நாஞ்சில் நாடன் – தலைநகரில் விருது விழாவும் பாராட்டு விழாவும்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
17 பிப்ரவரி 2011 
 http://www.kpenneswaran.com/component/content/article/47-2010-09-16-10-13-46/161-2011-02-17-17-25-02.html
நேற்று  முன்தினம் (15 பிப்ரவரி 2011) அன்று சாகித்ய அகாடமி இந்த ஆண்டு தேர்ந்தெடுத்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.  வழக்கமாக நான்கு மணிக்கு ரவீந்திர பவன் புல்வெளியில் நான்கு மணிக்கு தேனீர் விருந்துக்குப் பிறகு பக்கத்தில் உள்ள கமானி கலையரங்கில் விருது வழங்கும் விழா நடைபெறும்.  இந்தத் தேனீர் விருந்தில் பல நண்பர்களை சந்திக்க முடியும்.  சாகித்ய அகாடமி தமிழ்க் குழுவின் உறுப்பினர்கள் சிற்பி பாலசுப்பிரமணியன், பேராசிரியர் மோகன் ஆகியோரையும் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு  பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செயலர் மற்றும் சில செயற்குழு உறுப்பினர்களை சந்தித்துப் பேசமுடிந்தது.  ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கிடைக்கும் மகிழ்வான தருணங்களாகும்.
முன்பெல்லாம் குடியரசுத்  தலைவர் அல்லது துணைத்தலைவர் அல்லது யாராவது மந்திரிகள்  விருதும் பாராட்டும் வழங்குவார்கள்.  இப்போதெல்லாம் சாகித்ய அகாடமியின் தலைவரே கொடுத்து விடுகிறார்.  கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.  சில எழுத்தாளர்கள் சில அரசியல் தலைவர்களின் கரங்களில் சில அரசியல் காரணங்களால் விருது பெற்றுக் கொள்வதை எதிர்த்து இருக்கலாம்.  தொடர்ந்து சில ஆண்டுகளாக அகாடமியின் தலைவரே விருதினை அளிப்பது இப்படிப்பட்ட சந்தேகத்தைக் கிளப்புவதில் தவறேதும் இருக்காது என்று நினைக்கிறேன்.  

பொதுவாகப் படைப்பாளிகள் தோளில் ஏற்றி உட்கார வைத்த குரங்கு மாதிரி என்று வடக்குப் பக்கம் சொல்வார்கள்.  குரங்கு அதீத அன்பில் தோளில் உட்கார வைத்தவருக்குப் பேன் பார்க்கவும் செய்யும்.  சயமத்தில் காதையும் கடித்து வைக்க வாய்ப்புக்கள் கொஞ்சம் உண்டு.  இதையே அரசியல்வாதிகளுக்கும் நம்மூர் பக்கம் சொல்வார்கள்.  எனவே எதற்கும்  ஜாக்கிரதையாக இருக்கலாமே என்று தலைவரைக் கொண்டே பரிசுகள் கொடுக்கிறார்களாக இருக்கலாம். அடித்து எதையும் சொல்ல முடியாது.  அனுமானங்களில் பேசுவது எப்போதுமே ரொம்ப சௌகர்யமான விஷயம்.

கனத்த தூக்கக் கலக்கத்துடனே இருப்பது போன்ற பாவனையில் எப்போதும் மேடைகளுக்கு வரும்  சாகித்ய அகாடமி தலைவர் சுனில் கங்கோபாத்யாயா இந்த வருடமும் அதே மாதிரி கலர் கலரான ஜிப்பா அணிந்து கொண்டு இன்னும் அதிகமாகத் தூங்குவது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு மேடையில் அமர்ந்திருந்தார்.  ஒரியக் கவிஞர் ஸ்ரீகாந்த் மஹாபாத்ரா, அகாடமியின் செயலாளர் அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி.     இவர்களைச் சுற்றி வரிசையாக ஆங்கில அகராதி வரிசைப்படி அஸ்ஸாமியில் துவங்கி உருது முடிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் (அப்படித்தான் மேடையில் சொன்னார்கள்) படைப்பாளிகள் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

விருது வழங்கும் விழாவுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அகாதமியின் துணைத்தலைவர் பேராசிரியர் சுதிந்தர் சிங் நூர் மரணம் அடைந்தார்.  15 பிப்ரவரி 2011 அன்று காலை மறைந்த துணைத்தலைவருக்கு அஞ்சலிக் கூட்டம் அகாதமியில் நடைபெற்றது.  

விருது வழங்கும் விழாவின் வரவேற்புரையில் பேராசிரியர் நூரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார் அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி.

அவரைத் தொடர்ந்து தூக்கக் கலக்கத்துடன் மேடைக்கு வந்த சுனில் கங்கோபாத்யாயா மிக அநியாயமான வகையில் மிகவும் அறுவையான ஒரு பேருரையை எழுதிவைத்து வாசித்தார்.  இது அவர் தலைவரான காலத்தில் இரந்து ஒவ்வொரு ஆண்டும் தொடரும் கொடுமை.  வழக்கமாக இந்திய மொழிகளின் கலாச்சாரத்தின் இலக்கிய வளத்தின் பெருமைகளை லேசாகக் கோடிட்டுக் காட்டி விட்டு தன்னுடைய சிறுகதை ஒன்றில் இருந்து மேற்கோள் காட்டி கதை முழுக்க சொல்வது அவருடைய வழக்கம்.  மேடையில் அமரவைக்கப்பட்டிருந்த படைப்பாளிகளைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.  அரங்கில் நிறைய பேர் கங்கோபாத்யாயா பேசும் போது தூங்கிக் கொண்டிருந்தார்கள்.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த தமிழ்ச் சங்கம் கிருஷ்ணமூர்த்தி அடுத்தவர்களுக்குத் தெரியாதது போல மிகவும் சாதுரியமாகத் தூங்கிக் கொண்டிருந்தார்.  பக்கத்தில் துணைக்கு ஒருவர் கிடைத்த தைரியத்தில் நானும் அகாடமி தலைவர் உரையின் ஐந்தாவது நிமிடம் தமிழ்ச் சங்கத் தலைவரின் பூரண ஆசிகளுடன் நிஷ்களங்கமாகத் தூங்க ஆரம்பித்தேன்.  

சுமார் நாற்பது நிமிடங்கள் கழித்து தூக்கம் கலைந்து எழுந்த போதும் கங்கோபாத்யாயா பேசிக் கொண்டிருந்தார்.  மேடையில் நாஞ்சில் நாடனைப் பார்த்தேன்.  வேறு யாருக்கோ விருது தருவதை வேடிக்கை பார்க்க வந்ததைப் போல முகத்தை வைத்துக் கொண்டு மேடையில் அமர்ந்திருந்தார்.  சில வயதாளிகளான விருதாளிகள் மிகவும் பரிதாபமாக முகங்களை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

தலைவரின் அட்டூழியத்   தாக்குதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்ததும் விருதுகள் வழங்கப்பட்டன.  அஸ்ஸாமி, வங்காளம் போன்ற மொழி சார்ந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் அளிக்கப்பட்டபோது  அந்தப் பிராந்தியத்தை சேர்ந்த சாகித்ய அகாதமி அதிகாரிகள் அந்தப் படைப்பாளிகளின் பெயர்களையும் அவர்களின் படைப்புக்களின் பெயர்களையும் மிக அழகாக உச்சரித்தார்கள்.  கன்னட எழுத்தாளர் பெயர் அறிவிக்கப்பட்டபோது அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தி தாவி ஓடிப்போய் ஒலிவாங்கியைக் கைப்பற்றி மிக நல்ல கன்னட உச்சரிப்பில் படைப்பாளியையும் அவருடைய படைப்புக்களையும் சரியான முறையில் அறிமுகப்படுத்தினார்.

ஆனால் தமிழ் மீது  அகாடமிக்கு எத்தனை ஜென்மங்களின் பகையோ தெரியவில்லை.  அகாதமியின் உயர் அதிகாரியாகத் திகழும் பெண்மணி ஒருவர் நாஞ்சில் நாடன் பெயரில் துவங்கி அவருடைய படைப்புக்கள் அனைத்தையும் மிகவும் தவறான, கண்றாவியான உச்சரிப்பில் அறிவித்து நாஞ்சில் நாடனின் ரத்தக் கொதிப்பை ஏகத்துக்கு ஏற்றி விட்டார்.  ஒரு வழியாக உருதுவரை வந்து சேர்ந்து விழாவை முடித்துவிட்டார்கள் என்று பார்த்தால் ஒரியக் கவிஞர் மஹாபாத்ரா தன் பங்குக்கு ஒரு பெரிய மொண்ணைக் கத்தியை வைத்து ராவு ராவென்று ராவித் தீர்த்து விட்டார்.  விருதுகள் வாங்கிய பிறகு தங்கள் சால்வைகளை மடித்துக் கொண்டே விஸ்ராந்தியாக உட்காரத் துவங்கிய விருதாளர்களுக்கு இன்னொரு தலைவலி துவங்கியது.
அக்ரஹாரா கிருஷ்ணமூர்த்தியின் நன்றியுரைக்குப் பிறகு  மேகாலயா பிராந்தியத்தின் மரபு நடனம் ஒன்று இருக்கிறது என்று அறிவித்தார்கள்.  ஆனால் படைப்பாளிகளுடன் கொண்ட நட்புக்காக இந்த மரண அவஸ்தையைத் தாங்கிக் கொண்ட எங்களைப் போன்றவர்கள் விருதாளிகளை அவசரம் அவசரமாக வாழ்த்தி விட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கமானி அரங்கத்தை விட்டு தலைதெறிக்க ஓடிப்போனார்கள்.

மறுநாள் (16 பிப்ரவரி 2010) தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நாடனுக்குப் பாராட்டு விழா.  சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமை என்று அச்சிட்டு இருந்தார்கள்.  அவரை முந்தைய நாள் கேட்டதற்கு தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சியின் போது அதே நேரத்தில் வேறு இடத்தில் அப்துல் கலாம் பேசுகிறார்.  நான் அதற்குப் போகவேண்டும்.  தமிழ்ச் சங்கத்துக்கு வரமாட்டேன் என்றார்.  சிற்பியைக் கேட்டுத்தான் தமிழ்ச்சங்கத்துக்காரர்கள் அழைப்பிதழை அச்சிட்டார்களா என்று கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  மறந்து விட்டேன்.  இப்போது கேட்டாலும் சரியான பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை.  

அதனால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.  பரவாயில்லை.  

சாகித்ய அகாதமியின் மற்ற தமிழ்க்குழு உறுப்பினர்களும் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு வரவில்லை.  அவர்களும் அப்துல் கலாம் உரையைக் கேட்கப் போயிருக்கலாம்.  தெரியாது. நாஞ்சில் நாடனை ஊரில் வாழ்த்திப் பேசலாம் என்று நினைத்திருப்பார்கள்.  தெரியாது.

தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேராசிரியர் கி.நாச்சிமுத்து தலைமை வகித்துப்பேசினார்.  முனைவர் சுசீலா, ஏ.ஆர்.ராஜாமணி உரையாற்றினார்கள்.  நானும் பேசினேன். வழக்கமாக சாகித்ய விருதாளிகளுக்கு வழங்கப்படும் பாராட்டு விழாவில் உரையை எழுதிக் கொண்டு செல்வேன்.  இந்த முறை தயாரிப்பு எதுவும் இல்லாமல் பேசினேன்.  அதனால் கோர்வையாகப் பேசமுடியவில்லை.  எங்கெங்கோ குரங்கு மாதிரி தாவித்தாவிப் பேசிக் கொண்டிருந்தேன்.

நடிகர் விவேக்  பத்மஸ்ரீ விருது வாங்கியபோது (வார்த்தையை கவனமாகக் கவனிக்க வேண்டும்) தமிழ்ச் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் பெரும் கூட்டம் அரங்கத்தை அடைத்திருந்தது. அப்போது தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜி.பாலச்சந்திரன் தன்னுடைய பாராட்டுரையில் இன்று ஒரு நடிகருக்கு சேரும் இதே கூட்டம் நாளை ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களுக்கு சேரும்போதுதான் நம் சுரணையுள்ள ஒரு சமூகம் என்று நம்மை நிரூபித்துக் கொள்ள முடியும் என்று கூறியது நினைவுக்கு வந்தது.  

வழக்கமாக சாகித்ய  அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களைப் பாராட்டக் கூட்டம் நடக்கும்போது அவையில் ஏதாவது பின் வரிசையில் தனியாக உட்கார்ந்து கொள்ள பயமாக இருக்கும்.  நாடன் கொடுத்து வைத்தவர்.  அன்று கணிசமான கூட்டம் வந்திருந்தது.  சினிமா நடிகர் ஒருவர் பிரவேசித்த போதும் பார்வையாளர்கள் அனைவரும் சலனமின்றி அமர்ந்து இருந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. அவர் எழுந்து போகும் போதும் யாரும் விசில் அடிக்க வில்லை.  ஆட்டோகிராஃப் கேட்கவில்லை.  ஒருவேளை அரங்கத்துக்கு வெளியே யாராவது கலாபிமானிகள் கையெழுத்து வாங்கினார்களா என்று தெரியாது.  

என் பேச்சு முடிந்ததும்  சினிமா நடிகர் தாமு வந்திருப்பதாக அறிவித்து அவரை மேடையேற்றினார்கள்.  விருது பெற்ற நாஞ்சில் நாடனில் துவங்கி தன் வரை அனைவருக்கும் கைதட்டுதல்களால் பாராட்டு தெரிவிக்க சொன்னார்.  என்னமோ தெரியவில்லை.   ஏதோ மோடி மஸ்தான் வித்தையைக் காண உட்கார்ந்திருந்தது போன்ற உணர்வை அது கொடுத்தது.  

நிகழ்ச்சியை குருமூர்த்தி தொகுத்து வழங்கினார்.  மதியம் குருமூர்த்தி வானொலிக்காக நேர்காணல் செய்ததாகவும் நேர்காணல் மிகவும் சுவாரசியமாக இருந்ததாகவும் நாடன் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

டெல்லி தமிழ்ச் சங்கத்தின் பாராட்டு விழாவில் பேசிய விஷயங்களையும் நிழற்படங்களையும் திருமதி எம்.ஏ.சுசிலா மற்றும் முத்துலெட்சுமி ஆகியோர் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

திருமதி எம்.ஏ.சுசிலா  http://www.masusila.com/2011/02/2.html

முத்துலெட்சுமி       http://sirumuyarchi.blogspot.com/2011/02/blog-post_17.html

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நாஞ்சில் நாடன் – தலைநகரில் விருது விழாவும் பாராட்டு விழாவும்

  1. Rathnavel Natarajan சொல்கிறார்:

    நல்ல பதிவு.
    விழாவை நேரில் பார்த்தது போன்ற மன நிறைவு.
    வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s