’’நகரத்து இரவு ” (தீதும் நன்றும் )

நகரத்து இரவு ”தீதும் நன்றும்’’  

நாஞ்சில்நாடன்  (ஆனந்த விகடன் 20-08-08)

 

 

கரத்து இரவு அபூர்வமான காட்சிகளை வழங்க வல்லது.

எந்த ஊரானாலும் அதிகாலைகள் அதி அற்புதமானவை.

எனினும், இரவுக்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு.

பகலில் சேர்த்த குப்பைகளைக் கூட்டி வாசலில் போட்டு திருஷ்டிச் சூடம் போல் எரிப்பவர்,

கடை பூட்டிய பின்பும் வீட்டுக்கு உடனே போக எந்த அவசரமும் இன்றி கடை நடையிலேயே பத்து நிமிடங்கள் உட்கார்ந்து பேசும் சிப்பந்திகள்,

 இடது கை மணிக்கட்டில் கோத்திருந்த காலித் தூக்குப் போணிகொண்ட பையில் இன்னும் விற்றுத் தீராமல் காத்திருக்கும் கூடைக்காரியிடம் பேரம் பேசி வாழைப் பழச் சீப்பு வாங்கித் திணிப்பவர்,

வலது கையில் தன்னுடன் பிறந்ததே போன்ற கிழடு பாய்ந்த சைக்கிளின் ஹாண்டில் பாரைப் பிடித்தபடி சற்றுத் தூரம் கூட வருபவருடன் பேசிக்கொண்டு நடப்பவர், மேலும் சற்றுச் சுதந்திரத்துடன் திரியும் பெருச்சாளி என்று தமிழிலும் பெருக்கான் என்று மலையாளத்திலும், அகவான் என்று நடு நாட்டிலும், அவயான் என்று நாஞ்சில் நாட்டிலும் விளிக்கப்படும் பேரெலிகள்.

கடைத்தெரு நெடுகிலும் சுடச்சுட ஆவி பொங்கும் இட்லி, பொடித் தோசை, மல்லித் தோசை, முட்டைத் தோசை என நால்வகைச் சட்னியுடனும் சாம்பாருடனும் பரிமாறும் தட்டுக்கடை எனும் கையேந்தி பவன் முன்பு பெஞ்ச்சும் ஸ்டூலும் போட்டு உட்கார்ந்து குழைத்துத் தின்னும் கூட்டம். இறுதியாகச் சொன்ன முட்டை ‘புல்ஸ் – ஐ’ வரக் கை காயக் காத்திருப்போர்.

எதுவும் தின்னாமல் காத்துக்கிடக்கும் இரு சக்கர நவீன வாகனங்கள்.

டாஸ்மாக் பார் வாசல்களில் அலம்பல்செய்து நிற்கும் இளைய பாரதத்தின் எதிர்காலம்.

கடை சாத்துமுன் வரப்போகும் கடைசி வாடிக்கையாளருக்கு பேயன் பழம், பாக்குப் பொட்டலம், சிகரெட், விற்கக் காத்திருக்கும் கடும் உழைப்பாளி அண்ணாச்சி.

சாலையின் மூலையில் வேகம் குறைத்து, கியர் மாற்றி, விரைந்து இரைந்து திரும்பும் கடைசி ஸ்டே பேருந்து.

வள்ளலார் கூறும் ‘வீடு தோறு இரந்து பசியறாது அயர்ந்த வெற்றர்.’

ஊருக்குப் போகும் கடைசிப் பேருந்தைத் தவறவிட்டு, அதிகாலை வரப்போகும் முதல் பேருந்துக்காக பேருந்து நிலைய நடை மேடையில் தூணோரம் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொசுக்களுடன் போர்முகம் காணும் விவசாயக் குடும்பம். கொசுக்களைக்கூட ஒழிக்க வகையற்று, வீறு நடை போடுகின்ற, ஒளிருகின்ற, அடுத்த நூற்றாண்டை நோக்கி நிற்கின்ற அரசு ஒளிவிளக்கு அறிவிப்புப் பலகைகள்.

இனிமேல் வரப்போகும் அன்றைய அன்ன தாதாவும் அவசர ஆடவனுமான ராத்துணை தேடி, தலை நிறையப் பூவும் அகலமான வட்டச் செந்தூரமும்,வாயில் தாம்பூலக் கொலுவும், பாலியெஸ்டர் சேலையும்,தோள் தொங்குப் பையும் அதனுள் கிடக்கும் துவாலை, மணி பர்ஸ், ஆணுறை சகிதம் காத்திருக்கும் பேரிளம் பெண்களான வரைவின் மகளிர். பட்டினத்தடிகளின் பாடல் வரிகளில், ‘எத்தனை பேர் நட்ட குழி, எத்தனை பேர் தொட்ட முலை, எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்?’

திறந்திருக்கும் கடையெல்லாம் நின்று கூவும் சுக்குப் பால், பருத்திப் பால், பாதாம் பால் வியாபாரி.

மக்கள் நடமாட்டம் இருக்கும் சினிமா தியேட்டர் வாசல், பேருந்து நிலையம், காவல் நிலைய வாசல் எனப் பூ விற்கும் பெண்டிர்.

முன்னிரவின் தேநீர் இடைவேளை அல்லது இரவு உணவு இடைவேளையில் கடைக்கு வரும் கிரீசும் ஆயிலும் ஊறிய உடைகளும் நகக் கண்களும்கொண்ட பணிமனைத் தொழிலாளிகள்.

அவசர ஆர்டர்களுக் காகக் கண் விழித்துத் துன்னல் தொழில் புரியும் தையற் கடைகள்,

பல சரக்குக் கடை முன் சிதறிக்கிடக்கும் அரிசி, பருப்பு எனப் புடைத்துச்சலித் துப் பிரித்தெடுக்கும் வறுமைப்பட்ட கிழவிகள்;

நகைப் பட்டறைகளின்சாக் கடை மண்ணைத் தூர் வாங்கி இருப்புச் சட்டியில் அரித்தெடுப்பவர்.

தமது முதல் சுற்று நடையைத் துவங்கிவிட்ட சாலையில் மூங்கில் கழி தட்டும், விசில் ஊதும் தன்ராம் சிங், மான்சிங், பீம்சிங் கூர்க்காக்கள்.

கடைசியாக ஒரு முறை வாசலில் எட்டிப்பார்த்துவிட்டு, கேட்டைப் பூட்டி, வெளி விளக்கை அணைத்துப் படுக்கப்போகும் வீட்டு உடமைக்காரர். ஒரு கண் உறங்கி, வாசலுக்கு வந்து, தெருவில் நிற்கும் வேப்ப மூட்டில் ஒன்றுக்கிருந்து, மறுகண் துஞ்சப் போகும் வயோதிகர்.

பகல் பூராவும் சேர்ந்த make shift வாஷ் பேசின் கழிவு நீர் சேமிப்பை ஜெர்ரி கேனில் சுமந்துவந்து கடை முன்னாலேயே நடு ரோட்டில் கொட்டிவிட்டுப் போகும் மேசை துடைக்கும் பையன்.

அது போலவே வாய் வெட்டிய பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்த, எச்சில் இலைக் குப்பையை தெருவின் விலாப் பக்கம் இருக்கும் குப்பைத் தொட்டியில் சரிக்கும், அது வரை குடிக்கத் தண்ணீர்வைத்த பையன்.

அதற்காகவே காத்துக்கிடந்து உயிர்த் துடிப்புடன் வாலாட்டி வரும் தெரு நாய்கள்.

தன் பங்குக்கு ஏதும் மிஞ்சுமா என எதிர்பார்த்து எழுந்துவரும் கடைத் திண்ணையில் குந்தி இருந்த, மயிர் வளர்த்த, கந்தல் உடுத்திய, கை கால்கள் தொய்ந்திருந்த பித்தன் அல்லது சித்தன்.

கடையடைத்தோ, தொழில் முடிந்தோ வந்த மகன் அல்லது மணவாளன் சாப்பிட்ட பின் மிச்சத்தை வழித்து வாயில் போட்டு, பத்துப் பாத்திரம் விளக்கி, பகற் குப்பையை வாசலில் எட்டிப்பார்த்து நடு ரோட்டில் வீசிவிட்டுப்போகும் இல்லக் கிழத்தி.

ஒற்றையாக, நிர் விசாரத்துடன் தனி வழி நடப் போர், வாகனம் ஓட்டிப் போவோர்.

யுகத்துக்கு ஒரு முறை புரண்டு படுப்பவன் அனந்த சயன ஆதி நாராயணன் எனில், உறக்கம் வராமல் இருமிக்கொண்டும் செருமிக்கொண்டும் ஏப்பம் விட்டுக்கொண்டும் அடிக்கடி புரண்டு படுப்பவன் யாவன்?
அன்று புணர வாய்க்கப் பெற்றவர், செலவாதிக்குப் போய், தண்ணீர் குடித்து, குழந்தைகளுக்குப் போர்த்தி, விளக்கு அணைப்பர்.

பன்னிரண்டாவது வகுப்பு என்பது ஆறலைக் கள்வர் அலையும் பெரும்பாலை. தேர்வுக்குப் படித்து, கண்ணயர, மிச்சத்தை நாளைக்கு எனத் தேறும் மாணாக்கர்.

இப்படியே எழுதிக்கொண்டே போகலாம் இருநூறு பக்கங்கள். பண்டு இவ்வாறே வீராணத்திலிருந்து சென்னைக்கு எவ்வாறு தண்ணீர் கொணர்ந்தோம் என்பதை ஒன்றரை மணி நேரம் சொற்பொழிவாற்றினார்கள் கண்மணிகளும் ரத்தத்தின் ரத்தங்களும்.

வேலையாக, சமீபத்தில் மதுரைக்குப் போயிருந்தபோது, இரவு பத்தரை மணிக்கு, மதுரை மிஷன் ஆஸ்பத்திரி எதிரே இருக்கும் பர்மா இடியாப்பக் கடை முன்பு இரவுச் சிற்றுண்டிக்கு நின்றிருந்தேன் நண்பருடன். இடியாப்பம், தமிழனின் தொன்மையான உணவு. மலையாளத்தில் இதனை நூல்புட்டு என்பார். விரிவாக இதுபற்றி வேறோர் இடத்தில் எழுதியுள்ளேன். பெரும்பாணாற்றுப் படை எனும் சங்க இலக்கிய நூலில் குருக்கத்திப் பூ எனும் மாதவிப் பூவுக்கு இடி யாப்பத்தை உவமை சொல்கிறார் உருத்திரங்கண் ணனார் எனும் புலவர்.

நாலடி விட்டமிருந்த பெரிய தட்டில், தோவாளை பூச்சந்தையின் மல்லிகை மலர்ப் போர் போல குவிந்து கிடந்தன இடியாப்பம். பெரிய இட்லிக் கொப்பரையில் அடுத்த ஈடு இடியாப்பம் ஆவி வந்துகொண்டு இருந் தது. ஆவியுடன் நல்ல அரிசி மாவின் வெந்த வாசமும். ஒருவர் அடுத்த தட்டில் இடியாப்பம் பிழிந்துகொண்டு இருந்தார். பெரும்பாலும் பார்சல் வியாபாரம். தேங் காய் பால் அல்லது காரமான தக்காளிச் சட்னி, தோய்த்துக்கொள்ள அல்லது தொட்டுக்கொள்ள.

அந்த நேரத்திலும் பார்சல் கட்டி வாங்கிப் போக மக்கள் கூட்டமாகக்கிடந்தனர். உண்பாருக்கென பெஞ்சு, முக்காலி ஏதும் இல்லை. எனினும் தட்டில் வாங்கி, இடது கையில் ஏந்தி, சாத்தி இருந்த கடை நடையில் அமர்ந்து ஓரிருவர் இடியாப்பம் உண்டுகொண்டு இருந்தனர்.

இட்லி போலவே இடியாப்பமும் அதிக ஆடம்பரங்கள் அற்ற; கொழுப்பில்லாத, சிரமமின்றி சீரணமாகும் எளிய உணவு. சூடாகத் தின்னத் தோதான பலகாரம். தொட்டுக்கொள்ள அசைவருக்கு ஆட்டுக்கால் பாயா. உண்மையில் ‘பாய்’ எனில் இந்தியில் கால் என்றே பொருள். பாயா எனில் பன்மை. கட்டிலை சார் பாய் (நான்கு கால்) என்றும் முக்காலியை தீப்பாய் (மூன்று கால்) என்றும் சொல்வார்கள். மேலும் இடியாப்பத்துக்கு கோழி குருமா அல்லது வெஜிடபிள் குருமா. வெஜி டபிள் என்பது கத்தரிக்காய், வாழைக்காய், முருங் கைக்காய், புடலங்காய் என்பன அல்ல. காரட், தக்காளி, பீன்ஸ், தழைக்கோசு அல்லது பூக்கோசு மற்றும் வலிய வெங்காயம், ஊறவைத்து வேகவைத்த பட்டாணி. மேலும், இடியாப்பத்துக்குத் தோது, தேங்காய் சட்னி. அல்லது காய் ஏதும் போடாத வெந்தயம் வறுத்து, மிளகாய் வத்தல் கிள்ளிப் போட்டுத் தாளித்த மோர்க் குழம்பு. ஆனால், இடியாப்பம் அரசன் எனில் அரசி தேங்காய்ப் பால். நச்சினார்க்கினியர் ‘பாலில் ஊறவைத்த இடியாப்பம்’ என்று அதனால்தான் உரை எழுதினார்.

நானும் நண்பரும் சற்று உல்லாசமான மனநிலையில் இருந்தோம். காற்றோ கோடை காலக் கொடுமையுடன் வீசியது. தூரத்தில் எங்கோ ஏதோவோர் அம்மனுக்காக ஒற்றை முரசு உக்கிரமாக ஒலித்தது. மனத்தில் பகல் பூரா ஏறியிருந்த கடுப்பான டிகாக்ஷன் கரைந்து கொண்டிருந்தது.

ஒரு நாடோடி விற்பனையாளன் அமர்ந்தும், நின்றும், நடந்தும், ஓடிக்கொண்டும் உண்பவன்தான். நண்பரின் கார் வழக்கமாக பார்க் செய்யும் இடம் அது. இடியாப்பக் கடை உரிமைப் பெண்மணி முகமனாகப் புன்முறுவல் பூத்தாள்.

“தேங்காப்பாலுதான?” என்றாள்.

“இல்ல, சாருக்கு மட்டும் சட்னி” என்றார் நண்பர்.

தோய்த்தும் தொட்டும் தின்றுகொண்டு இருந்தோம். உண்மையில் மனப்பூர்வமான தயாரிப்பு. சாப்பிட்டுக் கை கழுவும்போது அடுத்துக் கேட்டது சிறு குரல் ஒன்று.

“ரவா லாடு வாங்கீட்டுப் போங்கண்ணே!”

திரும்பிப் பார்த்தோம். பத்து அல்லது பன்னிரண்டு வயதிருக்கும். களையுடன் குருத்த முகம். புதுமைப் பித்தன் சொற்களில், அப்படியே கொண்டுபோய் அரியணையில் அமர்த்தலாம். ஆனால், அவன் எந்த தேசத்து முதலமைச்சரின் மகனோ, மரு மகனோ, பேரனோ அல்ல!

இடது கையில் ஐந்து லிட்டர்கொள்ளும் அலுமினிய டப்பா ஒன்றைத் தாங்கி இருந்தான்.

“தரட்டுமாணே!”

ஆறாவதோ ஏழாவதோ படிப்பவனாக இருக்கும். அடுத்த நாள், வார நாள், பள்ளியும் வகுப்பும் இருக்கும். இரவு பத்தரை மணிக்கு ரவா லாடு விற்றுக்கொண்டு இருந்தான். முற்படுத்தப்பட்டவனா, பிற்படுத்தப்பட்டவனா? டப்பா காலி ஆகாமல் வீட்டுக்குப் போக இயலுமா? தாய், தந்தை எவர், என்ன தொழில்? உடன்பிறப்புக்கள் யாவர்? வீடு அண்மையா, சேண்மையா? இரவு உணவுகொண்டானா? நாளுக்கு எத்தனை விற்பான்? என்ன கிடைக்கும்? கேள்விகள் கிளைத்து வந்தன. தமிழ் சினிமா வசனம் எழுதினால் – மூன்று முறை, தெரியாது – தெரியாது – தெரியாது.

“நாலு ரவா லாடு வாங்குங்க, சண்முகம்.”
“சார், உங்களுக்கு சுகருல்லா?”

“பரவால்ல, வாங்குங்க.”

மதுரையின், சென்ற தலைமுறையின் தீவிர எழுத்தா ளர் ஜி.நாகராஜனின் நாவல் தலைப்பு ஒன்று நினைவில் தடம் காட்டியது.

‘நாளை மற்றுமொரு நாளே!’

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் and tagged , , , . Bookmark the permalink.

10 Responses to ’’நகரத்து இரவு ” (தீதும் நன்றும் )

 1. எஸ். கே சொல்கிறார்:

  நகரத்து இரவு! அருமை! அருமை!

 2. bogan சொல்கிறார்:

  Life is frothing around us.All we need is a discerning eye.Reminds me of viswatharsanam krishna gave to Arjuna at the end of Gita.A glimpse of existence.Kudos to the master.

 3. Sriharan சொல்கிறார்:

  I read my heart.

 4. ganesh சொல்கிறார்:

  நன்றாக இருந்தது ஐயா. ஹிந்தியில் “பாவ்” என்றால் கால். மூன்றிற்கு “தீன்” என்பார்கள். சரளமாக, அருமையான ஒரு நிதர்சனம்.

 5. போகன் சொல்கிறார்:

  டீப்பாய் என்ற சொல்லை ரொம்பநாள் அர்த்தம் அறியாதே பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.

 6. விவேக் கிருஷ்ணா சொல்கிறார்:

  U r so great … 🙂

 7. raja natarajan சொல்கிறார்:

  மெயில் பெட்டிக்குள்ளே வந்து ஒட்டிக்கொண்டதால் தவிர்க்க இயலவில்லை.ஆழ்ந்த கவனிப்பு.

  படங்கள் நமது பார்வையில் வாழ்க்கை முறை.மேற்கத்தியவனுக்கு பாக்டீரியா தொற்றல்.நமக்கு எதிர்ப்பு சக்தி அதிகமோ!

  சேட்டன்களுக்கு புரோட்டா தட்ட மட்டுமே வருகிறது.தோசை முறுகல் சுட்டுப்போட்டாலும் வறுவதில்லை.அவரவர் கற்ற வித்தை!

 8. jegan சொல்கிறார்:

  Naan parththa vishayangalai thangal ezhuththukkalil padikkumpothu inam puriyatha nimmathi paravugirathu!!!!

 9. மாரிமுத்து சொல்கிறார்:

  வர்ணனை, ஒரே மூச்சில் எழுதியிருந்தாலும் முழு வீச்சில்!

 10. Mahesh சொல்கிறார்:

  Amazing Sir.. Rasithu padithen..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s