“”விருதுகளும், பரிசுகளும் படைப்பாளிக்கு அளிக்கும் ஓய்வு கால பயன்களாகி விடக் கூடாது, பல நல்ல படைப்பாளிகளுக்கு விருதுகள் போய் சேரும் முன்பே, படைப்பாளிகள் போய் சேர்ந்து விட்டார்கள்,” என்று, சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க’ எனும் சிறுகதை தொகுப்புக்கு, இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது அறிவிக்கப்படும் போதெல்லாம், இந்த ஆண்டும் நாஞ்சிலுக்கு கிடைக்கவில்லையா என்று வருத்தப்பட்ட இலக்கிய ஆர்வலர்கள், இந்த ஆண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டதில் பெரிதும் மகிழ்ந்துள்ளனர்.
நாஞ்சில் நாடன் கூறியதாவது: எனக்கு 63 வயது; இன்னும் ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் ஆரோக்கியமாக இருப்பேன் என நம்புகிறேன். அதுவரை எழுதிக்கொண்டே இருப்பேன். இதுவரை 23 நூல்கள் எழுதியுள்ள நான், தற்போது நாஞ்சில் நாட்டு உணவுகள் தொடர்பாக ஒரு புத்தகமும், ஒரு நாவலும் எழுதி வருகிறேன்.
விருது அறிவிக்கப்பட்டதில் இருந்து, விடாமல் அலைபேசி அழைக்கிறது. சாலையில் செல்லும் வறியவனைப் பிடித்து அரியணையில் அமர வைத்ததைப் போல் உணர்கிறேன். மிக மிகச் சாதாரணமான மனிதனான எனக்கு இது புதிதாக உள்ளது.
என்னைப் பொறுத்தவரை, நாஞ்சில் நாடனுக்குத் தகுதியிருந்தும் இதுவரை ஏன் சாகித்ய அகடமி விருது வழங்கவில்லை என, அனைவரும் பேசியதே எனக்கும், என் படைப்புகளுக்கும் கிடைத்த பெரிய விருது.
பொதுவாக விருதுகள் என்பது செயலூக்கத்தோடு இயங்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்க அரசும், நிறுவனங்களும் எடுக்கும் முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, படைப்பாளிகளுக்கான ஓய்வு கால பயனாக மாறிவிடக் கூடாது. விருது குழுதான் படைப்பாளியைத் தேடி வந்து பரிசளிக்க வேண்டுமே தவிர, படைப்பாளி விருது குழுவுக்கு வேண்டியதை செய்து கொடுத்து பரிசு பெறக் கூடாது.
என்னை விட நல்ல பல படைப்பாளிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படாத நிலையில், நான் இந்த விருதை பெறுவதில் வருத்தமும், சங்கடமும், வெட்கமும் இருக்கிறது. ஓர் ஓரத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி எட்டிப் பார்த்தாலும், விருதுகள், பரிசுகள் போன்றவற்றை கொண்டாடும் மனோநிலையை கடந்து விட்டதாகவே நான் உணர்கிறேன். படைப்பிலக்கியங்களில் தீவிரமாக இயங்கக்கூடிய இளைஞர்களை தக்க சமயத்தில் இனங்கண்டு, இது மாதிரி விருதுகள் வழங்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பம்.
நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே இந்த விருதுக்கு தகுதியானவன் என்கிற நம்பிக்கை, எனக்கும் என் வாசகர்களுக்கும் உண்டு. ஆனால், நான் மட்டுமே என்னைத் தகுதியானவன் என்று சொன்னால் போதாது. நிறுவனங்களும் நினைக்க வேண்டுமல்லவா? விருதுகள் தள்ளிப்போக ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. இப்போது கொடுக்கிறார்கள் மகிழ்ச்சி அவ்வளவே.
சமீபத்தில் ஆ.மாதவனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசும் போது, பிச்சை பாத்திரங்களில் விழும் காசை அபகரிக்கின்றனர் என்று பேசினேன். காரணம், சாகித்ய அகடமி என்பது நல்ல படைப்பாளிகளை ஊக்குவிக்க அப்போதைய பிரதமர் நேருவால் நிறுவப்பட்டது. பிற்காலத்தில், வயது முதிர்ந்தவர்களுக்குத் தரும் கவுரவமாகவும், குழு நபர்களுக்குள் பரிமாறப்படும் பண்டமாகவும் மாறிப் போனது.
ஒரு மொழியை முன்னெடுத்துச் செல்வது படைப்பாளிகளும், ஆய்வாளர்களும்தான். இங்கே தரமான ஆய்வுகளும், படைப்புத் திறனும் புறக்கணிக்கப்பட்டு விருதுகள் வழங்குவதால் ஏற்படும் கோபத்தில் இந்த மாதிரி விமர்சனங்கள் செய்வது தவிர்க்க முடியாது.
அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் பலரும் படைப்பாளிகளாக இருக்கலாம். அவர்களுடைய படைப்புகள் பரிசுக்குண்டான தர மதிப்பீட்டுக்குள் வந்தால், விருது கொடுப்பதை விமர்ச்சிக்க வேண்டியதில்லை. ஆனால் பதவி, அதிகாரம், செல்வாக்கு போன்றவற்றைப் பயன்படுத்தி விருதுகளைப் பெறுவது மொழிக்கு ஆரோக்கியமானதல்ல. எனக்கு இருக்கும் மிகப் பெரிய வருத்தமே, இந்த விருதுகளுக்கு எல்லோரும் ஆசைப்படுகிறார்களே என்பது தான்.
தமிழ் புலவன் என்றாலே, 2,000 ஆண்டுகளாகப் பரிசில் வாங்கி பிழைக்கவே பழக்கப்பட்டவன் என்பது தான் வரலாறு. அப்படிப்பட்டவனுக்கு அரசு வழங்கும் பரிசைத்தான், படைப்பாளியின் கையில் இருக்கும் பிச்சைப் பாத்திரம் என்கிறேன். பிச்சை என்கிற வார்த்தை கொஞ்சம் கொச்சையாக இருந்தாலும், வேறு வழியில்லை.
இந்த பாத்திரத்தில் இருக்கும் உணவையும், காசையும் அதிகார பலத்தினால் அபகரிப்பது; அதை எட்டிப் பார்ப்பது, அதில் ஒரு கவளம் அள்ளித் தின்பது போன்ற நிலையில் தான் நமது மொழி இருக்கிறது. முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் துணை வேந்தர்கள், முன்னாள் கவிஞர்கள் இப்படி ஏகப்பட்ட முன்னாள்கள் எல்லாம் இந்த விருதுகளுக்கான வரிசையில் முன்னால் நிற்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
பொதுவாக இந்த விருது அறிவிக்கப்பட்டதும் சர்ச்சைகளும் ஆரம்பமாகும். என்னைப் பொறுத்தவரை தரம் சார்ந்து இந்த விருதுக்கு நான் தகுதியில்லாதவன் என்று விமர்சனங்கள் வந்தால் அதை கட்டாயம் பரிசீலிப்பேன். ஆள் பிடித்து, காசு கொடுத்து நான் இந்த பரிசை பறித்துக் கொண்டேன் என்று யாராவது சொன்னால் கட்டாயம் கோபம் வரும்.
இவ்விருது எனக்கு வழங்கப்பட்டதற்காக, நான் தான் இந்த மொழியின் உன்னதமான படைப்பாளி என்று அர்த்தமல்ல. இந்த விருது என்னை விட முக்கியமான படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் எனக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சியே.
தமிழ்ச் சூழலில் தரமான படைப்பாளிகளுக்கு பஞ்சமில்லை. சிலப்பதிகாரம், ராமாயணம், சித்தர் பாடல்கள், தாயுமானவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பாரதி என நமது இலக்கியப் பாரம்பரியம் மிக வலுவானது. புதிதாக எழுத வருபவர்கள் இவற்றில் நல்ல பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
படைப்பாளியின் வாகனம் மொழி; தனது வாகனம் குறித்த அறிவில்லாதவன் எப்படி அதைச் சிறப்பாக கையாள முடியும்? உணர்வுகளை வெளிப்படுத்த சொற்களில் நல்ல பலம் வேண்டும். ஒரு நல்ல படைப்பாளி மொழியை விரயம் செய்யவோ, அதில் கஞ்சத்தனம் காட்டவோ கூடாது.
தன் வீட்டில் இருக்கும் மரம், அதில் வந்தமரும் பறவைகள் குறித்து தெரியாமல் குழந்தைகள் வளர்வது பற்றி எனக்கு வருத்தமுண்டு. இந்த பூமி அனைத்து ஜீவராசிகளுக்குமானது, பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது என்பதை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். இப்படி இன்னும் பேச ஏராளமான செய்திகள் எனக்கு உண்டு, என்றார்.