித்துவிட்டு திருநீறணிந்து விட்டுத்தான் சாப்பிடுவார். நெற்றியில் துலங்கும் நீறுடன் அவர் வெளியே இறங்கிவிட்டால், பிள்ளைவாள் சாப்பிட்டாகிவிட்டது என்று பொருள். இது ஊர் மாத்திரமல்ல, அவருடைய உறவினர்களும் அறிந்ததொன்று. அதுதான் இன்று அவரைக் காலை வாரி விட்டுவிட்டது.
 “குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் குடும்மா”. விரத நாட்களில் சாப்பாடாகிவிட்டால், இரவு பலகாரம் வரை அவர் வெந்நீர்தான் சாப்பிடுவது, ‘சாப்பிட்டாகி விட்டது’ என்று நிச்சயமாக்கப்பட்டுவிட்ட பிறகு அதிலிருந்து நழுவ முடியுமா? வெந்நீரை வாங்கிக் குடித்துவிட்டு பேரனின் கன்னத்தை ஒரு தட்டுத் தட்டிவிட்டு, “சரிம்மா, கீழத் தெருவில் ஒரு ஆளைப் பார்க்கணும், பாத்துட்டு வந்துடுறேன். நேரமானா அவரு வெளியே போயிடுவாரு” என்று சாக்குச் சொல்லி விட்டு, ஒன்றரை மணி வெய்யிலில் இறங்கினார்.
வெயிலையும் பொருட்படுத்தாமல் வேகு வேகென்று முக்கால் மைல் நடந்து வீட்டினுள் நுழைந்து, அடுக்களைக்குள் புகுந்து, பானையிலிருந்த பழையதைப் பிழிந்து வைத்து விட்டு, ஊறுகாய் பரணியைத் தேடிய சின்னத்தம்பியா பிள்ளையை, போர்த்திக்கொண்டு படுத்திருந்த அவர் மனைவி விசித்திரமாகப் பார்த்தாள்.
இதுதான் இவரது முதல் குழந்தை. 1975ஆம் ஆண்டு பிறந்தது. ஜூலைத் திங்கள் தீபம் இதழ் உலகிற்குக் காட்டியது. அவ்வாண்டு இலக்கிய சிந்தனைப் பரிசு பெற்ற ஊட்டமுள்ள குழந்தை. இதன் பெயர் ‘விரதம்’.
சின்னத்தம்பியா பிள்ளை, அவ்வூரை வளைத்து ஓடும் ‘தேரேகால்’ பற்றியும், அவர் குளித்ததைப் பற்றியும் விளக்கமாக ஒரு பக்கத்திற்கு மேல் அடுத்தடுத்து விளக்குகிறார். அது அகண்ட காவேரி அல்ல என்றாலும், மணலை அரித்துக்கொண்டு சலசலவென ஓடும் என்பதிலிருந்து, ஆனி அல்லது புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பெய்யும் பருவ மழையில் நுங்கும் நுரையுமாகப் புரண்டோடும் புது வெள்ளத்தில் சிறுவர்கள் பாலத்திலிருந்து, புன்னை மரக்கிளையிலிருந்து ஊஞ்சலாடிக்கொண்டே பாய்ந்து விடுவார்கள் என்பது வரை அப்படியே விளக்கி எழுதியிருக்கிறார். கண்கள் பார்த்து,  மனத்தில் பதித்து வைத்ததை அப்படியே விவரிக்கும் பாணி முதல் கதையிலேயே வடிவெடுக்கிறது.
  நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம்
தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)

விரதம்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

  1. பாலா,சிங்கப்பூர் சொல்கிறார்:

    மிகச்சமீபத்தில்தான் இச்சிறுகதையை வாசித்தேன்.இன்னும் கொஞ்ச நாள் போனால் தேரேகால்புதூர் ஆறே இருக்காது. போய் பாக்கிறவங்க இப்பவே போய் பாத்துகங்க:)
    ( இப்பவும், பரமரிப்பின்றி “நானும் இருக்கிறேன்” என்றுதான் முக்கி முனங்கி வழிந்தோடிக்கொண்டிருக்கிறது)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s