இது தாமதமாக வந்த விருது!

 கல்கி

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே, எனக்கு சாகித்ய அகாதெமி விருது பெறுவதற்கான தகுதி இருப்பதாக நினைத்தேன். கடந்த ஆண்டுகளில் சில முறை எனது பெயர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டபோதிலும், எனக்கு விருது வழங்கப்படவில்லை. இந்த விருதுகளை எல்லாம் நான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். காரணம் சமீபகாலமாக விருதுகள் எல்லாம் வியாபாரமாகிவிட்டன. எனவே, அதன் பிறகு எனக்கு விருதெல்லாம் தரமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். கடைசியாக இப்போது எனக்கு விருது கிடைத்திருக்கிறதென்றால், அதற்குக் காரணம் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்தான். நான் அவர்மீது கூட விமர்சனம் வைத்தது உண்டு. ஆனால் அதையும் தாண்டிய பண்பாளர் அவர்” என்கிறார் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காக 2010ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட 63 வயதான நாஞ்சில் நாடன், தமிழின் முக்கியமான நாவல்களையும், அதி அற்புதமான சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். உற்சாகத்தின் திரு உருவாக இருந்தவரிடம் பேசினோம்…

மகிழ்ச்சியா? வியப்பா?

“இந்த விருது கிடைத்ததில் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியோ, கொண்டாட்டமோ எனக்கு இல்லை. என்றாலும் கூட, ஒரு தீவிர இலக்கியவாதியை கௌரவித்திருக்கிறார்கள் என்பது வாசகர்களுக்கும், நவீன படைப்பாளிகளுக்கும் செய்யும் மரியாதை என நினைக்கிறேன். என்னைவிடத் தகுதியானவர்கள் இந்த மொழியில் நிறைய உண்டு. என்னுடைய எழுத்துலக குருநாதர்களாக விளங்கிய சுந்தரராமசாமி, நகுலன், ஆ.மாதவன் போன்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்படவில்லை. விருதுகள், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வழங்கப்பட வேண்டும். தற்போது நாற்பது, நாற்பத்து ஐந்து வயதில் எழுதிக்கொண்டிருக்கும் தகுதியானவர்களுக்கு விருது கொடுத்தால் அவர்கள் இன்னும் உற்சாகமாக இயங்குவார்கள். ஆனால், இங்கே விருதுகள் ஊக்குவிக்கும் விதமாக இல்லாமல், ஒரு ‘ரிடையர்மெண்ட் பெனிஃபிட்’ போல ஆகிவிட்டன.”

திரும்பிப் பார்க்கிறபோது?

“தற்போது பழந்தமிழ் இலக்கியங்களைத் தீவிரமாகத் தேடித்தேடிப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றைப் பார்க்கிறபோது, எனக்குப் பெரிதாக சாதித்துவிட்டது போன்ற உணர்வு இல்லை. தமிழ் இலக்கியம் என்ற சோற்று மலையில், என் பங்களிப்பு ஒரு சில பருக்கைகள்தான். நேரத்தை வீணடித்திராமல் முனைப்பாகச் செயல்பட்டு, தமிழ் மொழிக்கு இன்னும் சிறப்பாக ஏதாவது செய்திருக்கலாமே என்று தான் தோன்றுகிறது. ஆனால் இனியும் இத்தனை தீவிரத்தோடு எவ்வளவு காலம் செயல்படமுடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் சில விஷயங்களை முடித்திட வேண்டும்.

உதாரணமாக ‘நாஞ்சில் நாட்டு உணவு என்றொரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அது நாஞ்சில் பகுதி மக்களின் மத்தியில்கூட புழக்கத்தில் இல்லாத ருசியான உணவு வகைளைப் பற்றிய புத்தகம். அதை நான் எழுதாவிட்டால் வேறு யார் எழுத மெனக்கெடப்போகிறார். அது என் கடமை. என் எழுத்தின் மூலமாக பணம், புகழ், பாராட்டு எல்லாவற்றையும்விட எனக்குக் கிடைக்கும் மனத்திருப்தியை நான் பெரிதாக நினைக்கிறேன்.”

சமீபகாலமாக கட்டுரைகள் எழுதுவதில்தான் தீவிரமாக இருக்கிறீர்களே! ஏன்?

“என் அனுபவங்கள், மகிழ்ச்சிகள், அதிர்ச்சிகள் அவற்றை கதை மூலமாகத்தான் நான் சொல்லிவந்தேன். ஆனால் சில விஷயங்களைச் சொல்ல, கதையைவிட கட்டுரைதான் சரியானது. கட்டுரைகளுக்காக நான் நிறைய படிக்கிறேன்; கள ஆய்வு செய்கிறேன். மொழியின் பயன்பாடு, நாட்டு நடப்பு, அரசியல், பெண்களின் பிரச்னைகள், பொது இடங்களில் இருக்கும் கழிப்பிடங்கள், சுகாதார சீர்கேடுகள், அழிந்துவரும் சுற்றுச் சூழல் போன்றவற்றைக் கட்டுரைகளாக எழுதும்போது அவை ஏற்படுத்தும் தாக்கமும், அவற்றின் வீச்சும், அதிகமாக இருக்கின்றன.”

பார்ப்பதற்கு அரசு அதிகாரிபோல நவீன தோற்றம்; ஆனால் உங்கள் எழுத்திலோ சமூக அக்கறையும், மண்வாசமும் அதீதம். எப்படி இது சாத்தியம்?

“நான் உத்யோகவாதியாக விற்பனைத் துறையில் இருப்பதால் இந்த பேண்ட், முழுக்கை சட்டை, ஷூ இன்ன பிற எல்லாம் அவசியமாகிறது. இது என் புறத்தோற்றமே தவிர, என் அகம் நம் மொழி, கலாசாரம், மண்வாசம் இவற்றில்தான் ஊறிக்கிடக்கிறது.”

காட்சி ஊடகங்களால் வாசிப்புக்கு அச்சுறுத்தலா?

“ஆமாம். டி.வி. பார்த்தபடியே சாப்பிட முடிகிறது; ஃபோனில் பேச முடிகிறது; என்ன வேலை வேண்டுமானாலும் செய்ய முடிகிறது; ஆனால் வாசிப்பு அப்படி இல்லை; தீவிர கவனம் அவசியம். டி.வி.யினால் நன்மை, தீமை இரண்டுமே உண்டு. ஆனால் வாசிப்பினால் யாரும் கெட்டுப்போனதில்லை. ஆனாலும்கூட அயல்நாட்டில் வாழ்பவர்கள், கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றுபவர்கள் ஏராளமாகப் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி.”

– எஸ். சந்திரமௌலி

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s