தமிழ் எழுத்தாளர்கள் அச்சப்படுகிறார்கள்….நாஞ்சில் நாடன்

தினமலர் -அங்காடித் தெரு- ரசனை

பல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட மாமிசத் துண்டு போல் உறுத்தாமல், எச்சில் பண்டத்தை தட்டி பறிக்கும் நண்பனின் நேசத்தைப் போல் இயல்பானது நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள். இவருடைய ‘சூடிய பூ சூடற்க’ என்கிற சிறுகதை தொகுதிக்கு, இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலும் தொடர்ந்து பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு, அரைநாள் விடுப்பில் கோவையில் இருந்தவரிடம் தொலைபேசி வழி கை குலுக்கினோம். உற்சாகமாக பேசத் துவங்குகிறார்.
உங்களைப் போன்ற அறிவு ஜீவிகள் குடிப்பதற்கு வக்காலத்து வாங்குவது சமூகத்திற்கு நல்லதா
நான் குடிப்பதற்கான நியாயத்தை சொல்கிறேன். குடிப்பழக்கம் ஒழுக்கம் சார்ந்த விஷயம். அறம் வேறு, ஒழுக்கம் வேறு. ஒழுக்கம் என்பது காலத்திற்கு காலம் மாறுபடக்கூடியது. அறம் என்பது எப்பொழுதும் நிலையாக இருக்கக் கூடியது. உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா சமூகமும் குடிப்பழக்கத்தை ஆதரிக்கின்றது. இன்றும் உலகத்தில் உள்ள அனைத்து பழங்குடி சமூகத்திடமும் குடிக்கின்ற பழக்கம் இருக்கிறது.இது அவர்களின் கலாச்சாரம் சார்ந்தது. அவர்களின் கலாச்சாரத்திற்குள் தலையிட நீங்கள் யார்? ஏழைகளின் சந்தோஷத்திற்கு குடி உதவுகிறது. அவர்களின் நியாங்களை நாம் புறக்கணிக்க கூடாது. அதற்காக குடித்து விட்டு சண்டையிடுவதையோ, நினைவு தெரியாமல் உருண்டு கிடப்பதையோ நான் முற்றிலும் எதிர்க்கிறேன். இது கள்ளை தடை செய்ததால் வந்த வினை. ஆனால் 650  ரூபாய்க்கு விஸ்கி குடிக்கிற நீங்கள், ஏழைகளைப் பார்த்து குடிக்க கூடாது என சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
மிக முக்கிய பிரச்சினைகளில் எழுத்தாளர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்களே?
நீங்கள் சொல்வதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். முக்கியமான பிரச்சினைகளின் பொழுது எழுத்தாளர்கள் மவுனம் சாதிப்பது ஆரோக்கியமான சூழல் இல்லை. மொழியின் மீதும், சமூகத்தின் மீதும் ஒரு எழுத்தாளனுக்கு அக்கறை வேண்டும். இங்கு அது இல்லை. மற்ற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் குழுக்களின் எண்ணிக்கை அதிகம். ஒரு குழு ஏற்றுக் கொண்டதை மறுகுழு மறுக்கும். இப்படி தமிழில் நிறைய ஒற்றைக்குரலாக ஒலிப்பதற்கு இங்கு எழுத்தாளர்களிடம் ஒற்றுமை இல்லை. முக்கியப் பிரச்சனைகளின் பொழுது குரல் கொடுப்பதை, அரசுக்கு எதிராக பேசுவது போல் நினைத்து அச்சபடுகிறார்கள். இது தவறானது. 
மண் சார்ந்த இலக்கியத்தை தொடர்ந்து ஆதரிப்பதற்கான காரணம் என்ன? 
எங்களுடைய மண்ணையும் மக்களையும் பதிவு செய்கின்ற பொழுது அவர்களுடைய பண்பாடும் பேச்சும் பதிவாகின்றது. எங்கள் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் பெரும்பான்மையான சொற்கள் சங்ககால சொற்களாகவே இருக்கின்றன. அதை என் எழுத்தில் பதிவு செய்கின்ற பொழுது, என் மண்ணின் மொழியோடு அந்தச் சங்க காலச்சொற்களும் பதிவாகின்றது. ஒரு இடத்தில பேசப்படுகின்ற வழக்கு மொழி வேறொரு இடத்தில இல்லை. தொடர்ந்து வட்டார வழக்கை பயன்படுத்துவதன் மூலம் மற்ற மொழி ஊடுருவுவதை தவிர்க்க முடியும். நம்மிடம் இருக்கும் சொற்களில், மிகக் குறைவான சொற்களை மட்டுமே பயன்படுத்துகின்றோம். இது உங்களது ஆயுதக்கிடங்கில் அதி நவீன ஆயுதங்கள் இருக்கும் பொழுது, உச்சக் கட்டப்போரில் கையெறி குண்டுகளையும், கைதுப்பாக்கியையும் பயன்படுத்துவதற்கு சமம். அந்த சொந்த துக்கம் தான், என் எழுத்தில் மண் பேச்சை பதிவு செய்ய வைக்கிறது. நாஞ்சில் நாடனின் எழுத்து 100 ஆண்டுகள் வாழ்ந்தால், அதோடு சேர்த்து 100 ஆண்டுகள் அந்த சங்க கால சொற்களும் வாழும் இல்லையா? அதற்காகவே மீண்டும் சங்க இலக்கியகங்களை வாசிக்க துவங்கி இருக்கிறேன் 
சாகித்திய அகாடமி நவீன இலக்கியவாதிகளை புறக்கணிக்கிறதா ?
ஆமாம். நவீன இலக்கியம் தெரிந்த, ஆட்கள் தேர்வுக்குழுவில் இல்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம். படைப்பிலக்கியத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்க்காகதான் 1955 ல் ஜவஹர்லால்நேரு  இதைக் கொண்டு வந்தார். ஆனால் படைப்பிலக்கியமே தெரியாத ஆட்கள், குறிப்பாக, பல்கலைக் கழக பேராசிரியர்களுக்குத் தான் அதில் இடம் கிடைக்கிறது. சாகித்ய அகாடமி உறுப்பினர்கள் தான், பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்களே தவிர, அதன் நோக்கத்தை நாம் குறை சொல்ல முடியாது. கடந்த 51 ஆண்டுகளில் 15 நவீன எழுத்தாளர்களுக்கு மட்டுமே விருது கொடுத்திருக்கிறார்கள். இது வேதனைக்குரிய விஷயம்.
நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட உங்களை போன்ற நவீன இலக்கியவாதிகள் சினிமாவில் காணாமல் போகிறீர்களே?
என்னுடைய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் ‘சொல்ல மறந்த கதை’ யானது. சமீபத்தில் இளையராஜாவின் இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். அவ்வளவு தான் சினிமாவிற்கு நான் செய்த சேவை. மற்றபடி இந்தக் கேள்வியை நீங்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோரிடம் தான் கேட்க வேண்டும்.
பேட்டிஅ. ப. இராசா 
http://www.dinamalar.com/E-malar.asp?ncat=391&showfrom=03/25/11
 தட்டச்சு உதவிக்கு பிரவீணுக்கு நன்றி (gajini@gmail.com) 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s