மீன்கள் அன்றும் இன்றும்

மீன்கள் அன்றும் இன்றும்

‘சுசீந்திரத்தான் தேர் பாரான், கன்னியாகுமரியான் கடலாடான்,’ எனவொரு சொலவம் உண்டு. அதுபோல் ஆனது என்கதை. கோவையில் வாழ்ந்தும், செம்மொழித் தமிழ் மாநாடு கடந்த ஜூன் 23 முதல் 27 வரை, குண்டி தரித்து வீடடங்கிக் கிடந்தேன். அச்சம் காரணமாக இல்லை. பகட்டான கோலாகலங்கள், கொண்டாட்டங்களில் மனம் சென்று ஒப்புவதில்லை.

ஆளாளே கேட்டார்கள், ‘செம்மொழி மாநாட்டுக்குப் போகலியா?’ என. போயிருக்கலாம்தான், வேடிக்கை பார்த்தும் இருக்கலாம்தான். ‘கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?’ எனக் கேட்டது உள்மனம். ஆய்வரங்குகளில் அமர்ந்து செவிமடுக்க ஆசைதான். அரங்கில் பார்வையாளராக அமர்ந்தவர் கூட்டுத் தொகை மூன்றிலிருந்து நான்காக உயர்ந்திருக்கக் கூடும். ஆனால் அழையா விருந்தாளிகளுக்கு அனுமதியும் இல்லை. பலரும் வெந்த புண்ணில் துரும்பு விட்டு ஆட்டியது போலக் கேட்டார்கள், ‘ என்ன உங்களுக்கு அழைப்பு இல்லையா?’ , ‘என்ன உங்களுக்குக் கூட அழைப்பு இல்லையா?’ என. நாம் ஏதோ ஒரு கீழைத் தேய நாட்டுத் தொல் தமிழ் ஆராய்ச்சி அறிஞர் எனும் நினைப்பில். அந்தரங்கமான சில நண்பர்களிடம் சொன்னேன், “எப்பிடியா அழைப்பு அனுப்புவான்? நாம ஏதோ கதை கிதை எளுதிக்கிட்டு ஒரு மூலைலே கெடக்கோம்! இல்லாட்டாலும் கெட்டுச் சோத்துக்குள்ள எவனாம் எலியை வச்சுக் கட்டுவானா?” என்று.

சில முற்போக்கு எழுத்தாளர் தாம் புதியதாய்த் தமிழில் தேடிக் கண்டு பிடித்தவற்றை விளம்பி, பஞ்சப்படி, பயணப்படி, ஓமப்பொடி என்று வாங்கிக் கட்டிக் கொண்டு போனார்கள் என்றும், அந்தரங்கமாய் ஈழத்தமிழர் சாக்காட்டுக் கொடுமை தாங்கமாட்டாமல் வேறு சிலர் குவார்ட்டர் வாங்கிக் கவிழ்த்து விட்டு சடைவு மாறத் தூங்கினார்கள் என்றும், அதி நவீன எழுத்தாளர் சிலரும், பண்டு நிலப்பிரபுக்கள் தலையில் துண்டு போட்டு மறைத்துத் தேவையாக் குடிக்குப் போவது போல, புகுந்து காட்ட வேண்டியவர்களுக்கு முகம் காட்டி, சாரைப்பாம்பு போல சரசரப்பின்றி ஊர்ந்து போனார்கள் என்றும் சொல்லக் கேள்வி. எதுவானாலும் நமக்கு சுயஜாதி அபிமானம் அதிகம். காட்டிக் கொடுக்கலாமா?

நாட்கள் நான்கிலும் தீவிரமாய், கோலாகலமான கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் எனத் தமிழ் தழைத்தோங்கி, வளர்வதை ஆனந்த அனுபூதியுடன் பார்த்திருந்தேன், தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து. தேநீர், உணவு யாவும் இருக்குமிடம் வந்து சேர்ந்தன. அனுபூதி பெருகி, எதுக்களித்த நேர்கையில் உப்பும் எலுமிச்சம்பழத் துண்டும் வைத்திருந்தேன் என்பதோர் கூறியது கூறல்.

கவிஞர் பெருமக்கள் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டம். ஒரு முறை கேட்டாலே இப்பிறப்பில் மறக்கவியலா கவி ஆளுமை. செஞ்சொற் புலமை. கம்பனின் சொற்களை மாற்றிப் போட்டால், கோதாவரி போன்ற சான்றோர் கவி. வாணியம்பாடிக் கவி ஒருவன், ‘நீ ஆஸ்த்தான கவி, அரசருக்குத் தோஸ்த்தான கவி,’ என்று தீந்தமிழ் வளர்த்தா_ ன் போடுவதா, ர் போடுவதா? வானொலிக் கவிதாயினியோ, ‘அரசே, நீ தமிழுக்கு மடிக்கணினி, நான் அதன் மவுசான மவுஸ்,’ என்று வாயாறினார். நல்லாயனின் வழி நடத்தலால் மந்தையில் இருந்து தப்பாத ஒன்று, ‘சாத்திரங்கள் மீது உன் மூத்தோர் மூத்திரம் பெய்தனர்.’ என்றார். கருத்தரங்குக்கு வந்த ஆன்றவிந்து அடங்கிய தமிழ்ச் சான்றோரோ, திருவிளக்கு பூசைக்கு வந்தவராக, ‘வாழ்க நீ எம்மான்,’ பாடினார்கள். பட்டிமன்றம் பற்றிப் பேச நமக்குத் தகுதி மிகக் குறைவு.

நான்கு நாட்கள் தமிழ்க்குசு குடித்து எனக்கு வயிற்று உப்புசம் ஆனது. அது நீங்கிக் கிடைக்க, மாநாடு முடிந்து ஆரவாரம், ஆகுலம் அடங்கியபின், தொடர்ந்து தினமும் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன். அங்கு எனக்குச் சில அற்புதங்கள் கிடைத்தன.

அவற்றுள் ஒன்று ‘புறத்திரட்டு,’ சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு, 1938-இல் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுத்ததன் மறுபதிப்பு. இன்னொன்று தஞ்சைப் பல்கலைக்கழக வெளியீடான, ‘செம்மொழித் தமிழ்.’ தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் அடக்கம் 41 நூல்களின் தொகை, மூலம் மட்டும். நல்ல தாள், அழகிய அமைப்பு, அச்சு, கட்டு. மூன்றாவது ‘சங்க இலக்கிய சொற்றொகை’. முன்பு சொல்லடைவு என்றார்கள். தாமஸ் லெஹ்மான், தாம்ஸ் மால்ட்டென் என இருவர் தொகுத்தது. எடுத்துக்காட்டாக, இடும்பை (துன்பம்) எனும் சொல் சங்க இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளதா எனும் ஐயம் எழுந்தால், சொற்றொகை விடை பகரும். அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, குறுந்தொகை, திருமுருகாற்றுப்படை, நற்றிணை, புறநானூறு, பொருநர் ஆற்றுப்படை ஆகிய நூல்களில் இடும்பை எனும் சொல் வருகிறது என்றும், எந்தெந்தப் பாடல்களில் வருகிறது என்றும் தகவல் தருவது. ‘கள்ளர்’ எனும் சொல் பற்றிய ஐயம் வருமானால், அச்சொல் சங்க இலக்கியத்தில் கலித்தொகையில் மட்டுமே ஆளப்பட்டுள்ளது எனும் தகவல் தருவது. ஆனால் சொல்லடைவு அல்லது சொற்றொகை என்பது பொருள் தரும் அகராதி அல்ல.

சமகால இலக்கிய நூற்கள் பலவும் வாங்கினேன். நான் வாங்கிய இன்னுமோர் முக்கியமான நூல்,’மீன்கள் அன்றும், இன்றும்!’ இதுவரை நான் செய்தது மைக் டெஸ்டிங். இனிமேல் புத்தக அறிமுகம்.

பெண்களின் கண்களுக்கு மீனை உவமை சொன்னார்கள். கயல்விழி என்பார், அங்கயற்கண்ணி என்பார். அம்+கயல்+ கண்ணி= அங்கயற்கண்ணி. மீனாட்சி என்றாலும் மீன் போன்ற கண்களை உடையவள் என்பது பொருள். சேல் என்றாலும் மீன்தான். ‘சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில்,’ என்பார் அருணகிரியார். ‘ஓங்கு செந்நெல் ஊடு கயல் உகள,’ என்பாள் ஆண்டாள். ‘செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப.’ என்பார் இளங்கோ. கெண்டை என்பதோர் மீனினம். கெண்டைக் கண்கள் என்பார் கவிஞர்.

‘மீன்கள் அன்றும் இன்றும்,’ நூலை எழுதியது முனைவர் ச.பரிமளா. தமிழ்ப்பல்கலைக்கழகம் 1991-இல் வெளியிட்டது. சிலர் மணக்கோலத்தில் கூடக் கிழவன் போல் தோற்றம் தருவதுண்டு. அதுபோல, வாங்குபோதே பழம் புத்தகமாகத் தோன்றியது. விலை குறிப்பிட்டிருக்கவில்லை. 280 பக்கங்கள் கொண்ட டெமி அளவிலான நூலுக்கு, கழிவு போக, என்னிடம் ஐம்பத்தி நான்கு ரூபாய் வாங்கினார்கள். ஒரிஜினல் அட்டை தொலைந்து, தற்காலிக ஏற்பாடோ என வியக்கும் வண்ணம், புத்தக அட்டையை அடுத்துப் புத்தகங்களில் Fly leaf ஆகப் பயன்படுத்தப்படும் தாளில், ஒற்றை வண்ண எளிய அட்டை. தமிழின் பதிப்புத் தொழில் நுட்பம் உலகத் தரத்தை எட்டிவிட்ட காலத்தில், மிக அலட்சியமான புத்தகத் தயாரிப்பு. அதற்கென்ன செய்யவியலும்? காவேரி ஆறு கஞ்சியாக ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கும்?

ஆனால் இந்த நூல் முனைவர் ச.பரிமளா அவர்களின் அரிய உழைப்பு. எனக்கு அவரைத் தெரியாது. கேள்விப்பட்டதும் இல்லை. எம்.எஸ்.சி, பி.எச்.டி பட்டதாரியான இவர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தொல் அறிவியல் துறையில் பணி புரிந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடல் வாழ் உயிரின உயராய்வு மையத்தில், மீன் உயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

வெளிவந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த நூலைக் கண்ணுற நேர்வதில் எனக்கு வெட்கம் உண்டு.

ஏறத்தாழ 71 விழுக்காடு ஆழி சூழ் உலகில் 20000 மீனினங்கள் காணப்படும் தகவலும் ஏற்கனவே பி.எல்.சாமி எழுதிய ‘சங்க நூல்களில் மீன்கள்’ எனும் நூல் எழுதப்படடிருப்பதையும் நாம் அறிய முடிகிறது.

இந்த நூலில், நாம் உண்டு களித்திருக்கிற, கேள்விப்பட்டிருக்கிற, பல மீன்களின் கருப்பு-வெள்ளையில் தெளிந்த புகைப்படங்கள் உண்டு.

எனதாச்சரியம் இவற்றில் பலவற்றை சங்கத் தமிழன் அறிந்து வைத்திருந்தான் என்பதும், புலவன் அதை பாட்டில் பொறித்து வைத்திருந்தான் என்பதும். சங்கப்பாடல்களில் 17 வகையான மீன்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சிறியதோர் பட்டியல்தான். நற்றிணை- 1, குறுந்தொகை – 7, ஐங்குறுநூறு-8, பதிற்றுப்பத்து – 2, பரிபாடல்- 2, கலித்தொகை- 1, அகநானூறு- 10, புறநானூறு- 12, திருமுருகாற்றுப்படை- 1, பொருநர் ஆற்றுப்படை- 11, சிறுபாணாற்றுப்படை- 8, பெரும்பாணாற்றுப்படை- 3, மதுரைக்காஞ்சி-3, பட்டினப்பாலை-1, மலைபடுகடாம் – 2 இவற்றை எல்லாம் கூட்டிப் பார்த்தால் எப்படிப் பதினேழு எனக் கேட்கமாட்டீர்களென நம்புகிறேன்.

மதுரைக் காஞ்சியில் பேசப்படும் பனைமீன், கம்பராமாயணத்தில் கடல்தாவு படலத்தில் ”பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள” எனும் பாடல்வரி பேசும் பனைமீன், திமிங்கிலம் என்பது நூலாசிரியர் அறுதியிட்டுக் கூறுவது.

மிகவும் பிற்காலத்தில் பள்ளு இலக்கியங்கள் ஏறத்தாழ நூறு மீன்களைப் பற்றிப் பேசுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை ஆற்று மீன்கள். தமிழில் ஐம்பது வகைப்பட்ட பள்ளு நூல்கள் உண்டு என்றும் அவற்றில் 27 நூல்களே அச்சேறியுள்ளன என்றும் கூறும் ஆசிரியர், பள்ளு இலக்கியம் கையாண்ட மீன்கள் பற்றித் தரும் தகவல் சுவாரசியமானது.

பள்ளுப்பாடல் குறிப்பிடப்பட்டிருக்கும்மீன்களின் எண்ணிக்கை
தென்காசைப் பள்ளு 26
பொய்கைப் பள்ளு 10
பள்ளுப் பிரபந்தம் 11
குருகூர்ப் பள்ளு 22
கண்ணுடையம்மன் பள்ளு 8
செண்பகராமன் பள்ளு 1
திருவாரூர்ப் பள்ளு 20
முக்கூடற் பள்ளு 38
வையாபுரிப் பள்ளு 34
திருமலை முருகன் பள்ளு 34
சிவசயிலப் பள்ளு 38
தண்டிகைக் கனகராயன் பள்ளு 37
கதிரை மலைப் பள்ளு 36
பறாளை விநாயகர் பள்ளு 68
கட்டி மகிபன் பள்ளு 28
   
   
   

பாடல் பெற்ற நதிகள் பஞ்ச நதி, வைகை நதி, பொருனை நதி, சித்திரா நதி, சண்முக நதி, அனும் நதி ஆகியவை. குறிஞ்சிப் பாட்டில் கபிலர் நூற்றுப் பக்கமுள்ள மாக்களைக் குறிப்பிடுவதைப் போல, பள்ளு இலக்கியங்களில் கூட்டம் கூட்டமாக மீன் பெயர் தருகின்றன. பள்ளு இலக்கியங்களில் ஏன் மீன்கள் முக்கியப்படுத்தப்பட்டன என்பதையும் ஆராய வேண்டும்.

‘சுறவு கோட்டன்ன முள் இலைத் தாழை,’

‘கருங்கண் வரால்,’

‘கடுஞ்சுறா எறிந்த கொடுந் திமில் பரதவர்,’

‘இருஞ் சேற்று அயிரை,’

‘ஒழுகு நீர் ஆரல்,’

‘கணைக் கோட்டு வாளை,’

என்றெல்லாம் சங்கப் பாடல்கள் மீன்களை அடையாளப் படுத்துகின்றன.

நெத்திலி எனும் பெயரில் சிற்றினக் குறுமீன் ஒன்றுண்டு. கரு நெத்திலி, வெள்ளை நெத்திலி, கோவா நெத்திலி என்றெல்லாம் வகைப்படுத்துவார்கள். பச்சையாகச் சமைக்க அற்புதமான மீன் இது. நெத்திலிக் கருவாடு அதியற்புதம். எடைக்கு எடை பொன் கொடுக்கலாம். இந்த மீனின் பெயர் உண்மையில் ‘நெய்த்தோலி’ என்றறிய வியப்பேற்பட்டது. மலையாளம் இன்றும் ‘நெத்தோலி’ என்றே வழங்கும்.

சித்த வைத்தியத்தில் மீனின் பயன்பாடு அதிகம் பேசப்படுகிறது என்கிறார் நூலாசிரியர். சுறா, திருக்கை, உல்லம், கரு வௌவால், வெள்ளை வௌவால், கிழங்கான், கடற்கெளிறு, கோலா, சுரும்பு, நெய்த்தோலி, மடவை, மயறி, வாளை, விலாங்கு, அயிலை, உழுவை, குறவை, கெண்டை, ஆசல், வரால் எனப் பெரியதோர் பட்டியல், இன்ன நோய்க்கு இன்ன மீன் மருந்து என. இவற்றின் மருத்துவப் பயனைக் கண்டடைந்த தமிழன் மருத்துவ அறிவு பெருமிதம் கொள்ள வைக்கிறது.

நூலாசிரியர் தரும் பல தகவல்கள் பயனுள்ளவை. புலால் உணவுகளில் ஆட்டிறைச்சி கொழுப்பு 48 சதமானம், பன்றி இறைச்சியில் 36 சதமானம், ஆனால் மீனில் 11 முதல் 26 சதமானம் மட்டுமே. மீன் எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூட்டு வாதத்தைக் குறைக்கின்றன. அயிலை மீன் எண்ணெய் தோல் நோய்க்குச் சிறந்த குணமளிக்கிறது. சுறா மீனின் எண்ணெய் காச நோய்க்கு மருந்து எனபன ஒரு சிறிய சாம்பிள் சர்வே மட்டுமே.

சுறா மீன்கள் பற்றிய சிறந்ததோர் பகுதி உண்டு இந்நூலில். அவற்றின் தன்மைகள், வாழ்முறை, வகைகள் பற்றிய அருமையான தகவல்கள். சாம்பசிவம் பிள்ளையின் தமிழ்-ஆங்கில அகராதி 22 வகையான சுறாக்களின் பட்டியல் தருகிறது. எனும் தகவல் ஒன்று கிடைக்கிறது. உயிரியல் பற்றிய தகவல் தொழில் நுட்ப காலத்துக்கு முந்தியே தொகுக்கப்பட்டவை இவை. அறிய விருப்பமுடையவர்களுக்காக, பட்டியல் இதோ;

குருங்கண் சுறா
செஞ்சுறா
கொம்பன்சுறா
வெள்ளைச் சுறா
மணிச் சுறா
மட்டிச்சுறா
கோலாச்சுறா
காலன் சுறா
ஆரணிச்சுறா
மேயுஞ்சுறா
புலிச்சுறா

படுவாய்ச்சுறா
வடுவன் சுறா
புள்ளிச் சுறா
பால் சுறா
ஓங்கிற்சுறா
வெண்ணெய்ச் சுறா
வெள்ளைக்கோலாச் சுறா
நெளிஞ்சுறா
பேய்ச்சுறா
புடுக்கன் சுறா
பறங்கிச்சுறா

இவற்றில் புடுக்கன் சுறாவின் காரணப் பெயர் குறித்து நாஞ்சில் நாட்டுக்காரர்கள் சிரித்துக் கொள்க.

திருக்கை மீன்களைப் பற்றிப் பன்னிரு பள்ளு இலக்கியங்கள் பாடுகின்றன. முத்தமிழ் அறிஞர்கள் பற்றிக் கூட இத்தனைப் பள்ளுகள் பாடவில்லை. சாம்பசிவம் பிள்ளை 35 வகையான திருக்கைகளைப் பட்டியலிடுவதை இந்நூல் மேற்கோள் காட்டும். அந்தப் பட்டியலையும், எழுத மனம் பரபரத்தாலும் கை வேதனிக்கிறது. எங்களூரில் திருக்கையைத் திரைச்சி என்பார்கள். திரைச்சி மீன் அவியல் நாவூற வைக்கும். மேலதிகம் தகவல் வேறொரு நூலில் தருவேன்.

அரிஸ்டாடில் காலம் முதல் இன்று வரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் விலாங்குமீன் பற்றிய தகவல்கள் வியப்பளிப்பவை. இது ஒரு வழுவழுப்பான தோலை உடைய முகம் பாம்பு போன்றும் வால் மீன் போன்றும் இயற்கை அமைப்புடைய மீனினம். இதனாலேயே அதற்கு அவப்பெயர் உண்டு. பச்சோந்தி, அரணை, நரி என ஏராளமான உயிரினங்கள் மனிதர் மதிப்பீட்டின் படி பழி சுமந்து அலைபவை.

397 வகையிலான விலாங்கு இனங்களைக் கொண்ட இந்த இனம் சங்க இலக்கியத்தில் ‘மலங்கு’ என வழங்கப்பட்டது. ஆதாரம் புற நானூறு, பாடல் எண் 61.

விலாங்கு மீனின் மேலுள்ள அபவாதத்தை நாலடியார் தெளிவுறவே மொழிகிறது.

‘பாம்பிற்கொரு தலைக்காட்டி, ஒரு தலை

தேம்படு தெண்கயத்து மீன் காட்டும் ஆங்கு

மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வார்

விலங்கு அன்ன வெள்ளறிவினார்’

என்பது பாடல்.

‘ஐரோப்பிய நன்னீர் ஆறுகளில் வளரும் விலாங்கு மீன்கள் முழுவளர்ச்சி அடைந்தவுடன், இலட்சக் கணக்கில் ஒன்று சேர்ந்து, பெர்மூடா அருகேயுள்ள வட அட்லாண்டிக் பகுதியில் உள்ள சர்கோஸா கடல் பகுதியினை நீந்தி அடைந்து, அங்கே முட்டைகளை இட்டவுடன் இறந்து போய்விடுகின்றன. முட்டைகள் அக்கடற்பகுதியிலேயே வளர்ந்து, குஞ்சுகளாகி, சிறு சிறு கூட்டமாக அட்லாண்டிக் கடற்பரப்பினை நீந்திக் கடந்து தம் தாயின் இருப்பிடமாகிய ஐரோப்பிய ஆற்றுப்பகுதியினை வந்தடைகின்றன! ஏறத்தாழ 3500 கிலோமீட்டர் தாண்டி. இன்றளவும் ஆய்வாளருக்கு வியப்பளிக்கும் செய்தி இது என்கிறார் நூலாசிரியர்.

‘முட்டம்’ எனும் சிறு நூலெழுதிய சிறில் அலெக்ஸ் கூறும் சில தகவல்களையும் இங்கு ரேகைப்படுத்துவேன். பச்சையாகச் சுட்டுத் தின்னும் சாளை, அயிலை பற்றியும் ‘மூரை’ எனும் மீனின் ஓட்டை உடைத்தால் இளந்திடப் பொருளாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் பகுதியைப் பச்சையாக உண்பது பற்றியும் எழுதப்பட்ட தகவல்களும் எனக்குப் புதியவை. இந்த மூரையின் ஓட்டின் மீது ஆணி போல் முட்கள் வளர்ந்து செறிந்திருக்கும். அவற்றை கடற்குச்சி என்றழைப்போம். சிறு பருவத்தில் சிலேட்டில் எழுதக் கடற்குச்சிகள் பயன்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில் தொடர்புடைய மற்றுமோர் நூலையும் நான் குறித்துச் செல்லாமல் இருக்கலாகாது. கேரளப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் என். ஸ்டீவன் சாம் எழுதிய ‘கன்னியாகுமரி மாவட்ட மீன்களின் வாழ்வியல் – ஓர் ஆய்வு’ எனும் நூலது.

சுமார் 68 கிலோமீட்டர் நீளமுடைய கன்னியாகுமரி மாவட்ட 44 மீனவர் கிராமங்களில் செய்த கள ஆய்வின் மூலம் சேகரித்த தகவல்கள் அடங்கியது. வியப்பூட்டும் செய்தி ஒன்றுண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கும் 920 மீன்களின் பெயர்களை அவர் பட்டியலிட்டிருக்கிறார். அவை இன்னும் மக்கள் நாவில் வழங்குகின்றன, அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆனால் எந்த அகராதியிலும் இதுவரை தொகுக்கப் பெறாமல் போனவை. இதெல்லாம் எம்மை யோசிக்க வைக்கின்றன.

நம்மில் பலர் மீன்களைத் தொட்டிகளில், காட்சி இடங்களில், புகைப்படங்களில், திரைப்படங்களில் கண்டிருப்போம். பலர் மீன் உணவை விரும்பி உண்ணவும் செய்கிறோம். ஆனால் மீன்கள் பற்றிய அற்புதமான ஆய்வு நூலொன்று தமிழில் வாசிக்கக் கிடைப்பது நமது நற்பேறு. எந்த மீன் என்ற பெயர் கூடத் தெரியாமல் பொத்தாம் பொதுவாக ‘Fish Fry’, தின்று திருவது தீப்பேறு

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to மீன்கள் அன்றும் இன்றும்

 1. Pingback: Tweets that mention மீன்கள் அன்றும் இன்றும் | நாஞ்சில்நாடன் -- Topsy.com

 2. M.Sigappi சொல்கிறார்:

  Excellent article. It is really amazing to read about the fish in tamil literature.
  I like your THEETHUM NANDRUM very much sir. Especially that old man who ate noodles with sambar.Great to read your web-site.
  In this week vikadan only i read about your site
  Thank you,
  With regards,
  M.Sigappi.

 3. எஸ். கே சொல்கிறார்:

  அருமையான தகவல்கள் நன்றி!

 4. செந்தில் ஆனந்த் சொல்கிறார்:

  தங்களது எழுத்துக்களைத் தேடித் படித்ததில்லை நான்.ஆனால், விகடன் மூலமாக, உங்கள் படைப்புகளை வாசிக்கப் பெற்றேன். தாங்கள் எடுத்தாலும் கருத்துகளையும், பயன் படுத்தும் வார்த்தைகளையும் கண்டு, தமிழின் சுவையும், ஆழமும், அகலமும் அறிகிறேன். மென்மேலும் பல நூல்களைத் தேடி வாசிக்க உந்தப் படுகிறேன். தங்களது எழுத்தின் அறிமுகம் கிடைத்ததைப் பாக்கியமாகக் கொள்கிறேன். உங்களது நேரடி அறிமுகம் பெற விரும்புகிறேன். ஆனால், தாங்கள் அள்ளிப் பருகிய தமிழ்க் கடலின், ஒரு துளியின் பிரம்மாண்டத்தையாவது உணர்ந்த பின், அது வாய்க்கப் பெற்றால்,பொருத்தமாகும்.நன்றி!

 5. kannan சொல்கிறார்:

  hats off nanjil sir

 6. Milton Simon Raj சொல்கிறார்:

  பாராட்டுக்கள்! மீன்களைப் பற்றிய பல தகவல்களை அறிந்தேன்.
  Indian sail fish – மயில்மீன் என ஒரு பதிவில் பார்த்தேன்.
  மீன்களின் பெயர்களை அறிந்தவர்கள் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
  நாஞ்சிலாருக்கு மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s