கமண்டல நதி (2) ஜெயமோகன்

ஜெயமோகன்
முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/03/21/ஜெயமோகன்கண்டகும்பமுனி/

2

ஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் எதிராக உள்ள அல்லது மாற்றாக உள்ள கதாபாத்திரம் ஒன்றிலும் அதே ஆசிரியனைக் கண்டடையலாம். தல்ஸ்தோயின் பியரியல் (போரும் அமைதியும்) தஸ்தயேவ்ஸ்கியின் திமித்ரியில் (கரமஸோவ் சகோதரர்கள்) தாராசங்கர் பானர்ஜியின் பிரத்யோகத் டாக்டரில் (ஆரோக்கிய நிகேதனம்) நாம் காண்பதும் அதன் ஆசிரியர்களையே.
கதாபாத்திரங்கள் ஆசிரியனின் ஆடிப்பிம்பங்கள். உடைந்து சிதறிய, பரவிக் கிடக்கிற, வளைந்து நெளிந்த, பல வண்ணம் காட்டும் கண்ணாடித் துண்டுகள் அவை. அவற்றினூடாக அவன் ஒளிந்து விளையாடவும் தன்னைக் கண்டடையவும் ஒரே சமயம் முயல்கிறான். எழுத்தாளனுக்கும் கதாபாத்திரங்களுக்குமிடையேயான உறவு என்பது மிக மிகச் சிக்கலானதும் நுட்பமானதுமாகும்.
ருஷ்ய நாவல்களுக்குப் பிற்கால ருஷ்ய விமரிசகர்கள் எழுதிய நீண்ட முன்னுரைகளில் பெரும் நாவல்களின் மூலக் கதாபாத்திரங்கள் யார் எவன் என்ற விரிவான ஆய்வுகள் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ‘போரும் அமைதியும்’ (தல்ஸ்தோய்) போன்ற நாவல்களின் ஆசிரியரின் முகங்களுடன் அவரது மனைவி, மனைவியின் தங்கை, பாட்டிகள், தந்தை, தாத்தாக்கள் எனப் பலரும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். படைப்பில் சமூக யதார்த்தத்தின் சித்திரத்தை இயந்திரத்தனமாகக் கண்டடைய முற்பட்ட மார்க்ஸிய ஆய்வே இவ்வாறு ‘குடும்ப யதார்த்தையும்’ கண்டடைந்தது. உண்மையில் இது அத்தனை எளியது அல்ல.
ஒரு கதாபாத்திரத்திற்குள் எழுத்தாளன் நுழைவது எப்படி? அதற்குப் பல காரணங்கள். ஒன்று, ஒரு குறிப்பிட்ட யதார்த்தத்தை தான் நேர் வாழ்வில் பார்த்தபடியே படைப்பில் அளிக்க விரும்பும் படைப்பாளி யதார்த்தத்தைச் சித்திரிப்பவனின் கதாபாத்திரத்தில் குடியேற்றுகிறார். தன் கண்களை அவனுக்கு அளிக்கிறார். அவன் வழியாகப் பேச முற்படுகிறார். இதுவே பொதுவாகக் காணப்படும் வழிமுறையாகும். இரண்டு, தான் ஆக விரும்பும் பிம்பம் ஒன்றைத் தன் இயல்பாகக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தைப் படைப்பாளி உருவாக்கும்போது அவன் ஆளுமை அந்தக் கதாபாத்திரம் மீது படிகிறது. மூன்று, கதைக்களத்திற்குள் ‘வாழும்’ அனுபவத்தைத் தானும் அடையும்பொருட்டு படைப்பாளி தன்னை ஏதோ ஒரு கதாபாத்திரத்திற்குள் கூடு பாயவிடுகிறான். படைப்புடன் அதன் மூலம் விளையாடுகிறான்.
நவீனக் கதைகூறல் உத்தியின் ஒரு பகுதியாக ஆசிரியனே கதைக்குள் வருவது இப்போது வழக்கம். ஒருபோதும் இந்த ஆசிரியனை நாம் அப்படைப்பாளியாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் அவன் தானே திட்டமிட்டு, தன் சுயபோதத்துடன், படைப்புக்குள் தன்னைக் கொண்டுவருகிறான். இந்தத் திட்டமிடலும் சுயபோதமும் அக்கதாபாத்திரத்தைப் பெரிதும் குறுக்கி தட்டையான ஒன்றாக மாற்றிவிடுகின்றன. படைப்பில் எப்போதும் படைப்பாளியை ‘மீறி’ நிகழும் விஷயங்களுக்கே மதிப்பு. ஆசிரியன் ஆசிரியனாகவே வெளிப்படும் நாவலில் வேறு ஒரு கதாபாத்திரத்தில் உண்மையான ஆசிரியன் ஒளிந்திருக்கக்கூடும். சிறந்த உதாரணம் சுந்தர ராமசாமியின் ‘ஜே. ஜே: சில குறிப்புகள்’, ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ போன்ற நாவல்கள் இரண்டிலும் ‘பாலு’ என்ற பேரில் சுந்தர ராமசாமி தன்னைக் காட்டுகிறார். ஆனால் ஜே. ஜேயின் குணச்சித்திரத்திலும் எஸ்.ஆர்.எஸ்ஸின் குணச்சித்திரத்திலும் வெளிப்படும் சுந்தர ராமசாமியே மேலும் உண்மையானவர்.
இவ்வாறு ஒரு கதாபாத்திரத்தில் நாம் ஆசிரியனை ஏற்றிக்கொண்டபிறகு அவனுடைய கோணம், அவனுடைய மொழி நடை ஆகியவற்றின் வழியாக அவருடைய மொத்தப் படைப்புலகையும் ஆராய்ந்து பார்க்கும்போது பொதுவாகக் கண்ணில் படாத பற்பல இலக்கிய நுட்பங்களையும் ஆழங்களையும் நாம் கண்டடைய இயலும். பல வகைப்பட்ட எழுத்துக்களாகப் பரவிக் கிடக்கும் ஒரு புனைவுலகில் வெளிப்படும் பல்வேறு கோணங்களுடனும் குரல்களுடனும் அது எப்படி முரண்படுகிறது அல்லது இணைகிறது என்பதை அவதானிக்க முடியும்.
ஆனால் இதை ஒற்றைப்படையாகச் செய்யலாகாது என்பதையும் கூறியாக வேண்டும். படைப்பாளியின் குரலாக வெளிப்படும் அக்கதாபாத்திரமே ஓர் ஆளுமையல்ல, ஒரு புனைவுதான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். அந்தப் புனைவுக்குத் தேவையான கற்பனை ஓட்டங்கள் சமரசங்கள் தலைகீழாக்கங்கள் ஆகியவை அதில் நிகழ்ந்திருக்கும். இந்த மூன்று விஷயங்களையும் எடுத்துச் சொல்லியாக வேண்டும். தன்னைப் போன்ற அக்கதாபாத்திரத்தை அது வெளிப்பட்டதுமே படைப்பாளி அடையாளம் கண்டுகொண்டிருப்பான். உடனடியாக அவன் அதை முற்றிலும் கற்பனையான ஒரு சூழலில் நிறுத்துவான். அதன் தோற்றம், வயது, சூழல் அனைத்தையும் புனைந்து உருவாக்குவான்.
அது பேச ஆரம்பிக்கும்போது தன் படைப்பில் உள்ள முரண்பாடுகளை முழுக்க அக்கதாபாத்திரம் சந்திப்பதை உணரும் படைப்பாளி சமரசம் செய்ய ஆரம்பிப்பான். அக்கதாபாத்திரத்தின் குரல் ஆசிரியனின் குரலாக அதுவரை ஒலித்த அனைத்துக் குரல்களுக்கும் உரிய பொதுப்புள்ளியாக, சமரச மையமாக விளங்கும். அத்துடன் தன்னை ஒளித்துக்கொள்ள படைப்பாளி கதாபாத்திரச் சித்திரிப்பை தலைகீழாக்குவான். சிறப்பாகப் பேசத் தெரியாதவரும் நடைமுறையில் முசுடுமான சுஜாதா அவர் சாயலில் படைத்த வசந்த் வாயாடியாகவும் உற்சாகமானவனாகவும் இருக்கும் மர்மம் இதுவே. இத்தனை படைப்பு நுட்பங்களையும் கணக்கில் கொண்டே இதை நாம் ஆராய வேண்டும். இது இலக்கிய ரசனையின் ஓர் உத்தி மட்டுமே என்ற தெளிவும் நமக்கு இருக்கவேண்டும்.
நாஞ்சில்நாடனின் சிறந்த கதாபாத்திரம் ‘கும்பமுனி ’தான்; சுந்தர ராமசாமிக்கு ஜே.ஜே. போல. நாஞ்சில்நாடனின் எழுத்து வாழ்வின் பிற்பகுதியில் உருவாகி வந்த இந்தக் கதாபாத்திரத்தை தீவிரமாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது. முதலில் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. நாஞ்சில்நாடன் படைப்புகளில் மைய இடம் பெற்ற, கோபம் கொண்ட, அந்நியமான, அலைந்து திரிகிற இளைஞன் என்ற கதாபாத்திரம் கிட்டத்தட்ட மறைந்த பிறகு கும்பமுனி பிறந்தார் என்பது. தலைகீழ் விகிதங்கள் (சிவதாணு) மாமிசப் படைப்பு (கந்தையா) என்பதனை வெயில் காயும் (சுடலையாண்டி) மிதவை (சண்முகம்) சதுரங்கக் குதிரை (நாராயணன்) எட்டுத் திக்கும் மதயானை (பூலிங்கம்) போன்ற நாவல்கள் அனைத்துமே பிறந்த ஊரால் துப்பி எறியப்பட்டு சென்ற இடத்தில் ஒவ்வாமல் உணர்ந்து, வந்து சென்றபடியே இருக்கும் மனிதர்களின் அனுபவங்களும் எண்ணங்களும் தொகுக்கப்பட்ட வடிவில் உள்ளன. இந்த வேகம் அடங்கி இந்தக் கதாபாத்திரங்கள் மறைந்தபின் கும்பமுனி வந்து சூரல் நாற்காலியில் அமர்ந்தார்.
கும்பமுனி நாஞ்சில்நாடனின் விருப்பப் பிம்பம். அநேகமாக அதை மறைந்த இலக்கியவாதியான நகுலனின் சாயலில் படைத்திருக்கிறார். ‘சற்றே சாய்ந்த சூரல் நாற்காலி’ நகுலனின் ‘மழை மரம் காற்று’ என்ற நீள்கவிதையில் இருந்தும் (அவரது வாழ்க்கையில் இருந்தும்) எடுக்கப்பட்டது. நகுலனுக்குரிய ‘நாண் அறுந்த நிலை’ கும்பமுனியிலும் உண்டு. ‘திரொளபதி அவள். வந்து போகும் அர்ச்சுனன் நான்’ என முன்வைக்கப்பட்ட (கொல்லிப்பாவை; நகுலன்) ஒரு சுசீலா, கும்பமுனிக்குக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்க வேறுபாடு. நகுலன் முற்றிலும் கைவிடப்பட்டவராக உணர்பவர், ‘எனக்கு யாருமில்லை நான்கூட!’ என்று. கும்பமுனிக்கு எப்போதும் சமையற்காரர் துணை உண்டு.உறவுகள் உண்டு. அனைத்தையும் விட முக்கியமான வேறுபாடு நகுலன் நிலமற்றவர் என்பது. அவர் வாழ்ந்த நிலத்தில் அவரது பாதம் ஊன்றவில்லை. அவர் மனம் வாழ்ந்த படைப்பிலக்கியங்களின் பக்கங்களே அவரது நிலம். மாறாக கும்பமுனி நாஞ்சில் நாட்டுக்காரர். சுத்தமான நாஞ்சில் தமிழ் பேசுபவர். காணத்துவையலும் கொடுப்பைக்கீரை கூட்டுக்கறியும் விரும்பி உண்பவர். நகுலன் ஐரோப்பிய நிழல். கும்பமுனி நாஞ்சில் நாட்டின் புராதனமான ஒரு மரம்.
நகுலன் மீது தன்னை ஏற்றும் நாஞ்சில்நாடன் திட்டவட்டமாக அதைத் தன்னிடமிருந்து மறைக்கிறார்.. கும்பமுனிக்கு வயோதிகம். நோய்கள். கண்ணும் செவியும் பிடியில் நிற்பதில்லை. ஆனால் குணாதிசயத்தில் நாஞ்சில்நாடன் அவருள் வந்து உறைகிறார். கும்பமுனி ஐரோப்பிய இலக்கியங்களுக்குள் அதிகம் முக்குளியிடுவது இல்லை என்பதை வாசகர் கவனிக்கலாம். கம்பராமாயணம், திருமந்திரம், சைவத் திருமுறைகள் ஆகியவையே அவரது மேற்கோள்களின் விளைநிலங்களான உள்ளன.
நகுலனில் அறவே இல்லாத ஒரு அம்சம் கும்பமுனியில் உள்ளது. அங்கதம். நகைச்சுவையின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் சாதாரணமாகச் செல்கிறது கும்பமுனியின் நாக்கு. நகுலனில் உள்ள ஒருவகை அப்பாவித்தனம் அவரிடம் இல்லை. கிழம் விஷமமானது. வாய்ப்புக் கிடைத்தால் ஊசி ஏற்றி அதையே கடப்பாரையாக மாற்றிவிடும். எல்லா வகையிலும் வாயாடியான கிழத்தை அவரது சமையற்காரர் அன்றி பிறர் சமாளித்துவிட முடியாது. கும்பமுனி நாஞ்சில்நாடனாக ஆவது இங்குதான்.
அடிப்படையில் கும்பமுனி ஓர் எழுத்தாளர். அதுவும் சிற்றிதழ்களில் எழுதும் நவீன எழுத்தாளர். ஆனால் நாஞ்சில் நாட்டில் சித்த வைத்தியமோ நாடிசோதிடமோ பார்க்கும் ஒரு முதியவரின் மனநிலைதான் அவரிடம் உள்ளது. ஒரு நவீன மனம் அடைவதாகக் கூறப்பட்ட பலவிதமான தத்துவ, ஆன்மீக, சமூகத் தொந்தரவுகள் அவரிடம் இல்லை. எழுதுவதற்குப் பணம் பாராமை, எவரும் தான் எழுதியதைப் படிக்காமை போன்ற இலக்கிய மனவருத்தங்களுக்குப் புறமே நாடு போகிற போக்கைப் பார்த்து அடைந்த பொதுவான மனக் கசப்பும்தான் அவரிடம் உள்ளது. அவரைவிட அதிகமான நவீனச் சிக்கல்கள் காணத்துவையல் அரைக்கும் தவிசுப் பிள்ளையிடம் இருக்கும்போலும். கும்பமுனிக்கு உலகுமேல் ஏதும் ‘பராதிகள்’ இல்லை. அப்படி உறுதியாகவும் சொல்லிவிடமுடியாது. கிழத்தை உட்காரவைத்துக் கேட்டால் அவருக்கு பராதிகள் தவிர வேறு ஏதும் இல்லை. ‘போங்கலே வக்கத்தவங்களே’ என்று சொல்லிவிடுவார்.
கும்பமுனியில் இருந்து தொடங்கினால் அதற்கு நேர் எதிர் கதாபாத்திரமாக நாம் எதை உருவகிக்கலாம்? நாஞ்சில் நாடனின் அனைத்து நாவல்களிலும் வரும் அந்தக் கோபம் கொண்ட இளைஞனைத் தான். அது சிற்சில வேறுபாடு களுடன் விளங்கும் ஒரே மனம்தான். அதன் இயல்புகளை இவ்வாறு வகுத்துக் கூறலாம். அவன் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயதில் பெரும்பாலும் வறுமை, புறக்கணிப்பு ஆகியவற்றை மட்டுமே அறிந்தவன்.
மறக்கமுடியாத சில அவமானங் களைச் சந்தித்து அவற்றின் வடுவை கடைசிவரை ஆத்மாவில் சுமந்து அலைபவன். அடிப்படையில் கோழை. ஆனால் ஓயாது முண்டி முன்னேறத் துடிக்கும் தீவிரம் உடையவன். எப்படியோ எங்கும் தன்னை நிலைநாட்டிக் கொள்பவன். வாழ்வு தேடி ஊரில் இருந்து செல்பவன், அல்லது துரத்தப்பட்டவன். சென்ற இடங்களில் அந்நியனாகவே உள்ளூர உணர்கிறான். திரும்பி வந்தால் ஊரிலும் அந்நியனாக உணர்கிறான். இரு எல்லைகள். நடுவே பயணத்தில் மட்டும்தான் அவனால் உற்சாகமே இருக்க முடிகிறது.
நாஞ்சில் நாடனின் இந்தக் கதாபாத்திரங்களின் ஓர் இயல்பை நாம் உற்று கவனிக்க வேண்டும். ஓயாமல் உள்ளூரப் பேசிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரங்கள் இவை. அந்தப் பேச்சு என்பது எப்போதுமே அங்கதமும் கசப்பும் கலந்த விமரிசனம்தான். இக்கதாபாத்திரங்கள் எதிர்ப்படும் ஒவ்வொன்றின் மேலும் தங்கள் விமரிசனத்தை விரித்த படியே உள்ளனர். ஆனால் வெளியே மௌனமான ஒரு புன்னகையும் உபச்சாரமொழிகளையும் வெளிப்படுத்துகின்றனர்.
மிதவையில் வரும் சண்மும் தன் ஏமாற்றங்களை வெளிப்படுத்தியபடியே இருக்கிறான்; சதுரங்கக் குதிரையில் வரும் நாராயணன் தன் சலிப்பை. எட்டுத் திக்கும் மதயானையில் வரும் பூலிங்கம் தன் செயல் களுக்கான நியாயப்படுத்தலாக அதே மன ஓட்டத்தை முன்வைக்கிறான். இக்கதாபாத்திரங்கள் வாய் திறந்து ஆவேசமாக சில சமயம் பேசினாலும் அங்கதமகாவும் விமரிசனமாகவும் ஒலிப்பது அனேகமாக இல்லை.
அவ்வாறு பேசாமல் விழங்கப்பட்ட அவர்களின் சொற்களைப் பேசுபவராகவே கும்பமுனி அவதாரம் செய்தருளியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. கும்பமுனியில் சபைச்கூச்சம் இல்லை. கோமணம் தெரிய சாய்வு நாற்காலியில் படுக்கலாம். கும்பமுனிக்கு எந்தவித சமூகச் கூச்சமும் இல்லை, கீரைக்காரியிடம் கூட வம்படிக்கலாம். எல்லாவற்றையும் விமரிசனம் செய்யலாம். எரிந்து விழலாம். கும்பமுனியின் வழியாக நாஞ்சில் நாடன் கண்டடைந்து எதை? பேசுவதற்கான குரலை என்று சொல்லலாம். அதை விடப் பேசுவதற்கான உரிமையை அல்லது அனுமதியை என்று கூறுவதே உசிதமானது. நமது சமூகத்தில் வயது ஒரு சலுகையை அளிக்கிறது. ‘வயசானவன் சொல்றேன்’ என்பது ஒருவகை ரூபாய் நோட்டு போல எங்கும் செல்லுபடியாகக்கூடிய சொல்லாட்சி. அகம் சற்று தெளிந்து, பேச்சு சற்றுக் கலங்கி, சற்றே சாய்வான நாற்காலியில் ‘மூலக்குரு’ தொந்தரவுடன் சரிந்த பிறகுதான் பேச ஆரம்பிக்கிறது நாஞ்சில் நாடனின் அகம். அதுவே கும்பமுனி.
கும்பமுனி மிக எளிமையானவர், நேரடியானவர். அடிப்படையில் நட்பார்ந்தவர். முசுட்டுக்குணம் என்பது தாத்தாவின் ஒருவகையான பாவனைதான். மூலக்குரு உபத்திரவம்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். கசந்து கசந்து கரித்தாலும் பேசுவதும் தாத்தாவுக்குப் பிரியமான காரியம்தான். வருபவர்களின் அடிமடியிலேயே கையை வைத்தாலும்கூட தாத்தாவுக்கு பசங்கள் தேடிவருதில் மகிழ்ச்சிதான். தோள் வழியாகத் துவர்த்தை வழியவிட்டபடி அமர்ந்து டிவிக்கு பேட்டிகள் கொடுக்கக்கூட அவர் தயார்தான். குகையில் வாழும் தனித்த ஓநாய் கைவிரித்து அவர். பேரன் பேத்தி பிள்ளைகளுடன் ஆலமர விழுதுகள் போல கைவிரித்து நின்றுகொண்டிருப்பவர். அவருக்கு என வாரிசுகள் ஏதும் இல்லையென்றாலும் அவரது மனநிலை எப்போதுமே ஒரு பெரிய சம்சாரியுடையதாகத்தான் இருக்கிறது. கும்பமுனிக்கு சிறு பிள்ளைகளை பொதுவாகப் பிடித்திருக்கிறது.
இக் கதாபாத்திரத்திற்கு கும்பமுனி என்று பெயர் வைத்ததன் மூலம் அதன் மீது ஒரு மதிப்பீட்டை ஏற்றுகிறார் நாஞ்சில் நாடன். கும்பத்திலே பிறந்தவன். குறுமுனி. ஆனால் நதிகளையே தன் கமண்டலத்தில் அடக்கக் கூடியவன். எதிரிகளை உண்டு செரிக்கும் வயிறு முதல் நூலாசிரியன். ஏன், மொத்த வடவர் எடையையும் தானே சரிசெய்து தென்னாட்டில் ஊன்றியவன். அகத்திய முனியைப் பற்றி எழும் ‘முது மூதாதை’ என்ற மனப்பிம்பம் இக்கதாபாத்திரத்திலும் ஏறும்படிச் செய்திருக்கிறார் நாஞ்சில்நாடன். நகுலன் சாயல் உடைய ஒரு விருப்பப் பிம்பத்திற்கு இப்பெயரைச் சூட்டியதன் மூலம்தான் அவர் ஒரே தாவலில் நகுலனைக் கடந்து வந்திருக்கக்கூடும்
.
நாஞ்சில் நாடனின் இலக்கியப் பயணத்தை கும்பமுனி வழியாக மதிப்பிடுவது மிக எளிதானது. வாசக ஆர்வத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதும் ஆகும். கும்பமுனியை நோக்கி வந்தபடிப்படியான பயணமாக அந்த இலக்கியப் பரிமாணத்தை நாம் வரையறை செய்து கொள்ளலாம். இன்னும் விரிவான பார்வையில் அருவமாக இருந்த கும்பமுனி படிப்படியாக உருத்திரண்டு வந்த பரிணாம மாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாஞ்சில் நாடனின் பழைய ஆக்கங்களிலேயே யார் யார் வாயிலோ கும்பமுனி நின்றுபேசுவதைக் காணலாம். பின்னர் அந்தக் குரல் தனக்குரிய உடலை எடுத்துக்கொண்டது என்பதே உண்மையாகும்.
கும்பமுனி என்ற மையக்கோட்டில் இருந்து வெட்டியும் விலகியும் செல்லும் பல கோடுகள் நாஞ்சில் நாடனின் படைப்புலகில் உள்ளன. இவ்விரு போக்குகளும் உருவாக்கும் முரணியக்கம் மூலம் – ஊடுபாவு மூலம் – நெய்யப்படுகிறது நாஞ்சில் நாடனின் புனைவுலகம். கும்பமுனிக்கு நேர் எதிர் கோடுகளாக வெளிப்படையாகத் தெரிபவை இரண்டு. ஒன்று சூதும் கயவும் செய்து இக உலக வெற்றியடைந்து சேற்றுப் பன்றி போல அதில் புரளும் மனிதர்கள். விற்பன் கொண்டு வந்த கருப்பட்டிகளில் ஒன்றை தொடைக்கு அடியில் மறைந்து எடுத்து வைத்துக் கொள்ளும் மூத்த பிள்ளைவாள்கள், அரசியல் எத்தர்கள், வியாபாரிகள், இலக்கிய வம்பர்கள்… கும்பமுனிக்கு நேர் எதிராக இயங்கும் இன்னொரு கோடாக நாஞ்சில் நாடனின் உலகில் பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஓர் அதிசயம்.
நாஞ்சில் நாடனின் பெண்களில் கு.ப.ரா, தி. ஜானகிராமன், வண்ணதாசன் என ஓடிவரும் ஒரு மரபின் ஒளி மிக்க முகமான கவர்ந்திழுக்கும் கனவுச்சாயல் கொண்ட பெண்ணே இல்லை. மிகமிக யதார்த்தமான இயல்பான பெண்களே உள்ளனர். (அழகிகள் கூட இல்லை. அழகிகளே இல்லாத புனைவு வகை நாஞ்சில் நாடனுக்குள் உறையும் கும்பமுனி அல்லாமல் வேறு யார் உருவாக்கியிருக்க முடியும்?) எம்.வேதசகாய குமார் ஒருமுறை உரையாடலில் நாஞ்சில் நாடனின் பெண்கள் பகல் வேலை முடிந்து குளித்துவிட்டு வரும் மாலை நேரத்தில் மட்டும்தான் அழகாக இருக்கிறார்கள் என்று கூறினார். நாஞ்சில் நாடனின் பெண்களின் இந்த அப்பட்டமான யதார்த்த மனநிலை கும்பமுனியின் குசும்பையும் தத்தளிப்பையும் ‘போக்கத்த வேலையாக மட்டுமே காணும். அவர்களின் பார்வையில் இலட்சிய வாதம், அழகியல் எல்லாமே ஒருவகை போக்கத்த வேலைகள்தான். ‘துப்பு கெட்ட’ ஆண்களின் வேலை அது.
இந்த நீண்டகன்ற வரைபடத்தில் கும்பமுனியை பூமத்திய ரேகையாகப் பதிந்து ஆராயலாம். அவரை அளவையாக வைத்து பிற இடங்களை அடையாளப் படுத்தலாம். சில வருடங்களுக்கு முன் உயிர்மை இதழில் நாஞ்சில் நாடன் ஒரு கும்பமுனி  கதையில் என்னை இழுத்திருந்தார். கும்பமுனிக்கு கதைத் தட்டுப்பாடு. பத்திரிகை அவசரத்துக்கு எழுத வரவில்லை. ‘நம்ம கணவதிபிள்ளை அண்ணாச்சி மகன் சுப்பிரமணியன் கிட்ட கேட்டுப்பாத்தா என்ன?’ என்ற தவசிப்பிள்ளையின் கேள்விக்கு “அவனுக்கு எழுதிக் குடுப்பதே ஜெயமோகன் தானே?’ என்று கும்பமுனி கூறிவிடுகிறார். அடுத்த இதழில் வாசகர் கடிதம் ஒன்று வந்திருந்தது. ‘நாஞ்சில் நாடன் கதையில் கூறப்பட்டிருந்த விஷயம் உண்மையா?’ என்று அக்கறையுடன் ஒரு விசாரிப்பு. அதை நாஞ்சில் நாடனிடம் சொன்னேன். “கும்பமுனி என்ன சொல்கிறார்?” என்று கேட்டேன். “அவருக்கு என்ன; ‘இந்தப் பயக்களால எளவு சிரிச்சும் மாளல்லியே’ என்று நினைத்துக் கொள்வார்” என்றார் நாஞ்சில் நாடன்

http://www.jeyamohan.in/?p=391

தொடரும்…

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கமண்டல நதி (2) ஜெயமோகன்

  1. Rathnavel Natarajan சொல்கிறார்:

    திரு ஜெயமோகன் அவர்களுக்கு
    திரு நாஞ்சில் நாடன் அவர்களது எழுத்தை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். இதுவரை கணினியில் தான் படித்தேன். இனிமேல் புத்தகங்கள் தேடித்தேடி வாங்கி படிக்க வேண்டும்.
    மிக்க நன்றி ஐயா.

Rathnavel Natarajan க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s