பீதாம்பர் பாண்டுரங்க் நாத்ரேக்கு கிர்ரென்று தலை சுழன்றதோடு மட்டுமன்றி, சளசளவென வியர்த்தது. மேலும் மேலும் எடையேற்றியதுபோல் இறுகி மார் வலித்தது. மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. நாத்ரேக்குப் புரிந்துபோயிற்று, கிடக்கப் படுத்தால் கிடந்து ஒழிந்துவிடலாம் என. எதற்கும் வாயிற் கதவைத் திறந்துவைத்துவிடலாம் என்று எண்ணி, எழுந்து நின்று சிற்றடிவைக்கும் முன் சோபாவில் சரிந்து விழுந்தார். சொர்க்கம் அல்லது நரகத்தை நோக்கிய கடைசிக் காலடி.
பீதாம்பர் பாண்டுரங்க் நாத்ரே ஆதிக்க சாதியா, அடிமை சாதியாஎன்பது இங்கே அநாவசியம். வண்டியும் படகில் ஏறும், படகும் வண்டியில் ஏறும் இன்று. மேலும், நாத்ரே சவம் ஆகிப் போன பின்பே யாம் அவரைஅறிமுகம் ஆகிறோம். ‘பெயரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு’ எனும் திருமூலர் வாக்கு ஆதாரம். இன்னொரு சித்தன் சிவ வாக்கியன் ‘என்பு தோல்இறைச்சி யில் இலக்கம் இட்டிருக்குதோ’ என்றான், யாரும் கூட்டாக்கவில்லை.
தத்துவ விசாரம் எமக்கு நோக்கம் இல்லை; அதற்கு ஆற்றலும் இல்லை. என்ன விசாரம், அதுவே நமது விசாரம். ஈண்டு பேச்சு பீதாம்பர் பாண்டு ரங்க் நாத்ரேயின் பிணத்தைப் பற்றியது. அவர் பிணமான சில நொடிகளே ஆன நிலையில், இந்தத் தகவல் வாசகருக்குத் தரப்படுகிறது. ‘முக்தி நய்யா’ எனும் பெயர்கொண்ட, மொழி பெயர்த்துச் சொன்னால், ‘முக்தி நாவாய்’ எனப் பொருள் தரும். அப்படியும் அர்த்தமாக வில்லை என்றால், ‘மோட்சப் படகு’ என்று வழங்கப்படும் அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது நிலையில், சி ஃப்ளாட்டில் வசிக்கும் எலி, கண்டாங்கிப் பாச்சை, பல்லி தவிர, வேறொரு குருவிக்கும் இந்தத் தகவல் இன்னும் சென்று அடையவில்லை.
‘பிறகெப்படி உமக்குத் தெரியும் வேய்?’ எனும் வினா நியாயமானதுதான். அதுதான் கதாசிரியனின் வசதி. ஒளியும், ஒலியும், வளியும் நுழைய இயலாத இடத்தையும் உற்று நோக்கும் வசதி.
சரி, சுபம்… கதை முடிந்தது, ‘இந்தக் கதாசிரியன் எழுதிய மிகச் சிறிய கதை இது’ எனத் தாண்டிப் போக எண்ணாதீர். இனிதான் கதையே துவங்குகிறது
முழு கதையும்:..http://new.vikatan.com/article.php?aid=2730&sid=80&mid=1