செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு  – நூல் அறிமுகம்
http://solvanam.com/?p=10221

பேராசிரியர், முதுமுனைவர், இலக்கியத் திறனாய்வாளர், எமது ஒரு சாலை மாணாக்கர், வேதசகாயகுமார் முதலில் அந்தப் பெயரை என்னிடம் உச்சரித்தார், மூன்று ஆண்டுகள் முன்பு.

”நாஞ்சில், ஆவுடையக்கா பேரு கேட்டிருக்கேளா?”

எனக்கு அதுவரை ஆவுடை என்ற பெயரில் மூன்று அறிமுகங்களே இருந்தன. ஒன்று சிவலிங்கத்தின் கீழிருக்கும் ஆவுடை. அடுத்தது, சங்கர நயினார் கோயில் ஆவுடையம்மை எனும் கோமதி அம்மன். மூன்றாவது நாங்கள் பாட்டம் பயிரிட்ட வயல் ஒன்று விலைக்கு வந்தபோது, வாசிக்க நேர்ந்த பத்திரப் பகர்ப்பில் அறிமுகமான உடைமையாளரான ஆவுடையம்மாள்.

“நாஞ்சில், செங்கோட்டை ஆவுடையக்காளைக் கேட்டதில்லையா? பாரதியாருக்கு முன்னோடி. எனக்கும் இப்பத்தான் தெரிய வந்தது பாத்துகிடுங்கோ.”

எனது நண்பர் என்றாலும் வேதசகாயகுமார் கூர்மையான வாசிப்பு உடையவர், தேடிக் கண்டடைபவர், பேராசிரியர் ஜேசுதாசன் மாணவர், புதுமைப்பித்தன் ஆய்வாளர், ஒரு வகையில் Die hard species.

சிறு பிரசுரங்கள் கிடைத்தன என்றும் மணிப்பிரவாளத் தமிழ் நடையில் அமைந்துள்ள மொழி என்றும் அத்வைதி என்றும், இளம் விதவை என்றும் துண்டு துண்டான தகவல்கள் சொன்னார். போனமாதம் திடீரெனக் கேட்டார், “நாஞ்சில், பிராமின்ஸ் ஆவுடையம்மாள்னு பேரு வைப்பாளா?”

“குமார், எனக்கு நல்லாத் தெரியும். பிள்ளைமாரும் பிராம்மணாளும் நம்மூர்லே பேரு வைக்கதுண்டும். எதுக்குக் கேட்டையோ?”

“இல்லை, ஆவுடையக்காள் நான்-பிராமினா இருக்கும்னு நெனச்சேன்!”

சமீபகாலமாக ஈதோர் குடைச்சலாக ஆகிக்கொண்டிருந்தது போலும் அவருக்கு.

இந்து ஆங்கில நாளேட்டில் சர்க்குலேஷன் பிரிவில் மேலாளராக இருந்து, விருப்ப ஓய்வு பெற்று, ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, இருபத்தைந்து முறை இமயமலைச் சாரலுக்குப் போய் வந்து, தற்போது ‘திரிசக்தி’ குழுமத்தில் பதிப்பாசிரியராக இருக்கும் இசைக்கவி ரமணன் எனது நண்பர். ஏதோ தோன்ற, தற்செயலாக அவரிடம் கேட்டேன்.

“செங்கோட்டை ஆவுடையக்காள் கேள்விப்பட்டிருக்கேளா?”

குறுஞ்சிரிப்புடன் சொன்னார், “கேட்டிருக்கேன்.”

இரண்டு நாளில் கூரியரில் எனக்கொரு புத்தகம் வந்தது, ரமணனிடம் இருந்து. பிரித்துப் பார்த்தேன்.

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு. 325 பக்கங்கள், டெமி அளவு, 2002 ஆம் ஆண்டுப் பதிப்பு, விலை ரூ 100.00, வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிகேதன், ஸ்ரீ ஞானானந்த தபோவனம். தபோவனம் அஞ்சல் – 605 756. விழுப்புரம் மாவட்டம்.

நூலை, ரமணன் 10-01-2004 இல் வாங்கி வாசித்தும் இருக்கிறார். எனக்கு சற்று வெட்கமாகவும் இருந்தது.

சமர்ப்பணம் பகுதியில் ஸ்ரீ ஞானானந்த நிகேதனம், நித்தியானந்த கிரி சுவாமிகள், ஆவுடையக்காளை தமிழ் நாட்டின் பெருமை மிக்க பெண்டிர் ஞானிகளில் ஒருவர் என்றும், சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்து செங்கோட்டை தாலுகாவில் அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும் சொல்கிறார்.

மிகவும் இளவயதிலேயே, பூப்புக்கு முன்பே விதவையானவர். திருவிசை நல்லூர், ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் எனும் புகழ்பெற்ற மகானின் அனுக்கிரகமும் மந்திர தீட்சையும், வேதாந்த ஞான உபதேசமும் பெற்றவர், ஆத்ம அனுபூதியில் லயித்து, உன்மத்தையாக இருந்தவர், பண்டிதர்-பாமரர் என எல்லோராலும் கொண்டாடப் பெற்றுப் பிரபலமடைந்தார், என்பன தகவல்கள்.

ரிஷிகேசம் ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், ‘மகாத்மாக்கள் சரித்திரம்,’என்ற நூலில், “பாட்டு மேல்பாட்டாக அவர் அருளிய அருட்பாக்களில் உபநிஷத்துகளின் ஆன்மீக உண்மையே தொடர்ந்து இழையோடுகின்றது,” என்கிறார்.

சிறுசிறு புத்தகங்களாக அவ்வப்போது பதிப்பித்து வெளியிடப்பட்ட ஆவுடையக்காள் பாடல்கள் பலவற்றையும் தொகுத்து வெளியிட்டவர் ஆய்குடி திரு.வெங்கட ராம சாஸ்திரிகள்.

2010 ஜூலை 7ஆம் தேதி, சீனாவில் ஷாங்காய் நகரில் பணிபுரியும் எனது நண்பர் இசக்கிமுத்துவைப் பார்க்க தென்காசி போயிருந்தேன். நண்பர் ‘கோனார்’ என்று அழைக்கப்படும் யாதவ குலத்தில், ‘நம்பியார்’ என்னும் உட்பிரிவைச் சேர்ந்தவர். சைவ உணவுப்பழக்கம், வைணவ மதம். தென்காசியைச் சுற்றி ஏழெட்டு ஊர்களில் ‘நம்பியார்’ குலத்தவர் வாழ்கிறார்கள். எனது நண்பர் ஐம்பது வயதுப் பிராயத்தவர் எனினும் வைணவ திவ்ய தேசங்களில் சிலவற்றைத் தவிர யாவற்றையும் தரிசித்தவர். நாலாயிரத்தைப் பார்க்காமல் ஒப்பிப்பவர்.

குலத்தொழில் ஆடுமேய்த்தல், கறவைகள் வளர்த்தல், விவசாயம். என்னை அவரது கிராமத்துக்கு கூட்டிப் போனார். தென்காசியில் இருந்து சாம்பவர் வடகரை, சுரண்டை போகும் சாலையில், ஆய்குடி தாண்டி ‘கம்பிளி’ என்பதவர் ஊர்.

ஊர்ப்பெயர் விநோதமாக இருந்ததால், பெயர்க்காரணம் கேட்டேன். சமீபகாலம் வரைக்கும் அவ்வூரில் கம்பளி நெசவு நடந்ததாகவும், அதனால் ஊருக்கு கம்பிளி என்று பெயர் வந்ததாகவும் சொன்னார்.

தென்காசியிலிருந்து போகும்போது இடதுகைப்பக்கம், ஆய்குடியையும் கம்பிளியையும் இணைக்கும் பேரேரி ஒன்று கிடந்தது. அதன் மறுகரையில் நின்ற ஆலமரத்தை நடந்து சென்று பார்த்தோம். நூதனமாகவும், வசீகரமாகவும் விழுதுகள் இறக்கிப் படர்ந்து நின்ற மரத்தின் வயது 600 ஆண்டுகள் என்றார் நண்பர்.

அந்த ஆய்குடியின் வெங்கட ராம சாஸ்திரிகள்தான் ஆவுடையக்காள் பாடல்களை முதலில் தொகுத்து வெளியிட்டவர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. காலம் நம்மை எவ்விதம் கொண்டு செலுத்துகிறது என யோசித்ததில் இந்தப் பதிவு.

பகவான் ரமண மகரிஷியின் முன்னிலையில் ஆவுடையக்காள் எழுதிய பாடல்கள் சிலவற்றைப் பாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.

‘பிரம்ம மேகம்’ எனும் ஆவுடையக்காளின் சிறு பாட்டுப் புத்தகம், 1910-ம் ஆண்டுப் பதிப்பு, ஆவுடையக்காள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தார் என்ற குறிப்புத் தருவதால், ஆவுடையக்காள் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம். ஆனால், நாம் விவாதிக்கும் மேற்சொன்ன நூலின் சமர்ப்பணப் பகுதியில், நித்யானந்தகிரி சுவாமிகள் ஆவுடையக்காள் 250 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர் என்கிறார். ஆய்குடி வெங்கடராம சாஸ்திரிகள் கூற்றுப்படி ஆவுடையக்காள் இற்றைக்கு 460 ஆண்டுகளுக்கு முந்தியவராக இருக்க வேண்டும். ஆவுடையக்காளின் காலம் கணிப்பதற்கான கருவிகள் என் கைவசம் இல்லாத காரணத்தால், அதை ஆய்வாளர்கள் பணிக்கு விட்டுவிடலாம்.

ஔவையார், காரைக்காலம்மையார் வரிசையில் வைத்து எண்ணத்தக்க ஆவுடையக்காள் பாடல்களை திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட அந்தணப் பெண்டுகள் பூஜாகாலத்தில் பாராயணமாகவும், கல்யாண காலங்களிலும் பாடினார்கள் என்றும் தெரிகிறது.

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஆன்மீக எழுத்தாளர், காசியில் சிருங்கேரி மடத்தில் பல்லாண்டுகள் வாழ்ந்தவர் திருமதி.கோமதி ராஜாங்கம். ஆவுடையக்காளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து பாடல்களையும் தகவல்களையும் சேகரித்துள்ளார்.

“அக்காலத்து இளம் விதவைகளுக்கு அக்காளின் பாடல்களே தாரகம். மத்தியான உணவுக்குப் பின் பத்துப்பெண்கள் கூடிக் கொண்டு, அக்காளின் பாட்டைச் சொல்லிக் கொண்டு, தங்களுக்கே ஆறுதல் அடைந்து கொள்வது வழக்கம்”, என்கிறார்.

இந்த நூல் அறிமுகக் கட்டுரையை நான் எழுதுவதற்கு மேற்சொன்ன தகவல்கள் மட்டும் காரணம் அல்ல. திருமதி.கோமதி ராஜாங்கம், மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் சகோதரி மகள். அவர் தரும் தகவல் சுவாரசியமானது.

”ஸ்ரீ சுப்ரமணிய பாரதியார் அவர்களுக்கு ஸ்ரீஅக்காள் அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவரும் ஸ்ரீ அக்காளின் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவருடைய அநேகப் பாடல்களின் கருத்துக்களை ஒட்டியே அவரும் அநேக வேதாந்தப் பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவர் எனது தாயார் அவர்களின் சகோதரியின் கணவராகையால் சிறுவயதில் அவர் மூலமாகவும் சில தகவல்கள் அறியும் பாக்கியம் கிட்டியது,” என்கிறார் கோமதி ராஜாங்கம்.

ஆவுடையக்காள் வசதியான குடும்பத்தில், செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் பிறந்தவர். பாவாடை கட்டத் தெரியாத வயதில் கல்யாணம் ஆயிற்று. மஞ்சள் கயிற்றின் மணம் மாறுமுன் விதவை ஆகிறார். ஊர் வம்பை எதிர்த்து நின்று கல்வி கற்றார். பருவம் அடைந்ததும் தலை முண்டிதம் செய்யப்பட்டு, வெள்ளாடை அணிந்து, கைம்மை நோன்பு. ஸ்ரீ வெங்கடேச ஐயாவாள் ஆசியால் ஞானம் பெறுகிறார்.

கதை அத்துடன் தீர்ந்து போகவில்லை. அந்தண இளம்பெண், கைம்மை நோற்பவள், ஞானம் பெற்றாள், பாடல்கள் புனைந்தாள் எனில் – இருநூறோ, நானூறோ ஆண்டுகள் முந்தைய சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கடும் தண்டனையாக ஜாதிப் பிரஷ்டம். சற்று யோசித்துப் பாருங்கள், ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட கன்னி கூடக் கழிந்திராத இளம் விதவை எங்கு போவாள், எதை உண்பாள், காமக் கடூரக் கண்களிலிருந்து எவ்விதம் தப்புவாள், எங்ஙனம் உயிர் தரித்திருப்பாள்?

உன்மத்தையாக இருந்திருக்கிறள், தீர்த்த யாத்திரை போயிருக்கிறாள், அத்வைதப் பாடல்கள் புனைந்திருக்கிறாள், போராடி இருக்கவும் வேண்டும்.

பின்பு அக்காள் மகிமை பரவி, செங்கோட்டை திரும்பி, ஊர்க்காரர்களிடம் மரியாதை பெற்று, வெகுகாலம் வசித்தும் இருக்கிறார். ஒரு ஆடி மாத அமாவாசை அன்று திருக்குற்றாலம் சென்று அருவியில் நீராடுகிறாள் ஆவுடை அக்காள். இந்த இடத்தில் ‘குற்றாலக் குறவஞ்சி’யின் குறத்தி வாயிலாக, மலைவளம் சொல்ல வேண்டும். பாடியவர் குற்றாலத்தை அடுத்த மேலகரத்தில் வாழ்ந்த திரிகூட ராசப்பக் கவிராயர். காலம் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. ஆவுடையக்காள் திருகூட ராசப்ப கவிராயருக்கு மூத்தவளா, இளையவளா, சமகாலத்தினளா என்றெமக்குத் தெரியாது.

ஆடி அமாவாசையன்று குற்றால அருவியில் நீராடிய ஆவுடையக்காள் பொதிகை மலைமேல் ஏறிச் சென்றாள் எனவும் என்ன ஆனாள் என யாருக்கும் தெரியவில்லை என்பதும் வரலாறு.

ஆவுடையக்காள் பாடல்களின் தாக்கத்தை பிற்காலப்பாடல்களில் காணமுடிகிறது.

ஆவுடையக்காளின் ‘அத்வைத மெய்ஞ்ஞான ஆண்டி’ என்றொரு பாடல்.

’கடத்தை இடித்தால் தாண்டி
கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி
புரத்தை இடித்தால் தாண்டி
பரிபூரணம் ஆகும் என்றாண்டி’


என நீளும் வரிகள்.

எனக்குள் ஒரு பழம்பாடலின் வரிகள் ஓடின.

’நந்தவனத்திலோர் ஆண்டி- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’

என்று.

கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்களுக்கு மேல் இயற்றிய அக்காள் பாரதியாரை வெகுவாக ஈர்த்தவர் என்றறிகிறோம். ஆனால் பாரதி எங்கேனும் ஆவுடையக்காளைக் குறிப்பிட்டிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது.

தமிழில் முதல் முறையாக, “ஆச்சே, போச்சே, அடா, அடி,” எனும் மக்களின் இயல்புப் பிரயோகங்களை பாரதி கையாண்டார் என அறிஞர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

‘வேதாந்த ஆச்சே போச்சே’ என்றொரு பாடல் ஆவுடையக்காள் பாடியது.

‘சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே
சத்துமயமான சாட்சியே நானென்ப தாச்சே’

எனும் பாடல் பாணியோடு பாரதியின் பாணியை ஒப்பிடலாம்.

‘மண்வெட்டி கூலிதினல் ஆச்சே- எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே’

என்று ‘மறவன் பாட்டி’ல்.

‘ஜாதி வர்ணாசிரமம் போச்சே
வேத சாஸ்திரம் வெறும் பேச்சே’

என்று அக்காள் பாடினால்,

‘ஜாதிச் சண்டை போச்சோ- உங்கள்
சமயச் சண்டை போச்சோ’

என்று பாரதி பாடுகிறார்.

‘காம குரோதமும் போச்சே
மோக இருளும் போச்சே’

என்று அக்காள் பாடுகிறாள், தம்பி பாரதியோ,

‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே- வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே’

என்று பாடுகிறார்.

‘வேதாந்தக் கும்மி’ என ஆவுடையக்காள் பாடியது,

‘கும்மியடி பெண்கள் கும்மியடி
அகோர சம்சார சாகரத்தில்
ஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம்
சிந்தித்துக் கும்மியடியுங்கடி- தினம்
வந்தித்துக் கும்மியடியுங்கடி’
என.

இத்துடன் பாரதியின் ‘பெண்கள் விடுதலைக் கும்மியை’ ஒப்பிடலாம்.

’குயில் கண்ணி’யில் அக்காள் பாட்டு:

‘மனமும் பொய்யடியோ, குயிலே
மனக் கூடும் பொய்யடியோ
இனமும் பொய்யடியோ, குயிலே
தனமும் பொய்யடியோ!’

பாரதி பாடுவது:

கோலமும் பொய்களோ- அங்கு
குணங்களும் பொய்களோ’.

எனப் பற்பல சொல்லிக் கொண்டே நடக்கலாம். அக்காள் பாடுகிறாள்,

பாருக்குள் நபும்சகன் ஸ்த்ரீபோகம் புஜித்ததும்
பட்டணத்து அலங்காரம் பொட்டையன் கண்டதும்’

என்று.

’நடிப்புச் சுதேசிகள்’ பாடலில் கிளிக்கண்ணிகளில், பாரதி,

சொந்த அரசும் புவிச்சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ- கிளியே
அலிகளுக்கு இன்பமுண்டோ?’

என்கிறார்.

அத்வைதத் தத்துவத்தில் அக்காளின் ஆளுமை மிகவும் வியக்க வைக்கிறது. ‘வேதாந்த அம்மானை’ பாடல்களில்,

அக்கினியை தூமம் மறைத்தாப்போல அம்மானை
அதிஸ்டானம் தன்னை மறைத்தாய் அம்மானை
பானுவை மேகம் மறைக்கும் அதுபோல
பரமார்த்தம் தன்னை மறைத்தாயே அம்மானை’

என்பதுவும், ‘அன்னே பின்னே கும்மி’ பாடலில்,

என்னிடத்திலே யுதித்து என்னைப் பயமுறுத்தி
எனக்குப் பயந்தொளித்தது எங்கடி யன்னே’

என்பதுவும், ‘சூடாலைக் கும்மி’யில்,

தேகத்தை விடும்போது தரிசனம் எனக்குத் தந்து
மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதே’

என்பதுவும் எடுத்துக் காட்டாய்ச் சில வரிகள். ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு’ எனப் பாரதி பாடுவதும் நினைவில் வராமற் போகாது.

தீட்டு பற்றி பாரதி எழுதும் வசன கவிதை வரிகள் உங்களில் பலருக்கும் நினைவில் இருக்கலாம்.

‘தீட்டு திரண்டு உருண்டு சிலைபோலே பெண்ணாகி வீட்டிலிருக்க
தீட்டு ஓடிப் போச்சோ- பராபரமே’
என்றும்

‘உக்கத்துப் பிள்ளையும் உன் கக்கத்துத் தீட்டன்றோ
உன்னுடைய வெட்கத்தை யாரோடு சொல்வேன் பராபரமே’

என்றும் வேகமாய்ப் பாடுகிறார் ஆவுடையக்கா.

அக்காள் சாதிப்பிரஷ்டம் செய்யப் பட்ட போது சாதி பேதமற்று வாங்கிப் புசித்திருப்பாள் போலும், எச்சில் உண்டிருப்பாள் போலும், எச்சிலுண்டதை யாரும் கேலி பேசி இருப்பார் போலும், அல்லது அவரது தத்துவ தரிசனம் போலும்! இதோ பாடல் வரிகள் ’பராபரக் கண்ணி’யில்.

‘எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்
எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே
சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ
என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே
மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில்
பச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே
தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்
தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் – பராபரமே
நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில்
மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே
அண்ட பிண்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே
வண்ட மத வாதிகட்கு வாயுண்டோ- பராபரமே
……….. ………………. ……………………
எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே
பாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே’

என்று வெகு உக்கிரமாய்ப் பாடுகிறார்.

‘வேதாந்த நொண்டிச் சிந்து’ என்றொரு பாடல். அக்காள் பாடிய சில வரிகளை மட்டும் துண்டு துண்டாய்க் குறிக்கிறேன்.

‘சுவர்க்க நரகமென்னும் அல்ப பிசாசு வந்து அச்சுறுத்துகிறதே’
‘வனத்தில் துர்க்கந்தம் கடந்து வரவே வந்தாளே மதவாதியர்கள்
‘ஜாதி வர்ணங்களும் ஆசிரம தர்மமும் சாஸ்திர கோத்திர
சூத்ராதிகளும் க்ஷணிகத்தில் தகனமாய்ப் போச்சுதய்யா’
‘அனிருத்த மால’யில் அக்காளின் தத்துவ வீச்சு அபாரமாய் இருக்கிறது.
‘அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே
தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே
தாமிரத்தை தெய்வமென்று சாதிப்பார் தரணியிலே
மிருத்யுவே தெய்வமென்று விடுவார் உலகினிலே
அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி
அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்’
என்று மொழியும் ஆவுடையக்காள் இறுதியாய்க் கேட்பது,
‘தத்துவமாம் மெய்ப்பொருளைத் தப்பவிட்டு நின்றோமோ?’
என்று.

தொடர்ந்து வரும் பாரதியின் கூற்று,

‘உண்மையின் பேர் தெய்வம்- அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்.’

அக்காள் சொல்வது,

‘தன்னைத் தானறிய வேணும் தத்துவத்தால்
தன்னைத் தான்றிய வேணும்’
என்று.

’ஞான ரஸக் கீர்த்தனைகள்’ என்று சாவேரி, நாதநாமக் கிரியா, பூபாளம், ஆன்ந்த பைரவி, ஆரபி, தோடி, கல்யாணி, மத்யமாவதி, மோகனம், சௌராஷ்ட்ரம், காம்போதி, தன்யாசி, சங்கராபரணம், யதுகுல காம்போதி, முகாரி, புன்னாக வராளி, பைரவி, சுருட்டி, கேதார கௌளம், சகானா என ஏகப்பட்ட ராகங்களில் இசை உலகுக்கும் ஆன்மீக உலகுக்கும் அக்காளின் கொடைகள்.

மக்கள் மொழியில் ஏராளமான பழமொழிகளைத் தடையின்றி எடுத்தாள்கிறார்.

1.உறியில் தயிர் நிரம்பி இருக்க, ஊரில் வெண்ணெய் தேடுவார் போல.
2.ஒக்கலில் பிள்ளையிருக்க் ஊரிலெங்கும் தேடுவார் போல.
3.மண்குதிரையை நம்பி மடுவில் இறங்குவார் போல.
4.வெள்ளரிப்பழம் வெகுகாலம் இருக்குமென்று வெடிக்காமல் பூண் கட்டி வைப்பார் போல.
5.எழுகடல் ஜலத்தையும் எறும்பொன்று குடித்ததும்.

எனப் பற்பல.

மோகன ராகத்தின் அனுபல்லவியில் ஆச்சரியமான மொழிப் பிரயோகங்கள்,

‘அம்மை இல்லாதொரு செல்வி பிரந்ததும்’
‘அப்பன் முலை குடித்து அபிவிருத்தி ஆனதும்’
‘கல்பசு கன்றுக்கு இரங்கிப் பால் கொடுத்ததும்’
‘காற்றைப் பிடித்துக் கண் கலசத்தில் அடைத்ததும்’

எனக் காணக் கிடக்கின்றன.

‘புதுப்பானை ஈப்போலே போகமெனக்கில்லாமல்’

எனும் பிரயோகம் ஒன்று என்னைப் பிரமிக்க வைத்தது.

‘வேதாந்த வண்டு’, ‘அத்வைதத் தாலாட்டு’ என ஆன்மீகப் பாடல்கள் பல.

உண்மையில் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் என எதுவும் எனக்கு விரித்துரைக்கத் தெரியாது. ‘தத்வமஸி’யும் அறியேன், ‘அகம் பிரம்மாஸ்மி’யும் தெரியேன். ஆர்வமும் இல்லை தெரிந்து கொள்ள. ஆனால் ஆவுடையக்காள் பாமரப் பெண்டுகளுக்கு எனப் பாடி வைத்துப் போன மொழி தடுத்தாட்கொள்கிறது.

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

8 Responses to செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு

 1. t.parameswari சொல்கிறார்:

  நல்ல கட்டுரை நாஞ்சில் சார். இப்படிப் பல பெண்கள் வரலாற்றின் பக்கங்களில் புதைந்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் அறிய வேண்டும் எனும் ஆவல் மீதூறுகிறது. ஆவுடையக்காளைப் பற்றியும் மேலதிகமான தகவல்களைத் திரட்ட வேண்டுமெனும் ஆர்வத்தை ஏற்ற்படுத்தி விட்டீர்கள்.

 2. felix சொல்கிறார்:

  First of all sorry to write in english sir.very superb article sir. What is the meaning of “Jathi Prastam” ?

  • SiSulthan சொல்கிறார்:

   சாதியிலிருந்து தள்ளி வைத்தல்.அதாவது தள்ளிவைக்கப்பட்டவருடன் அவரது சொந்தங்களோ, சொந்த சாதி மக்களோ எல்லாவித கொடுக்கல் வாங்கல், ஒட்டு, உறவை துண்டித்துக்கொள்ளுதல்.

 3. m.murali சொல்கிறார்:

  கன்னட ‘அக்கம்மா தேவி’ காலத்தவரோ?
  குறிக்கப்பட்ட சில இடங்களில் முழுமையான துறவு – பரிந்து உரைக்கபடுகிறது.
  திருமந்திரத்தின் கூறுகளும் வெளிப் படுகிறது.
  புத்தகம் வாங்கி படிக்க தோன்றுகிறது
  அறிமுகத்திற்கு நன்றி
  அன்புடன் முரளி

 4. ashok kumar சொல்கிறார்:

  எங்கும் பாரதி,ஆவுடையக்காள் பற்றி குறிப்பே இல்லை அதன் அரசியல் தான் புரியவில்லை

 5. s.chandrasekaran சொல்கிறார்:

  akka paadal padithae theera vendum pol ullathu..nanri naaanjil nadan ayya…

 6. s.ramasamy சொல்கிறார்:

  நாஞ்சில் நாடனின் எழுத்துக்களில் எப்பொழுதுமே ஈடுபாடு உண்டு. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை தேடிப் பிடித்து வாங்கிய நூல். ஆவுடையம்மாள் பாராட்டுரையை அப்படியே வெளியீட்டாளருக்கு info@gnanananda-niketan.org மின்னஞ்சல் மூலம் 23-12-2010-ல் அனுப்பிவிட்டேன். ஆங்கே பணியாற்றும் நித்தியானந்தகிரி ஸ்வாமிகளிடமும் தகவலைக் கூறினேன். எனக்கும் ஒரு பிரதி நூலினை வாங்கிடவும் ஏற்பாடு செய்து விட்டேன். நாஞ்சில் நாடனின் நல்லது போற்றும் பண்பாடு வாழ்க. நன்றியுடன், ச.இராமசாமி.

 7. vignesh சொல்கிறார்:

  /எங்கும் பாரதி,ஆவுடையக்காள் பற்றி குறிப்பே இல்லை அதன் அரசியல் தான் புரியவில்லை/

  The activities of the lickspittle vellala dogs are always like that.. echil ilai vellala naaigal romba silagichu silagichu ezhudhum. tamil enbadhu oru unarvu kurangu la…adhukku unarvu mattum dhaan venum, vellalath thevidiya pillaigal andha unarvai mattum oottum. idhu enga, ennadhu, unmaya adhu pathiyellam details irukadhu because logic, veracity of facts are unknown to the tamil. the tamil knows only unarvu. the vellalath thevidiay pillais unarvu mattum oottuvan.

  its always like that with the vellala-nattukottai dogs. no facts, source, reference, details..or, sources cooked up by themselves. because they know that the tamil doesn’t ask for it and that the tamil will not bother to dig up and and research.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s