காதலர் தினம்

நாஞ்சில் நாடன்

ன்பெனும் சொல்லுக்கு மாற்றாக நாம் பாசம், நேசம், பரிவு, பிரியம், சினேகம், நட்பு, பற்று, காதல் போன்ற சொற்களைக் கையாள்கிறோம். அன்பின் மேலானதோர் நிலையைக் காதல் என்று கொள்ளலாம். பருவ வயதுடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஊற்றெடுக்கும் உணர்ச்சியை மட்டுமே சொல்வதும் இல்லை. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என அடியார் கூட்டம் இறைவனைப் பாடியது உண்டு. ‘பொய் படாக் காதல் ததும்பி மேற் பொங்கிற்று’ என்பது திருஅருட்பா. தசரதன் மனைவி, இலக்குவன் தாயார், சுமத்திரை, ‘மா காதல் இராமன் அம்மன்னவன்’ என்று குறிப்பிடுவாள்.
பின்பு காதல் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் இடையே தோன்றும் அன்பின் பெருக்கு எனக் கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட காமம் எனும் சொல்லும் இந்தப் பொருளில் கையாளப்பட்டது உண்டு. கற்பகத்தின் பூங்கொம்போ, காமன் தன் பெருவாழ்வோ என்கிறார் சேக்கிழார். கள்ளினும் காமம் இனிதுஎன்பது திருக்குறள்.
இந்திரன், கவுதம முனிவனை ஏமாற்ற, கோழியாக நின்று கூவி, அவனை நீராட அனுப்பிவிட்டு, கவுதம முனிவன் வேடம் தரித்து, முனி பத்தினி அகலிகையைப் பெண்டாள வந்தபோது, புக்கு அவளோடும் காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்க உண்டு இருத்தலோடும்என்கிறார் கம்பர்.
ஆண், பெண் உறவின் அன்பின் உச்சநிலை யைக் குறிக்க சங்க காலத்தில் இருந்தே காதல் எனும் சொல் கையாளப்பட்டு வந்திருக்கிறது. காதற் கிழத்தி, களவுக் கிழத்தி, காமக் கிழத்தி என்றெல்லாம் பேசப்பட்டு இருக்கிறது. காதலன், காதலியிடம் சொன்னான், ‘யாரைவிடவும் உன் மீது காதலுடையவன் நான்’ என்று. காதலி ஊடல்கொண்டு துளைத்துத் துளைத்துக் கேட்கிறாள்… ‘யாரைவிட, யாரைவிட’ என்று.
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று என்பது திருக்குறள்.
மேலும் தொடர்ந்து காதல் எனும் சொல் ஆண், பெண் பரிபூரண அன்பு நிலையைத்தான் பேசி வந்திருக்கிறது.
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
மனச் சிறையில் கரந்த காதல்என்று
ராவணனைப் பற்றிப் பேசுவான் கம்பன்.
காதல் அன்புமயமான ஆண், பெண் உறவின் நிலை என்பதற்கு உலக இலக் கியங்களில், இதிகாசங்களில் நமக்கு ஏராள மான எடுத்துக்காட்டுக்கள் உண்டு. ரோமியோ – ஜூலியட், லைலா – கயஸ், சலீம் – அனார்கலி, அம்பிகாபதி – அமராவதி, ஆன்டனி – கிளியோபாத்ரா, தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலின் பாபு – யமுனா என.
பெரும்பாலும் இலக்கிய, இதிகாசக் காதல்கள் துன்பம் தழுவி முடிந்திருக்கின்றன. உண்மைக் காதலுக்குத் தோல்வியும் கிடையாது. கடிமணம் செய்வது சாத்தியமில்லாமல் வேண்டுமானால் போகலாம். கடிமணம் தோற்றுப்போன காதல், காலம் காலமாக நிலைத்து நின்றும் இருக்கிறது.
காட்டிக்கொடுக்கப்பட்டவர், தூக்கு மேடை ஏறியவர், கொலைக்களப்பட்டவர், துரோகத்தின் நஞ்சுண்டு இறந்தவர், சந்தேகக் கத்தியால் குத்தப்பட்டவர் என நீண்ட துன்பியல் அத்தியாயங்கள் கொண் டது காதலின் வரலாறு.
எனினும் சகல ஜீவராசிகளையும் ஆட்டிவைக்கும் ஆற்றலுடையது காதல். அன்றில் பறவைகளின் கதையும் நமக்குத் தெரியும். தண்ணீர் வறண்டுபோன கோடைக் காலத்தில் தண்ணீருக்குத் தவித்து, தேடி ஓடிக் களைத்து, உயிர் பிரியும் நிலையில், ஆண் மானும் பெண் மானும் சிறியதொரு குட்டையில் மிகக் கொஞ்சமாக நீர் கண்டு, ஒன்று பருகினால் மற்றதற்கு இருக்காது எனும் கருத்தில் இரண்டுமே நீர் பருகுவதாகப் பாவனை செய்யும் சங்கச் சித்திரம் ஒன்று உண்டு நம்மிடம். காதலுக்கு சிறந்த உதாரணமாகச் சொல்வார்கள் இந்தப் பாடலை. இணை இறந்துபோகக் கண்ட பெண் பறவை உணவு எடுக்காமல் இறந்துபோவது பற்றிய தகவலும் உண்டு.
காதலுக்கு மத, இன, சாதி, வயது, பொருளாதார, மொழி வேறுபாடுகள் கிடையாது என்பார்கள்.
கண்ணோடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது, உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் -என்பது ராமன், சீதை இதிகாசக் காதல் பற்றிய புகழ்பெற்ற கம்பன் வரிகள்.
உடலின் பாகத்தில் தென்னாடுடைய சிவனும், நெஞ்சத்தில் நெருப்பென்று நின்ற நெடுமாலும், நாக்கில் நான் முகனும் தமது காதற் கிழத்தியரை வைத்திருந்த சிறப்பை,
பாகத்தில் ஒருவன் வைத்தான்,
பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்,
அந்தணன் நாவில் வைத்தான்…
– என்று பாடல் எழுதும் கம்பன், காதல் மனையாட்டிகளைப் பெறுவது பெரும் பேறு என் கிறான்.
இந்திரன் சசியைப் பெற்றான்,
இருமூன்று வதனத்தான் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்,
தாமரைச் செங்கணானும்
செந்திரு மகளைப் பெற்றான்.
– என்பது பாடல்.
காதலைப் பெரும் பேறு என்றும், உயிரின் மீட்சி என்றும், இகவாழ்வின் ஈடற்ற இன்பம் என்றும் கருதினார்கள்.
மோகத்தைக் கொன்றுவிடு – அல்லால் எந்தன்
மூச்சை நிறுத்திவிடுஎன்கிற பாரதி,
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.
– என்கிறான் வெளிப்படையாக.
காதல் என்பது அற்புதமான ஆழ்மன வெளிப்பாடு.
‘எஞ்ஞான்றும் காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்’ என்பாள் ஒளவை. இவ்வரிகளின் சற்று இளகிய வரிகளைப் ‘பத்தினித் தெய்வம்’ என்னும் படத்தில் பாடலாகக் கேட்கலாம், ‘கசக்குமா இல்லை இனிக்குமா?’ என்று.
கண்ணின் கடைப் பார்வை
காதலியர் காட்டிவிட்டால்,
மண்ணில் குமரர்க்கு
மாமலையும் ஓர் கடுகாம். – என்பது
காதலின் வலு பற்றிய பாரதிதாசன் பாடியது.
காதலில் பிரிவு என்பது பெருஞ் சோகம். ஈழ மண்ணில் எத்தனை காதல் மணவாட்டிகள் இன்று, காதலின் பெருந் துயரம் உண்டு சீவிக்கிறார்கள்! காதல் பிரிவு பற்றி சங்க இலக்கியத்தில் ஏராளமான பாடல்கள் உண்டு.
நந்திக் கலம்பகத்துக் காதலிக்கு, நந்திவர்மனைக் கூட முடியாததன் தாபம்,
செந்தழலின் சாற்றைப் பிழிந்து
செழுஞ் சீதச் சந்தனம் என்று
யாரோ தடவினார் என்பதில் போய் நிற்கிறது.
காதலினால் கிடைக்கும் பயன்கள் பற்றிப் பாரதி நுட்பமான பட்டியல் ஒன்று தருகிறான்.
காதலினால் மானுடர்க்குக்
கலவி உண்டாம்
கலவியினால் மானுடர்க்குக்
கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக்
கவிதை உண்டாம்
கானம் உண்டாம்,
சிற்பம் முதற் கலைகள் உண்டாம்
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
காதலின் மேன்மை, உயர்வு, இறவாமை, இன்பம் பற்றி இங்கு யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. ‘குணா’ திரைப்படத்தில் கமலஹாசன் அலறுவதைப் போல, ‘இது மனிதக் காதல் அல்ல’ என்று கதறும் தெய்வீகக் காதல்கள் இன்றும் இருத்தல் கூடும். அவர்களை நாம் போற்றுவோம். புகழ்வோம்!
நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்
நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்றாம் என்பார்
ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்
பாடை கட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்.
– என்று பாரதி சொல்வது போல, இன்றைய சமூகம் பெரும்பாலும் காதலுக்கு எதிரானதாக இல்லை.
ஆனால், இன்றைய சினிமா பார்த்து, சீரியல் பார்த்து காதல் என்பதை வேறு ஏதோ எனப் புரிந்துகொண்டு, இளைய தலைமுறை படும்பாடு பரிதாபம் தருவது. கவர்னர்களின், பிரதம மந்திரிகளின் பெண்களைக் காதலிக்க சினிமாக்கள் இளைஞர்களை ஊக்குவிக்கின்றன. சாத்தியமா என்று எவரும் யோசிப்பதுமில்லை.
பத்துப் பேருந்துகளுக்கு உரிமையாளர் மகள் பள்ளிப் பேருந்து ஓட்டுநரோடும், பதினான்கு வயதுச் சிறுமி நாற்பது வயதான பின்னலாடைத் தொழிலாளியோடும், பத்தாவது படிக்கும் மாணவி பள்ளி ஆசிரியரோடும் ஓடிப் போன கதை எல்லாம் நாளிதழ்கள் விளம்புகின் றன.
‘ஆண்கள் எல்லாம் களவு இன்பம் விரும்புகின்றார்’ என்கிறார் பாரதி. அது போலப் பெண்களும்தான் களவின்பம் விரும்பக்கூடும். அது இன்றெனக்கு விவாதப் பொருள் இல்லை. ஆனால், சிறுவர் சிறுமியரின் அலைக்கழிவைக் காண ஆயாசமாக இருக்கிறது. ஒரு பள்ளியில் நான்காவது படிக்கும் மாணவியர் நான்கு பேரின் புத்தகத்தில் காதல் கடிதங்கள் கண்டெடுக்கின்றனர். செல்போன்களில் பதினாறு வயதுப் பருவத்தினர் காதல் எஸ்.எம்.எஸ். பரிமாறிக்கொள்கின்றனர். காமக் குறிப்புகளும் நிர்வாணப் படங்களும் பரிமாறிக் கொள்கின்றனர்.
காதல் எனும் பொருளில் இவர்கள் எதைக் கற்றுக்கொள்கிறார்கள்? பண்டு ஒன்பது வயதில் திருமணமாகி, பதின்மூன்று வயதில் வயதுக்கு வந்து, பதினான்கு வயதில் முதற் குழந்தை பெற்ற சமூகவியல் நாமறிவோம். பின்பு பால்ய விவாகத் தடைச் சட்டம் வந்தது. பெண்ணுக்குத் திருமண வயது பதினெட்டு என்றானது. எனில் இன்று பதினைந்து வயதில் காதல் செய்து ஓடிப் போகும், மூன்று நாளில் திரும்பி வரும் காதலை நாம் எப்படிக் கையாளப் போகிறோம்? பாய் ஃப்ரெண்டுகள் இல்லாத உயர்நிலைப் பள்ளி மாணவிகள் இளக்காரம் செய்யப்படுகிறார்கள் சக மாணவிகளால்.
சட்டரீதியான, வயது வராத, யோசித்து சுதந்திரமாக முடிவெடுக் கும் பக்குவம் அற்ற, உடல் சார்ந்த இனக் கவர்ச்சிக்கு ஆட்பட்ட,இவ் வகை நவீனக் காதல் நம்மைக் கவலைகொள்ள வைக்கின்றன.இதற் கான சமூகக் காரணிகளை ஆராய நமது அரசியல், சமூக,பண் பாட்டுத் தலைமை பீடங்கள் போதிய ஓய்வுடன் இருக்கின்றனவா?
இஃதோர் பக்கம் எனில், நிறையப் படித்த, தாராளமான சம்பளப் பைகள் வாங்கும் இளைஞர் புத்திசாலித்தனமாக, சாதி பார்த்து, உட்பிரிவுகள் ஆய்ந்து, குடும்பத்தரம் உணர்ந்து, காதலிக்கப் போகிறவரின் வேலை, சம்பளம், வெளிநாடு போகும் வாய்ப்பு தெரிந்து மிக எச்சரிக்கையுடன் காதல் செய்கிறார்கள். காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களில் பலரும் 15 நாட்களில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் மணமுறிவும் கோருகிறார்கள். சில ஆண்டுகளில் மறுபடியும் காதல்கொள் கிறார்கள், சகல பாதுகாப்புகளுடனும்!
இதில் மிக வசதி படைத்தவர், கை நிறையச் சம்பளம் வாங்குகிறவர், வாகன வசதிகள்கொண்டவர், செலவு செய்யும் மன நிலை வாய்த்தவர், காதலர்களாகவும் இருப் பவர், தமக்குள் வாழ்த்துச் சொல்லவும், பரிசுகள் பரிமாறிக்கொள்ளவும், மதுச் சாலைகளில் உல்லாசக் கேளிக்கைகளில்ஈடு படவும், நாட்டியங்கள் ஆடவும், முத்தங்கள் பரிமாறிக்கொள்ளவும், மூழ்கி முத்தும் எடுக்கவும் ஆண்டுதோறும் காதலர் தினம் வருகிறது சமீபகாலமாக. விற்பனை கருதி அனைத்து வணிகரும் விளம்பரங்கள் செய்து, விற்பனை கூட்டி லாபம் ஈட்டிக்கொள்கின்றனர். அவர்களுக்கு ‘அட்சய திரிதியை’ போலவே ‘வாலன்டைன்ஸ்டே’யும். இவை யாவும் மேல்தட்டுச் செல்வக் குடிமக்களின் கொண்டாட்டங்கள்.
சாலைத் தொழிலாளர், கட்டடப் பணியாளர், துப்புரவுத் தொழிலாளர், தொழிற்கூட ஊழியர், சிறு தொழில் முனைவோர், செங் கற் சூளைகளில் கல் குவாரிகளில், தேயிலைத் தோட்டங்களில், பணிபுரிவோர், உழவர் எனப் பல கோடி மாந்தருண்டு இந்த நாட் டில். அவர்களில் இளைஞருக்கு இதெல்லாம் என்ன எனும் கவலை இல்லை. அந்த நாளும் மற்றொரு நாளாக வியர்வையில் கழிகிறது.
காதலைத் தவிர வேறு கதையற்று சினிமா செய்யும் தொழில் ஒன்று உண்டு தமிழில். காதலை சினிமாவில் மையப்படுத்துவதை தடைசெய்து சட்டம் ஒன்று வருமானால், சென்னையின் மக்கள் தொகை கால்வாசி குறைந்து போகும். படக் கம்பெனிகள் பல முடங்கிப் போகும். ஆனால் என் செய? இங்கு ஆட்சி செய்பவர்களே சினிமாக்காரர்களாகவும் இருக்கிறார்கள்!

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to காதலர் தினம்

 1. Serial killer சொல்கிறார்:

  Very nice!

  Keep up the good work, people need quality web content to read and see 🙂

 2. Rathnavel Natarajan சொல்கிறார்:

  நல்ல பதிவு ஐயா
  ஆழ்ந்து, ஊன்றி படித்தேன்.
  நன்றி.

 3. சங்க இலக்கியக்காதல் முதல் இக்கால காதல் வரை கூறி இன்றைக்கு காதலர் தினம் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களையும் நாஞ்சில் அவர்கள் தெளிவாக எழுதியிருக்கிறார். காதலர்தினம் பள்ளி,கல்லூரி மாணவர்களின் உணர்வை காசாக்குகிறது என்பது அய்யா சொல்வது போல உண்மை. நன்றி

 4. pirabuwin சொல்கிறார்:

  நல்ல பதிவு

 5. படைப்பாளி சொல்கிறார்:

  அருமை!அருமை!

 6. M.SIVARAMAKRISHNAN சொல்கிறார்:

  “சட்டரீதியான, வயது வராத, யோசித்து சுதந்திரமாக முடிவெடுக் கும் பக்குவம் அற்ற, உடல் சார்ந்த இனக் கவர்ச்சிக்கு ஆட்பட்ட,இவ் வகை நவீனக் காதல் நம்மைக் கவலைகொள்ள வைக்கின்றன.இதற் கான சமூகக் காரணிகளை ஆராய நமது அரசியல், சமூக,பண் பாட்டுத் தலைமை பீடங்கள் போதிய ஓய்வுடன் இருக்கின்றனவா”

  adhai patri yarukku ingu kavalai?

  Neengal oodhura sanga oodhunga, nangalum engalal mudintha vizhippunarva erpadutha muyarchi seyyarom.

  All the Best.

  Sivaram

 7. polurdhayanithi சொல்கிறார்:

  இந்த குமுகம் நோயை நாடி விரைந்தோடுகிறது அதை நல்வழிபடுத்த வேண்டிய அறிவுலகம் முடங்கி கடக்கிறது நோய்நீங்க நல்வழிபடுத்த அறிவுலகம் தேவை அதுவோ கூர்மழுங்கி போனதோ தெரியவில்லை . எல்லோரும் குறைகூறி கொண்டிருந்தால் இந்த போலி குமுகத்தை எப்படி வழிநடத்துவது ?

 8. mariappan சொல்கிறார்:

  நல்ல பதிவு

 9. தமிழ் ராஜா சொல்கிறார்:

  அவர்களில் இளைஞருக்கு இதெல்லாம் என்ன எனும் கவலை இல்லை. அந்த நாளும் மற்றொரு நாளாக வியர்வையில் கழிகிறது.

  அருமையான பதிவு

 10. Naga Sree சொல்கிறார்:

  நல்ல பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s