கவிஞர் மகுடேசுவரன்
http://kavimagudeswaran.blogspot.com/2011/02/blog-post_25.html
நாஞ்சில் நாடன் அவர்களை எனக்கு இலக்கியம் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்து தெரியும். நான் அவருடைய சிறுகதைகளின் ரசிகன். முதன்மையாக அவர் சிறுகதையாசியர்தான். சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகவே அவர் சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது தற்செயலாகவே நிகழ்ந்துவிட்ட அற்புதம். சாகித்ய அகாதமி இப்படியெல்லாம் பொருத்தமான படைப்பாளிக்கு – அப்படைப்பாளி வீரியத்துடன் இயங்கிய படைப்பு வகைக்கு விருது கொடுப்பது என்பதெல்லாம் எப்பொழுதாவது நடக்கும் அதிசயம்தான்.
பாரதிதாசனுக்கு அவருடைய கவிதைக்கு விருது தராமல் பிசிராந்தையார் என்கிற நாடக நூலுக்குக் கொடுத்தார்கள். கண்ணதாசனுக்கும் – ஏன் வைரமுத்துவுக்கும் கூட, அவருடைய கவிதைக்கு விருது தராமல் உரைநடை எழுத்துக்குக் கொடுத்தார்கள். அத்தகைய அபகீர்த்திக்கெல்லாம் ஆளாகாமல் சிறந்த சிறுகதை எழுத்தாளராகிய நாஞ்சில் நாடன் சிறுகதைக்காகவே அரசாங்க விருதைப் பெற்றிருக்கிறார்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிரதானமாக சிறுகதைகளில் இயங்கி வந்தார். நா. பார்த்தசாரதியின் தீபம் இதழ் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கிய நன்கொடை நம் நாஞ்சில் நாடன். பிறகு நாவல்களின் உலகத்திற்குள் பிரவேசித்தார். ஆரம்பத்தில் புதுப்பெண்கள் சின்னச் சின்ன வார்த்தைகளில் சிறுகதையாகப் பேசுபவர்கள் போகப்போக பெருங்குரலெடுத்துப் பேசுவதைப் போல – சிறுகதை எழுதி எழுதி எழுத்தின் சைஸ் பெரிசானதாலும் பேனா பேப்பரின் மீது நழுவிச்செல்லும் வேகம் அதிகரித்ததாலும் சிலர் நாவல் எழுத ஆரம்பிப்பார்கள். நாஞ்சில் நாடன் அத்தகைய சொந்த இச்சையால் மொந்தை மொந்தையாக எழுதி நம்மை சிரமப்படுத்தாமல் சிறுகதைக்குரிய பொருள்களை மீறிய அரும்பெரும் வாழ்க்கைச் சித்திரங்களை வரைய வேண்டிய இலக்கியப் பொருள்கள் அவர்முன் நின்றமையால் நாவல் எழுத வந்தவர். நாவல்களில் தம்முடைய வெற்றிக்கொடியை நன்றாக நிலைநாட்டினார். தேசத்தின் பாதைகள் முழுவதும் பயணித்து, சொந்த ஊரின் வேர்ப்பற்றை – பாசத்தைத் துண்டித்தெறிய முடியாமல் வாழ்ந்து வதைபடும் மனித மனத்தை அவருடைய நாவல்களில் துலக்கமாகத் தரிசிக்கலாம்.
பிறகு அவர் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். சிறுகதைகள் நாவல்கள் எழுத எதையாவது கூறத் துடிக்கும் மனம் போதும். ஆனால், கட்டுரைகள் எழுத அந்த எழுத்தார்வம் ஒரு விழுக்காடு கூட உதவாது. கட்டுரை எழுதுவதற்கு மூளை முழுக்க அறிவுத் தகவலகளும் பகுத்துக் கூறும் பாங்கும் பொங்கி நிறைந்திருக்க வேண்டும். ஒரு நாளின் பேருந்துப் பயணத்தைச் சிறுகதையாக எழுதிவிடலாம். நம் வாழ்க்கை முழுக்க நாம் பேருந்துகளில் பயணம் செய்த அனுபவங்களைத் திரட்டி நாவலாக எழுதிவிடலாம். ஆனால், கட்டுரை எழுதுவதற்கு பேருந்துப் பயணமும் ஜன்னலோரக் காட்சிகளும் போதாதவை. அந்தப் பேருந்து எவ்வாறு கட்டி அமைக்கப்பெற்றிருக்கிறது, அது இயங்குவதற்கான பொறியியல் இயக்கவியல் நுட்பங்கள் என்னென்ன என்கிற விரிவான அறிவும் கட்டுரை எழுதுவதற்கு வேண்டும். அதனால்தான், தேர்ந்த கதாசிரியர்கள் பலர் வெற்றிகரமான கட்டுரைக்காரரர்களாக இல்லை. நாஞ்சில் நாடன் இதில் தனித்த விதிவிலக்கானார்.
எங்களைப்போன்ற பலர் கவிதைகள் மட்டுமே எழுதிவந்தோம். நாங்கள் சிறுகதை நாவல்கள் எழுதுவதில்லை. முதல் காரணம் லேபர் காஸ்ட் எங்களுக்குக் கட்டுபடியாகாது. கவிதை எழுதுவதற்கு பேனாவையும் பேப்பரையும் கையில் வைத்துக்கொண்டு வடகிழக்கு மூலையைப் பார்த்துக்கொண்டு யோசித்தபடி போஸ் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் போதும், அவ்வப்போது ஒரே ஒரு வார்த்தை தோன்றும் அல்லது ஒரே ஒரு வரி தோன்றும், அதை அப்படியே தாளில் குறித்துக்கொண்டு மீண்டும் வடகிழக்கைப் பார்க்க ஆரம்பிக்கலாம். ஆனால், கதைகள் எழுதுவதற்கு யோசிப்பதோடு மட்டுமல்லாமல் மாங்குமாங்கு என்று எழுதவேண்டும். நம்மால் அது முடியாது. அதோடு மட்டுமல்ல, கவிதை எழுதி முடித்துவிட்டால் அடுத்து நிம்மதியாகத் தூங்கலாம், அந்தப் படைப்பழுத்தத்திலிருந்து விடுபட்டு வேறு வேலை பார்க்கலாம். எழுதி முடிக்கப்பட்ட கவிதை நல்ல உறக்கத்தைத் தந்துவிடுகிறது. ஆனால், சிறுகதை நாவல்கள் எழுதத் துவங்கிவிட்டால் அது அன்றைக்கோ, அடுத்தடுத்த நாள்களிலோ முடிந்துவிடுவதில்லை. பேரழகியைக் காணக்கூடாத கோலத்தில் கண்டுவிட்ட மாதிரி அன்றிலிருந்து உறங்கவே முடியாது. எழுதுவதும் நாள்கணக்கில் மாதக்கணக்கில் நின்று நகரும். உறக்கமும் நிம்மதியும் தொலைந்துவிடும். இந்த அவஸ்தைகள் எமக்கு ஆகிறதில்லை என்பதால் நாங்கள் நாவல் எழுதவில்லை. ஆனால், நாஞ்சில் நாடன் கட்டுரை கதை வடிவங்களோடு நின்றுவிடாமல் கவிதையும் எழுதலானார். இதை ரிலையன்ஸ் கம்பெனிக்காரன் மளிகைக் கடை வியாபாரத்திலும் இறங்கியதோடு ஒப்பிடலாம்.
சரி, நாஞ்சில் நாடன் கவிதை எழுதுகிறார் என்றதும் நாங்களெல்லாம் உஷாரானோம். அப்படி என்னத்தை எழுதிவிடப் போகிறார் என்றும் நாங்களெல்லாம் மூளையைப் பிசைந்து எழுதாத பொருள்களை அவர்மட்டும் எப்படிக் கண்டுபிடித்து வழங்கப் போகிறார் என்றும் ஆர்வமாகக் கவனித்தோம். வலப்பக்கக் கடல்மணலை இடப்பக்கம் இறைத்திறைத்து நகக்கணுக்கள் வலிக்கின்றன… அடியே வா !’ என்றெல்லாம் அவர் வயதுக்கு எழுதினால் நன்றாகவா இருக்கும் என்றும் கவலைப் பட்டோம். ஆனால், நாஞ்சில் நாடன் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பச்சை நாயகி என்கின்ற அவருடைய கவிதை.
எங்கெனத் தேடுவதுன்
எழுலார்ந்த பொன்முகத்தை ?
காற்று வெளியதனுள், ககன விதானத்து,
பைந்நாகப் பாய்விரித்த பாற்கடலில் ?
மிகச் சரியான பாராட்டு நாஞ்சில் நாடன் அவர்களுக்கு… நல்ல பேச்சு. நாஞ்சிலாரின் கவிதையும் அருமை.
பழச்சாற்றில் தேன்கலந்து
சுண்டக் காய்ச்ச சுவை
கவிஞர் நெஞ்சில் கவிஞர் பற்றி
திரண்டு வந்த கருத்து .
நல்ல பதிவு.
நல்ல பாராட்டு – நல்ல விமரிசனம்.
வாழ்த்துக்கள்.
nice