நாஞ்சில்நாடனின் ”சொற்கள்”

நாஞ்சில்நாடனின் சொற்கள்.

இலக்கியம் படைப்பவனுக்கு சொற்கள் மிகவும் முக்கியமானது. தமிழில் பல இலட்சம் சொற்கள் இருக்கின்றன. 1972 ஆம் ஆண்டு வையாபுரிபிள்ளை சென்னை பல்கலைக்கழகப் பதிப்பகத்திலிருந்து ஒரு லக்சின் கொண்டு வந்தார். அவற்றில் சுமார் 1,24,000 சொற்கள் உள்ளன. சுமார் 20 கிலோ எடையுள்ள புத்தகங்கள் ரூ.600க்கே கிடைக்கிறது. ஆனால் முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் இரண்டாம் பதிப்பு வெளிவரவில்லை. இந்த முப்பது வருடங்களில் பல புதிய துறைகள் வளர்ச்சியடைந்துள்ளன. பல லட்சம் வார்த்தைகள் உருவாகி இருக்கும். அவற்றை தொகுக்க யாருமில்லை. எந்த பல்கலை கழகமும் அகராதி கொண்டு வருவதில்லை. சில தனிமனிதர்கள் தங்களது சொந்த முயற்சியில் அகராதி கொண்டு வந்துள்ளார்கள். கரிசல் பகுதி சொல்லகராதியை கி.ரா.கொண்டு வந்தார். நாஞ்சில் நாடு – அ.கா. பெருமாள், கொங்கு நாடு – பெருமாள் முருகன், நடுநாடு – கண்மணி குணசேகரன், எதுகை மோனை அகராதி – அப்பையா ஆகியோரை சொல்லலாம். இன்னும் சில அகராதிகள் இருக்கக்கூடும்.

இவை எல்லாமே எந்த பல்கலைக்கழக உதவியும் இல்லாமல் படைப்பாளியே ஆய்வாளனாக மாறி உருவாக்கியவைகள்.

சொற்கள் தரும் பொருள் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன. உதாரணமாக பெருச்சாளி என்றால் அனைவரும் அறிவர். ஆனால், ஒரு சில வட்டாரங்களில் அகவான், அகவையான் என்றே கூறுகின்றனர். முந்திரிக்கு கொல்லாம்பழம் என்றும் பெயருண்டு. முந்திரியை பிளக்க பயன்படும் பொருளுக்கு கண்டான் என்ற பெயர் நடுநாட்டில் வழங்கப்படுகிறது. இடைநாகம் என்றால் அடைகாக்கும் பாம்பை குறிக்கும். பல வகையான மீன்களை இனம் பிரித்து பார்க்கத் தெரிந்தவர்களுக்கே 20, 25 வகையான மீன்கள் பெயர்தான் தெரியும். ஆனால் 864 வகையான மீன்கள் உள்ளதாக அண்மையில் வாசித்தேன்.

எழுத்தாளனின் வெளியீட்டுத்திறன் அவன் பயன்படுத்தும் சொற்களை பொறுத்தே இருப்பதாக நம்புகிறேன். டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்தின் எடை ஒரே அளவு உடையதுதான். ஒரு பந்திற்கும் மற்றொரு பந்திற்குமான அனுமதிக்கப்பட்ட எடை வித்தியாசம் 0.5 மில்லி கிராம் தான். அவ்வளவு சிறிய எடை வித்தியாசத்தில் கூட விளையாட்டு வீரர் தனக்கு தேவையானதை தேர்ந்து எடுத்த பிறகுதான் விளையாடுகிறார். ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்கே இவ்வளவு நுட்பமான தேர்வு அவசியமெனில் பல தலைமுறை கடந்து செல்லக்கூடிய இலக்கியத்தை படைக்கும் படைப்பாளி எந்த அளவுக்கு செறிவான சொற்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவேண்டும். போர்க்களத்தில் நிற்கும் வில்லாளிகளின் அம்பறாத் துணியில் அம்புகள் நிரப்பப்பட்டிருப்பது போல் படைப்பாளியின் உள்ளத்தில் சொற்கள் நிரம்பி இருக்க வேண்டும். சொற்களை தேடித்தேடி சேகரிக்க வேண்டும். படைப்பை உருவாக்கும்போது சொற்களை யோசித்து யோசித்து எழுத முடியாது. சிறுகதை, நாவல் வாசிப்பதுபோலவே எனக்கு அகராதி வாசிக்கவும் விருப்பமுண்டு. சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை கூட தொல்காப்பியம் சொல்லித் தருகிறது. எனக்கு தெரிந்த சொற்களை என் படைப்பில் பதிவு செய்து வைக்கிறேன். கருக்கு என்றால் பனமட்டையையும், கருக்கு அருவாளையும் தான் பலருக்கு தெரியும். கருக்கு என்றசொல்லுக்கு இளநீர் என்ற பொருளும் உண்டு. அவன் தென்னை மரத்தில் ஏறி கருக்கு பறித்துப் போட்டான் என எழுதும்போது கருக்கு என்பது இளநீர் என்பதை வாசகன் புரிந்து கொள்வான் என்றே நம்புகிறேன். இதுபோல் விமர்சனம் எழுதும்போதும் அபூர்வமான சொற்களை, அபூர்வமான தாவரங்களை முதன்மைப்படுத்தியே எழுதுகிறேன்.

என் மதிப்பீடு சார்ந்து சொற்களை ஆயுதமாக பயன்படுத்துகிறேன். வினையமான என்றால் பணிவான என்று பொருள்படும். அதற்கு விஷமத்தனமான என்றொரு பொருளுமுண்டு. தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்களை பட்டியலிட்டு பேரா.அருளி ஒரு நூல் வெளியிட்டுள்ளார். அவற்றில் சுமார் 20,000 சொற்கள் உள்ளன.

நான் முதுகலை பட்டம் முடித்தபிறகு அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து பலனில்லாமல் 1973 ஆம் ஆண்டு வேலை தேடி பம்பாய் சென்றேன். ஒரு தொழிற்சாலையில் 8 ரூபாய் சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தேன். மாலை நேரங்களில் கம்பராமாயணம் பாடம் படித்தேன். அந்த ஆசிரியர் ராமாயணம் மட்டுமல்லாது திருவருட்பா, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம் என தமிழ்பக்தி இலக்கியங்களில் இருந்தும் பாடம் நடத்துவார். நான் நாத்திக வாதியாக இருந்தபோதிலும் இலக்கியச்சுவைக்காக எல்லா பக்தி இலக்கியங்களையும் வாசித்தேன். பம்பாய் வாழ்க்கையில் தனிமையை உணர்ந்தேன். தனிமையை போக்க தீவிரமாக வாசிக்க தொடங்கினேன். ஒரு நாளைக்கு இரண்டு புத்தகங்களை கூட படித்து முடித்துவிடுவேன்.

என் வாசிப்பு அனுபவமும் தனிமையும் என்னை எழுதத்தூண்டின, பம்பாய் தமிழ் சங்கத்தில் வெளிவந்த ஏடு என்ற இதழில் நிகழ்ச்சி தொகுப்புகள் எழுதினேன். பிறகு தீபம் இலக்கிய இதழுக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பி வைத்தேன். அது உடனே பிரசுரமாகிவிட்டது. அந்த மாதம் வெளியான சிறுகதைகளிலேயே சிறந்த சிறுகதையாக உரத்த சிந்தனை அமைப்பால் பாராட்டவும் பெற்றது.

முதலில் திராவிட அரசியலில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. பிறகு பொதுவுடமை அரசியல் எனக்கு பிடித்தது.

கல்லூரியில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்கள் தமிழ் மேம்பாட்டுக்கு எதுவும் செய்வதில்லை. குறைந்தபட்சம் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் கடமையை செய்தாலே சிறப்பாக இருக்கும். மிக குறைவான சதவீதத்தினரே பாராட்டும்படியாக உள்ளனர்.

14.03.10. அன்று நடைபெற்ற கேணி அமைப்பின் பத்தாவது இலக்கிய சந்திப்பில்  சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசியது http://koodu.thamizhstudio.com/ilakkiyam_seithigal_keni_10.php

http://thittivaasal.blogspot.com/2010/03/blog-post.html

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to நாஞ்சில்நாடனின் ”சொற்கள்”

 1. ramji_yahoo சொல்கிறார்:

  கல்லூரியில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்கள் தமிழ் மேம்பாட்டுக்கு எதுவும் செய்வதில்லை. க

  200% true

 2. Shan Nalliah,Gandhiyist Norway சொல்கிறார்:

  We cant judge all tamil teachers in one scale…there are many tamil teachers did a good job..!!!

 3. Ganesh சொல்கிறார்:

  திரு.ஸுல்தான் மற்றும் நாஞ்சில் ஐயா அவர்களே,

  இப்பொழுது கூட நீங்கள், ஜெயமோகன், எஸ்.ரா போன்ற எழுத்தாளர்களும் மற்றும் சில பதிப்பகங்களும் கூடி விவாதித்தால் ஒரு பெரிய அகராதி வெளியிடலாம். எங்களைப் போன்ற வாசகர்கள் கண்டிப்பாக முன் வருவார்கள். தமிழின் முக்கிய அகராதி என்று அனைவரும் கூறும் ஒரு நல்ல காரியம் ஆகலாமே….

 4. பழ.கந்தசாமி சொல்கிறார்:

  அன்புள்ள நாஞ்சில்நாடன்,

  உங்கள் வலைப்பூ பற்றி திரு.ஜெயமோகன் அவர்களின் தளத்தின் மூலம் இரு வாரங்களுக்கு முன் அறிந்தேன். அப்போதிருந்து உங்கள் எழுத்துக்களை ஆர்வத்துடன் தொடர்ந்து படித்துவருகிறேன். உங்கள் சொல்லாட்சி, தேர்வு அருமை; பல அரும்சொற்களையும் கொண்டிருப்பதால், அவற்றைப் பொருள், உங்கள் பயன்பாடு முதலியவற்றுடன் (உங்கள் வலைப்பூ இணைப்பை ஆதாரமாகத் தந்து) தமிழ் விக்சனரியில் சேர்த்துவருகிறேன். எடுத்துக்காட்டாக, துன்னல், அகவான், முதலியன). முதலிலேயே கேட்டிருக்கவேண்டும். இருப்பினும், அப்படித் தொடர்ந்து செய்ய அனுமதிப்பீர்களா?

  நன்றியுடன்,
  பழ.கந்தசாமி

  • SiSulthan சொல்கிறார்:

   பழ.கந்தசாமி அவர்களுக்கு,
   தாராளமாக செய்துகொள்ளுங்கள்,
   உங்கள் முயற்ச்சி பாராட்டுக்குறியது

 5. பழ.கந்தசாமி சொல்கிறார்:

  திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு,

  மிக்க நன்றி.

  பழ.கந்தசாமி

 6. சரவணன் சொல்கிறார்:

  ///அந்த மாதம் வெளியான சிறுகதைகளிலேயே சிறந்த சிறுகதையாக உரத்த சிந்தனை அமைப்பால் பாராட்டவும் பெற்றது.///

  இலக்கியச் சிந்தனை அமைப்பு என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s