நாஞ்சில்நாடனின் “இனிப்பு” (தீதும் நன்றும்)

 

நாஞ்சில்நாடனின் “இனிப்பு” (தீதும் நன்றும்)

(தீபாவளி சிறப்பு கட்டுரை)

னிப்பு என்பதைத் தமிழில் தித்திப்பு, இழும், மதுரம், இனிமை, தேம், அமுது, சுவை எனும் சொற்களால் குறிப்பிடுகிறார்கள். சர்க்கரைக்கு அக்காரம், அக்காரை, வெல்லம், அட்டு எனும் சொற்கள் உண்டு. இனிப்பாக இருப்பதனாலேயே பதனீருக்கு அக்கானி என்று பெயர். கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் பனாட்டு என்றும் வழங்கப்பட்டது. கருப்புக்கட்டி என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும். கரும்பஞ்சாறு எப்படி கருப்பஞ்சாறு ஆனதோ, அது போல. இன்று கருப்புக்கட்டி அல்லது கருப்பட்டி என்பது பனங் கருப்பட்டி, தென்னங் கருப்பட்டி மற்றும் ஈச்சங் கருப்பட்டியைக் குறிக்கிறது.

இனிப்பின் ஆதாரப் பொருட்களாக கரும்பு, பனை வெல்லங்கள் இருந்திருக்கின்றன. திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு, (கி.பி.1070 முதல் கி.பி.1110) ‘திருப்பணியாரத்துக்குத் தேங்காய், கருப்புக்கட்டி’ எனக் குறிப்பிடுகிறது. கிருஷ்ண தேவராயன் கல்வெட்டுச் செய்தி, அதிரசத்துக்கு என்று அதிரசப்படி எனும் அரிசி வகை இருந்ததாகவும் அத்துடன் வெண்ணெயும், சர்க்கரையும், மிளகும் வழங்கியதாகவும் கூறுகிறது. சர்க்கரைப் பொங்கலை அக்கார அடிசில் அல்லது அக்கார அடலை என வழங்கியதாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உண்டு. ‘தீஞ்சேற்றுக் கடிகை’ என அப்பம் பற்றி மதுரைக் காஞ்சியும் ‘தேம்பூங்கட்டி’ என்று குறுந்தொகையும் குறிக்கின்றன. அரிசி மாவும் இனிப்புக் கட்டிகளும் கலந்து செய்யப்பட்ட பண்ணியம் எனப்படும் பணியாரம் பற்றியும் பேச்சு உண்டு. மதுரைக் காஞ்சி மோதகம் பற்றியும் பிற சங்க இலக்கியங்கள் அப்ப வாணிகன் பற்றியும் கூறுகின்றன.

தமிழனின் உணவு எளிமையானதாகவே இருந்துள்ளது. வேகவைக்கப்பட்டது மிகுதியாகவும், எண்ணெயில் பொரிக்கப்பட்டது அபூர்வமாகவும் இருந்துள்ளன.

கேரளத்தில் மணமக்களுக்கு ‘மதுரம் கொடுத்தல்’ என்னும் சடங்கு உண்டு. அங்கு மதுரம் என்பது வெல்லமிட்டுக் காய்ச்சிய பாலும் பழமும். இன்று அந்த மதுரம் கடைகளில் வாங்கும் இனிப்புகளாகவும் பேக்கரிகளின் கேக்குகளாகவும் மாறிவிட்டன. ஓணம் பண்டிகையின்போது பிரதமன் எனப்படும் பாயச வகையும், பருவ காலங்களில் அரியப்பட்ட பலாச்சுளையில் வெல்லப்பாகும் தேங்காய் எண்ணெயும் ஊற்றிச் சூடாக்கிக் கிளறப்படும் ‘சக்க வரட்டி’யும் முற்றிய நேந்திரங்காய் துண்டுகளை எண்ணெயில் வறுத்து எடுத்து வெல்லப் பாகில் புரட்டி எடுக்கும் சர்க்கரை வரட்டியும் அவர்களது இனிப்புகள். கோயில் நைவேத்தியங்கள் என்றால் அப்பம், அரவணை, பால் பாயசம்.

கன்னடத்தில் மூகாம்பிகை அம்மனுக்குத் திரிமதுரம் என்றொரு நிவேதனம். நமது சிலேடைக்கவி காளமேகம் போன்று, தோலன் எனும் கவி, நைவேத்தியம் ஆகும் முன்பே அதையெடுத்துத் தின்றான் என்றும், மூகாம்பிகை அவனைப் பார்த்துச் சிரித்து ‘விகட கவி’ எனப் பட்டம் கொடுத்தாள் என்பதும் கதை.

ஆந்திராவில் ‘உப்பிட்டு’ என்று ஆதிகாலம் தொட்டு ஓர் இனிப்பு வழங்கப்படுகிறது. பருப்புப் போளி இனம். கொங்கு நாட்டுக் கவுண்டர் வீடுகளில் கம்பு உருண்டையும் நாயக்கர் வீடுகளில் ‘உப்பிட்டு’ம் பாரம்பரிய இனிப்புகள். எள் விளைச்சல் காலங்களில் கருப்பட்டி சேர்த்து இடிக்கப்படும் எள்ளுருண்டை, மணிலாக்கொட்டைக் காலங்களில் வறுத்து உடைக்கப்பட்ட நிலக்கடலைப் பருப்பில் வெல்லப்பாகு ஊற்றிப் பிடிக்கப்படும் கடலை உருண்டை அல்லது கடலை மிட்டாய் போன்றவை இனிப்பாக வழங்கப்பெற்றன.

நாஞ்சில் நாட்டுப் பகுதியில் முந்திரிக்கொத்து எனப்படும் இனிப்பு ஒன்று காங்காலமாக உண்ணப்பட்டு வந்திருக்கிறது. சிறு பயிறு வறுத்து உடைத்து, தோல் நீக்கித் திரித்து, அதில் கருப்பட்டிப் பாகு கலந்து தேங்காய்த் துருவல் வறுத்துப் போட்டு, கருத்த எள், ஏலக்காய்ப் பொடி சேர்த்து உருண்டை பிடித்து அதைக் கரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவில் முக்கி தேங்காய் எண்ணெயில் சுட்டு எடுப்பது. திருக்கார்த்திகைக்கு இலைப் பணியாரம் எனும் இனிப்பும், ஒளவையாரம்மன் நோன்புக்கு சர்க்கரைக் கொழுக்கட்டையும், பிள்ளையார் சதுர்த்திக்கு மோதகமும் வேகவைத்து எடுத்தனர்.

மராத்தியர்கள், தீபாவளிக்குப் பாரம்பரியமாகச் செய்யும் இரண்டு இனிப்புகளில் ஒன்று, கடலை மாவில் வெல்லப்பாகு ஊற்றி உருண்டையாகப் பிடிக்கும் பேசின் லாடு. இன்னொன்று, பாம்பே ரவையை லேசாக வறுத்து, வெல்லப் பொடி சேர்த்து, கொப்பரைத் தேங்காய் துருவிப் போட்டுக் கலந்து, மைதா மாவு பூரணத்தில் எண்ணெயில் சுட்டு எடுப்பது கரஞ்சி என்று பெயர். பஞ்ச திராவிடம் என்றழைக்கப்பட்ட விந்திய மலைக்குத் தென் பகுதிகளின் இனிப்புகள் இவை.

பத்துப் பிராயத்தில் சுசீந்திரம் தேரோட்டம், சவேரியார் கோயில் திருவிழா என்று போகும்போது திருநாள் கடையில் விருதுநகர் நாடார்கள் மிட்டாய்க் கடை போடுவார்கள். லட்டு, பூந்தி, ஜிலேபியின் ராட்சச வடிவமான சீனி மிட்டாய் எல்லாம் அங்குதான் கண்டேன். சீனி மிட்டாய் என்பது உளுந்த மாவை லேசா கப் புளிக்கவைத்து, கடலை எண்ணெயில் சுட்டு, வெல்லப்பாகில் ஊறவைத்துக் காயவைப்பது. சமீபத்தில் சாத்தூரில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில நாவல் கருத்தரங்கு முடிந்த பின், நண்பர்கள் சண்முக நாடார் கடையில் இருந்து மேற்சொன்ன மிட்டாய் வாங்கித் தர ஏற்பாடு செய்தனர்.

காலம் வெகுவேகமாகச் சுழன்றுவிட்டது.

சமீபத்தில் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் அதிகாலை 3 மணிக்கு நின்றிருந்தேன், நாகர்கோவில் போகும் பேருந்துக்காக. அந்த நேரத்தில் 15-க்கும் குறையாத ஒரிஜினல் லாலா அல்வாக் கடைகள் திறந்திருந்தன. எப்படி 15 ஒரிஜினல் இருக்க முடியும் என்று என்னைக் கேட்காதீர்கள். எல்லா ஸ்வீட் ஸ்டால்களிலும் 16 வகையான இனிப்புகள் இருந்தன. தயார் நிலையில் விற்பனைக்கு அல்வா, லட்டு, ஜிலேபி, பேடா, பர்பி, மைசூர்பாகு, ஜாமுன், பூந்தி, ஜாங்கிரி என. இதில் கேக்குகள் அடக்கம் இல்லை. அவை தனி வரிசை. இந்த 16 வகை ஸ்வீட்களும் பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள், வாசனைகள், சுவைகள், தன்மைகள் கொண்டவை. நீல நிறத்தில் மட்டும் எந்த இனிப்பும் இல்லை. நீலம் நமக்கு நஞ்சின் குறியீடு. எனவே, மற்றவை அமுது என்று கொள்ளலும் ஆகா.

ஆடம்பரமான, இனிப்புக் கடைகளில் 30-க்கும் அதிகமான வகைகள் உண்டு. வங்காளத்தின் குலோப் ஜாமுன், காலா ஜாமுன், ரஸகுல்லா, ரஸமலாய், சோம்சோம் மேலும் எனக்குப் பெயர் தெரியாப் பல. மைசூர்பாகு, பர்பி, பேடா, லட்டு, அல்வா என்பனவற்றில் பல்வகை. வடிவங்களோ உருண்டை, நீள் உருண்டை, குழல் உருண்டை, சதுரம், நீள் சதுரம், முக்கோணம், வட்டம், நீள் வட்டம், அர்த்த சந்திர பாகம், முந்திரி, ஆப்பிள், நாவற்பழம், பலாக்கொட்டை கிண்ணம் எனப் பற்பல.

சமீபத்தில் புகழ்பெற்ற இனிப்புத் தயாரிப்பாளர் ஒருவர் 100 வகை அல்வாக்களின் கண்காட்சியும் விற்பனையும் நடத்தினார். கீரை அல்வா, பச்சை மிளகாய் அல்வா, சுரைக்காய் அல்வா, பூசணி அல்வா, மாம்பழ அல்வா, பப்பாளி அல்வா, பலாப்பழ அல்வா, அத்திப்பழ அல்வா, அன்னாசி அல்வா, வாழைப்பழ அல்வா என நீண்டதோர் பட்டியல். ஒரு நீரிழிவு நோய்க்காரன் எல்லாவற்றையும் கொண்டு அனுபவிக்க இயலாது, கண்டுதான் அனுபவிக்கலாம். என்றாலும், பனம்பழ அல்வாவும் கிண்டப்பட்டு இருக்கலாம் என நாவூறியது.

அல்வா, பட்டாணியர் மூலம் பஞ்சாப் வழி படைஎடுத்தது. குஜராத்திகள், ராஜஸ்தானிகள், வங்காளிகள் வெவ்வேறு வகை கொணர்ந்து சேர்த்தனர். பாதாம்கீரும் பாசந்தியும் மணியன் கதைகளில் படித்துத் தெரிந்து கொண்டது. எல்லாம் இன்று தமிழ் நாவினை நிரந் தரமாக ஊறவைத்துக்கொண்டு உள்ளன.

நமது பரம்பரை இனிப்புகள் அழிந்து, எண்ணெய் வடியும் டால்டா மினுங்கும் வண்ணங்கள் சுமந்து பளபள காகிதங்கள் ஒட்டப்பட்ட ஸ்வீட்கள் நம்மை ஆக்கிரமித்துக்கொண்டன. உடல் நலம் கெடுக்காத சொந்தச் சரக்குகளை அழித்துவிட்டு, காசு கொடுத்து கடிக்கிற நாயை வாங்கியது போல, ஆரோக்கியம் அற்ற ஆடம்பரங்களை வாரி வாரி நமது சந்ததியினர் வயிற்றில் திணித்துக்கொள்கிறார்கள்.

ஒவ்வொரு தீபாவளியை முன்னிட்டும், பிரபலமான இனிப்புத் தயாரிப்பாளர்கள் நூற்றுக்கணக்கான மெட்ரிக் டன் எடையுள்ள இனிப்புகளைத் தயாரிக்கின்றனர். பெரும் வணிக நிறுவனங்கள் தமது ஊழியருக்கும் ஆயிரக்கணக்கான ஸ்வீட் பாக்ஸ் வாங்கித் தந்து ‘ஹேப்பி தீபாவளி’ சொல்கிறார்கள். வாடிக்கையாக வணிகம் செய்யும் கஸ்டமர் வீடுகளுக்கு கார்களின் டிக்கி கொள்ளாமல் அடைத்து எடுத்துச் சென்று வழங்குகிறார்கள்.

ஆனால், அக்டோபர் 27-ம் நாள் தீபாவளி என்று கொண்டால், இனிப்புப் பெட்டிகள் 25-ம் நாளில் வழங்கப்படும். 18-ம் நாளிலேயே தயாரிக்கப்பட்டு, அட்டைப் பெட்டிகளில் அடைக்க ஆரம்பித்து விடுவார்கள். நாமென்ன தீபாவளி அன்றா எல்லாவற்றையும் தின்று தீர்க்கிறோம். இருக்கவே இருக்கிறது குளிர்சாதனப் பெட்டி. தீபாவளி முடிந்து 3 மாதம் வரைக்கும் விருந்தினர்தாம் வெள்ளை எலிகள்.

இனிப்புகள் தயாராகும் நெய் பற்றி காற்றில் அலையும் தகவல்களை நம்பாதிருக்கவே நானும் பிரயத்தனப்படுகிறேன். தீபாவளிக்கு அன்பளிப்பாக வரும் இனிப்புகளை மூன்று வயதுக் குழந்தைக்கு ஊட்டி வயிற்றுக்கடுப்புக்கும் வயிற்று இளைச்சலுக்கும் மருத்துவமனைகளுக்கும் அலையும் பெற்றோர் பற்றி எனக்குக் கவலை உண்டு. எல்லா மூலைகளிலும் பேயைக் கண்டு வெருளச் சொல்லவில்லை நான். தயவுசெய்து, பத்து வயதுக்குக் கீழே இருக்கும் சிறுவர் சிறுமியருக்கு இந்த அன்பளிப்பு இனிப்புகளைக் குத்தித் திணிக்காதீர்கள்.

முந்திரிப் பருப்பும் பாதாம் பருப்பும் அரைத்துச் செய்யும் கிலோ 600 ரூபாய் விலையுள்ள இனிப்புகளை வாங்க வக்கு இல்லாதவர் 100 ரூபாய்க்கு விற்கும் மலிவு இனிப்புகளை வாங்கிச் செல்லும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் தேங்காய் உடைக்கும்போதுஅவர்கள் சிரட்டையாவது உடைக்கும் கோடிக்கணக்கான குடும்பங்கள்.

பிறந்த நாட்களுக்கும் தேர்தல் வெற்றிகளுக்கும் வேறு கொண்டாட்ட நாட்களிலும் வாய் கொள்ளாமல், தேசத் தலைவர்களுக்கு இனிப்புகள் திணிக்கப்படுவதைத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் காணும் எமது சிறுவர்கள் நாவைச் சப்புக்கொட்டுகிறார்கள்.

திருமண வீடுகளில், இலைகளில் விருந்துக்கு அமரும் முன்பே மூன்று இனிப்புகள் பரிமாறப்பட்டு விடுகின்றன. பெரும்பாலும் திருமணத்துக்கு வருபவர் 50 தாண்டியவர். அவர்களில் பாதிப் பேருக்கு மேல் ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு. ஒன்று, பரிமாறப்பட்ட இனிப்பை வீண் செய்ய வேண்டும் அல்லது அமுதென்று எண்ணி விடத்தை உண்ண வேண்டும்.

எனக்குத் தோன்றும், விருந்துகளுக்குப் போனால் சிறிய மூடிபோட்ட டப்பா வைத்துக்கொள்ளலாம், வீணாக்குவதை வீட்டுக்குக் கொண்டுவரலாமே என.

ஒவ்வொரு பிரதேசத்துப் பண்டங்களுக்கும் தனித்துவமான மணம், குணம், சுவை உண்டு. இன்று நாம் விழுங்குவது அந்தப் பிரதேச வீடுகளின் தயாரிப்புகளுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவை. அதிவிரைவில் இந்தியாவில் இன்று விற்பனையாகும் இனிப்பு வகைகளை சீனா தயாரித்து 40 ரூபாய் கிலோ என்று நமது சந்தைக்கும் அனுப்பும் காலமும் வரும்.

பலகாரச் சீட்டு என்றொரு புதிய காய்ச்சலும் பரவி வருகிறது. தீபாவளிக்கு லட்டு, ஜாங்கிரி வாங்க மாதந்தோறும் சீட்டு கட்டுவது, உடைந்தது, உடையாதது, கிழிந்தது, கிழியாதது எல்லாம் வீடு தேடி வரும்.

நமது இலக்கியங்கள் பேசுகின்றன,

‘முளை தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்’ என.

‘குமரி வாழையின் குருத்தகம் விரித்துத்

தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவி,

அமுதம் உண்க அடிகள் ஈங்கு’ என.

‘அடப்பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்’ என.

எல்லாம் எங்கே?

பக்கத்தில் நின்று பார்த்துப் பரிமாறியது எங்கே?

 வீட்டில் உள்ளோருக்கும் பிடிக்கும் என 7 நாட்கள் முன்பே தீபாவளிப் பலகாரம் செய்ய முனைந்த பரிவு எங்கே?

அது தீங்கின்றியும் சுவையாகவும் இருக்க வேண்டும் எனக் கருதிய பாசமும் நேசமும் எங்கே?

தேடுங்கள் நண்பர்களே!

தேடிக்கொண்டே இருங்கள்!

xxxxxxxxxxxxxxxxx

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

19 Responses to நாஞ்சில்நாடனின் “இனிப்பு” (தீதும் நன்றும்)

  1. ramji_yahoo சொல்கிறார்:

    வழக்கமான நாஞ்சில் நாடனின் நகைச்சுவை, கிராமிய மனம் கட்டுரையில் இல்லை.
    ஒரு வேளை அவசரமாக எழுதினாரோ.
    ஏதோ கல்லூரி/பள்ளி பாடப் புத்தக கட்டுரை படிப்பது போன்ற உணர்வே எனக்கு ஏற்படுகிறது.

  2. kayalvizi சொல்கிறார்:

    மிகச் சிறப்பான கட்டுரை.ஒரு சிறிய திருத்தம்.தவறாக எண்ண வேண்டாம்.ஒருக்கால் அது தட்டச்சுப் பிழையாகவும் இருக்கலாம்.
    ’முளைதயிர் பிசைந்த’அல்ல;அது’முளி தயிர்’என இருக்க வேண்டும்.அடர்த்தியான செறிவான தயிரே முளிதயிர்.

  3. arshiya.s சொல்கிறார்:

    எங்கள் வீடுகளில் பீர்ணி என்றொரு இனிப்புப் பதார்த்தம் முன்னர் பண்டிகை நாட்களில் மட்டும் செய்யப்பட்டு வந்தது. தற்போது அது சாதாரணப் பண்டமாகிவிட்டது.பாதாம் பருப்பை விழுதாக அரைத்தெடுத்து பாலில் கலந்து சீனியிட்டு சுண்டக் காய்ச்சியப் பின் பரிமாறுவது. சுவையாக இருக்கும். கேட்டுவாங்கிக் குடிக்கச் செய்யும். எவ்வளவு குடித்தாலும் உடம்புக்கு ஒன்றும் நேராது. இப்போது சுண்டக் காய்ச்ச எம்குலப் பெண்டீருக்கு நேரமில்லை. மானாட மயிலாட அழைத்துவிடுகிறது. ‘அதை செய்யேன்ம்மா’ என்றால் அததிப்பூக்களிலிருந்து பார்வையை மீட்காமலேயே சுட்டெரித்து விடுகிறது. கிருஷ்ணாவிலும் அடையாறிலும் ஏதோ கிடைக்கிறது. என் பாட்டியை நினைத்து மனம் ஏங்குகிறது.

  4. RV சொல்கிறார்:

    நாஞ்சிலார் ஜொள்ளு விட வைக்கிறார்!

  5. மீனாட்சி நாச்சியார் சொல்கிறார்:

    படிக்கும் போதே எச்சில் ஊறுகிறது. இதில் சிலவற்றை வெவ்வேறு இடங்களில் சுவைத்திருக்கிறேன். என் பொழப்பு என்னை மாநிலம் மாநிலமாக கடத்துவதால் ஏற்பட்ட பயன். நன்றி நாஞ்சில் சார்

  6. durai@vidyashankar சொல்கிறார்:

    nalla analiyse .amma cheith suciyam ninaivukku vanthathu-durai@vidyashankar

  7. மாரிமுத்து சொல்கிறார்:

    //காசு கொடுத்து கடிக்கிற நாயை வாங்கியது போல//
    நல்ல சொலவடை

  8. Vassan சொல்கிறார்:

    உங்கள் நாட்டில் தீபாவளி காலமோ..? படிக்கச் சுவையாயியிருந்தது, படங்கள் திகட்டினாலும்.

    சீப்பு பணியாரம், பால் கொழுக்கட்டை உங்களுக்குத் தெரியாதா..

    பால் கொழுக்கட்டை கிட்டதட்ட கொழுப்பு குறைந்த இனிப்பு என்றே சொல்லலாம் – தேங்காயைத் தவிர்த்து. பல ஆண்டுகளாக புலம் பெயர்ந்த எம் போன்றோருக்கு கொடுப்பினை இல்லை, உண்டு 30 ஆண்டுகளாக போகிறது.

    நன்றி.

    • SiSulthan சொல்கிறார்:

      படங்கள் திகட்ட காரணம் என்னுடைய ஆர்வக் கோளாறு.
      பல ஆண்டுகளாக புலம் பெயர்ந்த உம் போன்றோருக்கு கொடுப்பினை இல்லைஎன்பது மட்டுமில்லை, புலம்பெயராத எங்களுக்கும் அதே நிலைதான்.
      கட்டுரையின் கடைசி வரி சொல்லுவதென்ன?
      >பக்கத்தில் நின்று பார்த்துப் பரிமாறியது எங்கே?
      வீட்டில் உள்ளோருக்கும் பிடிக்கும் என 7 நாட்கள் முன்பே தீபாவளிப் பலகாரம் செய்ய முனைந்த பரிவு எங்கே?
      அது தீங்கின்றியும் சுவையாகவும் இருக்க வேண்டும் எனக் கருதிய பாசமும் நேசமும் எங்கே? தேடுங்கள் நண்பர்களே! தேடிக்கொண்டே இருங்கள்! <

  9. alagamperumal சொல்கிறார்:

    அண்ணாச்சி! மனோலயம் அல்லது மனோகரம்..? சொல்ல மறந்த[கதை அல்ல] இனிப்பு…செத்த வீட்டுல பருப்பினி[ணி] அல்லது பருப்புநீர்?….பொரிவிளங்காய்…

  10. ganesh சொல்கிறார்:

    நல்ல ஒரு பதிவு. நிஜமாகவே நாவில் நீர் ஊறியது. இப்பொழுது ஸ்வீட் என்றாலே அடையார் ஆனந்த பவன், கிருஷ்ணா மற்றும் கிராண்ட் ஸ்வீட்ஸ் தான். கோவையில்/குமரியில் எந்த ஸ்வீட் கடை பிரபலமோ…..

    • alagamperumal சொல்கிறார்:

      குமரியில் நாவின் சுவையில் நின்றாடும் மிட்டாய் கடைகள்…

      1) கோட்டாறு சவேரியார் கோவில் சந்திப்பிலிருந்து மேலேறி குமரி மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது கோட்டாறு காவல் நிலையம் நோக்கி செல்லும் சாலையில் இடது வரிசைக் கடைகளில் ஒன்று…செல்வம் ஸ்வீட்ஸ்டால்[செல்வம் மிட்டாய்க்கடை] இங்கு மிக்ஸர் படு பிரபலம்…செல்வத்தின் காரச்சேவும் கொள்ளம்…மசாலா வேர்க்கடலை…
      ஆஹா…அஹ்ஹ்ஹா…மொத்துமொத்தென்று மாக்கலவையை தன் மேல் அள்ளி போர்த்திக் கொள்ளாமல் மெல்லிய பட்டிழைக் கனத்தில் மசாலாவில் வறுத்தெடுக்கப்பட்ட வேர்க்கடலைகள்….அன்றலர்ந்த மனோகரமும் கிடைக்கும்…

  11. alagamperumal சொல்கிறார்:

    2) நாகர்கோவில் மணிமேடையிலிருந்து வடசேரி செல்லும் ரஸ்தாவில் ‘ராமலெட்சுமி ஸ்வீட் ஸ்டால்’…எப்படி ரஜினிகாந்திற்க்கு நம்மில் அறிமுகம் தேவையில்லையோ அது போல் நாகரில் ராமலெச்சுமிக்கு…. ஏத்தங்கா சிப்ஸ் ஏக பிரபலம்…உங்கள் தேவைக்கேற்ப கிடைப்பது அரிது அரிது[மானுடராய்ப் பிறப்பதை விட]…கிட்டியால் அது உமது முன்னோரின் தவப்பயனே…இங்கு விற்க்கும் ஒருவகை இனிப்பில் நாவூறும்….

  12. alagamperumal சொல்கிறார்:

    அதே மணிமேடை சந்திப்பில் நினைவில் நிற்கும் பிக்சர்பேலஸ் தியேட்டர் வரிசையில் ”லாலா மிட்டாய் கடை”…கார,இனிப்பு வகையறாக்களை கலந்துகட்டி நம்பிக்கையோடு வாங்கலாம்…சிறிய பொதிகளில்[ கழுதை சுமக்கும் பொதி அல்ல…குமரி மொழியில் பார்சல்] கிடைக்கும் தூள் பக்கோடாவை கேட்டுவாங்கி சுவைத்து வீடுபேறடையுங்கள்…

  13. uthama Narayanan சொல்கிறார்:

    I have read this with relish ,now and the Deepawali is approaching; but I can read not take these sweets, if by instinct forced to take, then I have to gulp down more tabs .very interesting article sir.
    Vaazhga.
    Utham

  14. Cyril Alex சொல்கிறார்:

    Please do not center align text. Left alignment is good enough. I saw someone else commented about center alignment but for articles it does not look good.

    BTW. Great job!!

  15. ashokcoumar சொல்கிறார்:

    ஐயா நமது மாவட்ட பாரம்பரிய நெய்கிளியை பற்றி நீங்கள் கூறவே இல்லை

  16. பிங்குபாக்: அடிசில் | அகராதி | tamil dictionary | சொலல்வல்லன்

Cyril Alex -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி