வீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது

வீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது:

 நாஞ்சில் நாடன்
திண்டுக்கல், பிப். 22: தமிழ் மொழி வீட்டில் மட்டும் பேசும் மொழியாக மாறிவிடுமோ என்ற கவலை இலக்கியவாதிகளுக்கு உள்ளது என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் தெரிவித்தார்.
 காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, சென்னை தமிழினி பதிப்பகம் இணைந்து பல்கலை. வெள்ளிவிழா அரங்கில் “நாஞ்சில் நாடன் படைப்புகள்’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கையும், அவருக்குப் பாராட்டு விழாவையும் செவ்வாய்க்கிழமை நடத்தின.
 மாணவர்களுடனான கலந்துரையாடலில் அவர் பேசியது:
 வகுப்பறைகளில் மாணவர்கள் கற்றுக்கொள்வது 10 சதவீதம்தான். வாழ்க்கைக்கான 90 சதவீத விஷயங்கள் வகுப்பறைக்கு வெளியேதான் உள்ளன. வாழ்க்கைக்கான
 வெளிப்பாடு மாணவர்களுக்குத் தேவை. எனவே வெறும் கல்வி மட்டுமின்றி இசையை ரசிப்பதும், இலக்கியங்களை வாசிப்பதையும் மாணவர்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் வாழ்க்கையை சுவாரஸ்யமாக ஆக்க உதவும்.
  மனித மூளை அதிக திறன் கொண்டது. இதில் 2 முதல் 3 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம். பாடம் அல்லாத இலக்கியம், நூல்களை வாசிப்பதனால் கற்கும் கல்விக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடாது. இலக்கியங்களைப் படிப்பது வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்காகத்தான். வாழ்வின் சிறுசிறு தவறுகளையும் இலக்கியங்கள் சுட்டிக் காட்டும். எண்ணங்களைப் பரிமாற இலக்கியம் உதவுகிறது.
  ஒரு நிகழ்வைப் பார்த்த எழுத்தாளர் அந்நிகழ்வைக் காணாத ஒருவருக்கு தான் அடைந்த உணர்ச்சியை அவரும் உணரும் வண்ணம் எடுத்துச் சொல்வதுதான் படைப்பு. அந்த வகையில் சொற்களைக் கையாண்டு எழுதுவது தான் எழுத்து.
 ஏன், எதற்கு என்று யோசிக்க ஆரம்பிக்கும்போதுதான் படைப்பாளி பிறக்கிறான்.
 எந்தத் தொழில் செய்தாலும் அதில் முதல் நபராக இருக்க வேண்டும்.
  அவ்வாறு இருப்பவர்களுக்கு வாழ்வில் தோல்வி என்பது கிடையாது. முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெற முடியும். மனிதன் வெல்வதற்காகப் பிறந்தவன். இதன் காரணமாகவே மானுடம் வென்றது எனச் சொல்லப்படுகிறது.
  எந்தப் புத்தகங்களாக இருந்தாலும் அவற்றை வாசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
 ஆறரை கோடி மக்கள் உள்ள தமிழகத்தில் மூன்றரை கோடி பேர் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். ஆனால் மொத்தத்தில் 12 லட்சம் நாளிதழ்கள் மட்டுமே விற்பனையாகின்றன. வாசிக்க வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதுதான் எழுத்தாளர்களின் பணியாக உள்ளது. பனிரெண்டாம் வகுப்பு
 படிக்கும் மாணவருக்குக் கூட பிழையின்றி தமிழில் எழுத முடிவதில்லை. தமிழின் வளர்ச்சி குன்றுவதன் மூலம் மொழி அழிகிறது. தமிழ், வீட்டில் மட்டும் பேசும் மொழியாக மாறி விடுமோ என்ற பயம் உள்ளது.
 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. ஆனால் பள்ளி, கல்லூரிகளில் மட்டும் பாடமாக வைத்து கட்டாயம் படிக்க வேண்டிய நிலைதான் உள்ளது. இலக்கியங்களை எழுதுவது வருவாய்க்காக அல்ல. தமிழ் இலக்கியம் என்ற புதையலின் மேல் நின்று கொண்டு டாலருக்கு கையேந்துகிறோம். புத்தகங்களுடன் இருக்க வேண்டும், சொற்களுடனும், எழுத்துகளுடனும் வாழ வேண்டும். அப்போதுதான் கற்றது கை மண் அளவு என்பது புரியும். இதை இந்த தலைமுறையினராவது புரிந்து கொண்டு விழித்துக் கொள்ள வேண்டும் என்றார் நாஞ்சில் நாடன்.
  “தமிழ்மணி பகுதியை  வாசிக்க வேண்டும்’
 பாராட்டு விழாவுக்குத் தலைமை வகித்து பல்கலை. பதிவாளர் நம். நாராயணசாமி பேசியது:
 தமிழைப் பாடமாக கொண்ட தமிழ்த் துறை மாணவர்கள் தினமணி நாளிதழை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் தமிழ்மணி பகுதியை அவசியம் வாசிக்க வேண்டும் என்றார்.
 பொள்ளாச்சி நாவலாசிரியர் சு.வேணுகோபால், தூத்துக்குடியைச் சேர்ந்த கவிஞர் தேவதேவன் வாழ்த்துரை வழங்கினர்.
  நாஞ்சில் நாடன் ஏற்புரை ஆற்றிப் பேசியது:
  இலக்கியப் படைப்பு குறித்த முழுநேர கருத்தரங்கை ஒரு பல்கலைக்கழகம் நடத்துவது இதுவே முதல் முறை. இவ்வாறு முழு நேர கருத்தரங்கு நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு சாகித்ய அகாதெமி விருது பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி படைப்புகள் குறித்த கருத்தரங்கம் தொடர்ந்து நடைபெற்றால் அது எழுத்தாளர்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும். தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்வதே எழுத்தாளர்களின் பொது இலக்கு என்றார்.
 முன்னதாக பல்கலைக் கழக பேராசிரியர் ப.பத்மநாபபிள்ளை வரவேற்றார். தமிழ் இணை பேராசிரியர் வி.நிர்மலாராணி நன்றி கூறினார்.
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Madurai&artid=381066&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=வீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது: நாஞ்சில் நாடன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s