வாடகை வீடு

நாஞ்சில் நாடன்
 
        இந்த உலகம் நமக்கெல்லாம் வாடகை வீடுதான். சுவடு அற்றுப் போகும் வாழ்க்கை. ‘ஊர்ந்த புழுவுக்கும் சுவடு உண்டு. வாழ்ந்த வாழ்க்கைக்குச் சுவடு உண்டா?’ என்பது கண்ணதாசன்.
        ஒரு காலத்தில் மக்கள் தொகை குறைவாகவும் மாநிலம் பரந்தும் கிடந்தபோது எவரும் வாடகை வீட்டில் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. குகைகளும் மரப் பொந்துகளும் ஆதியில் வீடாக இருந்தன. பின்னர் புற்களால், ஓலைகளால், மரத்தால், மன்னால், கற்களால் குடிசைகள் அமைந்தன.
        பொன்னோ, பண்டமோ, தானியங்களோ முதலில் வாடகையாகக் கொடுத்த குடும்பம் யாதென நம்மிடம் தகவல் உண்டா? நகர்மயப்பட்டபோது, மனிதன் வாடகைக்கு குடியேறத் துவங்கி இருக்க வேண்டும்.
        எனதருமை ஈழத்துச் சகோதரர்கள், தாய் நாட்டையே வாடகைக்கு எடுத்துக் கொண்டவர்கள்,  இரவல் தாய்நாடு என்பது அவர் சோகம்.
        பட்டாளத்துக்காரன் களைந்துவிட்டுப் போன பெரியதோர் பூட்ஸ் ஒன்றில் குடியிருந்த கதை தமிழில் உண்டு. வாடகை கொடுக்காமல், சாலையோரம் கொஞ்ச காலமாகக் கிடக்கும் பெரிய சிமெண்ட் பைப்பினுள் குடும்பம் நடத்திய தெரு நாய் ஒன்று தனது குடும்ப அட்டைக்கு அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்த கதையும் மராத்தியில் உண்டு.
        ஒருவகையில் தாய் வயிறும் வாடகைக்கு குடி இருந்த வீடுதான். குடியிருந்த வீட்டை மறந்து போகும் பெரும்பான்மை மனோபாவம்தான் நமக்கு நம் தயார் மீதும், உயிருக்கு உடல் ஒரு வாடகை வீடு.
              குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
              உடம்பொரு உயிரிடை நட்பு       என்பது குறள்.
        உடம்புக்கும் உயிருக்குமான நட்பு, உறவு என்பது கூட்டைத் தனியே விட்டுவிட்டு அதில் வாழ்ந்த பறவை பறந்து போவது போல என்பது பொருள்.
        இந்தியத் திருநாட்டில் வாடகை வீடுகளில் வாழச் சபிக்கப்பட்ட கோடிக்கணக்கான குடும்பங்களில், படுதாக் கூரையின் கீழ்,  மரத்தடிகளில், ரயில்வே பிளாட்பாரங்களில், பேருந்து நிலையங்களில், கைவிடப்பட்ட அரசுக் கட்டடங்களில்,சாத்திய கடை வாசல்களில், கைவிடப்பட்ட சத்திரம் சாவடிகளில், ஊர்ப் போது மண்டபங்களில் சாலையோரத்தில் பண்டு வழிநடந்த பயணியர் ஓய்வெடுக்க மன்னர்கள் கட்டிய நாறகால் மண்டபங்களில், சுடுகாட்டுக் கூரைகளின் கீழே வாழ்கிறார்கள்.
        இரவு நடைபாதையில் கொசுவுக்கும் பனிக்கும் போர்த்துக் கொண்டு ஏகவெளியில் உறங்குவோர் உண்டு. அந்த நடைபாதைத் தூங்கிகளின் மேல் காரேற்றிக் கொள்வதும் காயப்படுத்துவதும் பணம் கொழுத்த அரசியல்வாதிகளின், நடிகர்களின் போதை பாவித்த வாரிசுகளுக்கு வீர விளையாட்டும் உற்சாகப் பொழுது போக்கும், பெருமழைக்
காலங்களில் குந்திக் கொண்டு கோழி உறக்கம் கொள்வதும் இவர்கள்தான். அவர்களுகென்று ஒரு தேவன் எப்போ வருவரோ?
        வாழ்நாள் தொலைத்துத்தான் தீர வேண்டியிருக்கிறது. சொந்த வீடு உடையவர்கள், சிறியதோர் அறையும் சமையலறையும் கழிப்பிடமும் ஆனாலும் பாக்கியவான்கள், பைபிளில் ஒரு வாசகம் உண்டு. ‘அவன் பாக்கியவான் பாறை மீது வீடு கட்டிக் கொண்டவன்’ என்று.
        30 படுக்கை அறைகள், வீட்டினுள்ளேயே நீச்சல்குளம், மின்தூக்கி, தியேட்டர், நூலகம், விருந்துக்கூடம், உடற்பயிற்சி அரங்கு, மூன்றாவது மாடி கார் பார்க்கிங், டென்னிஸ் கோர்ட் என அமைந்த சிறு குடில்கள் உண்டு. இந்தியத் திருநாட்டில் அதிலெல்லாம் தேச சேவை, கலைச் சேவை, கல்விச் சேவை, மருத்துவச் சேவை, தொழிற் சேவை, ஏற்றுமதிச் சேவை செய்வோர் வாழ்வார்கள். சேவை பிழிய வராதவர், உப்புமாவாகக் கிண்டலாம், காடியாகக் காய்ச்சலாம்.
        நமது பிழைப்போ எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்றிருக்கிறது. வாழ்க்கையின் ஒன்பதாவது எட்டிலும் சட்டிபானை தூக்குவது அத்தனை சுவாரஸ்யமான காரியம் அல்ல.
        முன்னிரவுகளில் டெம்போக்களில் ஏற்றப்பட்ட மடக்குக் கட்டில், உணவு மேசை, நாற்காலி, கேஸ் அடுப்பு, சிலிண்டர், தண்ணீர் டிரம், டி.வி., ஃபிரிஜ், பாத்திர பண்டங்கள், படுக்கைச் சுருள், குடை, துடைப்பம், குடம், பக்கெட், என வீடு மாறும் குடும்பத்தைப் பார்த்தால், எனக்குத் தொண்டை அடைத்துக் கொண்டு வரும். இது சபிக்கப்பட்டதோர் இனம் என்று. எனினும் இடம் பெயர் பொருட்களுடன் சின்ன ரோஜாச் செடிச் சட்டியை அணைத்து நடக்கும் பள்ளிச் சிறுமியைக் காண, வாழ்வின் மீது நம்பிக்கையும் அதிகரிக்கும்.
        வீடு தேடுவது என்பது சாமான்யமான விஷயம் அல்ல. வாடகை இலக்கு, காப்புத் தொகை வைப்புதவிர, மற்றும் பல இன்னல்கள் உண்டு. பார்ப்பனர், மற்றவர்களுக்கு வீடு தருவதில்லை. இஸ்லாமியருக்கு இந்துக்கள் வீடு தரமாட்டார்கள். மும்பையில் என் ஆருயிர் நண்பன், இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டு இறந்து போன ஞானபாநு எனும் பெயரில் எழுதிய அசதுல்ல கான் வாழ்ந்திருந்த போது, வீடு தேடி அலைந்து கால் நகக் கண்களில் குருதி கசிந்ததுண்டு. சாதி இந்து, தலித்துக்கு வீடு தரமாட்டார். கிறிஸ்தவர் தமக்குள்ளும் ரோமன் கத்தோலிக்கர், புரேட்ஸ்டேன்ட்டா என பேதம் பார்ப்பார். மாமிசம் சமைத்தால் சிலரும், சமைக்காவிடின் வேறு சிலரும் வீடு தருவதில்லை.
        கார் வைத்திருந்தால் சிலர் பார்க்கிங் தருவதில்லை. வாகனம் இரு சக்கரமாக இருந்தாலும் குடும்பத்துக்கு ஒன்றே என்பது கணக்கு. வாடகைக்கு வருபவரின் குடும்பம் என்பது கணவன், மனைவி இரண்டுக்கும் மேற்படாத பிள்ளைகள், உச்சவரம்பு என்றும் தளராது வயதான பெற்றோர் எவரும் உடன் இருத்தல் ஆகாது. எனக்குத் தெரிந்த சில குடும்பங்கள் தங்கள் ஒரு வீட்டிலும், பெற்றோர் பக்கத்துச் சந்தில் மற்றோர் வீட்டிலும் வாடகைக்கு இருக்கிறார்கள். வளர்ப்புப் பிராணிகள் வைத்திருந்தால், நோயாளிகள் இருந்தால் வீடு கிடைக்காது. தோற்று நோய் அல்லது இருமல் சத்தம் மட்டும் காரணம் இல்லை.
        சில வீடுகளில் பொது பால்கனி அல்லது வராந்தா இருந்தால், அதில் உட்காரவோ, படுக்கவோ கூடாது. நிற்கலாம் நெடுநேரம், சில வீடுகளைக் காலி செய்து போகும் போது, புதிய குடி தேடி அமர்த்தி, தான் கொடுத்த முன் பணத்தை அவரிடம் கறந்து கொள்ள வேண்டும். லகுவில் மாற்றுக் குடி வாய்க்காத தன்மையிலும் வீடுகள் பல உண்டு. புதிதாக பார்த்த வீட்டுக்கும் போக இயலாமல், இருந்த வீட்டையும் காலி செய்ய முடியாமல், பெரிய தட்டழிவு. காப்புத் தொகையை வாங்காமல் போனால், அதை வசூலிப்பது பெரும்பாடு. மணலைத் திரிப்பது, கல்லில் உரிப்பது.
        பிணமெரியும் சுடுகாட்டைப் பார்த்தபடி, இடுகாட்டுக்கு எதிரே, பொதுக் கழிப்பிடமோ, வெட்டவெளிக் கழிப்பிடமோ காணும்படி, டாஸ்மாக் கடைகளின் அருகில் சில அபாக்கியசாலிகளுக்கு வீடு வாய்க்கும். சில வாடகை வீடுகளோ குளங்களைப் பட்டா போட்டுக் கட்டப்பட்டு இருக்கும். பாம்பு குடியிருக்கும், தவளை குதித்தும், பெருச்சாளி பதுங்கியும் வந்து குடக்கூலிக்கு வீடுண்டா என வினவும். ஆமை அனுமதியும் கேட்காது. ஓணான், அரனை, பல்லி பண்ணை அமைக்கும்.
         சமீபத்தில், கோவையின் புறநகர்ப் பகுதியில் சிறியதோர் மருத்துவமனையில் பெற்ற தாயாரைச் சேர்த்திருந்தார் ஒருவர். நோய் முற்றியதால், தாய் மீள மார்க்கமில்லை என வீட்டுக்குக் கொண்டுபோகச் சொன்னது மருத்துவமனை. பொதுவாக மருத்துவமனைக் கட்டில்களில் சாவை நிர்வாகம் விரும்புவதில்லை. மருத்துவமனைக்கு நோயாளி நுழைய முன்வாசல், பிணமானால் பின்வாசல், சிறிய மருத்துவமனைகளுக்கு ஒரே வாசல்தான். சாவு மருத்துவமனையின் பெயரைக் கெடுத்துவிடும் என்பது வியாபார நோக்கு. எனவே, ஒரு வாரம் தாங்காது என்றல் நோயாளி என்பவன் கறவை வற்றிய மாடு. கசாப்புக் கடைக்குத்தான் லாயக்கு. வீட்டுக்குக் கொண்டு போகச் சொல்லிவிடுவார்கள். அபரிதமான பெருந்தன்மையுடன்.
         தகவல் அறிந்த அவரின் வீட்டுச் சொந்தக்காரி, தன் வீட்டில் எவரும் சாகக் கூடாது என்றாள். நாளைக்கு அவளுக்கு அந்த வீடு வேறு வாடகைக்குப் போக வேண்டாமா?
         சொந்த ஊரின் வேர் அற்றுப் போன தலைமுறை மருத்துவமனையில் செத்த பிணமானாலும்  வீட்டுக்கு வரக் கூடாது. வீட்டுக்கும் வந்தும் சாகக் கூடாது. எப்படியானாலும் அழுகை, ஒப்பாரிக் கூக்குரல், கூட்டம், உறவு, சனம், பாடை, தீச்சட்டி, பந்தம், பறை, பால், கருப்பு…
         ஒரு பக்கம் மருத்துவமனை நெருக்கல், மறுப்பக்கம் வீட்டு உடைமைக்காரி வழிமறிப்பு. மோசக்காரனம்மா காலன், நீசப் பாவியம்மா !
         ஒரு வழியும் புலப்படாமல், நம்பிக்கையுள்ள நண்பனைக் கலந்து ஆலோசித்து, நள்ளிரவில் தாயைக் கொன்றுவிடத் தீர்மானித்தார்கள். Mercy Killing தலையணை வைத்து அமுக்கும் போது தற்செயலாக வந்த செவிலிப் பெண் பார்த்து அலற, விளக்குகள் எரிய, கூட்டம் சேர, காவல் துறை வந்தது. தாயைக் கொலை செய்ய முயற்சி என வழக்குப் பதிவானது. இத்தனை அதாளியில், தாய் மறுநாள் மாலை செத்துப் போனாள். யார் தயவும் இன்றி, அருமை மகனும் அவரது ஆருயிர் நட்பும் காவல் நிலையம், நீதிமன்றம் எனத் தலை குனிந்து நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
         ராவணனால் வெட்டப்பட்டு, ராமன் கைகளில் உயிரை நீத்த போது சடாயு எனும் பறவைக்கரசு, தன்னை மண்ணில் தகனம் செய்யக் கூடாது எனச் சொன்னான். எது கருதிச் சொன்னானோ? ஏற்றுக் கொண்ட ராமன், அவனைத் தன உள்ளங்கையில் ஏந்தி எரியூட்டி சம்பல் கரைத்து, எள்ளும் தண்ணீரும் இறைத்தான் என்பது நாட்டுப்புறத்தான் ராமாயணம். வேறெங்கும் தேடாதீர்கள் வேலை மெனக்கெட்டு, வாடகை வீட்டில் குடுயிருப்பவனும் உள்ளங்கையில் வைத்து உரியூட்டும் வித்தை கற்றிருக்க வேண்டும்.
        எப்பாடுபட்டாலும் செத்துப் போவதற்கு என் சொந்த மண்ணுக்கு வீரநாராயணமங்கலத்தின் பழையாற்றின் கரைக்குப் போய்விட வேண்டும் என்று சமீப காலமாக எனக்கும் தோன்றிக்கொண்டு இருக்கிறது.
 முக்கண்ணனுக்கும், பாம்பணை மேல் பள்ளி கொண்டவனுக்கும் நம் தலையில் எழுதும் பிரம்மனுக்கும் வாடகை வீட்டுச் சிக்கல் இருந்திருக்கும் போல.
               பாகத்தில் ஒருவன் வைத்தான்
               பங்கயத்து இருந்த பொன்னை
               ஆக்கத்தில் ஒருவன் வைத்தான்
               அந்தணன் நாவில் வைத்தான்
என்கிறான் கம்பன். அதாவது சிவன் உமையை ஒரு பாகத்தில் வைத்தான் என்றும் தாமரை மீது அமர்ந்திருந்த செந்திரு இலக்குமியை திருமால் நெஞ்சிலே வைத்துக் கொண்டான் என்றும், நான்முகனோ நாவிலே வைத்துக் கொண்டான் என்பதும் ஆகும்.
         தேவாதி தேவர்கள் பெண்களைத் தன்னுடனேயே உடம்பில் வைத்துக் கொண்டார்கள். பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுவிட்டுப் போய்விடலாம். குடியிருப்பும் பிரச்னை இல்லை. தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லை, மின்வெட்டும் இல்லை, போக்குவரத்து நெரிசல் இல்லை. பெட்ரோலுக்கு அலைய வேண்டாம்.
        பேசாமல் வாடகைக்குக் குடியிருப்போர் யாவரும் தேவாதி தேவர்களாக ஆகிவிட முயற்சி செய்யலாம். ஒருவேளை அது வாழ எளிய வழியாக இருக்கும். வாக்குச் சாவடிக்குப் போக வேண்டியதில்லை.
-தீதும் நன்றும் – 17.09.2009
(தட்டச்சு உதவிக்கு மிக்க நன்றி): பிரவீண்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வாடகை வீடு

  1. Rathnavel Natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    நடுத்தர மக்களின் பாடு பெரும் பாடு தான்.
    நன்றி.

  2. Jeyakumar சொல்கிறார்:

    சமுக அக்கறையுடன் கூடிய அருமையான கட்டுரை. இதைவிட தெளிவாய் நடுத்தர வர்க்க வாடகை வீட்டில் குடியிருப்போர் வாழ்க்கையை யாரால் சொல்ல இயலும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s