நெல்லையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா

சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் “சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு சாகித்யஅகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாராட்டு விழா நெல்லை கண்ணன் நற்பணிமன்றத்தின் சார்பில் நெல்லை டவுன் பார்வதி சேச மகாலில் நடந்தது. விழாவிற்கு தி.க.சிவசங்கரன் தலைமை வகித்தார். பாமணி வரவேற்றார். நூலை வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தார் வசந்தகுமார், விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஆகியோர் முன்னிலைவகித்தனர். பொருநை இலக்கிய வட்ட தலைவர் தளவாய் ராமசாமி, கா.சு.மணியன், கவிஞர்கள் கலாப்ரியா, வண்ணதாசன், மதுமிதா, சக்திஜோதி, பேரா.வேணுகோபால், ச.மணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் நாறும்பூநாதன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் பரிசு பெற்ற நூலில் இடம்பெற்ற சிறுகதைகளை சிலாகித்து பேசினர்.
திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகையில், நாஞ்சில் நாடன் சினிமா துறையை விமர்சிப்பார். நமது படைப்புகளை யார் பாராட்டுகிறார்கள் என்பதை விட யார் விமர்சனம் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியத்துவம். நாஞ்சில் நாடன் இன்னமும் நிறைய விமர்சிக்கவேண்டும். நாவல் படிக்க பிடிக்கிறது ஆனால் அதையே திரைப்படமாக எடுத்தால் பார்க்க பிடிக்கவில்லை என ஒருவர் இங்கே குறிப்பிட்டார். பாட்டி வடை சுட்ட கதையை வாசிக்கலாம். வாசிப்பவரின் மனநிலையை பொருத்து பாட்டி, காகத்தை கற்பனை செய்துகொள்வார். ஆனால் சினிமா என்றால் இயக்குநரின் கற்பனையில் பாட்டியும், காகமும் இருப்பதால் பார்ப்பவருக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. எனவேதான் நாஞ்சில்நாடன் போன்றவர்கள் சினிமா துறைக்கு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சாகித்ய அகாடமி விருதுபெற்ற நூல் இப்போது விற்பதை விட சினிமா புகழ் நாஞ்சில் நாடன் என்றால் இன்னும் அதிகமாக விற்பனையாகும் என்றார்.
நாஞ்சில்நாடன் ஏற்புரையில், நான் சாகித்ய அகாடமியை விமர்சித்திருக்கிறேன். மற்ற மொழிகளை விட தமிழில் சாகித்யஅகாடமி விருதுக்கான தேர்வு மிகவும் காலதாமதமாக நடத்தப்படுகிறது. எனக்கு முன்பிருந்தே இலக்கியம் படைத்துவரும் பூமணி, பா.ஜெயப்பிரகாசம் போன்றவர்களுக்கு கிடைத்த பின்னர்தான் எனக்கு கிடைத்திருக்க வேண்டும். நடப்பு ஆண்டின் சாகித்ய அகாடமியின் பரிசீலனையில் என்னுடன் கடைசிகட்டம் வரை வந்த மாஇல தங்கப்பன் இன்னும் சிறந்த படைப்பாளர். எனவே தமிழில் சிறந்த படைப்புகளுக்காக வழங்காமல் பாக்கி வைத்துள்ள படைப்பாளிகள் சுமார் 25 பேருக்கு ஒரே நேரத்தில் சாகித்யஅகாடமி விருதை வழங்கி பழைய அரியர்ஸ்சை சரிசெய்துகொள்ளவேண்டும்.எனது நோக்கம் சாகித்யஅகாடமி விருது அல்ல. நான் பழநிக்கு பாதயாத்திரை செல்கிறேன். விருது என்பது பழநி செல்லும் வழியில் கிடைத்த மோர் அவ்வளவுதான். எனது நோக்கம் பழநிதானே தவிர மோர் அல்ல. இலக்கியம் என்பது போட்டியோ, ஓட்டப்பந்தயமோ அல்ல. இந்த விருது எனக்கு மட்டுமல்ல.வண்ணதாசன், கலாப்பிரியா போன்ற 50 பேர்களுக்கு சேரும்.நெல்லை மண்ணில் சேதுப்பிள்ளை, மனோன்மணியம் சுந்தரனார், பாரதி, வ.உ.சி.,என தமிழுக்கு பங்களித்தவர்களில் நான் ஒரு சோற்றுபருக்கை அவ்வளவுதான். சாகித்ய அகாடமி மீது நான் விமர்சனங்கள் வைத்துள்ளேன். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சமகாலத்திலும் படைப்பு படைத்திருக்க வேண்டும் என்றால் 80 வயதை கடந்தவர்கள் என்னசெய்ய முடியும். எனவே 45 வயதுக்குள்ளாக விருது கொடுத்தால் அவர் மேலும் படைப்புகளை படைக்க ஆர்வத்தை ஏற்படுத்தும் என்றார்.
விழாவில் நெல்லை கண்ணன் எழுதிய “பழம்பாடல், புதுக்கவிதை’ என்ற நுலினை நாஞ்சில்நாடன் வெளியிட ராஜபாளையம் ஏ.கே.டி.தர்மராஜா கல்வி அறக்கட்டளையின் தர்மகிருஷ்ணராஜா பெற்றுக்கொண்டார்.
நெல்லை கண்ணன் பேசுகையில், நான் கோபமுடையவன் என கூறுகிறார்கள். கோபம் இல்லாதவன் சமூகவிரோதி. நாஞ்சில் நாடன் எனது தம்பி. சிறந்த உழைப்பாளி. பல படைப்புகளை செய்துள்ள அவர் இப்போதும் நாஞ்சில் நாட்டு சமையலைப்பற்றி ஒரு நூலும், நாஞ்சில் நாட்டு சொல்லகராதியும் படைத்துவருகிறார். கையில் காசும் டில்லியில் ஆள்பழக்கமும் இருந்தால் சாகித்ய அகாடமி விருதை வாங்கிவிடலாம். சிலர் வாங்கியிருக்கிறார்கள். நாஞ்சில் நாடனுக்கு வழங்கியிருக்கிறார்கள்.என்னுடன் ஏற்பட்ட பழக்கத்தால் நாஞ்சில்நாடன் அதிகம் கோபப்படுவதாக ஒரு பதிப்பகத்தார் தெரிவித்தார். நாஞ்சில் நாடன் சோம்பல் இன்றி உழைக்கிறார். என்னிடம் அடிக்கடி இலக்கியங்களில் சந்தேகம் கேட்பார். எனவே நான் ரசித்த, கோபமுற்ற விஷயங்களை அவரது படைப்புகள் மூலம் வெளிப்படுத்துகிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆள்வைத்து அடிக்கும் வேலையை செய்கிறேன் என்றார்
நன்றி: Arangasamy K.V
நன்றி: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=177061

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s