அக்கரை ஆசை
நாஞ்சில்நாடன்
”தீதும் நன்றும்”
உலகமயமாதலால் உலகமே சிறியதோர் கிராமம். எல்லாம் இங்கேயே கிடைக்கின்றன. இப்போது வெளிநாடு போவோர்,தாம் தங்கும் மாதங்களைக் கணக்கிட்டு சோப்பும், பேஸ்ட்டும், க்ரீமும் இங்கிருந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். காரணம், விலையும் மலிவு… தரமும் உண்டு. மேலும், விமானத்தில் குறைந்தது 20 கிலோ அனுமதிப்பார்கள். அரேபியா போகும் புத்திசாலி நண்பர்கள், ஓராண்டுத் தேவைக்கான இந்திய உள்நாட்டுக் கடித உறைகள் வாங்கிப் போய், கடிதங்கள் எழுதி, விமான நிலையத்தில் இந்தியா போகும் முகங்களைக் கண்டுபிடித்து, இந்தியாவில் இறங்கியதும் தபால் பெட்டியில் போடுங்கள் என்று கொடுத்து அனுப்புவதும் உண்டு. காரணம், 2 சவூதி ரியால் தபால் தலை ஒட்டி னால் 23 இந்திய ரூபாய்கள் ஆகும். அதுவே இந்திய உள்நாட்டு உறை என்றால் 4 ரூபாய்.
முன்பு ஸோனி டி.வி, கம்ப்யூட்டர், கேமரா, கால்குலேட்டர், செல்போன் என்பன தாய்நாடு திரும்புபவர் கொண்டுவந்து, பாதியை கஸ்டம்ஸ் அலுவலருக்குப் பங்குவைத்துக் கொடுத்துவிட்டு, மீதிக்கு 300 சதம் வரிகட்டி கண் பிதுங்கி நின்றது உண்டு. அதெல்லாம் பழங்கதை.
இன்று சாலையோரங்களில் பச்சை நிறத்தில் சிறு குருவிகளை விற்பனைக்குக் காணலாம். சீனத் தயாரிப்பு. ஜோடி 25 ரூபாய். கை சொடுக் கினால், கரண்டி விழுந்தால், உரத்துப் பேசினால் கீச்சுக்கீச்சென்று பேசும். வீடுகளில் பல பெண் களுக்கு இன்று அவைதான் பேச்சுத் துணை.
நகரில் சிட்டுக்குருவிகளைக் காண்பதும் அரிதாகி வருகிறது. பச்சைக் கிளிகளை வேப்ப மரங்களில் காண முடிவதில்லை. நீத்தாருக்கு வைக்கும் சாதமெடுக்க காக்கைகள் வருவது குறைந்து வருகின்றன. மிக ஆசாரமானவர்கள், இனி காகங்களை வீட்டில் வளர்த்து, பித்ருக் களுக்குச் சாதம்வைக்கும் காலம் வரும். எனது ஐயம் 25 ரூபாய்க்கு ஒரு ஜோடிக் குருவிகள் எனில், தெருவோரத்துச் சில்லறை வியாபாரியின் லாபம், மொத்த வியாபாரியின் லாபம், இறக்குமதியாளனின் லாபம், உற்பத்தி செய்பவன் லாபம் எல்லாம் அடக்கமல்லவா? எனில் தயாரிப்புச் செலவு என்னவாக இருக்கும்? நமது முதலாளிகள் யோசிக்க வேண்டும்!
இந்திய நாட்டில் அடக்க விலைக்கும் விற்கும் விலைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. அதெப்படி கேன்சர் மருந்து விலை அதிகமாகவும் வயிற்று வலி மருந்து விலை குறைவாகவும் இருக்கிறது? பெரும் நோய்க்கென்று விலை கூடிய பொருட்களையும் தடுமன் காய்ச்சலுக்கு விலை குறைவான பொருட்களையும் இயற்கை உற்பத்தி செய்கிறதா? ஒரு நோய்க்கான மருந்துகளை 6 கம்பெனிகள் தயாரிக்கின்றன எனில், அவர்கள் தமக்குள் கலந்து பேசி, 10 மாத்திரைகளின் விலையை ரூ.128-லிருந்துரூ.132-க் குள் வைத்துக்கொள்கிறார்கள். நோயாளிக்கு வேறு போக்கில்லை. இந்த அநியாயத்தைக் கேட்க நாதியும் இல்லை. அதிக மருந்துகள் எழுதும் மருத்துவர்கள் குடும்பத்துடன் விடுமுறையை சிங்கப் பூரில் மருந்து கம்பெனிகளின் செலவில் கொண்டாடுகிறார்கள். எல்.சி.டி. டி.வி, 450 லிட்டர் ஃப்ரிஜ், ஹோம் தியேட்டர் எனப் பெற்றுக்கொள்கிறார்கள், அன்பளிப்பாக!
என்ன சொல்ல வருகிறேன் என்றால், நமது மருந்துச் செலவை அதிகரிக்கும் வெளிநாட்டு உணவுகளின் மீது சமீப காலமாக நம்மவர்களுக்கு அதிகரித்து வரும் மோகம் பற்றி!
நூடுல்ஸ் என்பது பள்ளிக்குப் போகும் சிறுவர் இருக்கும் வீடுகளில் அன்றாட உணவாகிவிட்டது. ஜாம் பாட்டில்களும் கெச்சப் பாட்டில்களும் இல்லாத வீடுகள் இல்லை. வேலைக்குப் போகும் நவ யுவர்களும் யுவதிகளும் பீட்சா ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்துத் தின்கிறார்கள். பயணம் செய்பவர் லன்ச் பேக்குகளில் பர்கர், சாண்ட்விச் என நிறைந்துள்ளன. காலை உணவு ஓட்ஸ் ஆகிவிட்டது.
கொழுக்கட்டை, பால்பணியாரம், இடியாப்பம், அடை, உப்பிட்டு, பால் கஞ்சி யாவும் பழமைவாதிகளின் உணவு இன்று. யாரெல்லாமோ எழுதியாயிற்று, ஜங்க் ஃபுட் பற்றியும் அஜின மோட்டா எனும் சீன உப்பு பற்றியும். ஓராண்டு முன்பு செய்து குப்பிகளில் அடைக்கப்பட்ட ஜாம், கெச்சப், ஜூஸ் என்பன மிகச் சுவையாக ஆகிவிட்டன நமக்கு. கெட்டுப் போகாமல் இருக்க என்ன ரசாயனம் சேர்க்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. தொண்டைக் குழிப்புற்று, குடலில் புற்று, குதத்தில் புற்று எதுவும் நமக்கு வராது… பக்கத்து வீட்டுக்காரனுக்குத்தான் வரும் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அரபுக் கவிதை ஒன்று சொல்கிறது, ‘யாவர் வீடுகளிலிருந்தும் கண்ணுக்குத் தெரியாத பாதையன்று இடுகாடு நோக்கிச் செல்கிறது’ என்று!
இன்று காலையில் பறித்தது, அரை லிட்டர் இளநீர் இருப்பது, நாவில் வீரியத்துடன் சுர்ரெனப் பிடிப்பது, இனிப்பது, சத்து நிறைந்தது என்ற இளநீருக்கு 12 ரூபாய் கொடுக்க நமக்கு வலிக்கிறது. டின்களில் வரும் கோக், பெப்சி நமக்கு அமிர்தம், விலை பொருட்டில்லை.
நள்ளிரவுக்கு முன் இரவில், வெளியூரில், பேருந்து நிலையத்துக்கு முன்புறம் இருந்த ‘பை-நைட்’ கடையன்றில் சாப்பிடப் போனேன். எப்போதும் இரவுச் சாப்பாட்டுக்கு இட்லி சொல்பவரின் முகம் பாராமலேயே அவருக்கு வயது 50-க்கு மேல் என்று சொல்லிவிடலாம். எனவே, இட்லியைக் காரச் சட்டினியில் தோய்த்துக்கொண்டு இருந்தபோது, எதிர் இருக்கையில் 70 வயது மதிக்கத்தக்க கிராமத்துக் கிழவர் வந்து அமர்ந்தார். கடைசிப் பேருந்துக்கு இன்னும் நேரம் இருக்கும் போலும். தமிழ் சினிமாவில் காட்டுகிற காட்டான் போல் இல்லை. தோளில் சார்த்திய பாளையங்கோட்டன் வாழைப்பழக் குலையோ அல்லது தங்கர் பச்சானின் சிறப்புப் படிமமான பலாப்பழமோ சுமந்திருக்கவில்லை. கோவணமும் அணிந்திருக்கவில்லை.
எனது தகப்பனார் கோவணம் கட்டிக் குளிப்பதையும், அரை வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு தொழி உழவில் ஏரடிப்பதையும் நான் பார்த்ததுண்டு. அது 50 ஆண்டுகள் முன்பு. மிகச் சமீபத்தில் அலுவலாக பாண்டிச்சேரி போய், மடுகரை எனும் ஊர்ப் பக்கம் பேருந்துக்குக் காத்து நின்றபோது, 60-க்கு மேல் பிராயமுள்ள ஒருவர், மாலை ஐந்தரை மணிக்கு, கோவணம் கட்டிக்கொண்டு தலையில் விறகுச் சுமையுடன் நடந்து போனதைப் பார்த்தேன். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றாராம் காந்தி. கிராமத்தில் அது கோவணத்தில் வாழ்கிறது என்பது எனக்குப் புலனாயிற்று.
எனக்கு எதிரே அமர்ந்தவர் நல்ல வெள்ளை வேட்டி உடுத்திருந்தார். வேட்டி யில் கட்சிக் கரை ஏதும் இல்லை. அரசியல் சாயத்தைக் காட்டித் தனது கேவலத்தைப் பறையடிக்காத கிராமத்து வயோதிகம்.
என்ன சாப்பிடலாம் எனும் தயக்கம் இருந்தது போலும். நிச்சயமாக அவர் இட்லி யைத் தேர்ந்தெடுக்கவில்லை. அக்கம் பக்கம் பார்த்தார். ஒருவர் புரோட்டாவில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டு இருந்தார். அதனை வடவர் பராத்தா என்றும், பராட்டா என்றும், பரோட்டா என்றும், எனது தம்பி மகள், ஐந்து வயது நந்திதா பெரோட்டோ என்றும் சொல்கிறார்கள். ஒரு தமிழ் சினிமாப்பாட்டு உண்டு… ‘இந்த ஒரு சாண் வயிறு இல்லாட்டா, நம் உயிரை எடுக்குமோ பரோட்டா’ என்று! அதெல்லாம் போய், இன்று தமிழ் மக்களின் தேசிய உணவாகிவிட்டது அது. தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் இரவுக் கூட்டம் முடிந்து, புரோட்டாதான் தின்கிறார்கள்.
பெரியவர், ஒருவர் தின்னும் முட்டை நூடுல்ஸில் கண் பதித்திருந்தார். யாவரும் மிக அந்தரங்கமான வாத்தியத்தில் தனக்கேயான ஒரு பண் இசைத்துக் கொள்வது போலிருந்தது. சைகை மொழியில் கிழவர், பரிமாறுபவரிடம் நூடுல்ஸைக் கை காட்டினார். ஆறு மாசப் பயிர் தலை சாய்ந்து கிடக்கும் வேளையில் வெள்ளம் உடைத்து மூழ்கும், கையறு நிலையில் கண்டு நிற்பான் விவசாயி. அந்த உணர்வில் இருந்தேன் நான்.
கடற்புரத்துக்காரர் இருவர் கிளப்புக் கடைக்கு சாப்பிட வந்தார்களாம், இரண்டு தலைமுறைகள் முன்பு. சர்வர் கேட்டார், ”இடியாப்பம் சூடாட்டு இருக்கு, கொண்டாரட்டா?”
”அது என்னலே, இடியாப்பம்? ரெண்டு பேருக்கும் கொண்டா?” இரண்டு குறுந்தும்பு இலைகள் போட்டு, தண்ணீர் தெளித்த பின், சூடாகத் தலைக்கு நான்கு இடியாப்பம் பரிமாறினான். தொடுகறியாகத் தேங்காய்ச் சட்டினியும் புளிசேரியும் தூக்குவாளியில் சர்வர் கொண்டு வந்தபோது, ஒருவர் மற்றவரிடம் கேட்டார்,
”எலே, இதை எப்பம் தெத்து எடுத்து எப்பம் தின்னியது?”
நிச்சயம் உங்களுக்கு மூலப் பிரதி அர்த்தம் ஆகி இராது. நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், இளம்பூரணர் போல, நாஞ்சில் நாடனார் உரை கீழ்வருமாறு…
தெத்து எடுப்பது எனில் தெற்று எடுப்பது. தெற்று எனில் சிக்கல். மீன் பிடிக்கக் கடலுக்குள் போய், மடி கரை வந்ததும், மீன் இறக்கி, பின் குளித்து, உண்டு, உறங்கி, முன் மாலையில் பின் வெயிலில் கடற்புற மணலில் ஓய்வாக உட்கார்ந்து, உல்லாசாமாகப் பேசிக் கொண்டே பரவர் வலையில் தெற்று எடுப்பார்கள். வலையின் சிக்கலைச் சரிபார்ப்பது இடியாப்பச் சிக்கலை அவிழ்ப்பதற்கு உவமை. இது மீனவர் வாழ்க்கையின் நுண்ணிய நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
படகு போன்ற ஒரு பாத்திரத்தில் கொதிக்கக் கொதிக்க நூடுல்ஸூம் கொஞ்சம் தக்காளி கெச்சப்பும், அதன் மேல் குத்திய முள் கரண்டியும் வந்தது.
பெரியவர் கரண்டியைத் தூக்கித் தூர வைத்தார். சூடு பொறுக்க விரல்களால் அள்ளி வாயில் வைத்தார். சற்று நாவால் வாயின் இருபுறமும் ஒதுக்கி, சூடாற்றி, விழுங்கினார். முகம் ஒரு விதமாய் ஆயிற்று. நான் என் பணியில் முனைந்திருந்தேன். சற்றுத் தெளிந்து இரண்டாவது வாய் தின்றார் பெரியவர்.
‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்’
எனும் குறள் அவருக்கு அனுபவப்பட்டிருக்க வேண்டும்.
சர்வரைக் கைகாட்டி அழைத்தார்.
”தம்பி, கொஞ்சம் சாம்பாராவது சட்னியாவது ஊத்துப்பா… மண்ணு மாதிரி இருக்கு. இதை எப்படித் திங்க?” என்றார்.
சாம்பார் ஊற்றிப் பிசைந்து தின்பதைக் காண எனக்குச் சங்கடமாக இருந்தது!
முதலைக்குத் தண்ணீரில் பலம். யானைக்கு நிலத்தில்தான் பலம்!
29-10-2008
RSS FEEDஐ முழுமையாக கொடுக்க முடிந்தால் வசதியாக இருக்கும்.
தங்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து சிறப்பாக உங்கள் சேவையைத் தொடருங்கள் சுல்தான்.
I love this article. excellent sir. Whenever i remember THEETHUM NANDURUM i thought that thatha who ate noodles with sambar only. nice.
Nanjil Nadan avarkalin eluthu arputham..vera enna solla..
இன்னிக்கு,,, நாட்டிலே,,,!!!!!!
பாதிப்பேரோட நிலமை,,,இதுதான்,,,
எவனோ,,? சாப்பிடுறான்,,,?
நாமும்,,,சாப்பிடுவோம்கிறதுதான்….
very nice continue
Bitter truth! Thank you