எதை எழுத? (கவிதை)

எதை எழுத?
 
எழுது எழுதுன்னா எதைப் பத்தி எழுதட்டும்?
 
என்ன எழவையேனும் எழுது!
வேலை இல்லாத் திண்டாட்டம் விதவா
மறுமணம்,
வரதட்சணைக் கொடுமை, காப்பி ஆற்றும்
கன்னிகையின் கழுத்துச் சுளுக்கு,
வறுமையின் கோரப் பற்கள், வைக்கோற்
படப்புத் தீ
என இன்றெழுத யேலாது!
  
பிறகு என்ன மயித்தை எழுதணும்ங்க?
 
பெண் விடுதலை, தலித்தியம், முற்போக்கு,
இந்துத்வா என எழுது.
முடியுமானால் கட்டுடைத்துப் பார் !
அஸ்திவாரத்தைத் தோண்டி எறி !
படவரவு அல்குல்,
கரும்பச்சைப் புதரதனில் பாய்ந்தேறிப்
படமெடுத்து நிற்கும் பாம்பு என எழுது.
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல்
கதவுகள் அவை
வேகமாய்ப் புகழ் பெறலாம்.
 
பணம் அதிகாரம் பதவி தவிர
வேறெதற்க்கும் அடங்க மறு என
ஆங்காரமாய் எழுதட்டுமா வே?
 
புரட்சி என எழுதிப் புண்ணியமில்லை!
கனத்த மெளனத்துடன் கழுதைகள்
மேயும் பூமி இது
புரட்சியும் வராது புத்தகமும் விற்காது
 
குருதி வடித்து குடிக்கவும் திண்ணவும் ஏதுமற்று
சுரங்கத்தின் தூரத்தில் தெரியும் வெளிச்சம்
சாவென அறிந்தும் நம்மை நம்பிக்கொண்டிருந்தானே
தொப்பூட்  கொடி அதை எழுதவா?
 
பைத்தியக்காரப் பயலா இருக்கியே?
இறையாண்மைக்கு எதிரா எழுதாதே!
பேசாதே, சிந்திக்காதே, கனவு காணாதே,
ஏப்பமோ குசுவோ கூட விடாதே
எனதிந்தச் சொற்களையும் நான்
எழுதவில்லை
தாங்க முடியவில்லை எனில்
திபேத், பாலஸ்தீனம், ஈராக் என
எழுதி தினவு தீர்த்துக்கொள்
 
அதிகார மையங்களின் பொய், வஞ்சம், சூது,
கொலை களவு துரோகம் என
யோசித்துப் பார்க்கலாமா?
 
வெளங்காம போறதுக்கா?
வெறுவாக்கெட்ட மூதி,
 
தெரியாமத்தான் கேக்கேன்
நாளையொரு கலைமாமணி,
சாகித்ய அகாதமி, ஞானபீடம்,
 பத்ம ஸ்ரீ, கெளரவ டாக்டர்,
வாரியம், துணைவேந்தர் என
இரக்கப்பட்டாவது தருவார்கள்
அதை இல்லாமல் ஆக்காதே!
 
முன்னுக்கும் போக விடமாட்டங்கேரு
பின்னுக்கும் போக விடமாட்டங்கேரு
பின்னெ என்ன தாலியறுப்பை எழுத?
 
அம்மையின் அக்காவின் தாலியறுப்புச்
சடங்குகளை எழுது
மரணம், ஆன்மீக அனுபூதி
தத்துவப் புளிக்கறி, செண்பக
மலர்கொண்டு தொட்டதுபோல்
நேசமிகு காதலியின் மெய்தீண்டல்,
நேற்று சூடிய கசங்கிய பிச்சிப்
பூவாய் அவள் கைக்கிடை வாசம்
என எழுது
சக மானுடச் சிக்கலது
கவிதை காலாகாலத்துக்கும் நிக்கும்
கடையூழிக் காலத்தில் வாசிக்க
கூன் பிறை சூடிய சடையாண்டி
கக்கத்தில் வச்சுக் கிட்டு
நடந்து திரிவான்
 
போ மக்கா, போயி என்ன
ஈரமண்னுண்னாலும் எழுது
உருப்படப் பட்ட
வழியைப் பாரு!
 
00000000000

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to எதை எழுத? (கவிதை)

 1. Rathnavel Natarajan சொல்கிறார்:

  நல்ல கவிதை.
  வேதனையான நிலைமை.

 2. http://lalgudipinathalgal.blogspot.com/
  உயிர் எழுத்து சார்பாக திருச்சியில் நடந்த பாராட்டு விழா புகைப்படங்களுக்கு மேலே சுட்டவும்.

 3. Ahamed Kabeer Refaideen சொல்கிறார்:

  like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s