“கும்பமுனி ஒரு அறிமுகம்”
நாஞ்சில்நாடனின் “வேலியில் போவது…” எனும் சிறுகதையிலிருந்து சில வரிகள்:.
வீட்டின் பூமுகத்தில் சற்றே சாய்வான சூரல் நாற்காலியில் கும்பமுனி தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தார். அணிற்பிள்ளை போல் முன்னம் பற்கள் நான்கு. கடைவாய் பற்களும் வாராது காண் கடை வழிக்கே!
தினமும் தபால்காரன் வரும்வரை, குத்துக்கால் வைத்த இருப்பு. வெற்றிலையும் பாக்கும் சிறிது வதைப்பட்டு மாற்றுருவம் பெறாமலேயே வாசலின் இடதுபுறம் உமிழப்பட்டுக் கிடக்கும். அதுவே ஒரு உரக்குண்டு போல ஆகிக்கொண்டிருந்தது.
எழுதுவதில், படிப்பதில் நாட்டம் குறைந்துவிட்டது. சமையலுக்கும் புறச்சுற்று வேலைகளுக்குமான தவசிப்பிள்ளை தவிர்த்து பிற உறவுகள் சட்டை செய்வதில்லை. காலையில் கட்டன் காப்பி, பதினோரு மணியளவில் புழுங்கலரிசிச் சோறு வடித்தது, தொடு கறி காணத் துவையல், ரசம், மோர், பிற்பகலில் ஒரு கட்டன் காப்பி. முன்னிரவில் பயத்தங்கஞ்சி, சுட்ட பப்படம். இதுவென்ன பூனைக்காலி கடிக்கான பத்தியமா என வினவலாம்தான். பத்தியமோ, பைத்தியமோ, சீலம் அதுவெனக் கொண்டாயிற்று பலகாலம். துவையல் வேண்டுமானால் காணத்துக்குப் பதில் சிறுபயிறு, பொரிகடலை, துவரம் பருப்பு, பெரும் பயிறு, எள்ளு, தேங்காய், பீர்க்கன் காய், வல்லாரை என மாற்றம் கொள்ளும்.
தபால்காரன் வரும்வரை அந்த இருப்பு. காலனுக்கான காத்திருப்பின் நாள் அட்டவணை என்றும் கொள்ளலாம். நவீன படைப்பாளி என்றும் திறனாய்வாளன் என்றும் பெத்த பேர் எடுத்தாயிற்று. எனவே கட்டுத் தபால்களுக்குப் பஞ்சமில்லை. இறந்துபோன பின்பும் சிலகாலம் வந்து கொண்டிருக்கும் இலக்கிய நிகழ்ச்சி அழைப்பிதழ்கள், இலவச வெளியீடுகள், இலக்கியச் சிற்றிதழ்கள், மதிப்புரைக்கும் கருத்துரைக்கும் வரும் கவிதை, கதைப்புத்தகங்கள், சில அஞ்சலட்டைகள், எப்போதாவது பிரசுரமான படைப்புக்கான அல்லது மதிப்புரைக்கான நூற்றிருபத்தைந்து ரூபாய் காசோலை, சென்னை வங்கிக்கிளையில் மாற்றத்தக்கதாக. வங்கியில் கொண்டு கொடுத்தால், இருபது நாட்களுக்குப் பிறகு, எல்லாம் போக, எண்பத்தைந்து ரூபாய் கணக்கில் சேரும். மாப்பிள்ளை பிடித்த காசு பிள்ளை அழிக்க ஆச்சு. தோட்டத்தில் பாதி கிணறு. சுண்டைக்காய் கால்பணம், சுமட்டுக் கூலி முக்கால் பணம். வங்கி ஊழியர் மட்டும் வாழ்க! அரசு ஊழியர் அவரோடு வாழ்க! ஆசிரியர் அதிக நாள் வாழ்க!!!
கும்பமுனி முழுநேர எழுத்தாளர். முழுநேர எழுத்து என்பது அல்லும் பகலும் அறுபது நாழிகையும் சுத்தத் தமிழில் சொல்வதானால் ட்வென்டி ஃபோர் அவர்ஸும் எழுதிக் கொண்டிருப்பது என்பதல்ல. வேறு தொழிலுக்குப் போவதல்ல என்பது. தகப்பனார் சொத்து – பல இடங்களில் மழைக்கு ஒழுகும் பழைய நாழி ஓடு பாவிய வீடு. எட்டாக்கையில் பதினேழு மரக்கால் விதைப்பாடு நெல்வயல். ஆறு தென்னை, மூன்று பூவரசு, வேம்பும் முருங்கையும் ஒன்று என நிற்கும் வீட்டை அடுத்த தோப்பு. தோப்பில் கன்னி மூலையில் சுடலைமாடன் – சுடலைப் பேய்ச்சியின் மஞ்சணை மெழுகிய பீடங்கள். சோற்றுக்குப் புத்திமுட்டுக் கிடையாது. அந்தக் கால இன்டர்மீடியட் அதாவது இன்றைய முனைவர் பட்டத்துக்கு சமம்.
நாற்பது ஆண்டுகளாய் வாங்கிச் சேர்த்த புத்தகங்களின் நடுவே, கும்பமுனி பழைய புத்தகக்கடை போலத் தெரிந்தார். படிக்காதவை, பாதி படித்தவை, பலமுறை படித்தவை, படிக்க இயலாதவை, படித்தும் பயனற்றவை, படிக்க லாயக்கற்றவை என.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(தட்டச்சு உதவி: சென்ஷி http://senshe.blogspot.com/)
xxxxxxxxxxxxxx
“நாஞ்சில்நாடன் கதைகள்”
யுனைடெட் ரைட்டர்ஸ்,
130/2, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம்,
சென்னை-86.
ISBN 81-87641-50-9
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நாஞ்சில்நாடன் “முத்துக்கள் பத்து”
முத்திரை கதை வரிசை
தொகுப்பு: திலகவதி
அம்ருதா பதிப்பகம்,
5, 5வது தெரு,
எஸ் எஸ் அவென்யு, சக்திநகர்,போரூர், சென்னை 600116.
E- Mail to: info.amrudha@gmail.com
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
https://nanjilnadan.wordpress.com/2010/11/08/கும்பமுனி’-“கதை-எழுதுவதன/
https://nanjilnadan.wordpress.com/2010/11/07/கும்பமுனியுடன்-ஒரு-“நேர்/
nalla eluththalan ippadithan irukkamudiyum enptharku kumbamuni oru sandru
//படிக்காதவை, பாதி படித்தவை, பலமுறை படித்தவை, படிக்க இயலாதவை, படித்தும் பயனற்றவை, படிக்க லாயக்கற்றவை என//
கச்சிதமான விவரணை!