புலம்பல் கண்ணி (தீதும் நன்றும்)

நாஞ்சில் நாடன்

புலம்பல் கண்ணி (தீதும் நன்றும்)
நாஞ்சில் நாடன்
(தட்டச்சு உதவிக்கு பிரவீணுக்கு நன்றி)
உங்களை நினைத்தால் எனக்கு உண்மையில் பாவமாக இருக்கிறது. இது ஆடு நனைகிறதே எனும் கவலையல்ல. எல்லா வகையிலும் நீங்கள் ஏமாற்றப்படுவதை நினைத்த கவலை. சிலர் தெரிந்தே ஏமாறுகிறோம், அல்லது ஒப்புக் கொடுக்கிறோம். ஆனால் நம்மில் பலர் அறியாமலே ஏமாற்றப்படுகிறோம். ஆனால் புத்திசாலிகள் என்றும் சாமர்த்தியசாலிகள் என்றும் நம்பித் திரிகிறோம்.
‘Full Scape Paper’ என்று பள்ளிகளில் வாசிக்கிற காலத்தில் வெள்ளைத் தாள்கள் வாங்கியிருப்பீர்கள். எவர் வீட்டிலாவது இன்னும் பழைய தாள்கள் கிடைக்கக்கூடும். சற்றுத் தேடி எடுத்து ஒப்பிட்டுப் பாருங்கள் – முதலில் நீள அகலங்களை, இரண்டாவது தாளின் கனத்தை. விலை உயர்ந்துகொண்டு போவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நீளம், அகலம், கனம் குறைந்துகொண்டு வருவதை எவ்விதம் புரிந்து கொள்வது? பழைய தாள் கிடைக்கவில்லை எனில் பழைய பள்ளி நோட்டுப் புத்தங்கங்கள் கிடைக்குமல்லவா?
நீங்கள் நினைக்கலாம் என்ன ஆகிவிடப்போகிறது என்று. அதுவும் சரிதான். அகலவசத்தில் வேண்டுமானால் மேலும் ஒரு எழுத்து உட்காரலாம். அல்லது நீளவசத்தில் ஒரு வரி உட்காரலாம். கனம் குறைந்து போனால்தான் என்ன! எழுதுகிறோம், பின்பு கிழித்துப் போடுகிறோம். அதுவல்ல விஷயம். ஒரு தனித்தாளில் மிச்சமாகும் காகிதத்தின் எடை சில மில்லி கிராம் என்று வைத்துக்கொண்டால் தினமும் பயன்படுத்தப்படும் பல கோடிக்கணக்கான தாள்களில் எத்தனை டன் மாதம் மிச்சமாகும்? இது யாருக்குப் போகிறது? அரசுக்கா, தொழிலாளர்களுக்கா, வியாபாரிகளுக்கா, முதலீட்டாளர்களுக்கா, முதலாளிகளுக்கா?
நாற்பதாண்டுகள் முன்பு பனாமா என்றும் பாரத் என்றும் அரையணாவுக்கு சவரத் தகடுகள் கிடைத்தன. அதாவது மூன்று காசுகளுக்கு. நான்கைந்து இழுப்புக்களுக்கு வரும். பின்பு எட்டணாவுக்கு ஸ்டயின்லெஸ் ஸ்டீல் சவரத் தகடுகள் வந்தன. எட்டுப்பத்து இழுப்புகளுக்கு வரும். ஆனால் விலை பதினாறு மடங்கு இப்போது. இரட்டைத் தகடுகள் முச்சைத் தகடுகள் வந்துவிட்டன. பத்து ரூபாயில் இருந்து அறுபது ருபாய் வரைக்கும். பத்து ரூபாய்த் தகடுகள் எட்டுப் பத்து இழுப்புக்கும் அறுபது ரூபாய்த் தகடுகள் முப்பது நாற்பது இழுப்புக்களுக்கும் வரும். சற்று யோசித்துப் பாருங்கள், நான்கு இழுப்புக்களுக்கு மூன்று காசுகள் என்பது, அதாவது இழுப்புக்கு முக்கால் காசு என்பது, இப்போது இழுப்புக்கு இரண்டு ருபாய் என்றாகிறது. எத்தனை மடங்கு தெரியுமா? 267 மடங்கு. ஒப்பிட்டுப் பாருங்கள் பொன்னின் விலையுடன் அல்லது பெட்ரோல் விலையுடன், அல்லது ரயில் கட்டணத்துடன், அல்லது அரிசி விலையுடன். 267 மடங்கு அவை உயர்ந்துள்ளதா? அன்றைய சம்பளம் மாதம் 200 ரூபாய் எனில் அதே வேலைக்கு இன்று சம்பளம் ரூ. 53, 400 ஆ?
அறிந்தவர் கூறுங்கள் உடல் தேய்க்கும் ஒரே பிராண்டு சோப்புக் கட்டியின் எடையும் விலையும் அன்று என்ன, இன்று என்ன? பற்பசையின் விலை, முகப்பவுடரின் விலை, வழக்கமாக உபயோகிக்கும் மருந்துகளின் விலைகள்?
நான் விலைவாசி உயர்வைப்பற்றிப் பேசுகிறேன் என்று நீங்கள் தவறுதலாகப் புரிந்துகொள்ளக்கூடாது. நான் முயல்வது இன்னுமோர் தளம்.
ஒரு லிட்டர் 2.5 சதம் கொழுப்புள்ள தரப்படுத்தப்பட்ட பாலும் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் எப்படி ஒரே விலையாயிற்று?
பாலுக்கு விவசாயிக்கு விலை தர வேண்டும். சுத்திகரிப்பு பதப்படுத்தல், பாக்கட் செய்தல், வாகனச் செலவுகள், சிறு வியாபாரிக்குக் கழிவு, சேதாரம், கெட்டுப் போதல் எல்லாம் கணக்கிட்டு லிட்டருக்கு பாலின் அடக்க விலை என்ன? தண்ணீரை ஆழ் குழாய்க்கிணறு அல்லது ஆற்றுப் படுகையில் உறிஞ்சி பாட்டில்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பும் அடக்கவிலை என்ன?
நாம் யாரிடம் எவ்வளவுக்கு ஏமாறுகிறோம் தோழர்களே! ரயிலுக்கு போகிறவர் கையில் தண்ணீர் பாட்டில் இல்லாதவருண்டா இன்று? சென்னை போன்ற நகரங்களில் ஒரு வீட்டுக்கு சராசரி மாதம் 250 ரூபாய்க்கு குடி தண்ணீர் வாங்குகிறார்கள். எல்லா நகரங்களிலும் வீட்டுக்கு நூற்றைம்பது ரூபாய்க்கு மாதம் கொசுக்கொல்லி வாங்குகிறார்கள்.
கொசுவைக்கூட ஒழிக்க முடியாத, குடிதண்ணீர் கூட வழங்க முடியாத சுதந்திர பாரதத்தில் நாம் அறுபது ஆண்டுகள் பக்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏற்றத்தாழ்வை, அறியாமையை தேர்தலுக்குத் தேர்தல் ஒழித்துப் புதைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பாருங்கள் அவை ஃபீனிக்ஸ் பறவையைப்போல சாம்பலில் இருந்து உயிர்த்துக் கொண்டும் வருகின்றன.
நீங்கள் பா.ஜ.கா.வானால் என்ன, காங்கிரஸ் ஆனால் என்ன, அ.இ.மு.லீக் ஆனால் என்ன இந்தியப் பொதுவுடைமைக் கட்சியானால் என்ன, மார்க்சியப் பொதுவுடைமை கட்சியானால் என்ன, சிவசேனா ஆனால் என்ன, தி.மு.க; அ.இஅ.தி.மு.க; ம.தி.மு.க; பா.ம.க;தெலுங்குதேசம் ஆனால் என்ன தோழர்களே! யாருக்கும் குடிக்க நன்னீரில்லை. கொசுக்கொல்லி இல்லாமல் உறக்கமில்லை. ஓட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
நீங்கள் ஆசையுடன் குழந்தைகளுக்கு வாங்கித்தரும் குளிரும் கரியமிலவாயுவும் ஊட்டப்பட்ட பானங்களின் அடக்கவிலை தெரியுமா? இரண்டு லிட்டர் ஒருசேர ஒரு குழந்தை குடித்தால் செத்துப்போகும் என்று தெரியுமா? சில மாநிலங்களில் பூச்சிகொல்லி மருந்தாகத் தெளிக்கிறார்கள் என்பது தெரியுமா?
பக்கத்துத் தோட்டத்துத் தென்னைமரங்களில் இருந்து வரும் இளநீரின் விலையாவது தெரியுமா? அதிலுள்ள உயிர்பேணும் சத்துக்களின் விவரம் தெரியுமா?
இந்திய நாட்டில் எல்லாப் பருவங்களிலும் ஏதேனும் ஒரு கனி அபரிமிதமாகவும் மலிவாகவும் கிடைக்கிறது. ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மா, பலா, அன்னாசி, வாழை என. கனிகளை உண்ண நாம் குழந்தைகளைப் பழக்க மறந்து விஷங்களைத் திணித்து விஷங்களைப் புகட்டிக் கொண்டிருக்கிறோம். இந்தியத் திருநாட்டில் நிறையக் குழந்தைகளுக்கு “வாழைப்பழம் தின்றால் சளி பிடிக்கும்” மாயம் பிடிபடவில்லை எனக்கு.
பெருமையாக அணிந்துகொள்ளும் நூறு சதமானம் பருத்திச் சட்டையில் உண்மையில் பருத்தி எத்தனை சதமானம்? பருத்தியே போலிருக்கும் விஸ்கோஸ் எத்தனை சதமானம்? எங்கு போய் ஆராய்ச்சி செய்வீர்கள்? அதற்கான வழி தெரியுமா? தயாரிப்பவனும் வியாபாரியும் சொல்வதுதானே கணக்கு! அறுபது சதமானம் பருத்தி, நாற்பது சதமானம் விஸ்கோஸ் எனில் – கிலோவுக்கு பருத்தியின் விலை என்ன, விஸ்கோஸ் விலை என்ன, கலவையில் கிடைக்கும் லாப சதமானம் என்ன, அது எவர் சட்டைப் பைக்கு போகிறது எனும் கணக்கென்ன?
அரையடி மண்ணை அண்ணனோ, தம்பியோ அல்லது அடுத்தவீட்டுக்கரனோ எடுத்துக்கொண்டால் பதினான்கு ஆண்டுகள் வழக்கு நடத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால் நமது நுரையீரலை, இதயத்தை, இரைப்பையை, மூத்திரக்காயை, கண்களை, பற்களை, காதுகளை, எலும்பை, தோலைச் சுரண்டி எடுத்துக்கொண்டு போய் தங்கள் குண்டிக்குக் கீழே ஒழித்து வைத்துக்கொள்வதைப் பற்றி நமக்கு ஒரு கவலையும் இல்லை.
எனது கோவை நண்பர் ஒருவருக்கு கொசுவத்திப் புகை ஒவ்வாமல் தொண்டைப்புண் வந்து இருமி காதுகள் செவிடாகிப் போனதைச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? உங்களுக்குத் தெரிந்த ENT மருத்துவரைக் கேளுங்கள்.
ஆட்டோக்காரனிடம் இரண்டு ரூபாய்க்கும் காய்கறிக்காரியிடம் எட்டணாவுக்கும் நாம் கசடுகிறோம். ஆயிரக்கணக்கில் சிரிப்புத் துணுக்குகள் வெளியாகி இருக்கும் இதுவரை. ஆனால் ரத்தமே வராமல் சதயறுத்து நெய்யில் வறுத்துத் தின்னும் பன்னாட்டு, தன்னாட்டு உடமையாளர்களைப் பற்றி வெகு கௌரவமாகப் பேசித்திரிகிறோம்.
மிகுந்த ஊக்கத்துடன் எழுதுகிறார்கள் இன்னும் – லாரித் தாவளத்தில் வண்டி கழுவியவன் முப்பது ஆண்டுகளில் நாலாயிரம் கோடிக்குத் தொழில் செய்கிறான் எனும் ரீதியில். மாய்ந்து மாய்ந்து நேர்காணல்கள் வெளியிடுகிறார்கள், விளம்பரங்கள் பெற்றுக்கொண்டு. கடின உழைப்பு, சுறுசுறுப்பு, ஊக்கம் என்றெல்லாம் புகழ்கிறார்கள். பள்ளியாசிரியன், தபால்காரன், போலீஸ்காரன், பேருந்து ஓட்டுனன், முப்பதாண்டுகள் கடினமாக உழைத்து, சுறுசுறுப்புடன் இயங்கி, ஊக்கம் கொண்டு செயல்பட்டு என்ன சேமித்து விடமுடியும்?
மக்கள் தசையைத் தின்று இரத்தம் குடித்து, தொழிலில் வெற்றி பெற்ற மாயாவிகள் பென்ஸ் காரிலும் போகிறார்கள். அவர்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு அரசியல்காரன் வருகிறான், சினிமா நடிகன் வருகிறான், மக்கள் விதந்து பார்த்து நிற்கிறார்கள், தொட்டுப் பார்க்க விழைகிறார்கள்,தொடக்கிடைத்தால் கையைக் கழுவாமல் துடைக்காமல் வீட்டுக்குக் கொண்டு போய் தாய் மூக்கில் மகள் மூக்கில் மனைவி மூக்கில் வைக்கிறார்கள்.
கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள். அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது கோவெனக் கதறி அழ வேண்டும்போல. அவன் பேசும் ஏழைப்  பங்காள வசனங்களுக்கு உருகி நிற்கிறோமே! வயசாகிப்போனால் அவனுக்கு வாக்களித்து முதலமைச்சர் ஆக்குகிறோமே! செத்துப் போனால் அவன் சமாதிக்கு தூபதீபம் காட்டிகிறோமே! வியர்வையில் ஊறிப் புளித்து உலர்ந்த அவன் உள்ளாடையை ஏலம் போட்டால் கோடி கொடுத்து வாங்கிப் பூசையறையில் வைத்து வழிபடவும் தயாராக இருக்கிறோமே!
நடிகனைத் தொட்டுப் பார்க்க விரும்பியவர் நாம், நடிகையைக் கோயில் கட்டிக் கும்பிட்டவர் நாம், கவர்ச்சி நடிகை குடித்து மிச்சம் வைத்த எச்சில் சோடாவை அண்டாவில் விட்டு நீர் சேர்த்துக் கலக்கி அரைகிளாஸ் பத்து ருபாய் எனப் பிரசாதம் விநியோகித்தவர் நாம், பச்சை குத்திக் கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர் நாம், நடிகைக்குத் தீண்டல் தாண்டிப் போனால் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர் நாம், மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின் பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம் – நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது? ஏமாளி என்றா, மூடன் என்றா, மூர்க்கன் என்றா, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன் என்றா?
கைக்கடிகாரத்துக்கு சாவி கொடுப்பது என்பது நமக்கு தினமும் செய்ய வேண்டிய அலுப்பூட்டும் வேலை. வீடு துடைப்பதைவிட, பத்துப் பாத்திரம் தேய்ப்பதை விட, கக்கூஸ் குளிமுறி கழுவுவதை விட, முருங்கைக்கீரையை ஆய்வதைவிடக் கடுமையான வேலை அல்லவே! என்றாலும் தாத்தா கட்டிக் கழித்த, அப்பா கட்டிக் கழித்த கைக்கடிகாரங்களைக் கட்டித் திரிந்தோம். செலவில்லாமல் ஒவ்வொன்றும் முப்பது நாற்பது ஆண்டுகள் உழைத்தன. 1964ல் நான் கல்லூரியில் சேர்ந்தபோது வாங்கித்தந்த கைக்கடிகாரத்தை இருபத்தைந்து ஆண்டுகள் வைத்திருந்தேன். பம்பாய் மழைக்கும் சந்த்ரப்பூர் வெயிலுக்கும் அது தாக்குப் பிடித்தது. ஒரு பயணத்தின்போது ரயில்பெட்டி கக்கூஸில் கழற்றி வைத்து மறந்து போனேன். பின்பு சற்று விலையதிகமான தானியங்கிக் கடிகாரங்கள் வந்தன. இன்றோவெனில் அதிக உழைப்பையும் அலுப்பையும் தீர்க்க இறையருளால் நவீன குவார்ட்ஸ் கைக்கடிகாரங்கள். ஆண்டுதோறும் பேட்டரி மாற்ற நாற்பதுரூபாய் முதல் எண்பது ரூபாய் வரை செலவு. கடிகாரச் சங்கிலியைக் கழற்றி தொற்பட்டைகளை அணிந்தால் பட்டைக்கு மாத்திரம் ஆண்டுக்கு நூற்றிருபது ரூபாய் செலவு. சட்டைக் காலர் அழுக்காகி வியர்வையில் ஊறிக் கிழிந்து போகும் என்று கழுத்தில் கைக்குட்டை மடித்துச் செருகி நடந்தவர் நாம். இன்று ஒரு கைக்கடிகாரம் பராமரிக்க ஆண்டுக்கு நூற்றருபது ரூபாய் செலவு.
தொலைபேசியும் செல்ஃபோனும் பற்றி ஏற்கனவே நானோர் கட்டுரை எழுதியாயிற்று. இங்கு அதை மறுபடி பேசப்பிரியமில்லை.
பண்டு நாஞ்சில் நாட்டில் வீடுகளில் பெண்கள் ‘பொத்து வரத்து’ என்பார்கள். அதாவது கணக்கில் சேராமல் சில்லறையாக வரும் விவசாயி வீட்டு வருமானங்கள். முருங்கைக்காய், தண்டன் கீரை, வாழைத்தண்டு, மொந்தன்காய், தென்னை மடல், கோழி முட்டை, புன்னங்கொட்டை, புளியங்கொட்டை, உமி, தேங்காய் கதம்பை, பால்-மோர்-நெய், என்று விற்று கண்ணுக்குத் தெரியாமல் வரும் வருமானம். இன்றோ விவசாயிக்குமே கண்ணுக்குத் தெரியாமல் வரும் வருமானம். இன்றோ விவசாயிக்குமே கண்ணுக்குகூட தெரியாமல் வம்புக்கு செலவாகிக் கொண்டு வருவதை கி.ராஜநாராயணன் என்ன பெயர் சொல்லி அழைப்பார். ‘பொத்துப் போக்கு’ என்றா?
1962 தேர்தலுக்கு முன்பாகவோ பின்பாகவோ இருக்கலாம். தி.மு.கவின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மதியழகன் சட்டசபை உறுப்பினராக இருந்தார். இரண்டு இட்டிலிகளின் விலை இரண்டணாவில் இருந்து இரண்டரை அணாவாக உயர்த்தப்பட்டதுமல்லாமல் கனமும் குறைந்திருந்தது. சபாநாயகருக்கு இட்டிலியைக் கொண்டுபோய்க் காட்டி சலசலப்பை ஏற்ப்படுத்தினார். இந்திய சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையாய பணியே சலசலப்பை ஏற்படுத்துவதுதான். பின்பு, ‘இட்டிலியே ஏன் இளைத்துப் போனாய்? நீ எந்தப் பயல் மீது காதலானாய்?’ என்று சமூக சீர்திருத்த முற்போக்குப் புரட்சிக்கனல் தெறிக்கும் சினிமாப் பாடல் ஒன்று கேட்டது சில காலம்.
1965-ல் ஐந்து அணாவுக்கு நான் குண்டுப் போத்தி கடையில் முழுச்சாப்பாடு சாப்பிட்டிருக்கிறேன். அன்று விறகு கீறுபவனுக்கு சற்றும் குறையாமல் இருக்கும் என்னுடைய முழுச்சாப்பாடு. பருப்புக்கு ஒரு சிப்பல், சாம்பாருக்கு ஒரு சிப்பல், ரசத்துக்கு ஒரு சிப்பல், சம்பாரத்துக்கு ஒரு சிப்பல் சம்பா அரிசிச் சோறு. இன்று நான் அதையே நாலு வேலையாக கலோரிகள் கணக்குப்பார்த்து சாப்பிடுகிறேன். கோவை நகரில் சாதாரண குடிமக்கள் சாப்பிடும் கடைகளில் இன்று இரண்டு இட்டிலி எட்டு ரூபாய். கிட்டத்தட்ட அறுபத்திநான்கு மடங்கு. இருநூறு ரூபாய் மாதச்சம்பளம் வாங்கி இருந்தால் இன்று அதே வேலைக்கு ரூ.12,800 ஆகி இருக்கவேண்டும். அது நிறுவன வசப்பட்ட பிரிவினருக்கு. இன்றும் ஆயிரமும் ஆயிரத்து இருநூறும் மாதச் சம்பளம் வாங்கும் பட்டறை வேலைகளுக்கும் ஃபவுன்டரி வேலைகளுக்கும் போகும் வாலிபர்கள் இருக்கிறார்கள் நிறுவனப்படாத பிரிவில்.
சொல்கிறார்கள் பெட்ரோல் பங்குகளில் முப்பது சதமானம் மலிவான மாற்று ரசாயன எரிபொருள் கலக்கிறார்கள் என்று. பெட்ரோலுக்கு அரசு நிர்ணயிக்கும் விலையை நீங்கள் பேரம் பேசாமல் சத்தமின்றிக் கொடுத்துவிட்டு வருவீர்கள். ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஒரு லிட்டர் சுத்தமான பெட்ரோல் கிடைப்பதில்லை. ஒன்று அளவில் மாயம் செய்யும் Caliberation. இரண்டு மலிவான மாற்றுத்திரவக் கலப்படம். முதலாவது உங்கள் சட்டைப் பையைச் சுரண்டுவது. இரண்டாவது சர்வ ஜன சமத்துவமாக நச்சுப் புகையைப் பரப்பி உங்கள் இதயத்தை, நுரையீரலை, கிட்னியை இரைப்பையை, குதத்தை நாசம் செய்வது.
பதில் இருக்கிறது. நவீன விஞ்ஞான வளர்ச்சி காரணமாக கணக்கற்ற மருத்துவமனைகள் இருக்கின்றன, நம்மைக் ‘கவனித்து’க் கொள்ள. பிறகு எதற்கு கவலைப்படவேண்டும்?
பதில் இருக்கிறது. ஆன்மீகத்தில். சொர்க்கத்துக்கு நம்மை அற்றுப் படுத்த ஆன்மீகவாதிகளுக்குப் பஞ்சமா என்ன?
காதோடு ஒன்று சொல்கிறேன்.
வாரம் ஐந்து லட்சம், எட்டு லட்சம் என்று விற்கும் நமது வாராந்தரி ஒன்றின் பக்கங்கள் எவ்வளவு, அதில் விளம்பரப் பக்கங்கள் எத்தனை, பக்கத்துக்கு விளம்பரக் கட்டணம் எவ்வளவு, கடையில் வைக்கும் விலை என்ன, ஒரு பிரதிக்கு அடக்கவிலை என்ன, ஒரு இதழின் வரவு செலவு என்ன? ஒய்வானதோர் விடுமுறைநாளில் கணக்குப் போட்டுப் பாருங்கள். அதில் ஆறு பக்கங்களில் கதை எழுதுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு கதை எழுத முதல் வரைவு, இரண்டாவது, சில சமயம் மூன்றாவது வரைவுகூடச் செய்து நகலெடுக்க எட்டு மணி நேரம் ஆகாதா? மூளை உழைப்புப் பற்றி நானிங்கே பேசவே இல்லை. சிற்றிதழுக்கு அனுப்பாமல் வணிக வாராந்தரிக்கு அனுப்பினால் கிடைக்கும் சன்மானம் என்ன தெரியுமா? நூற்றைம்பது ரூபாய். அது சென்னையில் மாற்றத்தக்க காசோலையாக இருக்கும். வங்கியில் போட்டால் மற்றும் கமிஷன், கூரியர் செலவுகள் போக உங்கள் கணக்கில் நூற்று ஆறு ரூபாய் வரவு வைப்பார்கள். ஒரு மாசத்துக்கு கொசுக்கொல்லி வாங்கப் போதாது.
ஒரேமாதிரி வரவு செலவும் சர்குலேஷனும் லாபமும் சம்பாதிக்கும் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் எழுதினால் சன்மானம் இரண்டாயிரம் ரூபாய். தமிழில் எழுதினால் நூற்று ஆறு ரூபாய். ஏனெனில் ஆங்கிலத்தில் எழுதுபவன் பேரறிவாளான், தமிழில் எழுதுபவன் அரைவேக்காடு அல்லவா!
எனவே சென்றிடுவீர் எட்டுத் திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் களவாண்டு கொண்டிங்கு சேர்ப்பீர்!
இதில் ஒரு வாராந்திரி எழுதும் அரசியல் தலையங்கங்கள் என்ன, சமூக நீதிக் கட்டுரைகள் என்ன, விஞ்ஞான சாதனைக்கு வரவேற்பு என்ன, விளையாட்டுப் போட்டிகளில் வென்றமைக்கு வாழ்த்துக்கள் என்ன, பாரதியார் என்ன, திருவள்ளுவர் என்ன, மகாத்மா காந்தி என்ன, வள்ளலார் என்ன, என்ன என்ன என்ன வேலைப்பிடித்ததும் என்ன?
சற்று அற்பமாகத் தோன்றும் சில சமயம்.
ஆனாலும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஒரு காலத்தில் வரைவோலை அனுப்ப வங்கிகள் கட்டணம் வாங்குவது இல்லை. இன்று பிற விலைவாசிகளுக்கு ஒப்ப அதுவும் விகிதாச்சாரத்தில் ஏறிக்கொண்டு இருக்கிறது. கட்டணப் பட்டிகைகள் உண்டு. சேமிக்கும் கணக்குக்கு முன்பு காசோலைகள் இலவசம். இன்று பத்துக் காசோலைகள் மட்டும் இலவசம். அதாவது ஆண்டில் பத்து முறை இலவசமாகப் பணம் அடுக்கலாம். மேற்கொண்டு எடுக்க வேண்டும் எனில் காசோலைக்கு ஒரு ரூபாய். ஆனால சகல தேசீய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாராக் கடனின் கூட்டுத்தொகை கொண்டு இரண்டு மூன்று இந்திய மாநிலங்கள் வாங்கலாம். ஒரு காலத்தில் பணவிடைப் படிவங்களுக்கும் பதிவுத் தபாலுக்கான கைச்சாத்துச் சான்று அட்டைகளுக்கும் காசு கிடையாது.
பஞ்சாயத்துக்களில், நகர்மன்றங்களில், மாநகராட்சிகளில் வீடுதோறும் நூலக வரி என ஒன்று வாங்குகிறார்கள். எவராவது கவனிக்கிறீர்கள? ஒரு மாநிலத்தில் ஆண்டுக்கு வசூலாகும் தொகை என்ன, அதில் எவ்வளவுக்கு புத்தகம் வாங்குகிறார்கள்? யாருக்காவது தெரியுமா? வாங்கப்படும் புத்தகங்கள் எத்தரத்தைச் சார்ந்தது என்பது மற்றுமோர் கேள்வி. தயவுசெய்து நூலகம் என்றால் என்ன என்று கேட்டுவிடாதீர்கள்!
காதோடு மற்றுமோர் செய்தி சொல்கிறேன். தயவு செய்து அரசியல்காரர் காதுகளில் போட்டுவிடாதீர்கள். உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லை நமக்கு.
‘மிதவை’ என்றொரு நாவல் எழுதி 1986ல் அன்னம் வெளியீடாக வந்தது. அதை அரசு நூலகங்களுக்கு வாங்கவில்லை. பின்பு 2002ல் விஜயா பதிப்பக வெளியீடாக மறுபதிப்பு வந்தது. அதையும் அரசு நூலகங்களுக்கு வாங்கவில்லை. ஒன்றும் நட்டமில்லை. யாரும் மூச்சு முட்டி செத்துப்போகவும் இல்லை. ஆனால் அந்த நாவலை இந்திய அரசு நிறுவனம் National Book Trust, India பத்து இந்திய மொழிகளில் பெயர்க்கத் தேர்ந்தெடுத்துள்ளது. தமிழன் வசிக்கத் தகுதியற்றது என இரு வேறுபட்ட கழக அரசுகள் தீர்மானித்த புத்தகத்தை மைய அரசு ஆங்கிலம் உட்பட்ட பிற இந்திய மொழிகளுக்கும் பெயர வேண்டும் எனத் தீர்மானிக்கும் அதிசயம் புரிபடவில்லை.
பொதுத்தேர்வுகளில் நமது பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும், மருத்துவமும் தொழில்நுட்பமும் படிக்க வேண்டும், பெரிய சம்பளங்கள் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தப்பில்லை. தனிப்பயிற்சியும் நுழைவுத் தேர்தல்களுக்குச் சிறப்புப் பயிற்சியும் என கடினமாக ஊக்கப்படுத்துவதிலும் தவறில்லை.
ஆனால் தமிழ்ப் பாடங்களில் பொய்கள் சொல்லித் தரப்படுவதைப்பற்றி நமக்கு கவலையுண்டா? இந்தியாவைக் கண்டு பிடித்தவர் கொழிஞ்சாம்பாறை குருஞ்செழியன் என்றும் கங்கை நதியைத் தோண்டியவர் களியக்காவிளை கரும்பொன்னரசு என்று நம் மக்கள் உரக்க வாசித்தாலும் நமக்கென்ன என்றிருப்போம். மதிப்பெண்கள் வந்தால் போதாதா? புதுமைப்பித்தனும் புலமைப்பித்தனும் ஒன்றானாலும் என்ன வேறானாலும் என்ன?
உடலுறவு கொண்ட இருநாட்களுக்குள் உட்கொண்டால் கருத்தரிக்காது எனும் மாத்திரை ஒன்று பாதகமான பின்விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்று மேநாடுகளில் தடை செய்யப்பட்டது. நம்நாட்டில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி நமக்கென்ன அக்கறை? இனிமேல் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வசதியாக இருக்கும் என்று வணிக இதழ்கள் வாய்பிளந்து நாவூறி எழுதுகின்றன. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நமக்கென்ன அதைப்பற்றி, நமது பிள்ளைகளுக்குத் தீயென்று சொன்னால் போதும் தொட்டுப்பார்க்கத் துணியாது என்ற அபார நம்பிக்கையுடன். விபத்துக்களும் மாரடைப்பும் எப்போதும் அடுத்த வீட்டுக்காரனுக்குத்தானே நடக்கும்! நமக்கெங்கே நடக்கப் போகிறது என்ற தன்னம்பிக்கையும் நம்மிடம் அளவில்லாமல் சுரக்கிறதல்லவா?
ஒருமுறை கலாப்ரியா, பணிபுரியும் வங்கியில் ஒரு பயிற்சிக்காகக் கோவையில் வந்து பத்து நாட்கள் தங்கி இருந்தார். அவரைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என தோழர் ‘களம்’ ஆறுமுகம் அகில இந்திய வானொலிக்குப்போய் இலக்கிய நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளரை அணுகிக் கேட்டார். அவர் உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர். விவசாயிகளுக்கான நிகழ்ச்சி தயாரிப்பாளர், ஆனால் சாரமில்லை.
மிகத் தெளிவான கேள்வியொன்றைக் கேட்டார் – “கலாப்ரியான்னா யாரு?”
கல்லூரிகளின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இன்னும் அதிக விவரம் உடையவர்களாக இருப்பது பல முறை தமிழ்மன்றங்களின் சொற்பொழிவுகளுக்குப் போனபோது எனக்குப் புலப்பட்டிருக்கிறது.
நமக்கென்ன? பிள்ளைகள் மதிப்பெண்கள் வாங்கினால் போதாதா? அப்பம் தின்னவோ அலால் குழி எண்ணவோ? பேராசிரியர்களுக்கு தமிழிலக்கியம் தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் எனா? போலிச் சாமியார்கள், போலி மருத்துவர்கள் என ஆர்வமுடன் புலன் விசாரித்த செய்திகளை முகம் புதைத்து வாசிக்கிறோம். ஆனால் போலிப் பேராசிரியர்களைப் பற்றி நமக்கேதும் போதம் உண்டா?
ஆவலாதி பொறுக்க முடியாமல் உங்களுக்கும் சில கடத்தினேன். சற்று யோசித்துப் பாருங்கள். நம்மால் இதில் செய்ய முடிவதென்ன?
ஒன்றுமில்லை என்றொரு பதில் கிடைக்குமானால், வீட்டுக்குப் போய், சாப்பிட்டு, மெகா சீரியல்கள் பார்த்து விளக்கணைத்துத் தூங்குங்கள். உடலுறவுக்குக் கூட குறி பலமிழந்து போயிருக்கும். மறுநாள் காலை எழுந்து மறுபடியும் அலுவலகம் போக வேண்டும், ஊழியங்கள் செய்ய.
எனக்கும் தெரியவில்லைதான், நம்மால் என் செய்தல் ஆகும் என. ஆனால் குறைந்த பட்சம் மனத்தொந்தரவுகளுக்காவது ஆளாகிறீர்கள் எனில் உங்களிடம் மனிதம் இன்னும் மிச்சமிருக்கிறது என்று பொருள். அந்த மனத்தொந்தரவுகளை உங்கள் மக்களுக்குச் சொல்லி வையுங்கள். என்றாவது அது தளிர்த்து தழைத்து மரமாகிப் பூத்துக் காய்த்துக் கனியும். அந்தக் கனிகளில் விடம் முறிக்கும் வீரியச் சத்து ஏதும் கரந்து உறைய வாய்ப்புண்டு.
வடக்கு வாசல் – டிசம்பர் 2005

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to புலம்பல் கண்ணி (தீதும் நன்றும்)

 1. J.Subramonian சொல்கிறார்:

  நாஞ்சில் ஐயா செல்லரித்த சமுக உற்றுநோக்கு இல்லாத நம் இந்திய மக்களுக்கு
  இந்த கட்டுரை சரியான தார்குச்சி

 2. பாலா,சிங்கப்பூர் சொல்கிறார்:

  //மனத்தொந்தரவுகளுக்காவது ஆளாகிறீர்கள் எனில் உங்களிடம் மனிதம் இன்னும் மிச்சமிருக்கிறது என்று பொருள்.//
  மனத்தொந்தரவா…?நொந்து நூலாகிப்போயிருக்கிறேந். 80 களின் தொடக்கத்தில் எங்கள் வீட்டின் அத்யாவசிய செலவு மின்சாரக்கட்டணம் மட்டுமே.
  இப்போ கேபிள் டிவி,கேஸ் சிலிண்டர்,போன் கார்டு ரீசார்ஜ்,பெட்ரோல் செலவு,ஆஸ்பத்திரி,ஆட்டோ செலவு,பேஸ்ட்….
  காலைல எந்திச்சவுடன் கையில எடுக்கிற பேஸ்ட் -ல இருந்து ராத்திரி போட்டுகிற காண்டம் வரை எல்லா காசும் எவனுக்கோ போகுது…
  என்னதான் வசதி,வாய்ப்புன்னு சொன்னாலும் எங்க தாத்தா வாழ்ந்த சந்தோஷத்துல பத்தில ஒரு பங்கு கூட நான் சந்தோஷமா இல்ல.
  1982 -ல் தேரூரில் தாமரை இலைல ஆப்பம்மும் சாம்பாரும் சாப்புடுவேன். 5 ஆப்பம் 1 ரூவா.இப்போ 1ஆப்பம் 5 ரூவா.வெளங்கின மாதிரிதான்.

 3. thalhal சொல்கிறார்:

  இவ்வளவு வலிக்க சொல்லியும் உறைக்கவில்லையெனில் குருதி ஓடும சரீரம் தானா?

 4. TechTamil Karthik சொல்கிறார்:

  Only one solution for these problem is “Raise a question, And deny their service boldly”. I do it in some occations where ever possible.

 5. Naga Sree சொல்கிறார்:

  ஒவ்வொரு முறை நம் நாட்டிலிருந்து வரும் காய், 
  கனிகளை  வெளிநாட்டில் வாங்கும் போது 
  அதன் விலையை நம் நாட்டு காசுக்கு 
  மதிப்பிட்டால்,நம் விவசாயிகளின்
   பரிதாப நிலை  நெஞ்சை கிழிக்கும்.            

 6. suresh k சொல்கிறார்:

  ஐயா,
  மேலும் மேலும் எங்களை குற்ற உணர்ச்சி கொல்லுகிறது ஐயா,
  ஒரு பள்ளி ஆசிரியனாக அதுவும் பொருளாதாரம் படித்தவனாக இந்த கட்டுரை என்னை நிலை குலைய செய்கிறது…

 7. Leo சொல்கிறார்:

  A lot of chuckles here and there. Several thoughts from the past. Quite nostalgic. Well, I will definitely read it out to my children who may not understand much of what’s given here, but they will certainly be able to recall some of them sometimes in future-Ihope.

  Just a word to the writer: English is, as we all know pretty well, just a language-like any other language. I certainly agree that we should not give ‘too much’ respect just because it is ‘English.’ However, sir, you will agree with me that English has wider readers compared to those in Tamil. If Tamil is my mother from where I originated, English is whom I married to. How can we argue on who is more valuable? Just a thought, Sir.

  I also would like to place a request here. May I request you to write on the ‘art or the tactic’ of making movies in India? 99% of the movies, in my opinion, are those that satisfy the emotions of the viewers. Very often they (the characters) satisfy the poor and the commoners. Isn’t it a way of scandal?

  Oftentimes, the heroes tend to tap on our pride. They seldom say what we may not like. For example, imagine a dialogue like “Thamizhanna …..” OR “Kiramathanna…” Many more examples of this kind can be given.

  Saying they wanted to show the scene as it is – they show the dirty slum, for example, as it is. Can any hero live there a while and shoot the same shot? Aren’t they making money out of the innocence of common people? There are umpteenth examples I can give. If one watches a movie beyond what they show, we’ll be able to understand what each scene is created for.

  It is the poor people who lose more of their money to make the heroes richer. Ironically, they (the super heroes) talk about the poor ‘heroically’ all the time with honey quoted dialogues in their movies while the poor clap or laugh or feel so very ‘satisfied.’

  I think, you will be able to express my thought a million times better than how I have stated here, sir! Therefore, I request an article on this subject please.
  I think movie exploitation is number in India. Once the movie craze is gone, our country will prosper much better.

  Thank you very much indeed.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s