நினைவுகளின் சுவட்டில்

நாஞ்சில் நாடன்      

சொல்வனம்  http://solvanam.com/?p=11783

அகல்’ பதிப்பக நண்பர் பஷீருக்கு என் நினைவுக் குறிப்பு நூலொன்று எழுதித் தரவேண்டும் என ஐந்தாண்டுகளாக ஆசையுண்டு. ‘பேய்க்கரும்பு.’ கையில் பிடித்துத் திரியும் பட்டினத்துப் பிள்ளை போன்று, எனது மரியாதைக்குரிய படைப்பாளி, ‘பாதசாரி’ எப்போதுமதை வழி மொழிபவர். பார்க்கும் இடத்திலெல்லாம் ‘மீனுக்குள் கடல்’ எனும் அவரது நூலுக்குள் இருக்கும் ‘காசி’ போலொரு கதை எழுதி வழங்குங்கல் தமிழின் புதிய வாசகருக்கு என்று கேட்டால், “உங்க நாவலை எப்ப முடிக்கப் போறீங்க,” என்று எதிர்மரியாதை செய்வார். எனக்கு இரண்டு பழமொழிகள் நினைவுக்கு வருகின்றன. ‘குடுக்காத இடையன் சின்ன ஆட்டைக் காட்டினாற்போல’ என்பதும், ‘மரப்பசுவின் மடியதனில் பாலுண்ணலாமோ?’ என்பதும்.

சென்னை, மதுரை, ஈரோடு புத்தகக் கண்காட்சிகளுக்கு ஆண்டுதோறும் போவது என்பது தீர்த்த யாத்திரை போல ஆகிவிட்டது எனக்கு. அதிலும் குறிப்பாக சென்னைக்கு, சபரிமலை போகிற ஐயப்பன்மார் சொல்வார், தமக்கு இது பதினான்காவது மலை, இருபத்தேழாவது மலை என, அதுபோல சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் போவது பத்துப் பன்னிரண்டு முறைக்கு மேலிருக்கும். புதிய புத்தகங்கள், நண்பர் சந்திப்பு தாண்டியும் அரங்கினுள் நிற்பதே இரண்டு லார்ஜ் பகார்டி வைட் ரம் பருகியது போல. படைப்பாளிகள் எவரோடும் எனக்குப் பகையொன்றுமில்லை. ஆண்டு முழுக்க, ஒரு சொல் பரிமாற்றம் கூட இல்லாதிருந்தும் நேரில் புன்முறுவல் பூப்பதில் சுகம் உண்டு. புத்தகப் பெருங்காட்டினுள் தனித்து விடப்பட்டதாக நான் உணர்ந்ததே இல்லை. சில ஆண்டுகள் முன்னால், ஜெயமோகனுடன் தோளுரசி அரங்கைச் சுற்றி வந்தபோது அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. “இதுக்குள்ள நிக்கிற போது நாமும் ஏதோ செய்திருக்கோம்னு கர்வமா இருக்குல்லா!”. உண்மையில் கர்வமாகத்தான் இருந்தது. சமீப காலமாகப் பதிப்பகங்கள் படைப்பாளிகளுக்குப் பேனர்கள் வைக்க ஆரம்பித்த பிறகு கர்வம் சற்று கூடித்தான் போயிற்று.

தகப்பன்சாமிகள் ஊரைக் கொள்ளை அடித்துச் சேகரித்துப் புதைத்து வைத்த புன்செல்வம் துய்த்தல் அன்றிப் பாற்பசுவுக்கு ஒருவாய் புல்லாவது அளித்துத் தேச சேவை செய்யாதவர், தந்தையின் பன்னாட்டு நிறுவனத்துக்கு மகன் நேரடி வாரிசாக வருவதைப் போல, அரசியலுக்கு வந்து மாதப் பிறந்த நாளுக்கும், கைவீசிக் கால்வீசி நடந்து வருவதைப் போன்று ஆளுயரப் பேனர்கள் சொந்தப் பணம் செலவிட்டு வைத்து அதிகாரத்தில் பாகம் கேட்கும் அஸ்திவாரக் கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, ஆண்டுக்கு ஒரு முறை, எழுத்தாளக் கண்காட்சி நடைபாதையில் தன்முகம் பார்க்க கர்வமாக இருக்காதா?

போன ஆண்டில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘தமிழினி’ அரங்கில் இருந்தபோது சுடச் சுட இரண்டு நூல்கள் தந்தார் தமிழினி வசந்தகுமார். ஒன்று, முன்சொன்ன ‘பாதசாரி’யின் மூன்றாவது புத்தகம், ‘அன்பின் வழியது உயிர் நிழல்.’ ’தமிழினி’யில் தொடர்ந்து அவர் எழுதி வரும் கட்டுரைகளின் தொகுப்பு. இரண்டு, வெங்கட் சாமிநாதன் இணைய தளங்களில் எழுதிய தன் வரலாற்றுக் கட்டுரைகள் அடங்கிய ‘நினைவுகளின் சுவட்டில்.’ அதுவேபோல் கலாப்ரியா இணைய தளங்களில் எழுதிய ‘தன்வரலாற்று’க் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பும் ஒன்றுண்டு, ‘நினைவுகளின் தாழ்வாரங்களில்’ என்று. சந்தியா பதிப்பகம் என்று நினைவு.

‘அகல்’ தனித்து அளித்திருக்கும் ’நினைவுகளின் சுவட்டில்’ டெமி அளவில் 336 பக்கங்கள். விலை ரூ. 170/-. வெளியீடு: அகல், 342, டி.டி.கே சாலை, ராயப்பேட்டை, சென்னை-600014.

நல்ல தாளில், நன்கு தயாரிக்கப்பட்ட, நேர்த்தியான அட்டைப்படத்துடனான புத்தகம். அட்டையில் வெ.சா. என நண்பராலும் பகைவராலும் செல்லமாய் அல்லது வன்மமாய் அழைக்கப்பட்ட, முதிர்ந்த, தளர்ந்த, கைத்தடியூன்றிய, காலர் வைத்த முரட்டுக் கதர் ஜிப்பா போட்ட வெங்கட் சாமிநாதன். இப்போது அவருக்கு அகவை 75க்கும் மேல். சமீபத்தில் மனைவியையும் இழந்தார். சற்று முன்பின்னாக அவரது வயதுடைய வாழும் இலக்கிய வல்லாள கண்டர்கள் ஆ.மாதவன், நீல. பத்மநாபன், அசோகமித்திரன், சா. கந்தசாமி, ஜெயகாந்தன், ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொ, கி.ரா எனச் சிலர்.

வெ.சாவின் தளர்வு என்பது தயவு தாட்சண்யம் அற்ற, பட்டுக் கத்தரித்தாற் போன்ற, பக்கக் கன்று வாழையை வெட்டினாற் போன்ற கறாரான திறனாய்வுப் போக்கின் தளர்வு எனக் கருதுகிறேன். அளவற்ற பகையைக் கடுமையான திறனாய்வுக் கூற்றுகளால் பெற்றவர். அவர் வகையிலான Die Hard Species இனம் முற்றிலும் அழிந்து போய்விட்டது தற்போது.

இளைய எழுத்தாளரிடம் பேசும்போது சொல்கிறார்கள், இன்று ஒரு மதிப்புரை அல்லது விமர்சனக் கட்டுரை எழுதி வாங்குவது என்பது சிறுதெய்வ வழிபாடு போல என்று. மாசி, பங்குனி மாதத்து வெள்ளி- செவ்வாய்களில் படுக்கை வைத்துக் கொடுத்தல்போல. சாராயம், சுருட்டு, அவித்த தாரா முட்டை, சுட்ட அயிரைக் கருவாடு, கருப்பட்டி- எள்ளுப் பிண்ணாக்கு படைத்து, பொங்கலிட்டு கருஞ்சேவல் அறுத்தால் கழுமாடன், புலைமாடன், சுடலைமாடன் கண்பார்ப்பார். அல்லது எழுத்தாளரின் பெரியப்பாவின் சொக்காரன் மகன் குறைந்தது சட்டமன்ற உறுப்பினராகவாவது இருக்க வேண்டும். இலக்கியப் பத்திரிகைகளில் ஒன்றுவிடாமல் மாறி மாறி மதிப்புரை, ஆய்வுரை, திறனாய்வு, நலம் பாராட்டல் எல்லாம் நடக்கும். நேர்காணல்கள் ’மண்டகப்படி’ போல நடத்துவார்கள். முழுநாள் அகில இந்திய ஆய்வரங்குகள் நடக்கும். தேசீயக் கருத்தரங்குகளுக்கு, சர்வ தேசீயக் கருத்தரங்குகளுக்கு அழைக்கப்படுவார்கள். கவர் ஸ்டோரி எழுதுவார்கள் முழுமுகம் கண்ட அட்டைப்படத்துடன். ஜே.பி. சாணக்யாவுக்கும், பா. திருசெந்தாழைக்கும், அழகிய பெரியவனுக்கும், கால பைரவனுக்கும், எஸ்.செந்தில்குமாருக்கும், கண்மணி குணசேகரனுக்கும், சு.வேணுகோபாலுக்கும், என்.டி. ராஜ்குமாருக்கும் இது சாத்தியமா?

மேலும் படிக்க…» http://solvanam.com/?p=11783

About S i Sulthan

தொகுப்பு
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s