மிதவை – புத்தகப் பார்வை – ஹரன்பிரசன்னா

மிதவை – புத்தகப் பார்வை – ஹரன்பிரசன்னா

Created On 19-Jun-06

பல்கலை பாட திட்டங்களில் இடம்பெற்றது

1.பாரதியார் பல்கலை கழகம் M.A.

2.கள்ளிக்கோட்டை பல்கலை கழகம் B.A.

நாஞ்சில் நாடனின் நாவல் மிதவை முதலில் நாகர்கோவிலை மையமாக வைத்தும் பின்பு பாம்பேயின் தொழிற்பேட்டையை மையமாக வைத்தும் சுழல்கிறது. வேலை தேடி அலையும் இளைஞர்களின் இன்றைய நிலை இருபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலில் சற்றும் பிசகாமல் சொல்லப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய இருபது வருடங்கள் வேலையற்றவர்களின் வாழ்க்கைத் தரமும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவர்கள் முதலில் சென்னை போன்ற நகரங்களுக்குள் நுழையும்போது அவர்களைச் சென்னை எதிர்கொள்ளும் விதமும் – மிகச் சிலரே சென்னையை எதிர்கொள்ளுகிறார்கள் – அப்படியே மாறாமல் இருக்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் எல்லார் வாழ்க்கையையும் படி எடுத்த மாதிரி ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளாகிப் போகின்றன.

நான் சென்னைக்குள் முதன்முதலில் நுழைந்தபோது ஏற்கனவே சென்னையே உலகம் என்று தஞ்சமடைந்து போயிருந்த எனது நண்பர்களுடன் பெரும் சர்ச்சையில் இருப்பேன், எந்த ஹோட்டலில் உணவு சீப்பாகக் கிடைக்கும், எப்படி பஸ் மாறிப்போனால் டிக்கட் செலவு குறையும் என. அப்படிப்பட்ட எல்லாக் காட்சிகளும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 250 ரூபாய் சம்பளம் என்றானபின், காலைச் சாப்பாடு இவ்வளவு, மத்தியானச் சாப்பாடு இவ்வளவு, ராத்திரிக்கு இவ்வளவு என்றால், அதை 30- ஆல் பெருக்கி ஒரு மாததிற்காகும் செலவைக் கிட்டத்தட்ட தினமும் கணக்கிடுவேன். என் நண்பர்களும் அப்படியே. சண்முகமும் செய்கிறான். மத்தியத் தர மனப்பான்மையும் சண்முகமும் ஒருங்கே அமைந்து மிகச் சிறந்த கலவையாகிப் போகிறார்கள். அப்போதே சண்முகம் மிதவையாகிறான். அவன் மிதக்கிறான். சென்னையில், பின்பு கொஞ்சம் பாம்பேயில், பின்பு கொஞ்சம் காமத்தில், எப்போதும் பொருளாதாரச் சிக்கலில் மிதக்கிறான். இடையிடையே அவனது எண்ணங்கள் எங்கெங்கோ மிதக்கின்றன. எப்போதும் பொருளாதாரச் சிந்தனையை முன்வைத்தே அவன் எதையும் அணுகுகிறான். நிலைகொள்ள விழையும் எந்த ஒரு பட்டதாரியின் எண்ணமும், மத்தியத் தர வகுப்பில் இருந்து வந்திருந்தால், நிச்சயம் இப்படியே அமையும். இந்த நிதர்சணமே கதையாகிறது.

கல்லூரி முடித்துவிட்டு வாழ்க்கையைச் சந்திக்கப் புறப்படும் இளைஞர்களுக்கு முகத்தில் அடிப்பது இரண்டு விஷயங்கள். இடமாற்றம் தரும் பீதி மற்றும் உணவு. இந்த இரண்டிற்கும் தப்பும் நபர்கள் ஆகக் குறைவு. சண்முகம் இடமாற்றத்தை ஓரளவு தாங்கிக்கொண்டாலும் உணவுப் பழக்க மாற்றத்தை அவனால் சட்டெனப் பற்றிக்கொள்ள முடிவதில்லை. இட அசௌகரியங்களுள் முக்கியமான இடம் வகிக்கும் காலைக் கடன் கழிப்பது பற்றிய விவரணைகள் சண்முகம் மீதும் அதையொத்த இளைஞர்கள் மீதும் நிச்சயம் ஒரு பச்சாதாபத்தை வரவழைக்கின்றன. இதுபோன்று அனுபவப்பட்டவர்கள் இக்கதையும் இன்னும் ஒன்றிப்போவார்கள். இது அனுபவத்தின் எழுத்து. அனுபவத்தின் எழுத்து மட்டுமே இதைச் சாதிக்க இயலும்.

நாஞ்சில் நாடனின் நடை நேரனாது. அதிகம் சிக்கலில்லாமல் எதையும் போட்டுக் குழப்பாமல் நேரடியாகப் பேசுவது. கதையில் அவர் வடித்துக்கொண்ட பாத்திரங்கள் பாசாங்கில்லாமல் பேசுகின்றன. அதற்கு நாஞ்சில் நாடனின் சிக்கலற்ற மொழி பலமாக அமைந்திருக்கிறது. அதே போல் நாவல் நெடுகிலும் நாஞ்சில் நாடன் பதிவு செய்திருக்கும் சிலச் சில நுண்ணிய கவனிப்புகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. எல்லார் வாழ்க்கையிலும் இப்படித்தான் இருக்கும்போல என எண்ண வைக்கின்றன. சில வரிகள் மனித நினைப்பின் ஆழத்தைத் தொட்டுப் பார்க்கின்றன.

மத்தியத் தர வாழ்க்கையில் ஊறிப்போன சண்முகத்தின் ஈகோவும் சிறப்பாகக் காட்டப்படுகிறது. அது இரண்டு இடங்களில் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியப்பாவின் மகனால் காரியம் கைகூடவில்லை என்ற பின்பு, பாம்பேவுக்குச் செல்லும் வழியில் அங்கு அவன் நடந்துகொள்ளும் விதத்தில் மத்தியத் தர ஈகோ திருப்திபடுத்தப்படுகிறது. மாய்ந்து மாய்ந்து கம்பெனிக்கு வேலை செய்தும் அவன் நிரந்தரம் செய்யப்படாமல் போகும்போது கண்ணீர் வர எத்தனிக்கும் நிலையிலும் டிக்மேன் (மேனேஜர்) தரும் சம்பள உயர்வை வேண்டாம் என்று சொல்லும்போது சண்முகம் தன் ஈகோவைத் திருப்தி படுத்திக்கொள்கிறான். வேலை கிடைக்காமல் கஷ்டப்படும்போதும், வேலை கிடைத்து நல்ல இடம், சாப்பாடு கிடைக்காத போதும், அவனுள் உறங்கிக்கிடந்த காமம், அல்லது அவனால் அடக்கி வைக்கப்பட்டிருந்த காமம், அன்னமாவினால் தலைதூக்க, ஆள் அரவமற்ற கடைகளில் ஆணுறை கேட்பதில் முடிகிறது.

கதையில் எதுவுமே முடிவதில்லை. எல்லாமே அப்படியே அதன் போக்கில் இயங்குகின்றன. ஆச்சார்யாவுக்கும் சண்முகத்தும் இருக்கும் பனிப்போர் அப்படியே இருக்கிறது. அதற்கான முடிவு ஒன்று வேண்டும் என்று ஆசிரியர் நினைக்காதது நிறைவளிக்கிறது. ஏனென்றால் வாழ்க்கையில் பல விஷயங்கள் அப்படியே இருக்கின்றன. ஒரு முடிவுக்கு வந்துவிடுவதில்லை. அதுபோலவே இக்கதையிலும். சண்முகம் கடைசியில் ஊருக்குத் திரும்புவதுகூட ஒரு தொடக்கம்தான். மிதக்கும் பொருளின் ஒவ்வொரு அலைச்சலும் தொடக்கம் மட்டுமே. அங்கு முடிவு இருப்பதில்லை.

கதையில் வரும் இடங்களைப் பற்றிய விவரிப்புகள் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. நிஜமாக இப்படி அலைந்த ஒரு மனிதர் மட்டுமே இப்படிப்பட்ட விவரிப்புகளைத் தெளிவாகச் சொல்ல முடியும். அந்த வகையில் அனுபவமே இக்கதைக்கு முக்கிய வித்தாகிறது. கதையில் அங்கு அங்கு வைக்கப்படும் சமூக நீதி மீதான கேள்விகள், விமர்சனங்கள் (‘ஏலே நீ எடக்குடில்லா!’) கதையை மீறி வெளித் தெரியாவண்ணம் சொல்லப்படுவதாகத் தோன்றினாலும் ஆழமற்ற வகையிலும் மேம்போக்காகவும் வைக்கப்படுகிறது என்கிற எண்ணம் எழுகிறது. பிராமணர்கள் மீது ஒரு சமயம் வெறுப்பும் பிறிதொரு சமயம் ஞாயமும் (தன் அப்பாவின் செயலைக்கொண்டு) கற்பித்துக் கொள்ளுகிறான் சண்முகம். இது போன்ற இடங்களில் அது ஆசிரியரின் கருத்தோ என்கிற எண்ணம் தோன்றிக் கதையிலிருந்து ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. அதே போல் 1967-இல் வென்ற திமுகவின் மீது சண்முகம் வைக்கும் விமர்சனமாக வரும் கேள்வியும் முன் பின் தொடர்பில்லாமல் கேட்கப்படுகிறது, பின்பு மறக்கப்படுகிறது. திடீரென நுழைக்கப்பட்டது போலத் தோன்றும் அதில் ஆசிரியரின் கூற்றும் உள்ளது என்கிற எண்ணத்தைத் தவிர்க்கமுடிவதில்லை. பிராமணர் மீதான சண்முகம் கொண்டிருக்கும் எண்ணம் சில இடங்களில் வெளிப்படுகிறது. முக்கியமாக இரண்டு இடங்களில் – பிராமண மெஸ்களில் அவன் நடத்தப்படுவதாக உணரும் விதம்; பார்ப்பனர்களுக்கு மட்டுமே பாரம் தருவான் என்று நூலகத்தில் சேர விண்ணப்பம் வாங்க முயலும் நேரத்தில் அவனுக்குச் சொல்லப்படும்போது மயிர்க்குரு ஒன்றைப் பிய்ப்பது போல உணரும் இடம். ஆனால் அவனுக்கு வேலை வாங்கித் தர ஒரு ஐயரே உதவுகிறார். அதேபோல் திமுகவின் மீது அவன் விமர்சனம் செய்தாலும், நூலகத்தில் அவன் பாரம் தராமல் மறுக்கப்படும்போது (அதற்குச் சொல்லப்படும் காரணம் இன்னொரு சுவாரஸ்யம். எல்லாரையும் போலசாண்டில்யன் மட்டும் படித்து விட்டுப் போய்விடுவான் சண்முகம் என்று நூலகரே ஒரு முடிவுக்கு வருகிறார்!) ஒரு திமுககாரரே உதவுகிறார். இவை கதையில் நிகழும் இயல்பான விஷயங்கள். இவை பெரிதாகச் சொல்லப்படவில்லை. அதுவே அதன் அழகைக் கூட்டுகிறது. பெரிதாகச் சொல்லப்படும்போது அதில் பேலன்சிங் தொனி தங்கிப்போயிருந்திருக்கும். அதைத் தவிர்த்திருப்பது நாஞ்சில் நாடனின் திறமை. அதுமட்டுமில்லாமல் கொள்கைகளை மீறி எத்தனையோ சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன. திடீர் திடீரென வரும் ஆண்குறி, பெண்குறி என்கிற வார்த்தைகள் பெரும்பாலும் கதையோடு ஒட்டாமல் சொல்லப்படுவதுபோல் தோன்றுகிறது. இரவுகளில் படுத்துறங்கும் சேக்காளிகள் காலையில் கலைந்து கிடக்கும் கோலத்தைச் சொல்லும் இடத்தில் மட்டும் இவ்வார்த்தைப் பிரயோகம் (ஆண்குறி என்கிற பிரயோகம்) வெற்றி பெறுவதாகத் தோன்றுகிறது. மற்ற இடங்களிலெல்லாம் அவை தேவையற்றே ஒலிக்கின்றன.

சண்முகம் பொருளாதாரத் தேவைகளிலும் உணவுத் தேவைகளிலும் காமம் சார்ந்த இச்சைகளிலும் முங்கிக் கிடந்தாலும் தமிழ் மன்றத்தை அவன் நாடுவதும், சாண்டில்யன் மட்டும் படிப்பான் என்று அவனை நூலகர் சொல்லும்போது அப்படியில்லை என்று சொல்வதும் அவனுள் ஒரு இலக்கியத் தாகம் இருப்பதை உணர்த்துகிறது. அது நாஞ்சில் நாடனின் தாகமாகவும் இருக்கலாம். அந்தச் சண்முகம்தான் பிற்காலத்தில் எழுத்தாளன் ஆனானோ என்னவோ. இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் அநேகம். ஏனென்றால் காலத்தின் அலையில் எந்த மிதவையும் எப்போதும் எங்கேயும் நிற்பதில்லை. அவை எங்கே செல்லும் என்றும் சொல்லுவதற்கில்லை.

ஹரன்பிரசன்னா எனி இண்டியன்.காமில் வேலை பார்க்கும் முப்பது வயதுக்காரர். எழுதுவதற்கான விஷயங்களை (மனதில்) வைத்திருக்கிறார். ஆனால் குறைவாகவே எழுதுகிறார்.

நன்றி:    http://www.andhimazhai.com/news/viewmore.php?id=2792

நாவல்கள்:

எட்டு திக்கும் மதயானை, தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும்,

மாமிசப் படைப்பு, மிதவை, சதுரங்க குதிரை

சிறுகதைகள்

தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள், வாக்கு பொறுக்கிகள், உப்பு, பேய்கொட்டு

கிடைக்குமிடம்;

விஜயா பதிப்பகம்,

20, ராஜவீதி,

கோவை.641001.

தொலைபேசி; 0422394614

Xxxxxxxxxxxxxxxxxxxxxxx

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மிதவை – புத்தகப் பார்வை – ஹரன்பிரசன்னா

 1. P Thiagarajan சொல்கிறார்:

  வலைப் பூக்கள் மத்தியில் உலகம் சிறுத்துப் போனாலும் பகுத்துபோன உணர்வுகள் என்றும் மாறுவதில்லை….
  சென்னை,மும்பை என்று இருந்த நகரத் தேடல், இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா,ஜெர்மனி என மாறினாலும் நம்முன் ஜனித்த உணர்வுகள் மாறுவதில்லை…..
  ஒன்றை இழந்தால் தான் ஒன்று கிடைக்கும்……….
  இழந்ததும் கிடைத்ததும் எது எதற்கு ஈடு செய்ய முடியும்……
  நாஞ்சிலாரின் உணர்வுகள் நம் மனக் குவியலுகள்குள் …
  ஆடிக்கொண்டே இருக்கும்…….
  தூளி….ஆட்டமாக……… த்யாகராஜன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s