உப்பு

அன்புள்ள நண்பருக்கு ..,
                                          வணக்கம், என் பெயர் நல்லசிவம், ஜெயமோகன் அவர்களின் வாசகன் ; அவர் மூலியமாக நாஞ்சில் நாடன் அவர்களின் கதையுலகு அறிமுகமாகியது. நேற்று உப்பு கதையை வாசித்தேன். இறுதி கணங்கள் சில துளிகளை வரவளைத்து  விட்டன. மேற்கொண்டு சில கணங்கள் இறந்த காலத்தை  நினைவு கூர்ந்து அமைதியாகும் படி;; இத்துடன் அந்த கதையை மிகுந்த விருப்பமுடன் டைப் செய்து அனுப்பி உள்ளேன்
dinesh nallasivam

 

 உப்பு

 
சொக்கன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்கு இப்போது என்னவாவது தின்றால் கொள்ளாம் என்று தோன்றியது. அரங்கினுள் புகுந்து ஒவ்வொரு மண்பானைகளை இறக்கி இறக்கிப் பார்த்தான். ஒன்றில் உப்பு அரைப் பானை இருந்தது. அதைத் தின்ன முடியாது என்பது போல் தலையை அசைத்தான். அதன்  கீழ் புளிப்பானை, கருகருவென லேகியம் போல்;  அதிலும் அவனுக்கு நாட்டமில்லை
  
அடுத்த வரிசையை பார்த்தான். கீழ் பானையில் கொஞ்சம் வறுத்த நிலக்கடலை. டப்பாவில் போட்டு மூடி வைத்திருந்தது. “கிளட்டு சவம் எங்க கொண்டு ஒளிச்சு வெச்சிருக்கு பாரு ..” என்று முனகிக்கொண்டு நிலக்கடலையை கையில் அள்ளிக்கொண்டு பழைய இடத்தில வந்து உட்கார்ந்தான் .
வெளிய இன்னம் “சோ’ வெனப் பெய்து கொண்டிருந்தது மழை. அத்தோடு காற்றும் ஆனி ஆடிச்சாரல், அடித்து பெய்தது..
அழுக்குத் துவர்த்து ஒன்றால் இழுத்து மூடிக்கொண்டு சுகமாக நிலக்கடலையை உடைத்து பருப்பை வாயில் போட்டுக்கொண்டான்.
“ம்.. இந்த வெறையலுக்கு கடலை சுகமாத்தான் இருக்கு ..”
மழையில் எங்கோ போய்விட்டு வந்த நாய் படிபுரையில் ஏறி கழுத்தையும் உடம்பையும் நீட்டிச் சடசடவென உதறியது. உதறியபின் சொக்கன் மேல் போயி உராய்ந்தது.
“ச்ச்சீ.. கூறு கேட்ட மூதி, தண்ணிய கொண்டாந்து மேலையா தேய்க்க?”
 
நாயை இடது கையால் தூரத் தள்ளினான். அது சற்று தள்ளி நின்று வாழை ஆட்டிகொண்டே இளித்தது.
சொக்கனுக்கு வருகிற மாசியில் பதினாறு வயசு திகையும், சொக்கலிங்கம் என்பது பள்ளிகூடபெயர் என்றாலும் எல்லோருக்கும் ’சொக்கா’தான். அவன் அப்பாவை பெற்ற ஆத்தா காதுகளில் அந்த ஓசை விழுந்து விட்டால் போதும். ‘ யாருல அது நீக்கம்புல போவான்? சொக்கலிங்கமுன்னு கூப்பிட்டா வாய் அவிஞ்சா போயிரும்..? சொக்கனாம் சொக்கன் …” என்று மல்லுக்கு வந்து விடுவாள்.
இரண்டு வயதிலேயே அம்மையும் அப்பனையும் தொலைத்து விட்ட சொக்கனுக்கு ஒரே ஆதாரம் ஆத்தாதான். அறுபது வயதுக்கு மேலானாலும் இருந்த ஆறு மரக்கா விதைப்பாடு நிலத்தை வைத்து கொண்டு சுயாட்சி நடத்திக்கொண்டு போனாள். பேரன் மீது ஈயோ கொசுவோ தான் உட்காரும் . அது கூட பொறுக்காது ஆத்தாவுக்கு.
எப்போதாயினும் கோபத்தில் பேரன ஒரு அறை வைத்து விடுவாள். அடிபட்ட கோபத்தில் சொக்கன்,” கிளட்டு சவம்.. இனிமே அடிச்சுபாரு.. கைய நொடிச்சிருவேன். ..’ என்று சொல்லும்போது கிழவிக்கு வாயெல்லாம் ஈறாகிவிடும்.
“சவத்துக்கு வார கோவத்த பாரு ..” என்று பூரித்து போவாள்.
நெத்திலிக்கருவாடும் வாழைக்காயும் போட்டு சந்தானம் போல புளிமுளம் வைத்து விட்டால் போதும் சொக்கனுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ‘”சவத்துக்கு நெத்திலி  கருவாடுன்னா உசிருதான் ..” என்று சொல்லிக்கொண்டே பரிமாறுவாள்.
ஊர்பையன்களோடு விளையாடும்போது சிலசமயம் சண்டை வந்துவிடும். ஏச்சோ அடியோ பொறுக்க முடியாமல் போனால் சொக்கன் வீசும் கடைசி பாணம்,” எங்க ஆத்தாக்கிட்ட சொல்லீருவேன். ..” என்பது தான். பலமிக்க அந்த பாணம் சண்டைக்கார சிறுவர்களின் வாய்க்கு பூட்டும் கைக்கு விலங்கும் போட்டு விடும்.
ஆத்தாளின் வாய் ஆரல்வாய்மொழி குதிரை வாகனம் போல …
“எந்த நாயிக்கு பொறந்த பய எம் பேரன அடிச்சான்..?” என்று எடுத்தாளானால்  இந்நாட்டு இங்கர்சால், சொல்லின் செல்வர், சிந்தனைச்சிற்பி, நடமாடும் பல்கலைக்கழகம் எல்லாம் கைகட்டி உட்கார்ந்து குருகுலம் பயில வேண்டும்.
எனவே சொக்கன் சம்பந்த பட்ட வரைக்கும் யாரும் அத்து  மீறுவதில்லை.
போன வருசம் சொக்கன் ஒன்பது படித்து கொண்டிருந்தான். படிப்பில் அத்தனை மோசமில்லை.  ஆனால் கணக்கில் பிணக்கு. கணக்கு வாத்தியார் ஞானசிகாமணி அன்று லேசான வயிற்று பொருமல் வேறு.
“ஏம்பில ஏன் உசிரை வாங்குகே?  செத்த மூதி .. எங்கயாம் பண்ணி மேய்க்க தொலைஞ்சு போயேன் ..” என்று விளாசி தள்ளி விட்டார்.
அன்று சாயங்காலம் பேரனின் குண்டியில் சிவந்து கிடந்த பிரம்பு வரிகளை பார்த்த ஆத்தா பொறுத்தாளா?  கணக்கு வாத்தியார் உள்ளூர்வாசிதான். பேரன் கையை  இழுத்து பிடித்துகொண்டு போயி கணக்கு வாத்தியார் வீட்டுக்கு முன் நின்றாள் . கையில் சிலம்பு பிடித்த பரம்பரை.
“அட பேதீல போவான்.” என்று தொடங்கி பொழிந்த வசவுகளை இங்கே எழுதினால் வகுப்புக் கலவரமாகிவிடும்.
கணக்கு வாத்தியாருக்கு கை கூப்பி தொழுவதைத்தவிர வேறு மார்க்கமில்லை. அன்றுடன் சொக்கனின் படிப்பும் வீர மரணம் அடைந்தது . அது மட்டுமல்ல ” திஸ் இஸ் எ  கேட் .. தேட் இஸ் எ ரேட்..” என்று சொக்கன் பிளந்து கட்டுவதை “சவத்துக்கு என்ன எழவு பாசையோ..திஸ் புஸ் தஸ்.. தஸ் புஸ் திஸ் இன்னு … சவத்துக்கு வாதான் வலிக்காதோ ..? ” என்று அண்டை அயலாரிடம் ஆத்தா பீத்திகொள்வதும் முற்று பெற்றது.
இப்போதெல்லாம் வீட்டில் நின்ற எருமையை மேய்ப்பதும் அதற்கு புல்லறுத்து போடுவதும் கிழவியுடன்    வயலுக்கு போவதும் களை பறிப்பதும் சாணி பொறுக்குவதும் என.. பிழைக்க வழியா இல்லை நாட்டில் ..?
மழை நின்று விட்டது. வெளியே எட்டிப் பார்த்தான் சொக்கன் மணி நாலரை இருக்கும். அவனுக்கு உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துபோய்விட்டது. ஆற்று பக்கம் போகலாம் என்றால் ஆத்தாள் ஏசுவாள்.
கடல்புரண்டு மரிவது போல,” கும்” மென்று ஓசை பாறையாற்றில் இருந்து எழுவது கேட்டது. தொடர்ந்த மழை காரணமாக ஆறு கரைபுரண்டு பாய்ந்தது. நிரப்பான மேட்டில் இருந்து பாறைகள் நிறைந்த பள்ளத்தில் சடாரென சரிந்து தன்னையே பாறையில் போட்டு துவைத்து கொண்டிருந்தது ஆறு. செங்காவி நுரைகள் ஒதுங்கின. மேகக் கொத்துக்கள் போல நீர்த்துளிகள் உயர்ந்து பரந்தன.
 பள்ளத்தில் விழுந்த ஆறு அங்கு திசைமாறி திரும்பியது. பள்ளமும் பாறைக்கூட்டமும் வேகமும் திருப்பமுமாக அந்த புள்ளியை ஆறு ஒரு கயமாகி மாற்றி இருந்தது.
 ஆத்தா அங்குதான் போயிருந்தாள். புது வெள்ளத்தில் அடித்து வரப்படும் பெரிதும் சிறிதுமான சுள்ளிகள்,தென்னை மடல்கள், காற்றில் முறிந்து போன பச்சை கிளைகள் என்று ஆற்றில் இருந்து பிடித்து கொண்டு வருவாள். காற்றில் உதிர்ந்த தேங்காய் நெற்றுகள் கூட கிடைக்கும். புது வெள்ளம் வந்தால் மூன்று நான்கு மாதங்களுக்கு தேவையான பிறகு கிழவியின் வீட்டில் சேகரமாகி விடும். தண்ணிரில் கொணர்ந்தவற்றை மழை வெறித்தவுடன் காயப்போட்டு, தரப்படுத்தி, அடுக்கி விடுவாள்.
அழுக்கு சேலையை இடுப்பில் வரிந்து கட்டி, கொக்கி போல் வளைந்திருக்கும் கம்புடன் இடுப்பளவு வெள்ளத்தில் பாறை மீது நின்று கொண்டு, பிடிக்கின்ற சுள்ளிகளை கரைநோக்கி வீசி எறிந்து..
அவற்றை வீட்டுக்கு சுமப்பதில் சொக்கனுக்கும் பங்கு உண்டு. அலுத்துப்போன சொக்கன் ஆற்றை நோக்கி நடந்தான். நாயும் அவன் பின்னாலயே ஓடி வந்தது. மழை ஊசி தூறல் போட்டு கொண்டிருந்தது.வானம் இன்னும் வெளி வாங்கவில்லை. தாடகை மலையில் பளீர் பளீர் என சிரித்தது மின்னல். மேகம் கவிந்து “கருங்கும்” என இருண்டது. சொக்கன் பாறையாற்றை அடைந்து விட்டான்.
“யாத்தா.. யாத்தோவ்.. மழை வருகு..சீக்கிரம் கரையேறு ..”
“இரி மக்கா.. இன்னா வந்திற்றேன் .. அந்த சுல்லியளை எடுத்து அடுக்கு …”
தாடகை மலையில் மழை அடர்ந்து பொழிந்தது. மேகத்துக்கும் பூமிக்குமாய் படுதா போலப் பிடித்த கரும்போர்வை ஓன்று நகர்ந்து வருவது போல மழை பாய்ந்து வந்தது. சொக்கனுக்கு அடிவயிற்றில் பயம் பரவியது.
“ஏ..மூதி .. வா.. போலாம் .. பெலமா மளை வருகு ..”
தன்னை நோக்கி சுழிதுகொண்டு வந்த ஒரு கிளையைப் பிடிப்பதில் கவனமாக இருந்தாள் கிழவி. கொக்கிக்கம்பால் இழுக்கத் தேவை இல்லாமலேயே அது புரண்டு மறித்து அவளை நோக்கி திரும்பியது
இத்துடன் வீடு திரும்பி விடலாம் என்ற நினைப்பில் கையிலிருந்த கொக்கியை கரையில் விட்டெறிந்து விட்டு கிளையை பிடிக்க தயாரானாள்.
அது ஒரு புன்னை மரக்கிளை. கையினால் எட்டிப்பிடித்தாள். ஒரு கையினால் இழுக்க வரவில்லை. இரண்டு கைகளாலும் பற்றி பிடித்தாள். அவளையும் சேர்த்து அது இழுக்கும் போல தோன்றியது.
‘இது கிளையல்ல” தண்ணிரில் அடித்து புரண்டு அழிந்து வரும் முழுமரம் என்ற உணர்வு கிழவியின் மூளையை சென்று தாக்கி கைகளை விட்டு விடலாம் என்று தீர்மானிப்பதற்குள் –
சுழிப்பில் புரண்டு திரும்பிய அடிமரம் கிழவியை வெடுக்கென பாறையில் இருந்து பிடுங்கி வெள்ளத்தில்  உதறியது.
கிழவிக்கு நீச்சல் தெரியும் என்றாலும் மறிந்து புரண்ட அடிமரம் அழுத்தியதில் …
“சோ” வென மழை அடிக்க ஆரம்பித்தது.
“ஏ… மூதி …” எனக் கத்தத் தொடங்கிய சொக்கனுக்கு ஆற்றில் நடுவில் உயர்ந்த இரண்டு கைகள் மங்கலாக தெரிந்தன.
ஆற்றில் கரையோரமாக சொக்கன் ஓடினான். கிழவியின் தலையோ கையோ தெரிந்தால் ஆற்றில் சாடிவிடலாம் என்ற  நினைப்பில் அதிர்ச்சியும் திகைப்புமாய் துவைக்க ஓடிக்கொண்டே இருந்தான் கூடவே நாயும் …
கன்னங்கரேலென்றிருந்த  மழை இருட்டைக் கைகளால் விலக்கி எதிர்காற்றுக்கு எதிரே நீந்தி, முகத்தில் அறையும் மழைநீரும் கண்ணீருமாய் வாயில் வடிவத்தைத் துப்பி, முள் நிறைந்த புதர்கள் கீறுவதை உணராமல் ஆற்றின் கரையோரமாக சொக்கன் ஓடிகொண்டிருந்தான்.
ஓடிக் களைத்து அவன் உட்கார்ந்தபோது இருட்டு கவிந்து விட்டிருந்தது.
கிழவியின் சடலம் கூடக் கிடைக்கவில்லை
அது கடலில் சங்கமித்துப் போயிருக்கும்
ஈரவிறகின் புகை சூழ்ந்த கண்ணெரிய சொக்கன் கஞ்சி வைத்துக்கொண்டிருந்தான். அடிநாக்கில் துயரம் கசந்தாலும் வயிறு பசித்தது.
மிளகாய் சுட்டு உப்பும் புளியும் உள்ளியும் இட்டு பிசைந்த இடையன் புளியை அலுமினியத் தட்டில் வைத்துகொண்டு மண் சட்டியில் வைத்து இறக்கிய கஞ்சியை சிரட்டை அகப்பையால் கோரி தட்டத்தில் விட்டு கொண்டு, இடையன் புளியை நாக்கில் தீற்றி, ஒரு கை கஞ்சியை அள்ளிவாயில் வைத்தான்.
சூடு கையையும் நாக்கையும் தாக்கியது… கரம் கண்களில் நீர் கொணர்ந்தது.
“சவத்து மூதி! ஆற வச்சுக் குடிக்கபடாதா..?” காதருகே ஒரு குரல்.
சொக்கன் வாயில் கண்ணீர் உப்புக் கரித்தது.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to உப்பு

 1. manimuthu.s சொல்கிறார்:

  வளர்த்த பாட்டி

  மரித்து

  அறிந்த சோகம்

  அறியாத ரசம்

  கலை நுனுக்கம்

  மொழி இணக்கம்

  கைவந்த நாஞ்சில் நாடன்

  பானை உப்பில்

  தொடங்கி

  கண்ணீர் உப்பில்

  முடிந்த ”உப்பு” சிறு கதை.

  அளந்தெடுத்த சம்பவக்

  கோப்பு

  அடிக் கரும்பாய்

  அடுக்கிய ஈர்ப்பு !

  நீரோட்ட நடை

  வார்ப்பு

  நினை வூட்டு அலைகள்

  மீட்பு

  படிப்பவரைப் பிடிக்கும்

  படையல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s