நாஞ்சில்நாடன் கதைகள் குறித்து திலகவதி (2)

நாஞ்சிநாடன் “முத்துக்கள் பத்து” குறித்து டி.ஜி.பி. திலகவதி ஐ.பி.எஸ்.   (தொடர்ச்சி)

விமர்சனம் என்பது காலாவதியாகி, கற்பனை வறட்சியுற்று படைப்பிலக்கியத்தை செய்ய முடியாத மலடுற்ற நிலையில், எழுத்தாளர்கள் தங்களை மாத்யூ ஆர்னால்டுகளாகவும்  டி.எஸ். எலியட்டுகளாகவும் கற்பித்துக் கொண்டு அணிந்து கொள்ளும் வேறொரு முகமூடியாக இருக்கிறது. இவர்களுக்குப் பிடித்தவர் என்றால் எளிய நடை, இல்லையென்றால் அதுவே பாட்டி கதை. இப்படியே கவித்வம், தத்துவமரபு, வேர் கொள்ளுதல், கவனமற்ற எழுத்து, மீபொருண்மை, அந்நியத்தன்மை என்று கலைச் சொற்களைப் பிரசவித்து ‘மொழி வாந்தி’ எடுத்தலே இன்றைய விமர்சன பாணியாக இருக்கிறது.

தான் மையங்கொண்ட இடத்தின் எழுத்தாளர், ஐம்பது வருடங்கள் ஒரே பாணியில் எழுதினால் அவர் ஜாம்பவான். வேறு அணியைச் சேர்ந்தவர் என்றால், தான் முதலில் எழுதித் தன்னை இலக்கிய உலகில் நிலை நிறுத்திக்கொள்ள உதவிய அதே பாணியை காலமெல்லாம் திரும்பச் சொல்லும் கிளி, தன்னையே பிரதியெடுப்பவர், தேக்கமுற்றவர், இப்படி… ஏ.சி. பிராட்லியைப் போல இ.எம். டபிள்யு. டில்லியர்ட் போல, தீர்க்கமுற்ற விமர்சகர்கள் தமிழில் இல்லை.

போதாக்குறைக்கு, ஆயிரமானாலும் போர்ஹே ஆகுமா,கேப்ரியா கார்சியா மார்க்வெஸ் ஆகுமா, லோசோ ஆகுமா, பவுலோ கொய்லோ ஆகுமா என்ற ரீதியில் முல்லைப்பூவையும்  முருங்கைக்காயையும் ஒப்பிட்டுப் புலம்புவது ஒரு புறம். மேலை நாட்டு இசங்கள், மேலை நாட்டு விமர்சகர்கள் ஆகியோரை அளவுகோலாக்கி தமிழ்ப்படைப்பாளிகளை நீட்டி அளப்பதும். அதிரடியாகவும், நெற்றியடியாகவும் தாக்குவதும் ‘அவரையே’ தாக்குகிறார் என்றால்… அடேயப்பா என்று உலகம் தன் மேதைமைக்கு கிரீடம் சூட்டுமென்ற கனவு. ‘எழுந்தேன்னா பார்’ என்கிற சப்பாணி புராணம்தான். மட்டையடிதான்.

இப்படியாகக் குப்புறத்தள்ளுவது மட்டுமல்லாமல் தமிழ் விமர்சனக் குதிரை குழியையும் பறிக்கிறது. தாங்கள் வரித்துக் கொண்ட இலக்கியச் சட்டாம்பிள்ளை / குரு / பீடாதிபதியின் புழக்கடைதான் இவர்களின் இலக்கிய மையம். அங்கு நடமாடும் குழு தீட்டித்தந்த இயந்திரம்தான் இலக்கிய அளவுகோல்.  அதைக் கையில் ஏந்திக் கண்ணற்ற குதிரைமேல் பவனி வந்து, எதிர்ப்படும் இறந்தகால, நிகழ்கால ஏன் எதிர்கால எழுத்தாளர்களையெல்லாம் ஒரே சீவாக சீவுவதுதான் விமர்சனம்.

அதிலும் மூத்த மற்றும் காலமான எழுத்தாளர்களைச் ’சீவுவது’ அவர்களுக்கு மிகவும் உகந்த செயல். எழுத்தரசியலின் பெறும் லாபம் அதிகாரங்கள் தவிர, தாக்கப்படுபவர்களிடமிருந்து மறுப்பு எதிர்வினை என்றும் ஏதும் இராது. அதிலும் தாக்கப்படும் முன்னத்தி ஏர் தன்னைச் சூழ்ந்திருக்கும் குழாமோ, இலக்கியம் பேசும் தம்பியர் படையோ, உறவுக் கூட்டமோ இல்லாதவரென்றால் இன்னும் வசதி. அவர் வாழ்ந்த காலச்சூழல், அன்றைய தமிழ் இலக்கியப்போக்கு, செல்நெறி, அவற்றைப் பீடித்திருந்த நெருக்கடிகள் தமிழ் இலக்கியத்துக்கு அவரால் ஏற்பட்ட முன்னகர்வு, இலக்கியவாதியாக வாழ அவர் சந்தித்த அவலங்கள், அவமானங்கள், சிக்கல்கள், ஆகிய இவை எதையும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் அவர் எழுதிய நூலைக் கைபடாமல் பறித்தெடுத்து, நகத்தால் கிள்ளித் தமது ஆசான், தம் கையிலிட்ட விமர்சனக் குடுவையிலிடுட்டுக் குலுக்கி தம் குழாம் வரையறுத்த விமர்சன இயந்திரம் வழிக் கடத்தி நெரித்துக் கூழாகப் பிசைந்து ‘பொருட்படுத்தத் தக்க படைப்பாளியல்ல’ ‘ஒற்றைப் புள்ளியில் இயங்குபவர்’ ’ஒற்றைப் படைப்புடன் நின்று போனவர்’  என்று சகட்டு மேனிக்கு விமரிசனங்களை அள்ளித் தெளிக்கலாம். கொடுமை! என்ன செய்வது? ‘குட்டுதற்கோ இங்கு பிள்ளைப் பாண்டியனில்லை’.

ஆக, இங்கு விமர்சகர்கள் தமிழ் வாசகர்க்கு வழிகாட்டும் கைவிளக்குகளாக இல்லை. படிக்கிற பழக்கம் மெல்லத் தழைந்து வேர்கொள்ளும் இன்றைய ஆரோக்கிய சூழ்நிலையில் நம் தமிழின் பெருமைக்குரிய மூத்த மற்றும் சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம், வாசகர் தாமே படித்து ரசிப்பதே உகந்தது. அதுவே சரியான வாசிப்பு சுகத்தை வாசகர்க்குத் தரும் . இன்றைய விமரிசகர்களின் சிபாரிசுகள் அதற்கு உதவாது. காதலியின் முத்தத்தைத் தபால்காரன் மூலம் பெறமுடியுமா என்ன?

தமிழின் நவீன சிறுகதையில் சாதனை படைத்த சிலரின் படைப்புகளை அவர்களின் படைப்புக்கலைக்கு ஒரு ‘மாதிரி’யாக இவ்வரிசையில் அளிக்க முயன்றிருக்கிறேன். இந்தக் கதைத் தேர்விலும் தனி மனித விருப்பு வெறுப்புகளின் பங்கு இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காக வாசிப்பில் தோய்ந்த நண்பர்களிடமும் இத்தேர்வுகள் பற்றி உரையாடி மாற்றங்கள் செய்திருக்கிறேன். இதைப் படிக்கும் வாசகர்கள் இந்த நவீனத்தமிழ் எழுத்துலக பிரம்மாக்களின் படைப்புகளில் ஆர்வம் கொண்டு அவர்களுடைய படைப்புகள் அனைத்தையும் படிக்க விருப்பம் கொள்ள வேண்டும் என்பதே என் அவா.

நான் இந்த முயற்சியில் ஈடுபட்ட பின் மீண்டும் ஒரு முறை ஒவ்வொரு படைப்பாளியையும் வாசித்ததும், இத்தொகுப்புக்கென சில படைப்புகளை தேர்வு செய்ததும் எனக்கு ஒரு நல்ல அநுபவமாக இருந்தது. என் வீட்டு நூலகத்தில் இருந்த படைப்புகளையும் இரவலாகச் சென்று போய் திருடு போய் விட்ட சிலவற்றை அடையாளம் காணவும் கூட அது உதவியது. மீண்டும் மீண்டும் தொகுப்புகளில் இடம் பெற்ற படைப்புகளையும், வடிவ அமைதி, எழுத்தொழுங்கு என்ற ரீதியில் விமர்சகர்கள் தம்மனம் போன போக்கில் சுட்டிக்காட்டிய கதைகளையும் பெரும்பாலும் தவிர்த்திருக்கிறேன். வாசகமனதில் ஒவ்வொரு கதையும் ஒரே அளவான நிறைவை ஏற்படுத்தாமல் போகலாம். தேர்வின் நோக்கமும் அதுவே. இந்த எழுத்தாளர்களை அல்லது அவர்கள் குடும்பத்தாரை சந்திக்க, பேச, பழக, என்று இப்படியான அநுபவங்களும் சித்தித்தன.

இத்தொகுப்புக்கான அநுமதியை உடனடியாகத் தந்த நாஞ்சில் நாடனுக்கு நன்றி. தொகுப்புக்கான ஆரம்ப முயற்சியில் உதவிக்கரம் நீட்டியதற்காகவும் நாஞ்சில் நாடனின் புகைப்படத்தைப் பெற உதவியதற்காகவும் நண்பர் கோபாலகிருஷ்ணனுக்கு சூத்ரதாரி நன்றி. மேலும் இந்த நூலின் உருவாக்கத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி.

திலகவதி ஐ.பி.எஸ்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நாஞ்சில்நாடன் கதைகள்

யுனைடெட் ரைட்டர்ஸ்,

130/2, அவ்வை சண்முகம் சாலை,

கோபாலபுரம்,

சென்னை-86.

ISBN 81-87641-50-9

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நாஞ்சில்நாடன் முத்துக்கள் பத்து

முத்திரை கதை வரிசை

தொகுப்பு: திலகவதி

அம்ருதா பதிப்பகம்,

5, 5வது தெரு,

எஸ் எஸ் அவென்யு, சக்திநகர்,போரூர், சென்னை 600116.

E- Mail to: info.amrudha@gmail.com

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

( நன்றி:  தட்டச்சு செய்து உதவியவர்:    சென்ஷி ) http://senshe.blogspot.com/

senshe.indian@gmail.com

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s