http://www.thiruvilaiyattam.com/2008/06/blog-post_11.html
நானும் பாலபாரதியும் சில அடிப்படை விசயங்களில் ஒன்றுப்பட்டவர்கள் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் .., என்னிடம் இந்த புத்தகத்தை தருகையில் ஒரு புன்சிரிப்புடன் தந்தார். ( நாஞ்சில் நாடனின் எல்லா படைப்புகளையும் தந்து உதவிய தலைக்கு நன்றிகள்). புன்சிரிப்புக்கான காரணம் எனக்கு அப்போது புரியவில்லை.
வாசித்து முடித்து திருப்பித்தர செல்கையில் , என் முகம் பார்த்த உடனே சத்தமிட்டு சிரித்தார். என்ன மாப்ளே என்ன சொல்றார் நாஞ்சில் என்று கேட்டபடி..,
ஆனால் அது சிரிப்பில்லை என்பதை என்னால் நன்றாகப்புரிந்துக்கொள்ள முடிந்தது அப்போது..,
தனிமையும் வறுமையும் சிலரை உறவுகளிலிருந்து பிரித்து வைத்திடும், போலி உறவுகளுக்குள் சிக்கிட மனமின்றி தனித்தலைதல் என்ன வகையான மன நெருக்கடியை உண்டாக்கிடும் என்பதை நாஞ்சில் நாடன் தன் வழக்கமான வார்த்தைகளின் கோர்வைக்குள் அற்புதமாக படைத்திருக்கும் நாவல் இது. தன் பிறப்பையே கேவலமாகக்கருதும் உறவுகளின் மத்தியில் சிக்கிடாமல் பம்பாய்க்கு வேலைக்காய் சென்று, தன் தாயின் மரணத்திற்குக்கூட சரியான நேரத்திற்கு சென்றிட இயலாத நாரயணன் என்கிற ஒருவனின் வாழ்வைப்பற்றியது இந்த நாவல்.
சுயப்பரிதாபமும் ,எதையும் வெற்றிக்கொண்டிடா நிலையுமான வாழ்வில் நாரயணன் சந்திக்கும் மனிதர்களும் பயணங்களும்தான் .., பம்பாயில் டெக்ஸ்டைல் எந்திர விற்பனையாளராக வேலை செய்தார் நாஞ்சில் நாடன் என நான் எங்கோ படித்ததுண்டு. முழுக்க முழுக்க அவரின் மெய் அனுபவங்களையே இதில் நாரயணனின் ரயில் பயணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் என நினைக்கிறேன். நாமும் இணைந்து பயணிப்பதைப்போலவே காட்சியமைப்புகளும் வர்ணனைகளும் இருக்கிறது.
மணவாழ்க்கை சிலர்க்கு சரியாக அமைவதில்லை, சிலர்க்கு மணவாழ்க்கைக்கான தகுதியே இருப்பதில்லை. திருமண பேரங்களில் விலைப்பேசவும் ,விலைக்கூறவும் நிறைய போலித்தனங்களும் பொய்மையும் தேவையான சமூகம் இது.
வழக்கமான பிரம்மச்சாரிகள் செய்கிற எல்லாவற்றையும் செய்கிற நாரயணன் இறுதியில் திருமண வாழ்க்கைக்கான முடிவென்றை எடுக்கிறார். என்ன நிகழ்ந்தது என பால பாரதியிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.
நாஞ்சில் நாடனின் எல்லா நாவல்களிலும் பின்புலமாய் இழையோடும் நாஞ்சில் நாட்டு மொழி இதிலும் வெகு அழகாக கையாளப்பட்டிருக்கிறது. நாஞ்சில் நாட்டு உணவுப்பழக்க வழக்கங்கள் , திருமண விருந்து என பின்புல அழகுகளோடு ஒரு தனி மனிதனின் இயலாமை , சுய கழிவிரக்கம் என விரியும் இந்நாவலை,வாசிக்காமல் இருப்பது வெகு நல்லது. சதுரங்க ஆட்டமான வாழ்வில் மூன்று கட்டங்கள் நேராகவும், ஒரு கட்டம் வளைந்தும் போகும் குதிரையாய் மாற்றிக்கொண்டிருக்கும் தனிமையில் இந்த கதையம்சமுள்ள நாவலை வாசிக்காமல் இருப்பதுதான் நல்லது.
புத்தகம் : சதுரங்கக் குதிரை
ஆசிரியர்: நாஞ்சில் நாடன்
வெளியீடு: விஜயா பதிப்பகம்
என்னுடை ய அடுத்த புத்தக கண்காட்சி பட்டியலில் சதுரங்க குதிரை யும்
உண்டு .நன்றி