நாஞ்சில்நாடன்:சினிமா,சினிமா.(தீதும் நன்றும்)

நாஞ்சில்நாடன் சினிமா ,சினிமா   (தீதும் நன்றும் ) 

முதல் சினிமா என ஞாபகத்தில் நிற்பது, ‘ஜனக் ஜனக் பாயல் பஜே’ எனும் இந்திப் படம். கால் சலங்கை ஜனக் ஜனக் எனச் சிலம்புகிறது என்பது பொருள். சாந்தாராம் இயக்கம், அவரது இரண்டாவது மனைவி சந்தியா, கதாநாயகி. 1955-ல் வெளியானது. எனக்கு 8 வயதிருக்கும். எனது அம்மையின் இடுப்பில் என்னைவிடச் சிறியவன் இருந்ததால், பக்கத்து வீட்டுப் பழவூர் பெரியம்மை என்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள். இடுப்புக் குழந்தைக்கு அன்று டிக்கெட் கேட்பதில்லை. அன்று பிடித்த பித்து இன்னும் குணமாகவில்லை.

சினிமா என்பது அற்புதமான ஊடகம். படைப்புத் திறனும் தொழில்நுட்பமும் சங்கமிக்கும் இடம். அடிப்படையில் அது ஒரு பொழுதுபோக்குச் சாதனம். அதே நேரத்தில் சிறந்த ஒரு கலைச் சாதனம். மற்றெந்தக் கலைக்கும் உண்டான பொறுப்பும் தன்மையும் சினிமாவுக்கும் உண்டு.

ஆனால், பணம் எனும் தனிச் சொல் ஆதிக்கம் பெறும்போது கலை இழிந்து வணிகமாகிறது. பொழுதுபோக்கும் கலையும், களம் மாற்றியும் கால் மாறியும் ஆடுகின்றன. பின்பு அது நோயாக மாறுகிறது. கலைஞன் பணம் ஈட்டக் கூடாது என்பதல்ல. வணிகமும் தப்பானதல்ல. ஆனால், செல்வம் மட்டுமே இலக்காகக்கொண்டது எதுவும் கலையல்ல, நோக்கமாகக்கொண்டவன் கலைஞனும் அல்ல. கலை இலக்கிய விமசர்கர் இந்திரன் சொன்னார், உலகத் திரைப்பட மேதை சத்யஜித் ரே ஒரு நேர்காணலில் கூறியதாக, ‘சினிமா என்பது போர்வாள், அதைச் சவரம் செய்யப் பயன்படுத்தல் மட்டுமே ஆகாது!’ என்று.

பணம் எனும் ஒற்றை அச்சில் தமிழ் சினிமா சுழன்று வருவதுதான் அதற்குக் காரணம். 100 ரூபாய் முதலீட்டுக்கு 7 ரூபாய் லாபம் என்பது உலக வணிகச் சமன்பாடு எனில், தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்பு 100 ரூபாய் முதலீட்டுக்கு 1,000 ரூபாய் லாபம் என்பது. 48 முதல் 120 சதமானம் வட்டி விகிதம் இவர்களுக்கு எப்படிக் கட்டுப்படி ஆகிறது? முதுகுடியினருக்கு வங்கிகள் தரும் வைப்பு நிதி வட்டி பத்தரை சதமானமாகவே இருக்கும்போது, இதெப்படிச் சாத்தியம்? ஆக, எத்தைச் செய்தும் சொத்தைத் தேடு!

நல்ல பொழுதுபோக்கு, கலைத்தரமான படைப்பு, நேர்மையான திறன்களின் வெளிப்பாடு என்பன மாறி, வழிப்பறி எனும் நிலைக்குத் தமிழ் சினிமா போய்க்கொண்டு இருக்கிறது. 1 ரூபாய்க்கு அரிசி, 120 ரூபாய்க்கு சினிமா டிக்கெட். ஆஹா, என்ன தவம் செய்தோம்?

ஒரு படம் அமோகமாக வென்றால், ஏமாந்த தமிழன் மீது பரிதாபம் தோன்றுகிறது. அமோகமாகத் தோற்றாலோ, எந்த வருத்தமும் ஏற்படுவதில்லை. இந்த நாட்டில்தான் விவசாயிகள் பந்திபந்தியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள். படத் தயாரிப்பாளர்களும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். என்னவோர் அங்கதம்!

எல்லோரும் கூட்டு ஒப்பாரி வைக்கிறார்கள். நடிகர் சம்பளம் – சம்பளமா அது, பகல் கொள்ளை. தயாரிப்புச் செலவு, மூடப்படும் கொட்டகைகள், திருட்டு டி.வி.டி. என திருட்டில் ஆரம்பித்து திருட்டில் முடியும் வட்டம்.

இன்னும் 100 ஆண்டுகள் தமிழில் திரைப்படங்களே தயாரிக்கப்படாமல் போனால், இந்த மொழிக்கு, பண்பாட்டுக்கு, மக்களுக்கு என்ன இழப்பு ஏற்பட்டுவிடும்? அயோத்தியை விட்டு வனம் ஓடும் ராமன் பின்னால் தர்மம் இரங்கி ஓடியது என்பான் கம்பன். சினிமாக்காரன் பின்னால் அரசுகள் பரிதவித்து, இரங்கி, புலம்பி, தலைவிரிகோலமாய் நடக்கின்றன. தமிழ்நாட்டில் தமிழ் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்காம். தமிழில் பாடல் எழுதினால் கொட்டகை இலவசம். தமிழில் உரையாடல் எழுதினால் தமிழ்நாடே இலவசம் எனும் ரீதியில் வளர்கிறது தமிழ்.

தமிழ் சினிமாக்காரர் எவரும் உலக சினிமா அறியாதவர் அல்ல. அவரவர் வீடுகளில் ஆயிரக்கணக்கில் பன்மொழி டி.வி.டி-க்கள் உண்டு. அவை அசலா திருட்டா எனக் கேட்கலாகாது. ஓமியோபதி மருத்துவத்தில் கொடிய விஷங்களை நீர்த்து நீர்த்து மருந்தாக ஆக்குவார் என்பார். அது போல் உலகத் தரத்துப் படங்கள் பார்த்து, நீர் வார்த்துத் தமிழ்ப் படம் செய்வது ஒரு முறை. இன்னொரு எளிய முறை, புதுமைப்பித்தன் தொடங்கி இன்று வரையிலான இலக்கியப் படைப்பாளிகளின் அடிமடியில் கை வைப்பது.

சென்னை மாநகரில் வாழும் உதவி இயக்குநர்களில் பெருந்தொகையினர் நல்ல இலக்கியப் படைப்பாளிகளாக உருவாகி வரும் ஆற்றலுடையவர்கள். ஆனால், 400 ஆண்டுகள் கதை எழுதினாலும் ஒரு திரைப்பட இயக்குநர் சம்பளத்தை ஒப்பிட முடியாது. எனவே, சிலர் எளிதான வழியில் ஸீன் பிடிக்க அலைகிறார்கள். ஸீன் பிடிப்பது என்பது இலக்கியவாதியின் படைப்புகளைத் திருடுவது. எனது நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகளின் வரிகள் சாமர்த்தியமாகக் களவாடப்பட்டுள்ளன. ‘பூட்டுப் பூட்டாக இருக்கு, கெட்டுச் சோத்தை எலி கொண்டுபோச்சு’ என்பார்கள் கிராமத்தில். நாட்டின் காப்புரிமைச் சட்டங்களோ, திருட்டுக்கு வழி சொல்லும் விதமாக இருக்கின்றன.

நான் அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஈழத் தமிழ் இலக்கிய ஆளுமை, 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழை உலகத் தரத்துக்கு உயர்த்தும் படைப்பாளி எஸ்.பொ-வும், இயற்கை விவசாயத்துக்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த விஞ்ஞானி நம்மாழ்வாரும் மேடையில் பின்வரிசையிலும் சினிமாக்காரர்கள் முன் வரிசையிலும் அமர்த்தப்பட்டு இருந்தனர். இது தமிழ்நாடன்றி வேறு எங்கும் நடக்குமா?

நான் பள்ளி இறுதி வகுப்பில் வாசித்துக்கொண்டு இருந்தபோது, இந்தியத் திரைப்படங்களில் முத்தக் காட்சியை அனுமதிக்கலாமா என்று கோஸ்லா கமிஷன் ஆராய்ந்துகொண்டு இருந்தது. அன்று, ஏ.கருணாநிதி என்றொரு சிரிப்பு நடிகர் சொன்னார்… ‘நமது நடிகர்கள் முத்தக் காட்சிகளில் நடித்தால் அது விஷக்கடியாக இருக்கும்’ என்று. இன்று பெரும்பாலான தமிழ் சினிமாக்களே விஷக்கடியாக இருக்கின்றன.

கொஞ்ச நாட்கள் நாயக-நாயகிக்குப் பதிலாக ரோஜாக்கள் முத்தமிட்டன. பின்பு நாயக-நாயகியர் அவசரமாக மூத்திரம் முட்டியவர் போல குரோட்டன் செடிகளின் பின்புறம் குனிந்து அவற்றைப் பிடுங்கிவிடுவதைப் போல் ஆட்டினார்கள். பின்பு எழுந்து நின்று, தட்டில் ஊற்றப்பட்டிருந்த சேமியா பாயசத்தை கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு நக்கியோ உறிஞ்சியோ குடித்ததைப் போன்று வாயைத் துடைத்துக்கொண்டனர்.

சமீபத்தில் இயக்குநர் பரதன் நினைவு தினத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ‘தாழ்வாரம்’ எனும் மலையாளப் படம் ஒளிப்பரப்பினார்கள். எஸ்டேட் தொழிலாளியான மோகன்லால், நாயகன். அவரது முதல் காதலியாகப் பதின்பருவத்து அஞ்சு, நாயகி. இருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள். முத்தமிட்டு முடிந்த கையோடு வாயை உரசிக் கொப்பளித்துத் துப்பி நாக்கு வழிக்க வாய்க்காலுக்கு ஓடாமல், நாயகன் பேசும் வசனம், ”மாங்ஙாச் சொண.” மாங்காய்ச் சுணை, தமிழ்தான். பிஞ்சு மாங்காய் பறித்துக் கடித்தால் நுகரக் கிடைக்கும் பால் வாசனை. ஆண்டாள் இதைத்தான் கேட்டாள்.

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே

என்று. இங்கு நாற்றம் என்பதற்கு நறுமணம் என்பது பொருள்.

உலக சினிமாவைப் பார்த்து காப்பி அடிக்க, அடுத்தவன் பையில் கைவிட்டு ஸீன் பிடிக்கத் தேவையில்லை பெருமக்களே. திருட்டுக் கொடுப்பதைவிட இலவசமாகத் தர நாங்கள் தயார். அதற்கும் அவசியம் இல்லை. நமது தொல் இலக்கியங்களும் அன்றாட வாழ்க்கையும் தெரிந்திருந்தால் போதும். ஆனால், எப்போது கற்பது சிரமமானதும் களவாடுவது எளிதானதும் ஆயிற்றோ, அதோடு போயிற்று!

மராத்தியில் நாலைந்து ஆண்டுகள் முன்பு, ‘ஸ்வாஸ்’ என்ற பெயரில் ஒரு படம், 100 நாட்கள் ஓடியது. சுவாசம் என்பது பொருள். இரு கண்களிலும் Retino Blastoma எனும் கட்டிகள் வந்து, அறுவைசிகிச்சை செய்தால் கண்கள் போய்விடும். ஆனால், வேறு பாதிப்பு இல்லை என்ற நிலையில் இருக்கும் பேரனை, கிராமத்துத் தாத்தா அள்ளிக்கொண்டு அலையும் படம். ‘இக்பால்’ என்ற கிரிக்கெட் பற்றிய படத்தையும் அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ படத்தையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

நமது திரை மேதைகளோ புதுமை நாட்டத்தில், முதுகிலும் காத்திரமாய் முலை முளைத்த பெண்ணைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். 300 கோடி ரூபாய் செலவில் மூன்று கண்டங்களிலும் முட்டி முட்டிக் காதல் செய்ய.

25 ஆண்டுகள் முன்பு பார்த்த கன்னடப் படம். பார்வையற்ற பருவப் பெண் ஆடை களைந்து குடிசைக்குள் குளிக்கிறாள். ஓடிக் களிக்கும் சிறுவன், குடிசைக்குள் ஒளிந்திருக்கிறான். சிறுவனின் முகபாவம் மூலமாகக் காட்சி விளக்கப்படுமே அன்றி, ஓராடை அணிந்து நனையும் பெண் உடம்பின் மூலமாக அல்ல. கலைஞன் என்ன செய்வான் என்பதையும் பணப் பொறுக்கி என்ன செய்ய முயல்வான் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?

மராத்தியில் ‘சாம்னா’ என்றொரு படம். நாடக மேதை டாக்டர் ஸ்ரீராம் லாகு, கதாநாயகக் காந்தியக் கிழம். எதிர் நாயகன் மராத்தியின் நகைச்சுவை வில்லன் நடிகர் நீலு புலே. கிராமத்தில் நடந்த அரசியல் கொலை பற்றிய தர்க்கமே சினிமா. சினிமாத் தலைப்பின் பொருள் ‘நேருக்கு நேர்’.

30 ஆண்டுகள் முன்பு மலையாள விருதுப் படங்களான ‘பெருமழைக்காலம்’, ‘நிழல் குத்து’பற்றியோ, இந்தியின் ‘தமன்னா’ பற்றியோ, ‘மாச்சிஸ்’ பற்றியோ, ‘டெரரிஸ்ட்’ பற்றியோ, ‘ப்ளாக்’ பற்றியோ, ‘மாத்ரு பூமி’ பற்றியோ, ‘சம்மர் 2007’ பற்றியோ, இந்திய ஆங்கிலப் படங்களான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர்’ பற்றியோ, ’36 சௌரங்கி லேன்’ பற்றியோ நான் பேச வரவில்லை.

ஞான பீட விருது பெற்ற ஒரிய இலக்கிய மேதை மகாஸ்வேதா தேவியின் சிறுகதையைத் தழுவிய, டிம்பிள் கபாடியாவும் ராக்கியும் நடித்த, கல்பனா லாச்மி இயக்கிய, புபேன் ஹசாரிக்கா எனும் இசை மேதை இசையமைத்த, பெரும்பாலும் ராஜஸ்தான் மொழி பேசிய ‘ருடாலி’ பற்றியும் நான் பேசவில்லை.

மலையாளத்தின் ‘மணிச் சித்திரத் தாழ்’, ‘கத பறயும் போள்’, ‘தேன்மாவின் கொம்பத்து’, ‘சிந்தாவிஷ்டையாய சியாமளா’ எனும் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் தமிழில் கந்தர்கோலமான கதை தெரியாதா நமக்கு?

நாம் இன்னும் காதலித்தும் பழிவாங்கியும் தீரவில்லை. இருட்டில் சொந்த மனைவியை வன்புணர்ச்சி செய்பவன் போல, தன்னையே மறுபடியும் மறுபடியும் நகல் செய்தவாறு உள்ளோம். இந்தக் கொள்ளையில் காவல் துறையையும் அரசியல்காரர்களையும் நாம் செய்யும் கடுமையான விமர்சனங்கள் நேர்மையானவைதானா?

மூன்று குளம் வெட்டினோம், இரண்டு குளம் பாழ், ஒன்றில் தண்ணீரே இல்லை என்று ஓடுகிறது நமது கதை. என்றாலும் நான் நம்பிக்கைவாதி. கீழ் வானம் வெளுத்துத் தெரிகிறது நமது இளைய இயக்குநர்களால். அவர்களுக்கு எமது சென்னித் திருக்காப்பு!

…………….(ஆனந்தவிகடன்  24-09-08 )

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் and tagged , , , . Bookmark the permalink.

4 Responses to நாஞ்சில்நாடன்:சினிமா,சினிமா.(தீதும் நன்றும்)

 1. அரங்கசாமி சொல்கிறார்:

  டைப் செய்து ,படங்கள் எடுத்துக் கோர்த்து – உங்கள் உழைப்பை வணங்குகிறேன்

  • SiSulthan சொல்கிறார்:

   நான் டைப் செய்யவில்லங்க, நான் போட்டோக்களை தேர்ந்தெடுக்கவும் இல்லை, (இந்தபதிவில்) நான் செய்வதெல்லாம் அங்கிருந்து வெட்டி இங்கே ஒட்டுவதுதான்.

 2. படைப்பாளி சொல்கிறார்:

  அருமையானக் கட்டுரை

 3. bala சொல்கிறார்:

  நாஞ்சில் ஸார்,, உங்கள் தீதும் தீதும் நம்பிக்கை பொய்க்கவில்லை.. இப்போல்லாம் நம்ம ஊர் படங்கள் நல்லா வந்துட்டிருக்கு நெறய

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s