நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி. சுபாஷிணி

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம்
தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)
இடம்: 39, அழகரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை – 78. நேரம், பிற்பகல் 2 மணி.
வீடே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது.
வீட்டின் கொல்லைப்புறம் பெருக்கிச் சுத்தம் செய்யப்படுகிறது.
வாடகைக்குத் தருவித்த நீலநிற பிளாஸ்டிக் நாற்றகாலிகள் அணி அணியாக அமர்த்தப்படுகின்றன. இதனுடைய நீல நிறத்தின் பிரதிபலிப்புதான் ஆகாயமாக இருக்குமோ?
ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள் இரண்டு, அவற்றுடன் போட்டி போட்டுக்கொண்டு இயல்பு மீறி வளர்ந்து நிற்கும் மாமரம் ஒன்று, செந்நிற வாதம் பழங்களுடன் பசிய இலைகளுடன் கூடிய வாதம் மரம் ஒன்று, குறைந்த இலைகளுடன் கூடிய அரிநெல்லி மரம் ஒன்று, சிறிதும் பெரிதுமான மூன்று வாழை மரங்கள் ஆகிய இவற்றுடன் கேணி ஒன்று – ஆகியவை அவ்வீட்டின் கொல்லைப் புறத்தின் அழகு அம்சங்கள் ஆகும்.
கிணற்றடியின் சிமெண்ட் தளத்திலும் பாய்கள் விரிக்கப்பட்டன. அனைவரையும் “வாருங்களேன், வந்து அமருங்களேன்” என அழைக்கும் விதமாக இருக்கின்றது.
இனி வீட்டு முகப்பிற்குச் செல்வோம்.
போர்டிகோவின் மேல் தளத்திலிருந்து கேணி என எழுதப்பட்ட வட்ட வடிவ முறம் ஒன்று தொங்கவிடப்படுகிறது. வாசல் கிரில் கதவிலும், பின்வாசல் கதவிலும் ஞாநியின் ‘பாரதி’ போஸ்டர் மாட்டியவுடன்  வீட்டிற்கே ஒரு தனிக் களை வந்துவிடுகிறது.
இருவர், பால், சர்க்கரை பிஸ்கட், பேப்பர் டம்ளர், டீத்தூள் வாங்கி வர விரைகின்றனர். வேறு இருவர் குடிப்பதற்கான தண்ணீர் வைப்பதற்கு ஏற்பாடு செய்கின்றனர். இவையனைத்து செயல்களுமே இவ்வீட்டில் கடந்த பதினைந்து மாதங்களாக ஒவ்வொரு இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையும் நடக்கும் குதுகலமான நிகழ்வுகளாகும். இவ்வேலைகள் ஞாநியின் பரீக்ஷா நண்பர்கள் தானாக வந்து செய்யும் வேலைகள் ஆகும். அன்று காலையில் பரீக்ஷா நாடக ரிகர்சல் இருந்தால், மதிய உணவோடு வேலைகள் தொடரும். ஞாநியின் தோழி பத்மா இவற்றை ஒருங்கிணைத்து உதவுவார்கள்.
ஆம், நீங்கள் நினைத்தது சரிதான். இது மூத்த பத்திரிகையாளரும், பரீக்ஷா நாடக இயக்குநருமான ஞாநியின் வீடுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணியிலிருந்து இடம் பெயர்ந்து இவ்விடம் வந்தவுடன், இவ்வீட்டு கிணற்றடி அவருக்கு மிகவும் உற்சாகத்தை அளித்திருக்கின்றது. இங்கு இலக்கிய அமைப்பு வைத்து நடத்தலாமே என்ற எண்ணம் உதித்ததும், அருகே வசிக்கும் சிறந்த எழுத்தாளரும், சின்னத்திரை மற்றும் திரைப்பட வசன எழுத்தாளருமான கலைமாமணி பாஸ்கர் சக்தியுடன் கலந்து ஆலோசித்ததில், கேணி என்ற இவ்வமைப்பு பிறந்தது. இதில் இயல், இசை, நாடகம் ஆகிய துறையிலிருந்து சிறந்த இலக்கிய படைப்பாளிகளை அழைத்து, வாசகர்களுடன் பகிர்தலுடன், கருத்து பரிமாற்றமும் நடத்தலாம் என்று திட்டம்.
திரு. நாஞ்சில் நாடன் அவர்களை அங்கு சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தீதும் நன்றும் என்னும் அவருடைய கட்டுரைத் தொடரை விகடனில் பார்த்திருக்கிறேன். முழுமையாகப் படித்ததில்லை. கேணியில் நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பணி டீ தயாரித்து அனைவருக்கும் அளிப்பது. எனவே நண்பர்களின் உதவியோடு அப்பணியை முடித்துக்கொண்டு கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். வேலை நிமித்தம் வட இந்தியா சென்று அங்கு அவர் எத்துணை முனைப்பாக கம்ப இராமாயணம் கற்றுக்கொண்டார் என்பதை அவர் பகிர்ந்துகொண்டிருந்தார்.
1974இல் பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் கம்ப இராமாயண வகுப்பு தொடங்கியபோது, 19 மாணாக்கர் இருந்தார்கள். ஆசிரியர் இன்று அமரரான ரா. பத்மநாபன் அவர்கள். காரைக்குடி அழகப்பாச் செட்டியார் பொறியியல் கல்லூரி நிர்வாக மேலாளராக ஓய்வு பெற்றவர். வாரம் 3 நாள்கள் வகுப்பு. மும்பைப் பகுதியில் அரசு பொதுமருத்துவமனைக்கு எதிரே அமைந்திருந்தது பம்பாய் தமிழ்ச் சங்கம். திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மாலை 6 முதல் 8 வரை.
நான் அப்போது பம்பாய் சென்ட்ரல் ரயில்வே ஹார்பர் பிராஞ்சு இரயில் பாதையின் மேற்பகுதியில் ஓடிய ரே ரோடு, அட்லஸ் மில்ஸ் காம்பவுண்டில் தொழிற்சாலை ஒன்றில் ஸ்டோர்ஸ் கிளார்க் வேலை. ஐந்தே காலுக்கு வேலை முடிந்து, பசிக்கும் வயிற்றுடன் ஹார்பர் பிராஞ்சு ரே ரோடு ஸ்டேஷனில் ரயில் பிடித்து, கிங் சர்கிள் ஸ்டேஷனில் இறங்கி, சயான் நெடுஞ்சாலையில் நடக்க வேண்டும். அப்போது எனக்கு மாதம் 210 ரூபாய் சம்பளம். வீட்டிற்குக் கண்டிப்பாக 25 ரூபாய் அனுப்பிப் போக மிச்சத்தில், ரூம் வாடகை, ரயில் சீசன் டிக்கெட், உணவு, சோப்பு, எண்ணெய், பற்பசை, முகச் சவரப் பொருட்கள், செருப்பு, பூட்ஸ், உடைகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, வாரந்திரி.. கையில் நாலணா இருந்தால் இரண்டு வடா பாவ் வாங்கித் தின்று தமிழ்ச் சங்கத்தில் போய்த் தண்ணீர் குடிப்பேன்.
பத்தொன்பது மாணவரில் நான் இளையவன். 27 வயது. மிகவும் மூத்தவர் ஓய்வு பெற்ற கப்பல் கம்பெனி அதிகாரி 72 வயது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வகுப்புத் தேய்ந்து 14, 9, 5 என்று 3 ஆகி அதுவும் நீர்த்து, ஒன்றென நான் மட்டும் நின்றேன். ரா. பத்மநாபன் குடியிருந்த கைலாஷ் பவன் ஹவுஸிங் சொசைட்டி, கிங் சர்க்கிளில் இருந்து மூன்றாவது கட்டடம். எதற்கு இரண்டு பேருமே நடக்க வேண்டும் என்ற ஆசிரியர் வீடே வகுப்பிடம் ஆயிற்று.
இப்படியாக 4 ஆண்டுகள் கம்பன் வகுப்பு நடைபெற்றது. இடைச்செருகல் அல்லது கௌரவமான மொழியில் மிகைப் பாடல்கள் உட்பட அனைத்துப் பாடங்களும் கற்றேன். பாகம் 11, ஆறு காண்டங்கள், கடவுள் வாழ்த்து உள்ளிட்ட பாடல்கள் 10,357. மிகைப் பாடல்கள் 1293 மொத்தம் 11,661 பாடல்கள்.
நான் திறந்த வாய் மூடாது கேட்டுக்கொண்டிருந்தேன். பிரமிப்பால் அசைவற்று இருந்தேன். ஆட்டோவில் இங்கே வந்து போவதே நான் என்னவோ பெரிய செயல் செய்வதாக இறுமாந்திருந்தேன். இவ்வளவு முனைப்பாக இடையறாது நான்காண்டுகள் என்பது எவ்வாறு சாத்தியமாயிற்று? எவ்வளவு திண்ணிய எண்ணம் இருந்திருந்தால் அவர் இதைச் சாதித்திருப்பார். இந்தப் பிரமிப்பிலிருந்து மீள, பல நாள்களாகிவிட்டன. மனத்திற்குள் அவரது திட சித்தத்திற்குத் தலை வணங்கினேன். இந்தப் பிரமிப்போடுதான் நாஞ்சில் நாடன் அவர்கள் எனக்கு அறிமுகமானார்.
(நாஞ்சில் நாடனின் ஒவ்வொரு நாவல்களையும், சிறுகதைகளையும் படித்து கதைச் சுருக்கத்துடன் வரிவரியாய் மதிப்புரைக்கும்
 தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை) அவர்களின் சிறந்த இரு முழுக்கட்டுரைகளையும் வாசிக்க:
 நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 2

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s