நாஞ்சில் நாடனுக்கு தி.க.சி பாராட்டு

( நெல்லையில் 30.01.2011 அன்று , சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமை வகித்து தி.க.சி நிகழ்த்திய உரை )
 அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களே ..
 வணக்கம் . சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்குவதில் மிக்க பெருமையும் , பூரிப்பும் அடைகிறேன் . இந்த அரிய விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள ‘ தமிழ்கடல் ‘ நெல்லை கண்ணன் அவர்களின் 66 வது பிறந்த தின விழாவும் , ‘ பழம்பாடல் – புதுக்கவிதை ‘ என்ற அவரது நூல் வெளியீட்டு விழாவும் , எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது .
 முதலில் நாஞ்சில் நாடன் – அவர்களைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சில சொற்கள் :
ஆறு நாவல்களும் , ஒன்பது சிறுகதை தொகுப்பும் , ஏராளமான கவிதைகள் , கட்டுரைகளும் கடந்த 35 ஆண்டுகளாக எழுதி வருகின்றார் நாஞ்சில் நாடன் . எனினும் இங்கு அவரது கட்டுரைகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன் . சென்ற ஆண்டு ‘ விகடன் ‘ வார இதழில் வெளிவந்த ‘ தீதும் , நன்றும் ‘ என்ற அவரது கட்டுரைத் தொடர் , அவர் சிறந்த படைப்பாளி மட்டுமல்ல – சிறந்த சமூக நல ஆர்வலர் என்பதைக் காட்டுகிறது .
 ‘ மண் பயனுற வேண்டும் – வானகம் இங்கு தென்பட வேண்டும் – நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் – நானிலத்தவர் மேனிலை எய்தவும் ‘ – ஒரு எழுத்தாளனின் படைப்புகள் பயன்பட வேண்டும் எனக் கருதினான் மகாகவி பாரதி . அவரது வாழ்க்கைத் தத்துவத்தைச் சீரிய முறையில் , தமது படைப்புகளில் பிரதி பலிக்கின்றார் திரு.நாஞ்சில் நாடன் . தமிழ் மக்களின் வாழ்வில் எது தீது ? எது நன்று ? என்பதையும் சுட்டிக் காட்டும் சமுதாய விமர்சனமாக அக்கட்டுரைகள் அமைந்துள்ளன . அவை அவரது அறச்சீற்றத்தையும் , சமுதாய பொறுப்புணர்வையும் காட்டுகின்றன .
 இது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்தினராலும் , வாசகர்களாலும் , அறிஞர் பெருமக்களாலும் பெரிதும் பாராட்டப் பெற்றுள்ளது . இன்றையக் காலகட்டத்தில் , ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு சிறந்த கலைப் படைப்புகளைத் தருவதுடன் , மிக உயர்ந்த சமுதாயப் பொறுப்பும் , கடமையும் இருக்கின்றன என்பதை நன்கு உணர்ந்துள்ளார் நாஞ்சில் நாடன் .
 நாஞ்சில் நாடனின் ஆளுமை எனது பார்வையில் :
 வள்ளுவன் , வள்ளலார் , பாரதி , பாரதிதாசன் , புதுமைப்பித்தன் , ஜீவா ஆகியோரின் தலைசிறந்த பண்புக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது . இத்தகைய உயரிய ஆளுமை தான் , பண்பு நலன்கள் தான் – அவரை மென்மேலும் படைப்புச் சிகரங்களுக்கு இட்டுச் செல்ல முடியும் என நான் கருதுகிறேன் . ஒருவன் சிறந்த படைப்பாளியாக இருக்கலாம் ; ஆனால் மிகச் சிறந்த மனிதனாகவும் இருக்க வேண்டும் என்பது எனது ஆழமான கருத்து . நாஞ்சில் நாடனிடம் ஆணவம் இல்லை ! அடக்கம் இருக்கிறது ; பணிவு இருக்கிறது . அன்பு இருக்கிறது ; நன்றி உணர்வு இருக்கிறது . இவரிடம் மேட்டுக்குடி மனப்பான்மை இல்லை ; கடையனையும் – கடைத் தேற்ற வேண்டும் என்ற மாபெரும் சிந்தனை இவரிடம் மேலோங்கி நிற்கிறது . இவரிடம் குறுகிய குழு மனப்பான்மை இல்லை ; கூடி வாழ்ந்தால் , தமிழ்ச் சமுதாயம் கோடி நன்மை பெற்று இவ்வுலகில் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்னும் கூட்டுறவு எண்ணமும் உள்ளது . இத்தகைய ஆளுமைக்காகவே தமிழகத்தில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவராகிய நாஞ்சில் நாடனை நான் உளமாரப் போற்றுகிறேன் ; பாராட்டுகிறேன் . படைப்புத் துறையில் இவர் மென்மேலும் வளர்க , வெல்க என வாழ்த்துகிறேன் .

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நாஞ்சில் நாடனுக்கு தி.க.சி பாராட்டு

  1. Rathnavel Natarajan சொல்கிறார்:

    திரு தி.க.சியின் நல்ல பாராட்டு உரை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s