தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!    நாஞ்சில்நாடன்.
சக மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. ‘தலைகீழ்விகிதங்கள்’, ‘எட்டுத்திக்கும் மத யானை’, ‘என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள நாஞ்சில் நாடன், ”என்னைப் பார்த்து எழுத வந்தவர்கள், எனக்கு முன்பு சாகித்ய அகாடமி விருது பெற்று விட்டார்கள். இது தாமதமாக எனக்குக் கிடைத்த விருதுதான்!” – சிநேகமாகச் சிரிக்கிறார்.  இலக்கியம், சினிமா, அரசியல் எனப் பல தளங் களிலும் தன் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார் நாஞ்சில்நாடன்.
 ”சாகித்ய அகாடமி விருது… மகிழ்ச்சியா?”
”இது ஓர் அங்கீகாரம்… அடையாளம். அவ்வளவுதான். அது இருக்கட்டும். அதனால் என்ன நிகழும்?
கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயருக்கு ஞான பீட விருது கிடைத்தது. அவர் வீட்டுக்குப் பாராட்ட வந்து நின்ற கார்களில் கேரள முதல்வர் ஏ.கே.அந்தோணியின் காரும் ஒன்று. ஆனால், யோசித்துப் பாருங்கள். தமிழகத்தில் ஓர் எழுத்தாளருக்கு ஞானபீட விருதே கிடைத்தாலும் முதலமைச்சர் வீடு தேடி வந்து பாராட்டுவாரா?
எழுத்தாளரே தன் சொந்த செலவில் சால்வையும் பூச்செண்டும் வாங்கிக்கொண்டு, புகைப்படக் கலைஞரையும் கூட்டிக்கொண்டு முதல்வர் இல்லத்துக்குச் செல்ல வேண்டும். மறு நாள் செய்தித்தாள்களில் அது செய்தியாக வரும், ‘ஞானபீட விருது வென்ற எழுத்தாளர், முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்!’ என்று. ஆக, முதல்வர் அப்போதும் எழுத்தாளரை வாழ்த்துவது இல்லை, முதல்வரிடம் எழுத்தாளன்தான் வாழ்த்துப் பெற வேண்டும்.
தமிழ்ச் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிற சமூகம். இரண்டு காட்சிகளில் தலை முடியைக் கலைக்கும் நடிகனுக்குக் கொடுக்கும் மரியாதையை எழுத்தாளனுக்குத் தருவது இல்லை. நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் தருகின்றனவே… ஏதாவது ஓர் எழுத்தாளருக்கு எப்போதாவது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறதா?”
”இப்போது இலக்கியத்தை சினிமாவுக்குள் நுழைவதற்கான விசிட்டிங் கார்டுபோல சிலர் பயன்படுத்துகிறார்களே… பிறகு, அவர்களே, ‘என் கதையைச் சிதைத்துவிட்டார்கள்’ என வருத்தம் தெரிவிப்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?”
”முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஒரு நாவலை எடுத்துக்கொண்டால், அது முழுக்க முழுக்க எழுத்தாளனின் ராஜ்யம். ஆனால், சினிமா என்பது பலர் கூடி இழுக்கும் தேர். சினிமாவுக்குப் போகிற எழுத்தாளன்… சினிமா வேறு, எழுத்து வேறு என்பதில் சரியான புரிதலுடன் இருக்க வேண்டும். நான் வட்டார வழக்கில் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் ‘சொல்ல மறந்த கதை’ என சினிமாவாக வெளியானபோது, அதில் ஒரு வட்டார வழக்குச் சொல்கூட இல்லை. ஆனால், அதுதான் சினிமா!
ஆறு பக்கங்கள் நான் எழுதித் தள்ளுவதை இயக்குநர் ஒரே ஒரு ஷாட்டின் மூலம்  கடந்து விடுவார். இதை எல்லாம் கணக்கில் கொண்டு தான் என் கதையைச் சினிமாவாக மாற்று வதற்கு நான் சம்மதிக்கிறேன். அதன் பிறகு, ‘நாவலைச் சினிமா சிதைத்துவிட்டது!’ என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை!”
”சினிமா இருக்கட்டும், அரசியலுக்குப் போகிற எழுத்தாளர்களை ஆதரிக்கிறீர்களா?”
”இல்லை. அரசியல் என்பது இப்போது ஒரு தொழில். சொல்லப்போனால், மிக மோசமான தொழில்!
ஊழல் பண்ணத் தெரிந்தவன், சாதிரீதியாக அரசியல் பண்ணத் தெரிந்தவன், தன்மானத் தைத் துறக்கத் தெரிந்தவன் இவர்கள்தான் இன்றைய  அரசியலுக்குத் தகுதியானவர்கள். ஒருவேளை இலக்கியவாதிகள் அரசியலுக்குப் போனால், அரசியல் மேம்படுமே என்று கேட்கலாம். சினிமா எவ்வளவு தரம் கெட்டுப் போனாலும், படைப்பாளிகள் பங்கெடுக்கும் போது அதை மீட்டெடுக்க முடியும். ஆனால், அரசியல் மீள முடியாத ஒரு சாக்கடை. இப்போது அரசியலுக்குப் போன இலக்கியவாதிகளையே எடுத்துக்கொள்வோம். அவர்கள் எழுதித் தள்ளும் ஆதர்சங்களுக்கும் அவர்களின் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதில் விதிவிலக்குகளே இல்லை. மேலும், அரசியலுக்குப் போகிற இலக்கியவாதிகள் மீது இலக்கியவாதிகளுக்கே மரியாதை கிடையாது. சுருக்கமாகச் சொல்லப் போனால், குற்றம் செய்யக் கூசாத மனோபாவம்தான் அரசியலுக்குத் தேவை!”
”விஜயகாந்த், குஷ்பு, விஜய் போன்றவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதையாவது ரசிக்கிறீர்களா?”
”தமிழக அரசியல் என்பது சினிமா கவர்ச்சியின் உச்சம். நான்கு படங்களில் தலை காட்டு கிற நடிகர்கள், ஒருகட்டத்தில் தான் முதல் அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைப்பதும் நம்புவதும் எனக்கு இன்னமும் ஒரு கலாசாரப் புதிராகவே இருக்கிறது. ஒரு குடிமகன் என்ற வகையில் ஒரு நடிகன் அரசியலுக்கு வருவது தப்பு இல்லைதான். ஆனால், ஓர் இசைக் கலைஞன், ஓவியன் இவர்களுக்கு எல்லாம் வராத மனத் துணிவு ஒரு சினிமா நடிகனுக்கு மட்டும் எப்படி வருகிறது என்பதுதான் கேள்வி. ஒரு கட்டத்தில் மக்களுக்கு அறிவுரை சொல் பவனாக நடிகன் மாறிவிடுகிறான். மக்களுக்குச் சொன்னால்கூடப் பரவாயில்லை… அறிஞர் களுக்கே அறிவுரை சொல்பவனாகவே நடிகன் மாறிவிடுகிறான். படிப்பறிவில் பின் தங்கியுள்ள பீகார் போன்ற மாநிலங்கள்கூட சினிமா பைத்தியத்தால் சீரழியவில்லை. தமிழகம் அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும்  நாட்டு நடப்புகள் குறித்து இவ்வளவு அசிரத்தைகள் இல்லை!”
”சினிமா மட்டும்தான் தமிழ் கலாசாரத்துக்கு அபாயமானதா என்ன?”
”கலாசாரம் என்பது எப்போதும் நிலையான ஒன்று இல்லை. அது மாறிக்கொண்டே இருப்பது. ஆனால், மரபைக் கணக்கில் எடுக்காத கலாசார மாற்றம் பாழ். அற மதிப்பீடுகளும் ஒழுக்க விழுமியங்களும்தான் ஒரு பண்பாட்டின் வேர்கள். தமிழ் சினிமாதான் தமிழ் சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. தமிழ் சமூகம் அளவுக்குச் சினிமாவின் கேடுகளை உள்வாங்கிக்கொண்ட சமூகம் வேறு எதுவும் கிடையாது. அதுபோக, அரசியலும் ஊடகமும் கல்வியும் நம் சமூகத்தை நாசம் செய்துகொண்டு இருக்கின்றன. கறிக்கோழியை வளர்ப்பதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெற்றோர்களிடம் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பிராய்லர் கோழியை வளர்ப்பதைப்போல பிள்ளைகளை வளர்த்தால், அந்தச் சமூகம் எப்படி உருப்படும்? படிப்பு, வேலை இதைத் தவிர, மனித வாழ்க்கைக்கு அர்த்தங்களே இல்லையா? குறிக்கோள்களே இல்லையா? நமது சமூகம் எப்படி மதிப்பீடுகளை இழந்துகிடக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் எனக்கு ஏர்டெல்லில் இருந்து ஒருதொலை பேசி அழைப்பு. எடுத்துப் பேசினால், ‘ஹாய், மச்சான் சௌக்கியமா?’ என்றது. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல். எதிர்முனையில் இருப்பவர் யார்?  எழுத்தாளரா, கொலைகாரரா, ஆசிரியரா, நோய்வாய்ப்பட்டவரா, அவருக்கு என்ன வயது இருக்கும் என்று எந்தக் குறைந்த பட்ச அறிவும் இல்லாமல் கூவுகிற வியாபாரக் குரல்கள் என்னை இம்சை செய்கின்றன!”
”இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே?”
”உண்மைதான். தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம். ஆனால், இப்போது உள்ள மாணவர்களோ, ‘மானாட மயிலாட’ பார்ப்பதற்குச் செலவழிக்கும் மணித் துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு, இன்று எந்தத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள். நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?
இன்று ஸ்பெக்ட்ரமில் 1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம். ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன்.
எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!”
”ஈழப் பிரச்னை ஒரு படைப்பாளியாக உங்களை எப்படிப் பாதித்தது?”
”வெகுவாக! அடுத்து வெளிவர இருக்கிற என்னுடைய ‘பச்சை நாயகி’ என்னும் கவிதைத் தொகுப்பில் ஈழம் சார்ந்த அரசியல் கவிதைகள் நிறைய இருக்கும். நான் ஒரு படைப்பாளி. என்னுடைய மறுப்பைப் படைப்பாகத்தான் பதிவு செய்ய முடியும். ஆனால், பல படைப்பாளிகள் தங்கள் எதிர்ப்புகளையும் உணர்வுகளையும் படைப்பாகக்கூட பதிவு செய்யவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், இந்தத் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்னை ஒரு மலையாள எழுத்தாளர் கேட்டார், ‘இவ்வளவு பெரிய இன அழிப்பு நடந்திருக்கிறதே… ஏன், உங்கள் ஊரில் ஒரு முனிசிபல் கவுன்சிலர்கூட ராஜினாமா செய்யவில்லை?’ என்று. மௌனத்தைத் தவிர, வேறு எந்தப் பதிலும் என் வசம் இல்லை. ஈழப் பிரச்னையைப் பொறுத்தவரை அலட்டிக்கொள்கிறோமே தவிர, எல்லாமே பாசாங்கோ என்று தோன்றுகிறது. நிறைய இளைஞர்களுக்குப் பிரச்னையே என்னவென்று புரியவில்லை!”
”இணையத்தில் எழுதும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதே?”
”மகிழ்ச்சிதான். ஆனால், இவர்கள் எவ்வளவு ஆழமாகப் படிக்கிறார்கள் என்கிற சந்தேகம் உண்டு. முன்பு எழுத்தாளர்கள், சமகாலம் மற்றும் முற்காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை வாசித்துவிட்டுத்தான் எழுதினார்கள். ஆனால், இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களிடம், வாசிப்புப் பழக்கம் மிக மிகக் குறைவு. இணையத்தில் வம்பு வழக்குகளும் கிசுகிசுக்களும் அதிகமாகிவிட்டன!”
”மற்றவர்களைக் குற்றம்சாட்டுவது சரி. எழுத்தாளர்கள் என்றாலே குடிகாரர்கள், குழு மோதலில் ஈடுபடுபவர்கள் என்றுதானே மற்றவர்கள் நினைக்கிறார்கள்?”
”குடி என்பதே நண்பர் வட்டம்தானே! யார் இங்கே குடிக்காமல் இருக்கிறார்கள்? எல்.ஐ.சி-யில் வேலை பார்ப்பவர்கள், வங்கியில் பணிபுரிபவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஐ.டி துறை ஊழியர்கள் என நண்பர்கள் சேர்ந்தால் குடிக்கத்தானே செய்கிறார்கள். அதேபோல இலக்கியவாதிகளும் நண்பர்களாகச் சேர்ந்தால் குடிக்கிறார்கள். காசு இருக்கிறவன் அடுத்தவனுக்கு வாங்கித் தருகிறான். இல்லாதவன் அடுத்தவனோடு சேர்ந்து குடிக்கிறான். நாலு லார்ஜுக்கு மேல் போனால் சண்டை வருவது எல்லாப் பக்கமும் இருக்கும் இயல்புதான். எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் குடித்தால் சண்டை வருகிறதா என்ன? எல்லா எழுத்தாளனும் ஏதோ ஒருவகையில் மொழிக்கும் சமூகத்துக்கும் பங்காற்றவே செய்கிறான். எனவே சச்சரவுகள், சர்ச்சைகளைவைத்து மட்டுமே எழுத்துலகத்தை மதிப்பிட முடியாது… கூடாது!”
”இன்று புத்தக வெளியீட்டு விழாக்களுக்கும் சினிமா பூஜைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டதே, பளபளப்பான ஆளுமைகள்தானே புத்தக விழாக்களில் கலந்துகொள்கிறார்கள்?”
”அப்படி பொத்தாம்பொதுவாகச் சொல்லாதீர்கள். நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன், திருச்செந்தாழை இவர்களின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு எல்லாம் எந்த சினிமாக்காரர், எந்த வி.ஐ.பி. வருகிறார்?
சென்னையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு இருக்கிற வசதி அது. புத்தகம் வெளியிடும் பதிப்பகங்களின் வியாபார உத்திகளையும் சார்ந்தது இது. ஆனால், இதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அன்று ஒரு நாளாவது, ஒரு சினிமா பிரபலம் ஓர் எழுத்தாளனைப் பாராட்டி நாலு வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் போகட்டுமே!”
நன்றி: ஆனந்த விகடன்  ரீ.சிவக்குமார்
படங்கள் : கே.ராஜசேகரன், தி.விஜய்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!

 1. K.M.நாராயண், சொல்கிறார்:

  இன்றைய சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையை,ஆதங்கத்தை இதற்க்கு மேல் வெளிப்படுத்த முடியாது.
  ஒரு முழுமையான பேட்டி .
  நன்றி அய்யா.
  தாங்கள் மேலும பல படைப்புக்களை படைக்க வேண்டுகிறோம்

  K.M.நாராயண்,
  புது தில்லி

 2. padmahari சொல்கிறார்:

  நாஞ்சில் நாடன் அய்யாவுக்கு வணக்கங்கள். கேள்வி பதிலின்மூலம் தமிழகத்தை, தமிழர்களின் நிலையை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இணையத்தில் எழுதும் இளைஞர்களைப் பற்றிய அய்யாவின் கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன். எழுத்துக்கு வாசிப்புப் பழக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் உணர்ந்தேன். இனி வாசிப்புப் பழக்கத்தையும் அதிகப்படுத்திக்கொள்ள முயற்சிப்பேன். பகிர்ந்தவருக்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும்!

  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

 3. J.Subramonian சொல்கிறார்:

  இதே வீரியத்துடன் எங்களுக்கு பத்து கும்பமுனி வேண்டும் சொரணை என்பது மறந்து போன தமிழ்நாட்டுக்கு

 4. கோ.புண்ணியவான் சொல்கிறார்:

  சாகித்ய அக்காடெமி விருது பெற்றமைக்கு மலேசியா சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துகள் . உங்கள் பேட்டி துணிச்சலான பேட்டி. மலேசிய இளைஞர்களும் சினிமா பைத்தியம்கொண்டுதான் அலைகிறார்கள். இங்கே இலக்கிய ஆர்வத்தைக்கொண்டு வருவது மிகச்சிரமம்.

 5. SiSulthan சொல்கிறார்:

  ஆனந்தவிகடன் கட்டுரைக்கு விகடன் வாசகர்களின் மறுமொழிகளில் சில
  (நன்றி: ஆனந்த விகடன் இணையதளம்)

  1, முற்றிலும் தமிழிலிலேயே கேள்விகள் கேட்கப்பட்டு தமிழிலேயே பதில்களும் வந்திருப்பதால், இந்த கருத்து பகிர்ந்தளிப்பு கட்டுரை மிக நேர்த்தியாகவும், நாணயத்துடனும், நாகரீகத்துடனும் வந்திருக்கின்றது. இதே இதழில் வெளிவந்துள்ள இயக்குனர் பாரதிராஜாவின் பேட்டியை இதனுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. இயக்குனர் தமிழ்நாட்டில் தமிழனே இல்லையென்கிறார் ஆங்கில கலப்படத்துடன். எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை. முதலில் தான் எதிர்பார்க்கும் மாற்றங்களை தன்னுள் செய்துகொள்ள முயலவேண்டும். இதை பாரதிராஜாவுக்கு இப்படித்தான் விளக்கவேண்டும். “If You Want To Make This World A Better Place, Take A Look At Yourself And Make That Change”. This phrase was taken from the hit single of Michael Jackson’s “Man In The Mirror”. There should be other equivalent proverbs or thought evoking phrases in Tamil, but this strikes my mind and it was spontaneous, so that Bharathiraja can understand. (kalpana)

  2, நம்மை நியாயமான தமிழ் உணர்வாளராகவே தான் திரு நாஞ்சில் நாடான் இருக்கிறார்… பொறுப்பான பதில்களையும், மறுக்க முடியாத வேதனைகளையும் சேர்த்து இறக்க முடியாத பாரங்களோடு வாழ்கிறார் இந்த நாஞ்சில் நாடான்… சமூக சீரழிக்கும் திரையுலகம் இன்று அரசியல் அழிவுசக்திகளின் கோர பிடியில் சிக்கியுள்ளது… அதாவது அரை பிளேடு பக்கிரிசாமி கையில் துப்பாக்கி கொடுத்து கொள்ளையடிக்க சொன்னது போலாகி விட்டது… இளைஞர்களே, நீங்கள் இப்பொழுது போதைகளில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் உங்கள் கண் முன் நிற்கிறது.. புதிய புரட்சியாக ஏதாவது செய்யாவிட்டால் நாளைய அடிமைகள் நீங்கள் தான்… (tamil)

  3,the writers belong to society, not to particular region or language.
  why you worry about cm coming and wishing.. forget all that stuff. You need society to approve your writings, Not the politicians or university (suresh)

  4,சினிமாக்காரனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் அவனது கறுப்புப் பணத்திலிருந்து தேர்தலுக்கு நிற்பான்; மூன்று தொகுதி செலவை ஏற்பான். எழுத்தாளன் என்ன தருவான்? எல்லோரும் வாழ்பவர்களுக்குத்தான் மாரடிப்பார்கள். (ambujavalli)

  5,தமிழ் எழுத்தாளனின் மனநிலை, அவன் எழுத்துக்கள், நல்லஎழுத்துக்கள் அவற்றின் மதிப்பைப் பெறாமை,இன்னோரன்னபிற சங்கதிகள்பற்றி என் மனத்தில் தேங்கியிருக்கும் ஆதங்கங்கள் நாஞ்சில் நாடன் அவர்களாலும் வெளியிடப்பட்டதாகக் கருதுவதால் என் மன்ம் லேசாகிறதுதாமதமான விருது என்பதால் சுவை குறைச்சல்தான் (kuvalai ezhil)

  6,சினிமா, தொலைக்காட்சி பார்க்காமல் ஒரு மாதம் இருக்கக்கூடிய சுய கட்டுப்பாடு ஒருத்தனுக்காவது இங்க இருக்கான்னு பார்ப்போமே. அதை விட்டுட்டு, சினிமா தான் சமூகத்தை சீரழிக்குதுன்னு கூவுறதில அர்த்தமே இல்லை இது உம்மால் முடியா விட்டால் அதற்கு அனைவரும் பொறுப்பல்ல. நான் திரைப்படம், தொலைக்காட்சிகள் பார்த்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. அனைத்து திரைப்பட நிகழ்ச்சிகளையும் தவிர்த்து விட்டேன். என்னால் இருக்க முடிகிறது. அதென்ன காற்றா இல்லை நீரா, இல்லாவிட்டால் உயிர் போய்விடும் என்பதற்கு.– சந்திரசேகரன் (kathiravan)

  7, நாஞ்சில் நாடன் ஐயா, விருதுக்கு வாழ்த்துக்கள். கேரளாவில் முதல்வரே நேரில் வந்து வாழ்த்தினார் என்றால், அது ஓரளவு படித்தவர்கள்; படித்தாலும் படிக்காவிட்டாலும் உண்மையான பகுத்தறிவு கொண்டவர்கள் – அதாவது அரசியல் வேறு, சினிமா வேறு, வாழ்க்கை வேறு – என்ற தெளிவுள்ளவர்கள் வாழும் பூமி. அங்கு அப்படி நடப்பது இயற்கை. தமிழ்னாட்டில் அந்த மாதிரி நாகரிகமான நடைமுறைகளையெல்லாம் எதிர்பார்த்தால் – அதுவும் தனிமனித வழிபாடுள்ள ‘பொய்யான’ பகுத்தறிவுவாதிகள் வாழும் மானிலத்தில் – வாய்ப்பே இல்லை. ஒரு நாற்பது நாற்பத்தைந்து வருடங்களில் ஒரு தேசத்தை எப்படி நேர்முறையில் வளர்ச்சி பெறச் செய்ய முடியும் என்பதற்கு லீ குவான் யூ ஒரு மாபெரும் வரலாற்றுச் சான்று!! மாற்றாக அதே சமகால நாற்பது நாற்பத்தைந்து வருடங்களில் ஒரு தேசத்தின் மிகப் பெரிய மானிலத்தை உண்மையான வளர்ச்சியிலிருந்து மிகத்தூரம் கூட்டிச் சென்று, பொய்யான பகுத்தறிவுப் பிரசாரம், பொய்யான தமிழார்வம் அல்லது தமிழ் வளர்ச்சிக் கோட்பாடுகள், செயல்முறைகள், கூடவே சினிமாவின் ஆதிக்கம் என்று சினிமா சார்ந்தவர்களே (அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெஜெ இன்னபிற காத்திருக்கும் சினிமாக்காரர்கள்) தமிழ்னாட்டைக் குட்டிச்சுவராக்கிய (சோ)சாதனை இங்குதான் நடந்தது என்பது மற்றொரு மாபெரும் வரலாற்றுச் சான்று!! என்ன ஒரு கான்ட்ராஸ்ட் (தமிழ் வார்த்தை சரியாகத் தெரியவில்லை, மன்னிக்கவும்). (siva)

  8, reading habit has come down. no one knows about tamil literature.but they know when the divorce of cinema stars take place. unless a revolutionary leader takes the lead students will go after cinema only. nanjil naadan need not worry about the cm”s visit to his residence. it is a great reward and award if he is recognised by the public (s.vijayarangan)

  9, I scrolldown to write my congrates and thanks to Thalaikeel vigithangal padaitha thalaivanukku…but surprised to see 54 pages of comments…Thankgod..I am delighted firsttime in 2011 newyear.Thankyou all thank god for Nagilnadan ayya.(still i am difficult tamil typing in vikatan) (jaya)

 6. சபரிநாதன் சொல்கிறார்:

  இன்றைய சூழ்நிலையை விளக்கும் நேர்மையான பேட்டி.

 7. வல்லம் தமிழ் சொல்கிறார்:

  அன்புள்ள நாஞ்சில் சார், உங்கள் தீவிர வாசகன் நான் ஆனால் சினிமா குறித்த உங்கள் மதிப்பீட்டை மறுக்கிறேன்,கலைகளை தீவிரமாக ரசிக்கும் தமிழக மக்கள், கலைகளின் உச்சக்கட்ட ஒருங்கிணைப்பான சினிமாவை அதிகம் நேசித்ததின் விளைவு தான் இது.ஆனால் சினிமா கலையை முற்றிலும் வியாபாரிகளிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கொண்ட படைப்பாளிகளை யாரும் குற்றம் சொல்வதில்லை.

J.Subramonian க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s