”வாசறு மிண்டான்…… ”(கலாப்ரியா)

கலாப்ரியா

 

எந்த ஒரு இலக்கியப் படைப்பும் கலைஞனின் நினைவுகளிலிருந்து, இறந்த காலத்திலிருந்தே உருப்பெறுகிறது. அகோரப்பசியுடன் தளிரையும் அரும்பையும் இலையையும் தின்று தன்னைச் சுற்றிக் கூடமைத்து ஒடுங்கிவிட்ட நிலையில் உறங்கி, வண்ணத்துப்பூச்சியாகி சிறகடிக்கப் போகிற யத்தனத்தில் கூட்டுப்புழுவாக, இலை மறைந்து கிடக்கிறது அனுபவங்கள்.
அழகு சிறகடிக்கிற வண்ணத்துப் பூச்சி என்றில்லை. எத்தனையோ விதமான பூச்சிகள் தன் கூட்டை விட்டு நீங்குகின்றன, வெளியில் நீந்த. கலைஞன் தன் இறந்தகால அனுபவங்களை எதிர்நாளின் பயங்கள், பிரமிப்பு, வலி, கனவுகள் நிறைவேறாமை குறித்த உத்திரவாதமின்மை (யே பெரும்பாலும்) ஆக்கிரமித்திருக்கிற மனதுடன் நிகழ் காலத்தில் எழுத அமர்கிறான்.
ஒரு அனுபவம்  பல அனுபவங்களுடன் கோர்வையற்ற, அடுக்கினாலும் சரிந்து விடுகிற வரட்டிகள் போல், அடுக்குகளற்ற தன்மையுடன் நினைவில் புதைந்து கிடக்கிறது. இவை இடம், பொருள், வெளி என்பவற்றைப் புறந்தள்ளி, காலச்சட்டகத்தை மீறி, காலச்சட்டகம் என்பதே பெரிதிலும் பெரிதான ’வெளி’ என்று வாசகனுக்கு தோன்றாமல் தோன்ற வைக்கிற மொழியினை கவிதை கொண்டுள்ளது. அப்படியொரு மொழியில் கவிதை உருவாகிறது.
நாவலின் வடிவத்தில் பல நவீன உத்திகள் பிரக்ஞையின்றியும் பிரக்ஞை பூர்வமாகவும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஆதாரமான கதை சொல்லல் முறையில் யதார்த்தச் சித்தரிப்புகளின் காலம் முடியவே முடியாது. அதன் ஈர்ப்பும், மூளை கிளறி விடும் சுகமும் வேறுதான்.
சிறுகதையின் வடிவம் கவிதைக்கு சற்றே நெருங்கியது. கவிதை, வாசகவெளியின் எந்தப் புள்ளியையும் மையமாகக் கொண்டு விடும். சிறுகதைக்கு ஒரு விண் கல் அல்லது சின்னஞ்சிறிய கோள் மையமாக அமையும். அதில் காலூன்றினாலும் போதும், ஒரு சூரிய உதயமென்றில்லாமல் பல சூரியோதயங்கள் தோன்றி காலப்பிரக்ஞையை, கால அளவீட்டைக் கோரலாம். யதார்த்தக் கதைகளுக்கு எப்போதும் ஒரு சூரியோதயமே.
ஒருவரின் சிறுகதைத் தொகுப்பின் (தொகுப்பு என்பது முக்கியம்) நல்ல கதையைப் படித்து முடித்து அதன் அதிர்வும் பாதிப்பும் நினைவின் சுவாசத்தைக் கட்டிப் போட்டுவிட, மனம் ஒரு வெற்றிடத்திற்குள் நுழைந்த வாசக மனம், சில நிமிடம் மௌனமாகிப் போகிறதை உணர முடியும்.அப்போது மொழியற்றிருப்பதின் சுகம் பிடிபடும். அடுத்த கதையின் முதல் கொஞ்சம் வரிகள் பார்வையில் பட்டும், புத்திக்கு எட்டாமல் தப்பித்தப்பிப் போய் போக்குக் காட்டும். வாசகனும் கதை சொல்லியும், உடல் மொழி மனமொழி எதுவுமற்று, ஒன்றாகிற அற்புதக் கணமாக அமையும். கொஞ்ச நேரம்தான், சிந்தனை மறுபடி மொழிப்புல் மேயத் தொடங்கி விடும்.
நாவல் தன் பரப்பில் மணல் வீடு கட்டிக் கொள்ளவும், சிதைக்கவும், என்ன விதமான விளையாட்டுக்கும் இடம் தரக் கூடும். அங்கேயும் மொழியின் வல்லமை கவியனுபவத்தையோ, கதையனுபவத்தையோ தராமலும் இருக்காது.
நாஞ்சில் நாடன் கதைகள் முழுத்தொகுப்பு தரும் அனுபவம் அலாதியாய் இருந்தது. பழைய காலங்களை மீள நினைக்க வைத்த அதே நேரத்தில் பல புதுப்புது திறப்புகளையும் உண்டு பண்ணிற்று. ஒரு முழுத் தொகுப்பு என்பது நாஞ்சில் போன்ற கலைஞனைக் கொண்டாடுகிற ஒரு காரியம். அவற்றை ஒருச் சேர வாசிக்கையில் ஒன்று தோன்றியது, அவை ஒரே நாவலின் வெவ்வேறு அத்தியாயங்களாக இல்லை என்பது. அப்படியொரு அபாயம் நேராதது அவருக்கு மட்டுமல்ல தமிழ்ச் சிறுகதைக்கும் ஒரு வெற்றி. இதே அனுபவம் தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் போன்றோரை வாசிக்கையில் வாய்த்தது. யூமா வாசுகி இதில் அதிகப் பிரமிப்புத் தந்தவரென்றால் பொய்யில்லை. ஜானகிராமனின் நாவலில் வரும் கதை மாந்தர்கள் எல்லோரும் ‘நல்லவரே’ என்கிற பொது அபிப்ராயம் ஒன்றுதான் அவரது சிறுகதை மாந்தர்களுக்கும் உள்ள குணாம்சம்.நாவலும் கதையும் எழுதுகிறவர்களைக் குறித்தே இந்தச் சிந்தனை.
அதே போல் நாஞ்சில் நாடனின் நாவல்களிலிருந்து வெகுவாக வேறுபட்டவை அவர் சிறுகதைகள். நாஞ்சில் நாடனின் கதைகளைப் படிக்கும் முன் அல்லது அவரது பேரைக் கடக்கிற போதெல்லாம் ‘வாசறுமிண்டான்’ என்று நெல்லின் பேர் – அரிசியின் பேர் என்பது இன்னும் ஜீவனுள்ளதாகப் படுகிறது-தவறாமல் நினைவுக்கு வரும். அவரது பசுமைக் கதைகளில் அவரது பார்வையில் பட்டு நினைவின் பசுமையில் தங்கி இருக்கும் விஷயங்கள் அற்புதமானவை. அவரின் Green memory ஆச்சரியமாயிருக்கும். பால்பாண்டியன்(பிரதர்ஸ்,விருதுநகர்) மிட்டாய் ஆகட்டும் (பால்பாண்டியன் சினிமா ஃபிலிம்கள் அவர் வாங்கியிருப்பாரா, தெரியவில்லை. அரையணாவுக்கு ஐந்து ஃபிலிம்கள், பிரபலமான படங்களின் வேஸ்ட் ஃபிலிம்களை ஒரு தாளில் இறுக்கமாகப் பொதிந்து அட்டையில் ஒட்டி வைத்திருப்பார்கள். சிவாஜி எம்.ஜி.ஆர், படங்கள். திருடாதே, நாடோடி மன்னன், சபாஷ் மாப்பிள்ளே, பாவ மன்னிப்பு, ஸ்ரீவள்ளி, பட ஃபிலிம்கள் எல்லாம் இருக்கும். படத்தில் இல்லாத காட்சிகள் கூட இருக்கும்.) புதுக்குழந்தையைப் பார்க்கப் போகிறபோது பியர்ஸ் சோப் வாங்கிப் போவதாகட்டும் எல்லாம் உறுத்தாமல் கதையாடலின் போக்கிலேயே வரும். அது ஒரு தனிப்பகுதியாக ”இந்தா பார் என் நினைவாற்றலை” என்று காட்டிக் கொண்டிராது. அதே போல் பாரதம், செவ்விலக்கியவரிகள், பாசுரவரிகள், நாடோடிப்பாடல் வரி எல்லாமே கதையாடலின் போக்கிலேயே வரும். ’பண்டார சேனையாய்’ அவரைச் சுற்றிசுற்றி வரும் ரொம்ப ரொம்ப இயல்பாய்.
சில சிறுகதைகளைப் படிக்க அமரும்போது இது எத்தனை பக்கம் இருக்கும் என்று முன் கூட்டியே பார்க்கத் தோன்றும். சற்று அதிகப் பக்கங்கள் இருப்பது போலிருந்தால் ஒத்தி வைத்துவிடத் தோன்றும். அப்புறம் அது வாய்க்காமலே போய் விடும். நாஞ்சிலின் கதைகள் இந்தச் சிரமம் எல்லாம் தராது. (சுஜாதா என்றால் அது வேறுவகையான கொண்டாட்டம்.) நாஞ்சில் நாடனின் கதைகளை, கதையின் பக்கங்களை ஒருச் சேர்த்து கனம் பார்ப்பதில்லை. கதையை மளமளவென்று வாசிக்கத் தோன்றி விடும். சின்னச்சின்ன வாக்கியங்கள், சிறுசிறு வார்த்தைகளே கொண்ட உரையாடல். தார்க்கம்பு குத்தலில் தொடை சிலிர்த்துக் கொள்கிற வண்டிக் காளைகள் மாதிரி. (நாஞ்சில் என்றால் ‘மாதிரி’ என்று கூட எழுதமாட்டார்.)
கதைச் சம்பவங்கள், இழைப்புளி சீவச்சீவ மெருகு காட்டத் தொடங்குகிற தேக்கங்கட்டைகள் போல, கதையை நகர்த்திப் போகிறபோது ’இன்னும் கதை போகும் போலிருக்கே’ என்று தோன்றும். சுவாரஸ்யமாய் அடுத்த பக்கத்தைத் திருப்பினால், அரைப் பக்கத்தில் கதை முடிந்து விடும். ஆனால் கதை, கதையாய் முடிந்திருக்கும். உபாதை என்றொரு கதை.. பூமணியை, ’காலனுப்போவான்’கங்காதரம்பிள்ளை வயல்ச் சோலி முடித்து வருகையில் திடுமென மடக்கி விடுகிறார் வெள்ளிக்கிழமை விளக்கு வச்சாச்சா, கூலியும் கிடைக்காது. ”ஆமா, எம்புட்டுத் தருவேரு”… பணத்தை வாங்கிக் கொண்டு எதிர்பாராமல் வயலுக்குள் தள்ளி விட்டு விட்டு, படபடப்புடன்  அரிசிக்கடைக்கு ஒதுங்கி விடுவாள். கதை சட்டென்று முடிந்து விடும். கதை, கதையாக முடிந்து விடும், என்பதுதான் முக்கியம்.
சீர்காழியின் கச்சேரிக்கு மகனுடன்  போகிற அப்பாகூட்டத்தோட கூட்டமாய் ஓட்டலில் தின்று விட்டு ’ரெண்டு தேயிலை ‘என்று தானே கணக்குச் சொல்லிவிட்டு நழுவுவார்.(எவ்வளவு நீளமான வாக்கியமாய்ச் சொல்லுகிறேன் பாருங்கள்.) மகன் அப்பாவின் கள்ள முகத்தைப் பார்த்து விட்டு ‘இனிமே இவரு கூட வரக்கூடாது’ என்று ஒரு வரியில் முடிவெடுப்பான். ஒற்றை வரி. கதை, அடிக்கவும் வெடித்துவிடுகிற பொட்டுவெடி மாதிரி முடிந்து விடும். பாத்திரங்கள் நம் மனதுள் தம் ஆக்கிரமிப்பைத் தொடங்கி விடும். திடீரென்று ஒரு நாள் அக்காக்குருவியின் அந்த வருட முதல்க்கூவலைக் கேட்டு, பனி முடிந்து கோடை நுழையத் தயாராகிவிட்டது என்று தோன்றுகிற மாதிரி அவரது கதா உலகம், உலகின் ஒரு நிகழ்வு, முழுமையாகப் பதிவாகிவிடும் வாசக மனதில். ஒரு இறந்தபருவத்தைப் பின தள்ளுகிற ’அக்கூவ்’கூவல்.
அவரது கதைகளில் பெரும்பாலாருக்குப் பெயர் கூடக் கிடையாது. முதல்க் கதையான ‘விரதத்’தில் சின்னத்தம்பியாபிள்ளை, சங்கரலிங்கம் பிள்ளை. முன்னவரின் மகள்களுக்குக் கூட பெயர் கிடையாது. அனேகமான கதைகளில் வரும் வார்த்தைகளைக் கணக்கெடுத்தால் நூறு வார்த்தைகளினால் ஆன ஒரு அகராதியே தேறும். ஆனால் விவரணைகளோ பங்கமின்றி இருக்கும். ‘வாய் கசந்தது’ கதையில்-அதை படித்துப் படித்து மாளாது எனக்கு-சூடடிக்கிற ஐயப்பனின் கணக்கு தக்ர்ந்து கொண்டே போகும். கதை முடிகிற போது, அதாவது கதை கதையாகிற போது, ஐயப்பனின் மேல் வியர்வையுடன் ஒட்டியிருக்கிற வைக்கோல் கூளமும் தாளும் நம் மேல் ஒட்டி,அரிப்பும் கசகசப்பும் எடுக்கிற உணர்வு நளுக்கும். அந்த பிந்திய நேரத்து நிலா குளிரைத் தராது.
பொதுவாக சீக்கிரம் உதிக்கிற ‘அறுவடைநிலா’தான் (HARVEST MOON)நெல் அறுப்புக்கு, சூடடிக்க உதவியாய் இருக்கும். ஆனால் தாமதமாக உதிக்கிற ’வேட்டைக்காரர்கள் நிலா’ (HUNTER’S MOON) இங்கே ஐயப்பன் போன்றோரைச் சுரண்ட உதவுகிறது.
இந்த HUNTER’S MOOனும் HARVEST MOOனும் மட்டும்தான் கணிதம் படித்திருக்கிற எனக்கும் நாஞ்சில் நாடனுக்கும் ஆகப் பொதுவான விஷயம். மற்றப்படி அவரது இலக்கிய உயரம் என்னிடமிருந்து எங்கேயோ இருக்கிறது. 30 டிகிரி, 40 டிகிரி, 60. 90, அண்ணாந்து கொண்டே போனால்…. ம்ஹூம் படுத்துக் கொண்டுதான் பார்க்க வேண்டும்.
நன்றி:    கூடு :- http://koodu.thamizhstudio.com/sirappukkatturai_nanjil_sahithya.php

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக